Thursday, December 13, 2012

மாலை நேரத்து மழை.


 
                                                                அகமும் புறமும் 
                                                                இதமாய் நனைத்து 
                                                                குழந்தையாய் 
                                                                உள்ளம் குதூகலிக்க 
                                                                வைத்து  
                                                                மறந்திருந்த பால்யம் 
                                                                உசுப்பி 
                                                                தற்கால கவலை
                                                                மரணித்து 
                                                                இயல்பாய் உயிரினில்
                                                                ஒரு சிலிர்ப்பை  
                                                                 தந்தது  அந்த 
                                                                 மாலை நேரத்து 
                                                                 மழை .
                                                                அந்த அற்புத 
                                                                 கணங்கள்  
                                                                 மண் நனைத்து 
                                                                 வாசனை கிளப்பி 
                                                                 என்னை ஏகாந்தத்தில் 
                                                                 திளைக்க விடலாம்.
                                                                 இல்லை 
                                                                 நெஞ்சில் சூல் கொண்டு 
                                                                 கவிதையாய் பிரசவிக்கலாம்.
                                                                 எப்போது வேண்டுமானாலும் !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!





Monday, December 10, 2012

செய்திலா வினைகள்.


உன் வெட்கத்தின்  நிறமான இளஞ்சிவப்பை 
பூசி இருந்திருக்கலாம் அந்த  சுவர்களில்
மொத்தமாய் உனது உருவம் பார்க்க
பொருத்தி இருந்திருக்கலாம் அந்த கண்ணாடியை
காலை  வெயிலின்  கடுமை   குறைக்க
 மாட்டி இருந்திருக்கலாம் அந்த திரைச்சீலையை
வாகாய்  துணி  உலர்த்த  கொடி  ஒன்றை
கட்டி இருந்திருக்கலாம் அந்த மொட்டை மாடியில்
உனக்கென்ன
இப்படியாய் கேட்டு  நிராசையாய் போன
எத்தனையோ  ஆசைகளுடன்  இதுவும் ஒன்று
எனக்கோ
மனதை பிசையும் பிரிவுத்துயருடன்
இலவச இணைப்பாய் உறுத்தும்
செய்திலா வினைகளின் மிச்சங்களும் 
அதன்  நினைவுச் சேர்க்கைகளும் 
இருந்தாலென்ன  அனைத்தையும் செய்து
முடிக்க இன்னொரு வருட விடுமுறை
வராமலா போய்விடும் எனக்கு ???!!! 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Tuesday, November 20, 2012

பசுமை நிறைந்த பால்யம்-3

முந்தைய பகுதிகளை படிக்க,
பசுமை நிறைந்த பால்யம் -1
பசுமை நிறைந்த பால்யம் -2
                           
பள்ளி செல்லும் காலை பொழுதுகள் சற்று கசப்பானவை. ஜோல்னா பையை தலையில் மாட்டியபடி  அவசர அவசரமாய் நடந்து  செல்வதும் , நண்பன் கேட்கையில் மாத்திரம் நினைவுக்கு வரும் எழுத  மறந்து விட்ட வீட்டுப்பாடங்களும், எழுத ஆரம்பித்து பாதியில் தொக்கி நிற்கும் கணக்கும் செல்லும் வழியில் பயத்தை தருபவை.

கணக்கு டீச்சர் வராத நாட்களை எண்ணி குதூகலித்த தருணங்கள்  மிகவும் அதிகம்.பள்ளி நெருங்குகையில்  உரத்து  கேட்கும்  வாய்ப்பாட்டை  கேட்கும் பொழுதே சொரேரென்றிருக்கும்.  எங்கே சுழற்சி முறையில் நாமும்  சொல்ல வேண்டுமோ என்று பயந்து முன்னால் இருப்பவனின் முதுகுக்கு  பின்னால் ஒளிந்திருந்தது   ஒரு காலம் பால்யத்தில் . 

மழை பெய்யும் பள்ளி நாட்கள் இதமானவை. மழையின் ஆரம்பத்தில் வரும் மண்வாசனையும், இரைச்சல் மிகுதியால் நின்று விடும் வகுப்புகளும், மைதானத்தில் புள்ளியாய் ஆரம்பித்து தாழ்வான பகுதியை நோக்கி வாரிவாரியாக ஓட ஆரம்பிக்கும் மழை  நீரும், தேங்கிய மழைநீரில் விழுந்து  குடைவிரித்தவாறே  மறையும் நீர் முத்துகளும் கண்ணெதிரில் நடக்கும் அற்புதம்.

வானம் வெக்காளித்த  பின் வழக்கத்தை விட சற்று முன்னதாக விடப்படும் பள்ளியும், வெளிவருகையில் உணரும் வெம்மையும், செல்லும் வழி எல்லாம் தண்ணீரை எத்தி விளையாடிய படியே செல்வதும், மரம் செடிகளில் இருந்து சொட்டி கொண்டிருக்கும் நீர்த்திவலைகளும், சிறுமரத்தினடியில் யாரையேனும் எதார்த்தமாய் நிற்க வைத்து, அவர்கள் மீது  ஆட்டி விடப்பட்டு, சொட்டிய மழைத்துளிகளும்,

அம்மாவால் சூடாக   தரப்படும்  மழை நேரத்து தேநீரும், கூடவே தித்திப்பாய்  தேங்காய்,வெல்லமிட்டு தரப்படும்  ஊறவைத்த அரிசியும், அதில்  எதிர்பாராமல்  கடிபட்ட கல்லால் ஒரு வினாடி  கூசிப்போகும் உடலும்,  அதை நினைக்கையில்  அதே  உடல் கூசும் உணர்வை இப்பொழுதும்  உணரும் அதிசயத்தையும்    என்னவென்று சொல்வது!

