Thursday, July 26, 2012

கணிணியால் காய்ந்தவன்...


கணக்குக்கும் நம்மளுக்கும் உள்ள சம்மந்தம் உலகம் அறிந்ததுதான். அதே மாதிரி நான் படுத்தி எடுத்த இன்னொரு விஷயம்தான் கணிணி. பத்தாவது பொதுத்தேர்வு எல்லாரையும் போல மாநிலத்துலேயே முதலாவதா  வருவேன்னு நெனைச்சு எழுதிட்டு வீட்ல டாப் அடிச்சுகிட்டு இருந்தப்போ, கணிணி வகுப்புல வழக்கம் போல நம்மள கேட்க்காம சேர்த்து விட்டாங்க…..

“சனிப்பொணம் தனியா போகாதுங்கற மாதிரி” நான் என்னோட நண்பனையும் சேர்த்துகிட்டு போனேன். ரெண்டு பேரும் சேர்ந்து கடமைக்கு போறது வர்றதுன்னு இருந்தோம். அப்போதான் ஒரு செமையான டெல்லி ஃபிகர்  ஒன்னு வந்து சேர்ந்துச்சு, அது எதோ விடுமுறைக்கு வந்த இடத்துல பொழுது போகாம அங்க வந்துச்சு, அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ரொம்ப சின்சியரா கடமையே கண்ணும் கருத்துமா இருந்தோம். ஆனா எங்கள விட ஒருத்தர் ரொம்ப சின்சியரா இருந்தார், அவர்தான் எங்க இன்ஸ்ட்ரக்டர். அடடா... அடடா அவரு பண்ற பந்தா இருக்கே ஸ்ஸ்....அப்பா தாங்கல!!  இன்டர்நெட் சம்மந்தமா கிளாஸ் எடுக்கும் (அப்போ யாஹூ பிரபலமாகாத காலம்) போது அவரு www. யோகா .காம்,  அப்படின்னு வெப்சைட் இருக்குன்னு அப்டின்னு அடிக்கடி சொல்லுவார் ரெண்டு கூமுட்டை (நாங்கதான்) அதையும் ஆ ன்னு கேட்டுகிட்டு இருக்கும் . ரொம்ப உலக நடப்பு தெரிஞ்ச மாதிரி அவரு சீன் போட்டு இந்த மாதிரி சொல்லும்  போது பொறுத்து  பொறுத்து பார்த்த நம்ம டெல்லி ஃபிகர் பொங்கி எழுந்து சார் அது யோகா.காம்  இல்ல அது யாஹூ.காம்  சொல்லி பல்பு குடுத்துச்சு பாருங்க, நாங்களும் சத்தமா சிரிக்க , நம்மாளு மூஞ்சி இஞ்சி தின்ன எதுவோ மாதிரி ஆயிடுச்சி...


எங்களுக்கு வகுப்பு முடிஞ்சு போகும் போது, பல்பு வாங்கின நம்மாளு   என்ன நினைச்சாரோ தெரியல , கணிணியை ஷட்டவுன் பண்ணிட்டு போங்கன்னு சொல்ல, என்னடா பக்கத்துல இருக்கு ஸ்விட்ச் அத அமுக்குறத விட்டுட்டு போற நம்மள பண்ண சொல்றாரே அப்படின்னு நினைச்சுகிட்டு ரொம்ப வேகமா போய்   கணிணியில் இருந்த பவர் பட்டனை வேகமா அமுக்கி ஆப் பண்ணிட்டு வந்துட்டேன், அப்போ அந்த டெல்லிக்காரி என்னைய கேவலமா பார்த்தாளே ஒரு பார்வை, சரி சரி அடிப்படையிலேயே  ஒரு தப்பு நடந்துருச்சு போல விடுடா கைப்புள்ள அப்படின்னு நெனைச்சுக்கிட்டு வெளியில்  வந்துட்டோம். அடுத்த நாள் எங்களுக்கு இருந்த வகுப்பு, கணினியை  ஷட்டவுன் செய்வது எப்படி? 

இப்படிதான் இருந்தது  நம்ம அடிப்படை அறிவு.... சரி கல்லூரியில்தான் நமக்கு கட்டுமான பொறியியல் பிரிவு ஆச்சே ஒன்னும் தொந்தரவு இருக்காதுன்னு பார்த்தா  அங்கேயும் இந்த தொல்லை வந்தது.. வகுப்புலதான் நாமதான் பயங்கர கடமை உணர்ச்சியோட தூங்கியோ  இல்ல விளையாடியோ பொழுத போக்கிட்டோம். தேர்வு நேரத்துல  கணிணி ஆய்வகத்துல  பிரச்சினை ஆயிடுச்சி, எல்லாரும் ப்ரோகிராம எழுதி கண்காணிப்பாளர்கிட்ட காமிச்சுட்டு ஆய்வகத்துல போயி அதையோ ஒட்டி காமிக்கணும். நாம பைக் ஓட்டலாம், இல்ல கார் ஓட்டலாம், இல்ல ரொம்ப முயற்சி எடுத்து எதாவது பிகர ஓட்டலாம். ஆய்வகத்துல நம்ம என்னத்த ஓட்ட ?   நாமதான் கணிணியில புலியாச்சே!! நானும் என்னையே நம்பி இருக்குற கூட்டமும்(!!!!!) உட்கார்ந்தே இருந்தோம். தேர்வு அறை  கிட்டத்தட்ட காலியாகுற  நிலை வந்துடுச்சு,

நானும் புதுசு புதுசா என்னென்னவோ ப்ரோகிராம் எழுதுறேன், கண்காணிப்பாளர் அசராம  ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு திருத்தம் சொல்லி திருப்பி அனுப்பிக்கிட்டே இருந்தாரு. "தன்  முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன்" போல  நானும் விடாமல் திரும்ப திரும்ப போய்கிட்டே இருந்தேன். கண்காணிப்பாளர் மாத்தாதது என் தேர்வு எண்  மட்டும்தான்கிற நிலைமையில,   நான் ரொம்ப களைப்பாகி கடைசியா எல்லா திருத்தமும் செஞ்சு கொண்டு போனேன், கண்காணிப்பாளர் திரும்பவும் ஒரு திருத்தம் சொன்னார், நான் அதுக்கு சொன்ன பதிலுக்கு ரொம்ப சாதுவான அவர் கொடூர கோபம் கொண்டு தேர்வுத்தாளை தூக்கி வீசிட்டு, திட்டிகிட்டே  அடிக்க அடிக்க வந்தாரு, நான் ரொம்ப பவ்யமா தேர்வுத்தாளை எடுத்துக்கிட்டு  என்னோட இடத்துல உட்கார்ந்தவுடனே என் நண்பன் கேட்டான் அவரு கோபப்படுற அளவுக்கு அப்படி என்னடா சொன்ன? அவர்கிட்ட  நான்  சொன்னது என்னன்னா,
                    *
                    *
                    *

                    *
                    *
                    *
                    *
                    *
                    *
 அந்த திருத்தத்தையும் நீங்களே எழுதிடுங்க சார்....!!!!!!!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


2 comments:

  1. செம பல்ப்பு எனக்கு :-)

    ReplyDelete