Thursday, July 26, 2012

கணிணியால் காய்ந்தவன்...


கணக்குக்கும் நம்மளுக்கும் உள்ள சம்மந்தம் உலகம் அறிந்ததுதான். அதே மாதிரி நான் படுத்தி எடுத்த இன்னொரு விஷயம்தான் கணிணி. பத்தாவது பொதுத்தேர்வு எல்லாரையும் போல மாநிலத்துலேயே முதலாவதா  வருவேன்னு நெனைச்சு எழுதிட்டு வீட்ல டாப் அடிச்சுகிட்டு இருந்தப்போ, கணிணி வகுப்புல வழக்கம் போல நம்மள கேட்க்காம சேர்த்து விட்டாங்க…..

“சனிப்பொணம் தனியா போகாதுங்கற மாதிரி” நான் என்னோட நண்பனையும் சேர்த்துகிட்டு போனேன். ரெண்டு பேரும் சேர்ந்து கடமைக்கு போறது வர்றதுன்னு இருந்தோம். அப்போதான் ஒரு செமையான டெல்லி ஃபிகர்  ஒன்னு வந்து சேர்ந்துச்சு, அது எதோ விடுமுறைக்கு வந்த இடத்துல பொழுது போகாம அங்க வந்துச்சு, அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ரொம்ப சின்சியரா கடமையே கண்ணும் கருத்துமா இருந்தோம். ஆனா எங்கள விட ஒருத்தர் ரொம்ப சின்சியரா இருந்தார், அவர்தான் எங்க இன்ஸ்ட்ரக்டர். அடடா... அடடா அவரு பண்ற பந்தா இருக்கே ஸ்ஸ்....அப்பா தாங்கல!!  இன்டர்நெட் சம்மந்தமா கிளாஸ் எடுக்கும் (அப்போ யாஹூ பிரபலமாகாத காலம்) போது அவரு www. யோகா .காம்,  அப்படின்னு வெப்சைட் இருக்குன்னு அப்டின்னு அடிக்கடி சொல்லுவார் ரெண்டு கூமுட்டை (நாங்கதான்) அதையும் ஆ ன்னு கேட்டுகிட்டு இருக்கும் . ரொம்ப உலக நடப்பு தெரிஞ்ச மாதிரி அவரு சீன் போட்டு இந்த மாதிரி சொல்லும்  போது பொறுத்து  பொறுத்து பார்த்த நம்ம டெல்லி ஃபிகர் பொங்கி எழுந்து சார் அது யோகா.காம்  இல்ல அது யாஹூ.காம்  சொல்லி பல்பு குடுத்துச்சு பாருங்க, நாங்களும் சத்தமா சிரிக்க , நம்மாளு மூஞ்சி இஞ்சி தின்ன எதுவோ மாதிரி ஆயிடுச்சி...


எங்களுக்கு வகுப்பு முடிஞ்சு போகும் போது, பல்பு வாங்கின நம்மாளு   என்ன நினைச்சாரோ தெரியல , கணிணியை ஷட்டவுன் பண்ணிட்டு போங்கன்னு சொல்ல, என்னடா பக்கத்துல இருக்கு ஸ்விட்ச் அத அமுக்குறத விட்டுட்டு போற நம்மள பண்ண சொல்றாரே அப்படின்னு நினைச்சுகிட்டு ரொம்ப வேகமா போய்   கணிணியில் இருந்த பவர் பட்டனை வேகமா அமுக்கி ஆப் பண்ணிட்டு வந்துட்டேன், அப்போ அந்த டெல்லிக்காரி என்னைய கேவலமா பார்த்தாளே ஒரு பார்வை, சரி சரி அடிப்படையிலேயே  ஒரு தப்பு நடந்துருச்சு போல விடுடா கைப்புள்ள அப்படின்னு நெனைச்சுக்கிட்டு வெளியில்  வந்துட்டோம். அடுத்த நாள் எங்களுக்கு இருந்த வகுப்பு, கணினியை  ஷட்டவுன் செய்வது எப்படி? 

