Monday, August 27, 2012

எப்படி இருக்கிறாய் என் காதலியே ?

                                
  
                         நீ நன்றாக இருக்கின்றாய் என்று  எனது காதல்  எனக்கு சொன்னாலும், உன்னிடமிருந்து வரும் " ம் " ஒற்றை சொல்லில் பொதிந்துள்ள ஒராயிரம் அர்த்தத்தை இந்த பொல்லாத காதல் நீயின்றி உணர்த்திவிடுமா  என்ன?  அந்த காதலின் கர்வத்தை அடக்கவாவது என்னுடன் மறுமொழி பேசிவிடு.

 உன் மீதுள்ள காதலை உனக்கு உணர்த்த ஓராயிரம் முறை உன்னை அலைபேசியில் அழைத்திருப்பேன். எத்துனை முறையோ வாய் வரை வந்து விட்ட சொற்கள் ,   என் காதலின் ஆழத்தை உனக்கு உணர்த்தும் சரியான  வார்த்தைகள்  தெரியாமல்  உன்னுடன் பேசுவதற்கு முன்பே   ஓடி ஒளிந்து கொள்கின்றன. என்ன சொல்லி சமாளிப்பேன் உன்னிடம்?
ஆகவேதான்  அலைபேசி ஒலிப்பதற்குள் துண்டித்து விடுகிறேன் சமயத்தில் உதவாத இந்த சொற்களின் மீது பெருங்கோபம் கொண்டு !!!!

தேவதையிடம் காதலை சொல்ல இயலாமல் ஒளிந்து கொண்ட வார்த்தைகள் என்னிடம்  வந்து மன்னிப்பு கோரி சமரசம் செய்கின்றன. வார்த்தைகளால் சொல்ல இயலாத காதலை வரிகளாக்கி உன்னிடம் சமர்ப்பிப்பதாக!!! . எனது  மௌனத்தையே சம்மதமென கருதி விரைகின்றன வார்த்தைகள், உன் பேரழகையும், காதலையும்    ஒருங்கே எழுதிவிட! . 

அது என்ன அவ்வளவு சுலபமா என்ன ? இருவெளிகளில் வெவ்வேறு திசையை நோக்கி பயணிக்கும் முடிவிலி போன்றது அது.  இதுதான் மிகசிறந்தது என வார்த்தைகளால் வடித்து கொண்டுவரப்படும் அனைத்துமே  சாதாரணமாகத்  தான் தெரிகிறது எனக்கு.
 உனக்கு  அனுப்புவதற்காக காதலைக்கொண்டே  உருகி உருகி எழுதப்பட்ட அத்தனை      மின்னஞ்சல்களுக்கும் உன்  மேலுள்ள  என் காதலை முழுதாய் சொல்லிவிட திராணி இல்லாததால் அவை எனது சேமிப்பறையில் உனக்கான   என் காதலுடன் சுகமாய் உறங்குவது  உனக்கு தெரியுமா?

எனக்கு தெரியும்  உனக்கான என் காதல்  ஒருநாள் உன்னால் உணர்ந்து கொள்ளப்படுமென்று, அதுவரையில் தேவதையிடம் யாசிக்கும் ஓர் யாசகனைப் போல நான் ஒரு ஓரமாய்  காத்திருப்பேன்   என்றோ ஒருநாள்  மகுடமேறப்போகும்  என் காதலுடன் !!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!









6 comments:

  1. எனக்கு தெரியும் உனக்கான என் காதல் ஒருநாள் உன்னால் உணர்ந்து கொள்ளப்படுமென்று, அதுவரையில் தேவதையிடம் யாசிக்கும் ஓர் யாசகனைப் போல நான் ஒரு ஓரமாய் காத்திருப்பேன் என்றோ ஒருநாள் மகுடமேறப்போகும் என் காதலுடன் !!!//

    கவித்துவமான வரிகள்
    மிகவும் ரசித்துப்படித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எனக்கு என்னவோ, நான் ஊருக்கு போய் சேருவதற்கு முன்னாடியே நீங்க போய் சேந்திடுவீங்க போல தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. தலைப்பை நல்லா பாருங்க!!!

      Delete
  3. நண்பர் சொன்னதுபோல்.... கவித்துவமான வரிகள்...
    ஆனால்.....
    கவிதைக்காய் கூட காதலை யாசித்துப் பெறாதே தோழா....
    யாசகமாய்க் கிடைக்கும் காதல் காயங்களை மட்டும் நிரப்பிக் கடந்து செல்லும் ....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே "யாசகமாய்க் கிடைக்கும் காதல் காயங்களை மட்டும் நிரப்பிக் கடந்து செல்லும்" ... நான் எழுதியது "யாசிக்கும் அளவுக்கு தன்னை வருத்திக்கொள்ளுபவன்" என்ற அர்த்தத்தில் சொன்னது..
      நன்றி நண்பரே வருகைக்கும், மறுமொழியிட்டமைக்கும்!!!!

      Delete