Sunday, April 1, 2012

நம்மளோட தினம் ..................

நம்மள ரொம்ப கடுப்பு  கிளப்புற  விஷயத்துல  ஒன்னு படிக்க சொல்றது இன்னொன்னு அலுவலகத்துல  மீட்டிங் போடுறது....மீட்டிங்குன்னா சமோசா தின்னுட்டு சீட்ட தேச்சிட்டு போறது இல்ல ....நம்மள அத ஏன்  பண்ணல??? இத ஏன் முடிக்கல ன்னு?? கேட்டு சாகடிச்சுடுவானுங்க .. ரொம்ப கொடுமை என்னன்னா  அவங்க மீட்டிங் போடுறது ஆறு மணிக்கு மேல , அப்புறம் அவங்க பேசுறது எல்லாம் அரபி மொழியில .. கடைசியா நம்மள மாதிரி ஒரு சில நல்லவங்கள பார்த்து  ஓகே  வா ? அப்படின்னு கேப்பாங்க . ..  அங்கயும் நம்ம   சிங்க குட்டிகள் அசராம ஓகே  ஓகே .. அப்படின்னு சொல்லிட்டு நாங்களே சிரிச்சுக்குவோம் .... கடைசியா ஏதாவது  ரொம்ப  முக்கியமான விசயம்னா  ஒரு புண்ணியவான் மொழி பெயர்த்து சொல்லுவான்.... இல்லைன்னா  அதுவும் இல்ல...
நாங்களாவது பரவாயில்ல ஒரு அஞ்சாறு  பேரு இருப்போம்.... சின்னதா சிரிக்கவாச்சும் செய்யலாம் .. எங்க கூட ஒரு அமெரிக்கன் இருந்தான் அவன் பாடு ரொம்ப திண்டாட்டம்... நாங்க ஆமாம் சாமி போடும்போதெல்லாம் வாட்? வாட்? ன்னு கேட்டு  நம்மள கொன்னுடுவான் . அதுக்கு அப்பறம் எவனும்  அவன் பக்கத்துலேயே உட்காரது கிடையாது .. அவனும் எல்லார் வாயையும் பார்த்துட்டு எந்திரிச்சு போய்டுவான்...
           
நம்ம நண்பன் கொஞ்ச காலம்  இத பார்த்துட்டு ஒரு நாள் மீடிங்குல இருக்கும்   போது  எங்கிட்ட சொன்னான்,  மச்சான் ஒரு எனக்கு ஒரு  கால்  பண்ணு என்றான், கால் வந்தவுடன் எனது டேமேஜர  பார்த்து ஐ எஸ் டி  கால் என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.. வேலை  நேரம் முடிந்து விட்டதால் அவரும் அவனை விட்டுட்டு எங்கள வறுத்து  எடுத்துட்டார் வழக்கம் போல ...
அடுத்து வாரம் மீட்டிங்குக்கு வரும் போதே இன்னைக்கு பல்ப் எதுவும் வாங்க கூடாதுன்னு வந்தேன். என் நண்பனும் பவ்யமா என் பக்கத்துல உக்கார்ந்துகிட்டு கொஞ்சம் நேரம் போனவுடன் மச்சான் கால் பண்ணுடா என்றான் , நான் ரொம்ப பந்தாவா இல்லன்னு தலைய ஆட்டினேன்.. கொஞ்ச நேரம் என்னையே பார்த்துட்டு அவன் மொபைல  எடுத்து  அவனோட ரிங் டோன ஒலிக்க வச்சுட்டு வழக்கம் போல வெளிய போய்ட்டான்..
அப்புறம் என்ன நான் வழக்கம் போல பல்ப் வாங்கிட்டேன்.
                                   ***          ***          ***         ***    