இப்படிதான் இருந்தது  நம்ம அடிப்படை அறிவு.... சரி கல்லூரியில்தான் நமக்கு கட்டுமான பொறியியல் பிரிவு ஆச்சே ஒன்னும் தொந்தரவு இருக்காதுன்னு பார்த்தா  அங்கேயும் இந்த தொல்லை வந்தது.. வகுப்புலதான் நாமதான் பயங்கர கடமை உணர்ச்சியோட தூங்கியோ  இல்ல விளையாடியோ பொழுத போக்கிட்டோம். தேர்வு நேரத்துல  கணிணி ஆய்வகத்துல  பிரச்சினை ஆயிடுச்சி, எல்லாரும் ப்ரோகிராம எழுதி கண்காணிப்பாளர்கிட்ட காமிச்சுட்டு ஆய்வகத்துல போயி அதையோ ஒட்டி காமிக்கணும். நாம பைக் ஓட்டலாம், இல்ல கார் ஓட்டலாம், இல்ல ரொம்ப முயற்சி எடுத்து எதாவது பிகர ஓட்டலாம். ஆய்வகத்துல நம்ம என்னத்த ஓட்ட ?   நாமதான் கணிணியில புலியாச்சே!! நானும் என்னையே நம்பி இருக்குற கூட்டமும்(!!!!!) உட்கார்ந்தே இருந்தோம். தேர்வு அறை  கிட்டத்தட்ட காலியாகுற  நிலை வந்துடுச்சு,

நானும் புதுசு புதுசா என்னென்னவோ ப்ரோகிராம் எழுதுறேன், கண்காணிப்பாளர் அசராம  ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு திருத்தம் சொல்லி திருப்பி அனுப்பிக்கிட்டே இருந்தாரு. "தன்  முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன்" போல  நானும் விடாமல் திரும்ப திரும்ப போய்கிட்டே இருந்தேன். கண்காணிப்பாளர் மாத்தாதது என் தேர்வு எண்  மட்டும்தான்கிற நிலைமையில,   நான் ரொம்ப களைப்பாகி கடைசியா எல்லா திருத்தமும் செஞ்சு கொண்டு போனேன், கண்காணிப்பாளர் திரும்பவும் ஒரு திருத்தம் சொன்னார், நான் அதுக்கு சொன்ன பதிலுக்கு ரொம்ப சாதுவான அவர் கொடூர கோபம் கொண்டு தேர்வுத்தாளை தூக்கி வீசிட்டு, திட்டிகிட்டே  அடிக்க அடிக்க வந்தாரு, நான் ரொம்ப பவ்யமா தேர்வுத்தாளை எடுத்துக்கிட்டு  என்னோட இடத்துல உட்கார்ந்தவுடனே என் நண்பன் கேட்டான் அவரு கோபப்படுற அளவுக்கு அப்படி என்னடா சொன்ன? அவர்கிட்ட  நான்  சொன்னது என்னன்னா,
                    *
                    *
                    *

                    *
                    *
                    *
                    *
                    *
                    *
 அந்த திருத்தத்தையும் நீங்களே எழுதிடுங்க சார்....!!!!!!!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Thursday, July 19, 2012

தமிழ்…..தமிழ்…தமிழ்…அமிழ்து!!!


 மனதுக்கு மிக நெருக்கமாக சில விஷயங்கள் மட்டும் தோன்றும். கடினமான சில தருணங்களில்  மனது  சிக்கி தவிக்கும் போது  நம்மை வேறு உலகிற்கு அழைத்து, அமிழ்த்தி மனதை கரைக்க    நண்பர்கள் , முழுமதி , மழலை, கானகம், மழை, மழைநேரத்து தேனீர், வெயில்  போன்றவை இருந்தாலும் அவையனைத்தும் தேவையான போது கூட வருவதில்லைஎல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி முதலிடம்  என் தாய்க்கும் என் தமிழுக்கும்  தலையாய இடமுண்டு .. ....

எப்பொழுது தொடங்கியது தமிழ் மீதான காதல்!!!! தமிழ் தமிழ்  என்று தொடர்ச்சியாய் சொல்லும் போது  வார்த்தை மருவி வருவதுஅமிழ்து.... அமிழ்து என்று  தமிழாசிரியர் வகுப்பு எடுத்தபோதா !!!

பொதிகை மலையின் சிறப்பு பற்றி வரும் செய்யுளில்,   ஓங்கி உயர்ந்த தென்னை மரத்தின் இளநீர் குலைகளின்  பாரம் தாங்காமல் பக்கத்தில் உள்ள பலா மரத்தின் மீது சாயும் . பலா மரம்   பாரம் தாங்காமல்  பக்கத்தில் உள்ள கமுகு  மரத்தின் மீது சாயும். கமுகு மரம் அருகில் உள்ள பாக்கு மரத்தின் மீது சாயும். பாக்கு மரம் அருகில் உள்ள வாழைமரத்தின் மீது சாயும்.
என்று படிக்கும் போதே அதனை கற்பனை உருவில் என் தமிழ்  கொண்டு வந்தபொழுதா !!