பால்யம் குறித்த நினைவுகளை  எழுதுவது என்பது, கோடை நாளொன்றின் மீது கோபம் கொண்டு பெய்யும் பெருமழையின் சாரலில் நனைவது  போல என் மனதை சுகமாய்   நனைக்கிறது .

நன்றாய்  நனைக்கட்டும்  பெருமழையின் சாரல் !!!

                                                                                                                      பால்யம் மலரும் ....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


 

Tuesday, November 6, 2012

துப்பாக்கி - ஒரு பார்வை.



1.இது எப்புடி ??


2.அப்ப இது?



3.இதுவும் புடிக்கலையா ??




4.கடைசியா இது .
 



5. சரிங்க உங்களுக்கு புடிச்சத நீங்களே பார்த்துக்குங்க !!!!!






சரிங்க துப்பாக்கி - ஒரு பார்வை.  பார்த்துடீங்கள்ள !!???
அடுத்த தடவை பீரங்கி சரியா ?
என்னது டாக்குடர் படமா ?  ஒ.. ஓ .. நீங்க அந்த துப்பாக்கின்னு  நினைச்சிங்களா?  

இப்படி நீங்க தெளிவா கேட்டு இருந்தா முன்னாடியே சொல்லி இருப்பேன்ல இன்னும் ரிலீஸ் ஆகலைன்னு !!!!!



போங்கப்பா போங்க போய் வேல வெட்டிய பாருங்க ....என்னது அட்ரஸா ???
ஆட்டோவா ??? அய்யய்யோ சீக்கிரம் எடத்த காலி பண்ணுடா சூனா  பானா !!!!

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!









Monday, November 5, 2012

அத்தாச்சி போட்ட சூடு !!!

                                                   பொங்கல் நேரத்தில் வீட்டிற்கு வெள்ளை அடிப்பது, வீட்டை சுத்தம் பண்ணுவது என்று எங்களை  சத்தெடுப்பார்கள். வீட்டினுள்  இருக்கும் அனைத்து பொருட்களும் கொல்லைப்புறம் வந்துவிடும். அனைத்தும் கழுவியும்,துடைத்தும் திருப்பி வீட்டிற்குள்  வைக்கப்படும். வீட்டை அலசுவதற்கு அடிபைப்பில்  தண்ணீர் அடிக்கணும்  பாருங்க, அப்பப்பா  கண்ணைக்கட்டிடும். இதுதான் கடைசி குடம், கடைசி குடம்ன்னு சொல்லியே ஒரு ஏழெட்டு  குடம் அடிக்க வைச்சுடுவாங்க.



எல்லாம் முடிஞ்சு சரிதான் இனி விளையாட போகலாம்னு நினைக்கும் போது, நம்மளோட பளிங்கு, சோடாமூடி போன்ற பொக்கிஷம்  எல்லாம் வீட்டுக்குள்ள இருக்கும். அலசிவிட்ட ஈரம் காயுற வரைக்கும் வீட்டுக்குள்ள விடமாட்டாங்க. ஒரே சத்திய சோதனைதான் போங்க ...

நான் தவழும் பிள்ளையா இருக்கும் போது நடந்தது கீழே  ,
அத்தை  பசங்கள் எல்லாம் ஒன்னாதான் படிச்சோம்.சின்னபசங்க   யாராவது   அழும் போதோ அல்லது சுட்டித்தனம் செய்யும் போதெல்லாம் பேசாம இருக்கியா இல்ல ஊதாங்குழலை காய வச்சு சூடு போடவா என்று  எங்கம்மா அதட்டுவதும், அந்த குழந்தைகள் அமைதியாவதும் வாடிக்கையாய் இருந்திருக்கிறது.

 ஒரு பொங்கல் சமயத்தில்  எனதருமை அம்மா வீடு அலசிக்கொண்டு இருக்க , வெளியில் தொட்டிலில் இருக்கும் என்னை பார்த்து கொள்ளமாறு  சின்னபிள்ளையான எனது அத்தாச்சியிடம் சொல்லி இருக்கிறார்கள். தொட்டிலில் இருந்து நான் சிணுங்கும் போதெல்லாம் எச்சரிக்கை செய்வது போல பேசாம இருக்கியா இல்ல  ஊதாங்குழலை காய வச்சு சூடு போடவா? என்று எனது அம்மா பாணியில் அதட்ட,
நான் தொடர்ந்து அழவும்,வெளியில் உலை கொதித்து கொண்டிருந்த விறகு அடுப்பில் ஊதாங்குழலை காய வைத்து கையில் ஒரு இழுப்பு இழுத்து விட , நான் வீறிட்டு அழவும் எனது அம்மா  ஓடி வந்து பார்க்க, எனது அத்தாச்சியோ ஊதாங்குழலும் கையுமாக ஒரு கேள்வி கேட்டு இருக்கிறார்கள் அது என்னன்னா,   
                             *
                             *
                             *
                             *
                             *
                             * 
ஏன்  அத்தை  நான் சூடு போட்டும் இவன் இன்னும் அழுகையை நிறுத்தலை ???
அப்புறமென்ன அவங்களை ஸர்ஃப், நிர்மா, எல்லாம் போட்டு வெளு வெளுன்னு   வெளுத்துட்டங்களாம் .
எப்போதாவது  அத்தாச்சியிடம்  ரொம்ப கிண்டலடித்து பேசும் போது,      தலையாட்டிக்கொண்டே சொல்வார்கள் உனக்கு சூடு போட்டது    தப்பில்லை,     ஆனா அந்த சூட்டை உன் வாயில போட்டிருக்கணும்!!!. 

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!