இன்னைக்கு காலையில அலுவலகம் வந்து கார  பர்க்கிங்குல விட்டுட்டு  உள்ள வந்த கொஞ்ச நேரத்துலேயே நம்ம ஆபீஸ் டிரைவர் வந்து எந்து சாரே வண்டி எங்கனே  பஞ்சர் ஆயின்னு மலையாளத்தில சம்சாரிக்க,  நானும் ரொம்ப ஆர்வபட்டு எந்த வீல்? முன்னாடியா இல்ல பின்னாடியா ??  ட்ரைவர்  சைடான்னு   கேள்விக்கணைகள்  தொடுக்க... என் நண்பன் ஒருவன் பல்ப்ப   காமிச்சு சிரிச்சுட்டு போய்ட்டான் . சரி இன்னைக்கு வேற யாரையாவது பலிகட ஆக்கணும் இல்லைன்னா நம்மதான் ஊறுகான்னு நெனைச்சுக்கிட்டு அடுத்த பலி ஆட்டுக்காக காரிடார்ல நின்னுக்கிட்டு இருந்தேன், அப்பத்தான் நம்ம செகரட்டரி நாலு  அடில வந்துகிட்டு இருந்தான். நாலு அடிங்குறது அவன் உயரம் இல்ல அவனோட அகலம்!!!. வந்தவன் ஒரு வணக்கத்த வச்சிட்டு  உள்ளே  போக நான் ரொம்ப சீரியசா  என்ன ஆச்சு உன் சட்டையில பின்னாடி எதோ   கறுப்பா ஒட்டி இருக்குன்னு சொல்ல, அவன் எட்டாத கைய வச்சிக்கிட்டு   இங்கயா அங்கேயா ன்னு கேட்டு ஒரு கட்டத்துல சர சரன்னு   சட்டைய  கழட்டிடான். இதுல நம்ம ஆபீஸ் பாய்  ஒரு கப்ல தண்ணியும் கொண்டு வர, அதே நேரத்துல நம்மளோட டேமேஜரும் உள்ள வர , ஆகா..  ஆகா ..ஒரு ஆறடி உயரத்துல  நாலடி அகலத்துல  சட்டை இல்லாம  நம்ம செகரட்டரி நிக்க அதுக்கு பக்கத்துல ஆபீஸ் பாய்  கைல தண்ணியோட நிக்க இவங்க  ரெண்டு  பேர சுத்தி  நாங்க எல்லோரும் நிக்க  ஒரே அமர்க்களம்.... நம்ம  டேமேஜர்  அதிசயமா நல்ல மூடுல இருக்க அனைவரும்  சிரித்தபடியே சென்று விட்டோம் அந்த செகரட்டரிய தவிர .........

கொஞ்சம் லேட்டாக வந்த நண்பனின் முகம் சுரத்தில்லாமல் இருக்க நான் ரொம்ப  கேட்டபிறகு சொன்னான் " ஒண்ணுமில்ல  மச்சான் நம்ம HR மேனேஜர  டெர்மினேட்    பண்ணிட்டதா சொன்னாங்க, நானும் ரொம்ப சந்தோசப்பட்டு  அவனுக்கு போன போட்டு கொஞ்சம் கலாசிட்டேன் அப்புறம் தான் சொல்றாங்க இன்னைக்கு  ஏப்ரல் பூல்ன்னு."  
                                     
                        வாழ்க வளமுடன் ...... தமிழ் தந்த  புகழுடன்

Saturday, February 4, 2012

மச்சான் உனக்கு எத்தனை?



எங்க கல்லூரி நாட்கள்ல செமஸ்டர் ரிசல்ட் வந்த ஒரு  வாரத்துக்கு  இந்த வாசகம் ரொம்பவும் பிரசித்தி பெற்றது. பொதுவா இதுக்கு அர்த்தம் உனக்கு எத்தனை அரியர் இருக்குன்னு ஆனா எங்கள பார்த்து இத கேட்டா நாம எத்தன பேப்பர் பாஸ் பண்ணி இருக்கோம்னு அர்த்தம் அந்த அளவுக்கு சரஸ்வதி தேவியோட  கருணை  இருந்துச்சு ..