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி அருளொடு  நிறைந்ததுவே 
என்று பிரபஞ்ச தத்துவத்தை பகுத்த போதா  !!!

அகநானூற்றில், தலைவியை பிரிந்து  சென்ற தலைவன் வருவதாக கூறிய கார்காலம்  வந்தபிறகும் வராத தலைவனையும் அதனால் பசலை நோய் பிடித்திருந்த தலைவின் கூற்றின் போதா !!
தலைவன் வரும் வழியில்  பொல்லென  பூத்திருந்த முல்லைபூக்கள்  கார்காலத்தின் வருகையை  தலைவனுக்கு உணர்த்தியது என்றதை பருவ வயதில்  ரசித்து  வாசித்த போதா !!

தேடிச்சோறு நிதந்  தின்று  பல
சின்னஞ்சிறு   கதைகள் பேசி
..
..
பல வேடிக்கை மனிதரைப்  போலே வீழ்வேனென்று நினைத்தாயோ !!!
என்று பாரதியை படித்து விட்டு கண்ணில் கனலும், நெஞ்சில் திமிரும்  கொண்டும்  அலைந்த போதா !!!

எப்போது வந்தது  இந்த பற்று? எதனால் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் போது வார்த்தைகளில் அனலடிக்கிறது? தமிழ்  சம்மந்தமான அனைத்தும்  ஏன் நண்பர்களுக்குள்ளே அடிக்கடி விவாதப் பொருளாகிறது ?
அமீரகத்தில் வேலைக்கென்று வந்த புதிதில், வாகன ஓட்டுனர் முதல் கொண்டு திட்ட இயக்குனர்  வரை எனக்கு ஹிந்தி தெரியாததை ஆயுதமாக்கியபோதும் தமிழன் என்று கர்வமுடனே விவாதம் புரிந்தது  ஏன் ?
  இதற்க்கான பதிலை இதுவரையிலும் ஆராய்ந்ததும்  இல்லை. ஆராய  வேண்டிய அவசியமும் இல்லை . இது எனது மொழி .. எனது சுவாசம்.... எனது இருப்பு.. எனது தமிழ் மொழி ஒப்பிடுதலுக்கும்  விவாதத்திற்கும்  அப்பாற்பட்டது. எத்தனை விதமான பிறமொழிக்கலப்புகள்  , கலாசாரத் தாக்குதலுக்கு உட்பட்டாலும் இன்னும் கன்னித்தன்மை குன்றாமல்,  
"உன் சீரிளமை திறம்வியந்து செயல்மறந்து" என்று 
 வாழ்த்தப்பட்டும், வாழவைத்து கொண்டும் இருக்கிறது

 நான் ஏதோ தமிழையே காக்க வந்தவன்  மாதிரி எழுதுகிறேன்   என்று நினைக்க வேண்டாம் .  உங்கள் மனதில் எழுவது  என்னமாதிரியான கேள்விகள் என்று எனக்கும் புரிகிறது . நீங்கள் நினைப்பது போலவே என்னாலும் பிழையின்றி , பிறமொழிக் கலப்பின்றி பேசுவதோ, எழுதுவதோ சரிவரக் கைவரவில்லை.இதற்கு நான் மட்டுமா காரணம்இந்த சமூகமும், வளர்க்கப்பட்ட விதமும் , நான் இருந்த சுற்றுசூழலும் தானே  காரணம். இது எல்லாமுமே நம் மீது திணிக்கப்பட்டது தானே.

இதே மாதிரியான  ஒரு சுற்றுசூழலையா , சமூக அமைப்பையா , தாய் மொழியை பாதி மறந்த உலகத்தையா நாம் அடுத்த தலைமுறைக்கு தரப்போகிறோம் ??? சொல்லுங்கள்.