கல்லூரியோட தரத்த உயர்த்த நிர்வாகம் ரொம்ப முயற்சி  பண்ணாங்க, அதுல ஒண்ணுதான்  மாடல் எக்ஸாம் வைக்கிறது. எக்ஸாம் வச்சா மட்டும் போதுமா அத எழுத ஆள் வேண்டாமா ? ஒரு பய எக்ஸாம் எழுத வர்றது இல்ல . நீங்க ஒன்னும் எழுதி கிழிக்க வேண்டாம் நீங்க வந்தா மட்டும் போதும் அப்படிங்கற அளவுக்கு நிர்வாகம் வந்துருச்சி .. அதுனால நம்மளோட பங்களிப்ப செய்வோம்னு நம்மளும் லேட்டா  போயிட்டு  சீக்கிரம் வந்திடுறது ....இத பார்த்த ஒரு ப்ரொபசர் இனிமே லேட்டா வந்த உள்ள விட மாட்டேன்னு சொல்ல நாங்களும் வழக்கம் போல தலைய ஆட்டிட்டு உள்ள வந்தாச்சு ..கொஸ்டின் பேப்பர வாங்கிட்டு வழக்கம் போல வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சான் என் நண்பன் ஒருவன்.   ப்ரொபசர் அவன்கிட்ட வந்து ஏன் ஒன்னும் எழுதாம இருக்கேன்னு கேட்க, அவன் ரொம்ப அமைதியா தவறுதலா நாளைக்கு  உள்ள எக்சாமுக்கு மாத்தி படிச்சிட்டேன்னு  சொல்ல ப்ரொபசர் கடுப்பாகி ஒன்னும் சொல்ல முடியாம போயிட்டாரு ...
    
அடுத்த நாள் வழக்கம் போல நாங்க லேட்டா வர,  ப்ரொபசர் ரொம்ப உணாச்சி வசப்பட்டு உங்கள உள்ளே விடமுடியதுன்னு சொல்ல, நாங்களும் சரி சார்   கிளம்புறோம் ஒருவேள போற வழியில பிரின்சிபால் பார்த்துட்டு  ஏதாவது கேட்டா,  நீங்க உள்ள விடலன்னு சொல்றோம்னு சொல்ல  அவரு ரொம்ப கடுப்பாகி ஒரு அஞ்சு நிமிஷம் கத்திட்டு உள்ள அனுமதிச்சாரு..ஏன்னா அவருக்கும் ப்ரின்சிபாலுக்கும் ஏற்கனவே வாய்க்கா தகராறு ...

உள்ள வந்த நாங்களும் கொஸ்டின் பேப்பர வாங்கிட்டு வழக்கம் போல சும்மா உட்காந்து இருந்தோம்.என் நண்பனும் சும்மா இருக்கிறத பார்த்த  ப்ரொபசர் வேகமா என் நண்பகிட்ட போயி , நீதான் நேத்தே இந்த பேப்பருக்கு படிச்சுட்டு வந்துட்டியே அப்புறம் ஏன் ஒன்னும் எழுதாம உட்கார்ந்து இருக்கேன்னு கேட்க அவன் ரொம்ப கூலா, "படிச்சது எல்லாம் மறந்து போச்சு சார்" அப்படின்னு சொல்லிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க ப்ரொபசர் நொந்தே போய்ட்டாரு. அப்புறம் என்ன எங்க வீட்டுல பண்ணினத அவரும் பண்ணிட்டு விட்டுட்டாரு . அதாங்க தண்ணி தெளிச்சு   விட்டுட்டாரு.               

செமஸ்டர் எல்லாம் ஒன் டே<காலையில ஒன்னு ,மதியம் ஒன்னு >     , டெஸ்ட் மேட்ச் <தொடர்ச்சியா அஞ்சு நாளைக்கு எக்சாம்>   ரேஞ்சுக்கு எழுதுறது.  இதே ரேஞ்சுக்கு எழுதுன  செமெஸ்டருக்கு  ரிசல்ட் வந்துச்சு ...எனக்கு ஒரு சென்டிமென்ட் என்னன்னா நம்மளோட ரிசல்ட்ட நாம மொதல்ல பார்க்கிறது இல்ல, நண்பர்கள் எல்லாம் பார்த்துட்டு சொன்னதுக்கு அப்புறமா மனச கொஞ்சம் திடப்படுத்திக்கிட்டு பார்க்கிறது . சில சமயம் அதிர்ச்சியா  ஆல் கிளியர் பண்றதும் உண்டு. அப்படி ரிசல்ட் வந்த நேரம்  நண்பர்கள் எல்லாரும் ரிசல்ட் பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க, நான் போய், மச்சான் உனக்கு எத்தனை  ?  மாப்ள உனக்கு எத்தனை? அப்படின்னு கேட்டுட்டு இருந்தேன், அதுல ஒருத்தன் மட்டும் ரொம்ப சோகமா இருந்தான், என்ன ஆச்சுடா மச்சான்னு நான் கேட்க, கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு சொன்னான்,


"கொய்யால மூணாவது முறையா பர்ஸ்ட் இயர்  வாஷ்  அவுட்டுடா மாப்ள " .

 வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் .     






   

Thursday, February 2, 2012

உன் வயசென்ன மச்சான்!!!

                                       எல்லோருக்கும் காலேஜ் லைப் ரொம்ப சுவாரஸ்யமா தான் இருக்கும்.  என்னுடன் கூட படித்த  நண்பர்களும்   என்கூடவே அதே காலேஜ்ல சேர்ந்ததால நம்மளுக்கு ரொம்பவே விசேஷம்.....முதல் வருடம் ஹாஸ்டல் வாழ்க்கை ரொம்ப அமர்க்களமாக இருந்தது.  ராகிங் தொல்லைக்காக   பர்ஸ்ட் இயருக்கு தனி ஹாஸ்டல், தனி மெஸ் , காலேஜ் போகும் போது   பாதுகாப்புக்கு  ரெண்டு மூணு  வார்டன் எல்லாம் உண்டு .... ஆனா சீனியர்ஸ் அதையும் தாண்டி   வந்து அடி பொளந்துட்டு போயிருவாங்க ......

லேப் ல  அவுட்புட் வரலன்னு யாராவது லேட்டா வந்தான்... தொலைஞ்சான் ..அங்க வராத   அவுட்புட் எல்லாம்  இங்க வந்திரும்......எல்லா பிரச்னையும் ரூமுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே மறந்து போயிரும் .. அவ்வளவு ஜாலியா இருக்கும் .... எங்களோட பொழுது போக்குல ஒன்னு  என்னன்னா ரூமுக்கு வர்ற பசங்ககிட்ட  பிறந்த தேதி கேட்டு கலாய்க்கிறது..எங்க ரூம்மேட்ட பார்க்க   வர்ற   பசங்கள எல்லாருக்கும்  அறிமுகப்படுத்தி வச்சிட்டு சபையில   விட்டுடுவான். கொஞ்ச நேரம் அவன்கிட்ட இயல்பா பேசிக்கிட்டு இருந்துட்டு   .. எங்கள்ள ஒருத்தன் வயசு என்ன மாப்ள அப்படிம்பான், நம்மாளும் பதினெட்டு , இல்ல பத்தொம்பது அப்படின்னு சொல்ல ..எல்லாரும் ரொம்ப ஷாக்காகி என்ன சொல்ற என்ன மாப்ள இப்படி சொல்ற என் வயசு எட்டு தான் ஆகுது, மாமா உனக்கு எத்தனைன்னு பிரெண்ட பார்த்து கேட்க அவங்களும் எட்டர, ஒன்பது இந்த ரேஞ்சுக்கு சொல்ல நம்மாளு  லைட்டா   டரியல் ஆவான் ....   