கண்களை காயப்படுத்தி கொண்டே ஓவியங்களை ரசிக்க சொல்லி தருகிறோம்.சுவாசிக்கின்ற காற்று, சுற்றுகின்ற  பூமிதண்ணீர்  என அனைத்தையும் பாழ்படுத்தி விட்டோம். குறைந்த பட்சம் தமிழ் மொழியையாவது விட்டு வைப்போம்

தமிழர்களாகிய  நாம்  தமிழரோடு  தமிழில் பேசுவோம்.
வருங்கால   சந்ததியினருக்கு தமிழ் மொழியை நன்கு பயிற்றுவிப்போம் . அந்நிய மொழியில் குறிப்பாக ஆங்கில மொழியில் பேசுவதுதான் பெருமைக்குரியது என்னும் மாயையை அகற்றுவோம்.
 பல மொழிகளை கற்பதிலோ அதை தேவைப்படும் இடங்களில் பேசுவதோ தவறேதும் இல்லை.
"பன்மொழிப்  புலமையை நமது  உலகாக்கி கொள்வோம்
அதை  பார்க்கும் கண்களாக  நம்  தமிழை ஆக்கிக்கொள்வோம்."

நாளையே இந்த மாற்றம் நடந்து விடப்போவது இல்லை. அதே போல்   பிறமொழிக்   கலப்பும் ஒரே நாளில் நிகழ்ந்தது இல்லை.ஆனால்  இந்த எண்ணப்பரவல்  மிகவும் அவசியமான ஒன்று.
தேமதுரத் தமிழோசை உலகெங்கிலும் பரவி  ஒலிக்கும் நாள் வந்தே தீரும்.
 நல்லதொரு மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்...

பெருங்கவிஞர் கூறியது போல,
"எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால்  தமிழ் ஆளும்" !!!

வாழ்க வளமுடன் , தமிழ் தந்த புகழுடன் !!!





Monday, July 16, 2012

வெட்கப்பூக்கள் !!!

           

நமக்கே  நமக்கென வாய்த்த
தருணங்கள்  என்னால்  நழுவும்போதோ
என் அத்தியந்தமான  காதலை உனக்கு
உணர்த்துவதற்கான நொடிகளை தவறவிடும்போதோ
அன்யோன்யமான  நமது  காதல்
குலாவல்களை தொடரவியலாத போதோ
கோபம் கொண்டு பேச மறுப்பாய்  நீ .
தேவதையிடம் யாசிக்கும் பக்தனை போல
என்  சமரசம் தொடங்கும் அலைபேசி வழியாய்
நான் பேசும் சொற்களையே திரும்ப பேசி
ஊடலாடுவாய் நீ
வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத உன்
பேரழகை வரைமுறை தாண்டி
வர்ணிக்கையில் " ச்சீய்  போடா"  போன்ற
வெட்கப்பூக்களை  சிதறிவிட்டு   அணைத்துவிடுகிறாய்
அங்கு அலைபேசியையும், இங்கு என்னையும் !!!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!

Thursday, July 12, 2012

என்னவனின் சொல்லாடல்கள் !!!





பெரும்பாலான நமது உரையாடல்களில் உனது
“ம்“ என்ற ஒற்றைச்சொல்லே பதிலாய் அமையும்!
விழிகளில் தெரிக்கும் அனலே பலநேரங்களில்
மௌனியாக்கிவிடும் எனை!
எதுவும் யாசித்தது இல்லை இதுவரை
நீ எத்தனையோ கேட்டும்!
உனது விருப்பத்தையே எனதாக்கிகொண்ட
எத்தனையோ தருணங்கள் பரிகசிக்கப்பட்டுள்ளன!
அத்தி பூத்தாற்போல வரும் விவாதங்களில்
தேர்ந்தெடுத்த சொல்லாடல்களினால்
வென்றெடுக்கின்றாய் எனை!
சொல்ல நினைத்து தொண்டை குழிக்குள்
சிக்கிக்கொண்ட வார்த்தைகள்
காற்றுடன் மட்டுமே கதைக்கின்றன
எப்போதும் நல்லவனாகிவிடும் உன்னைப்பற்றி !!!!! 

வாழ்க வளமுடன்... தமிழ் தந்த புகழுடன்......

Wednesday, June 20, 2012

கணக்கு டீச்சரும் நானும்….