உடனே  நீ எந்த  வருஷம் பொறந்த .... அப்படின்னு  கேட்க நம்மாளும் அவன் பொறந்த வருஷத்த  எண்பது,எண்பத்தொன்னு ரேஞ்சுக்கு சொல்ல ..நாங்க ரொம்ப கேஷுவலா ஒ...  தொண்ணூறு , தொண்ணுத்தி ஒன்ன  தான் மாத்தி சொல்லிட்டியான்னு கேட்க அவன் கொஞ்சம் யோசனையா இல்லையே மாப்ள  நான் எண்பதுலதான்  பொறந்தேன்னு சொல்ல .. அப்படின்னா முதியோர் கல்விக்கு போக வேண்டியதுதான எதுக்கு இன்ஜினியரிங் காலேஜ் வந்த .. அப்படின்னு கேட்டு அவன ஊறுகாயா ஆக்கி நம்ம பொழுத போக்க  வேண்டியது ...
அப்படி     ஊறுகாயா ஆனவங்கள்ள  பல பேரு அவனோட ரூமுக்கு போயி மார்க் ஷீட்ட பார்த்து அவனோட சந்தேகத்த நிவர்த்தி பண்ணிருக்காங்கன்னா பாத்துக்கோங்க  ....

இதுல ஹைலைட்டு என்னான்னா எங்க ரூம்ல இருந்துகிட்டு  அவன் காரிடார்ல போற பசங்கள பார்த்து மச்சான் உன் வயசு என்னன்னு அவன் கேட்க அவங்களும்   எட்டர, ஒன்பது அப்படின்னு சொல்ல நம்மாளு முகத்துல  ஈயாடாது .....

அவங்க ஏன் அப்படி சொல்றாங்கன்னா ??? 
 ஒருகாலத்துல  அவங்களும்  நமக்கு ஊறுகாயா ஆனவங்கதான் !!!!!!!!!!!!!!!!!


      வாழ்க வளமுடன்...  தமிழ் தந்த புகழுடன் ...







   

Sunday, January 22, 2012

பொங்கலோ பொங்கல்.

      


இந்த ப்ளாக் ஆரம்பிச்சு எழுதணும்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டே இருந்தேன். அதுக்கு இப்பதான் நேரம் அமைஞ்சு வந்துருக்கு. அப்படி என்ன ஆணி புடுங்குற வேலன்னு நீங்க நெனைக்கிறது புரியுது.
அப்பிடியே லூசுல விடுங்க .. மொத நாளே  தண்ணி குடிக்க வைக்காதீங்க...
சமீபத்துல பொங்கல் முடிஞ்சதால  நம்மளோட பொங்கல் அனுபவத்த போடலாம்னு நெனைக்கிறேன்...  



 

படிக்கிற காலத்துல <நாம எங்க படிச்சோம் > பள்ளிக்கூடம் போற வயசுல இந்த பண்டிகையை கொண்டாடுற சந்தோஷத்த விட அதுக்கு முன்னாடி பேசுற பேச்சுதான் ரொம்ப சந்தோஷம்.
அதுவும் பள்ளிக்கூடம் விட்டு வரும் போது எல்லாம் நடராஜா சர்விஸ்தானே.. அதுனாலே பேச்சு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் ...
பொங்கலுக்கு முன்னாடி தொடர்ச்சியா லீவா வர்றதால அசைன்மென்ட் , ஹோம் வொர்க்  எல்லாம்  ஈஸியா ஏமாத்திடலாம். 
பள்ளிகூடத்தில பாதி நாள் இப்படியேதான் போனிச்சு....
பொங்கலுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே பனை ஓலை வெட்டி காய வச்சு   மாட்டு பொங்கல் அன்னைக்கு சாயந்திரம்  வீட்டுக்கு முன்னாடி குழி பறித்து பொங்கல் வைச்சு யார் வீட்டு பானை முதல்ல பொங்குதுன்னு ஒரு பெரிய போட்டியே நடக்கும்.
போற எடத்துல எல்லாம் பொங்கலும் கரும்புமா ஒரே அமர்க்களமா இருக்கும்.
அதெல்லாம்  சின்ன வயசுல ...
 எப்போ வேலன்னு வெளிய வந்ததுலேர்ந்து  பொங்கல் கரும்பு எல்லாம் பேப்பர்ல பார்க்கிறதோட சரி........   இன்னும் சொல்லணும்னா முதன் முதலா  நான் துபாய்   வந்ததே போகி அன்னைக்குதான் ...  
பசங்க எல்லாரும் சொன்னாங்க   தமிழ்நாட்ட பிடிச்ச எதோ தொலஞ்சதுன்னு......    என்னத்த சொல்ல ...............
அதிலிருந்து ஒரு முறை கூட பொங்கலை நான் வீட்டில் கொண்டாடியதில்லை.....  

சரி இந்த முறையாவது நம்ம ரூம்ல பொங்கல் செய்வோம்னு பொங்கலன்னிக்கு    சாயந்திரம்  நம்மளோட குக் கிட்ட சொல்லிட்டு, நான் பசங்களோட கோயிலுக்கு போயிட்டேன். அங்கேருந்து கரும்பு , பூ எல்லாம் வாங்கிட்டு ரூமுக்கு வந்தேன் . உள்ள நுழைஞ்ச உடனே   பொங்கல் வாசன மூக்க தொலைக்கும்ன்னு பார்த்தா ஒரே தீஞ்ச வாசம்... நம்ம குக்  மட்டன் வெட்டுற கத்திய வெச்சு குத்து குத்துன்னு பொங்கல் வச்ச பாத்திரத்த குத்திக்கிட்டு இருக்காரு ....
நான் ரொம்ப ஜெர்க்காகி என்ன ஆச்சுன்னு  கேட்குறேன் மனுஷன் என்ன பார்க்காமலே " கொஞ்சம் தீஞ்சு போயிருச்சி" அப்படின்னாரு ....குத்துற
குத்த பார்த்தா கொஞ்சம் தீஞ்ச மாதிரி தெரியலயேன்னு டிரஸ் மாத்திட்டு கட்டில பார்த்தா, கட்டில கிடந்த  துணி எல்லாம் கசங்கி இருந்தது ....
லைட்டா சந்தேகம் வந்து கிச்சனுக்குள்ள போனா ஒரே சரக்கு வாட .....
அப்பறம் தான் புரிஞ்சது நம்மாளு பொங்கல அவரு  ரூம்ல கொண்டாடிட்டு, நம்ம ரூமை   பொங்க வச்சிட்டாருன்னு....அவரு நல்லா சரக்கு அடிச்சுட்டு,  நம்ம ரூம்ல  மட்டை ஆயிட்டாரு ,பொங்கல் வச்ச பாத்திரம் நல்லா தீஞ்சு, உருகுர நிலைமைக்கு வந்துருச்சு ...

பாத்திரத்துல பாதிக்கு மேல அடிபிடிச்சு கல்லு மாதிரி ஆயிருச்சு ...
நல்லவேள பக்கத்துக்கு ரூம் ஆள் வந்து ஸ்டவ்வ  ஆப் பண்ணி இவர தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டுருக்கான்.அப்புறமா அந்த பாத்திரத்த  குப்பை தொட்டில  போட்டுட்டு கொஞ்சம் கரும்பு , பிரசாதம் அப்பறம் நிறைய திட்டும் வாங்கிட்டு போனாரு...

அப்பறம் என்ன பொங்கல் சாப்பிடலாம்ன்னு வந்துட்டு ரெண்டு பழத்த சாப்பிட்டு படுத்தோம்... படுக்கும் போது நண்பனிடம் கேட்டேன் ஏன்டா ஒருவேள ஸ்டவ் வெடிச்சுருந்தா ???????????       

என்ன ஒங்கிட்ட திட்டு வாங்க அவரு இருந்துருக்க மாட்டாரு !!!!!!!!!
    

                          பொங்கல் நல்வாழ்த்துகள்.