இன்னைக்கு மழை வராதா? இல்லாட்டி எனக்கு காய்ச்சல் அடிக்காதா? பள்ளிகூடம் லீவு கிடைக்காதா!! அப்படி நினைச்சுகிட்டு பள்ளிகூடம் போன நாட்கள் தான் நம்மளோட வரலாற்றில் அதிகம்…. அதிலும் அந்த கணக்கு பாடத்த நினைச்சாலே கடுப்பா வரும்….. ஒரு மாட்ட செவ்வக வடிவில் உள்ள வயலின் மையத்தில் 10மீ நீளமுள்ள கயிற்றில் கட்டி இருப்பாங்க, மாடு தின்ன புல்லின் பரப்பளவு என்ன? அப்படின்னு கேட்டு இருப்பாங்க, அந்த கேள்விய படிச்சதுமே நம்ம மூஞ்சியில ப்யூஸ் போய்ரும்.. எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியுதோன்னு நாம ஆச்சரியப்படுற அளவுக்கு கணக்கு இருக்கும்…

அதுலயும் ரொம்ப ஈசியா இருக்க கணக்க டீச்சர் போட்டுட்டு, கஷ்டமா இருக்குற கணக்க நம்ம தலையில கட்டிருவாங்க…… அதையும் அப்பவே போட்டு ஆன்ஸர் சொல்ல சொல்லுவாங்க… இது நடக்குற காரியமா நமக்கு??!!!!!!! அப்டியும் ரொம்ப சீரியஸா கணக்கு போடுற மாதிரி ரூட்ட குடுக்குறது ஆனா இது எப்படிதான் அந்த டீச்சருக்கு தெரியும்ன்னு தெரியாது, அவ்ளோ பேரு இருக்குற க்ளாசுல என்னய கூப்பிட்டு ஆன்ஸர் சொல்ல சொல்லுவாங்க…. நாம அப்பதான் Given Data  அப்பிடின்னு போட்டு, அண்டர்லைன் எல்லாம் பண்ணி ரொம்ப அழகா எழுத முயற்சி பண்ணிட்டு இருப்போம். இவ்வளவு  நேரம் ஆச்சு என்ன பண்றே!!! அந்த நோட்ட எடு அப்பிடின்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள என் நோட்ட தூக்கி குடுத்துருவாங்க சில எட்டப்பர்கள். அப்புறம் என்ன  ஒரே அடிதடி தான்.

ஒருதடவை ரொம்ப புத்திசாலித்தனமா புக்குல கடைசியா இருக்குற ஆன்சர பார்த்து சொல்லிட்டேன். நம்ம நேரத்துக்கு அது தவறான விடையா போக, டீச்சர் என் நோட்ட வாங்கி பார்க்க, அப்புறம் என்ன ஒரே தீபாவளிதான்..

அந்த அடிதடி கூடஒ.கே, நான் தாங்கிருவேன், ஆனா அதுக்கு அப்புறம் ஒரு பத்து நிமிஷத்துக்கு பண்ணுவாங்க பாருங்க அட்வைஸ்… அதுலயும் உங்க அக்கா ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர்றா நீ ஏன்டா இப்படி இருக்குற? அவ படிக்குற நேரத்துல நீ என்ன பண்ற? அப்பப்பா கஷ்டகாலம்டா சாமி... இதுல ஹைலைட்டா வார கடைசியில சர்ச்சுல பார்த்துட்டு அம்மா கிட்ட இவன் வர வர ஒழுங்கா படிக்கிறதே இல்ல ( நாம எப்பொ ஒழுங்காபடிச்சோம்!!!!!!!) அப்படின்னு வத்தி வைக்கிறது…… அப்டின்னு  நெறய பண்ணி நம்மளோட வயித்தெரிச்சலை ரொம்ப கொட்டிக்கிட்டாங்க…
சத்தியமா இன்னைக்கு இந்த டீச்சர் குறைந்த பட்சம் சர்ச்சுக்காவது வராமல் காப்பாத்து அப்படி எல்லாம் வேண்டி இருக்கேன்னா பார்த்துக்கங்க………..

அப்படி கும்பிட்ட எல்லா சாமிகளோட ஆசிர்வாதத்தால் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கும் போயாச்சு, இதுவரைக்கும் கணக்குல நான் படிச்ச வெக்டர், ð2X/ ð2Y, ஆய்லர்’ஸ் தியரி,வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதம் இது எல்லாம் என்னோட ப்ராக்டிக்கல் லைப்ல வரவே இல்ல…. நானும் பார்க்கிறேன் இதை எல்லாம் எப்பதான் யூஸ் பண்ண போறேன்னு………….!!!!!!!!!!!


               



வாழ்க வளமுடன்……… தமிழ் தந்த புகழுடன்………………