Thursday, July 19, 2012

தமிழ்…..தமிழ்…தமிழ்…அமிழ்து!!!


 மனதுக்கு மிக நெருக்கமாக சில விஷயங்கள் மட்டும் தோன்றும். கடினமான சில தருணங்களில்  மனது  சிக்கி தவிக்கும் போது  நம்மை வேறு உலகிற்கு அழைத்து, அமிழ்த்தி மனதை கரைக்க    நண்பர்கள் , முழுமதி , மழலை, கானகம், மழை, மழைநேரத்து தேனீர், வெயில்  போன்றவை இருந்தாலும் அவையனைத்தும் தேவையான போது கூட வருவதில்லைஎல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி முதலிடம்  என் தாய்க்கும் என் தமிழுக்கும்  தலையாய இடமுண்டு .. ....

எப்பொழுது தொடங்கியது தமிழ் மீதான காதல்!!!! தமிழ் தமிழ்  என்று தொடர்ச்சியாய் சொல்லும் போது  வார்த்தை மருவி வருவதுஅமிழ்து.... அமிழ்து என்று  தமிழாசிரியர் வகுப்பு எடுத்தபோதா !!!

பொதிகை மலையின் சிறப்பு பற்றி வரும் செய்யுளில்,   ஓங்கி உயர்ந்த தென்னை மரத்தின் இளநீர் குலைகளின்  பாரம் தாங்காமல் பக்கத்தில் உள்ள பலா மரத்தின் மீது சாயும் . பலா மரம்   பாரம் தாங்காமல்  பக்கத்தில் உள்ள கமுகு  மரத்தின் மீது சாயும். கமுகு மரம் அருகில் உள்ள பாக்கு மரத்தின் மீது சாயும். பாக்கு மரம் அருகில் உள்ள வாழைமரத்தின் மீது சாயும்.
என்று படிக்கும் போதே அதனை கற்பனை உருவில் என் தமிழ்  கொண்டு வந்தபொழுதா !!

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி அருளொடு  நிறைந்ததுவே 
என்று பிரபஞ்ச தத்துவத்தை பகுத்த போதா  !!!

அகநானூற்றில், தலைவியை பிரிந்து  சென்ற தலைவன் வருவதாக கூறிய கார்காலம்  வந்தபிறகும் வராத தலைவனையும் அதனால் பசலை நோய் பிடித்திருந்த தலைவின் கூற்றின் போதா !!
தலைவன் வரும் வழியில்  பொல்லென  பூத்திருந்த முல்லைபூக்கள்  கார்காலத்தின் வருகையை  தலைவனுக்கு உணர்த்தியது என்றதை பருவ வயதில்  ரசித்து  வாசித்த போதா !!

தேடிச்சோறு நிதந்  தின்று  பல
சின்னஞ்சிறு   கதைகள் பேசி
..
..
பல வேடிக்கை மனிதரைப்  போலே வீழ்வேனென்று நினைத்தாயோ !!!
என்று பாரதியை படித்து விட்டு கண்ணில் கனலும், நெஞ்சில் திமிரும்  கொண்டும்  அலைந்த போதா !!!

எப்போது வந்தது  இந்த பற்று? எதனால் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் போது வார்த்தைகளில் அனலடிக்கிறது? தமிழ்  சம்மந்தமான அனைத்தும்  ஏன் நண்பர்களுக்குள்ளே அடிக்கடி விவாதப் பொருளாகிறது ?
அமீரகத்தில் வேலைக்கென்று வந்த புதிதில், வாகன ஓட்டுனர் முதல் கொண்டு திட்ட இயக்குனர்  வரை எனக்கு ஹிந்தி தெரியாததை ஆயுதமாக்கியபோதும் தமிழன் என்று கர்வமுடனே விவாதம் புரிந்தது  ஏன் ?
  இதற்க்கான பதிலை இதுவரையிலும் ஆராய்ந்ததும்  இல்லை. ஆராய  வேண்டிய அவசியமும் இல்லை . இது எனது மொழி .. எனது சுவாசம்.... எனது இருப்பு.. எனது தமிழ் மொழி ஒப்பிடுதலுக்கும்  விவாதத்திற்கும்  அப்பாற்பட்டது. எத்தனை விதமான பிறமொழிக்கலப்புகள்  , கலாசாரத் தாக்குதலுக்கு உட்பட்டாலும் இன்னும் கன்னித்தன்மை குன்றாமல்,  
"உன் சீரிளமை திறம்வியந்து செயல்மறந்து" என்று 
 வாழ்த்தப்பட்டும், வாழவைத்து கொண்டும் இருக்கிறது

 நான் ஏதோ தமிழையே காக்க வந்தவன்  மாதிரி எழுதுகிறேன்   என்று நினைக்க வேண்டாம் .  உங்கள் மனதில் எழுவது  என்னமாதிரியான கேள்விகள் என்று எனக்கும் புரிகிறது . நீங்கள் நினைப்பது போலவே என்னாலும் பிழையின்றி , பிறமொழிக் கலப்பின்றி பேசுவதோ, எழுதுவதோ சரிவரக் கைவரவில்லை.இதற்கு நான் மட்டுமா காரணம்இந்த சமூகமும், வளர்க்கப்பட்ட விதமும் , நான் இருந்த சுற்றுசூழலும் தானே  காரணம். இது எல்லாமுமே நம் மீது திணிக்கப்பட்டது தானே.

இதே மாதிரியான  ஒரு சுற்றுசூழலையா , சமூக அமைப்பையா , தாய் மொழியை பாதி மறந்த உலகத்தையா நாம் அடுத்த தலைமுறைக்கு தரப்போகிறோம் ??? சொல்லுங்கள்.

கண்களை காயப்படுத்தி கொண்டே ஓவியங்களை ரசிக்க சொல்லி தருகிறோம்.சுவாசிக்கின்ற காற்று, சுற்றுகின்ற  பூமிதண்ணீர்  என அனைத்தையும் பாழ்படுத்தி விட்டோம். குறைந்த பட்சம் தமிழ் மொழியையாவது விட்டு வைப்போம்

தமிழர்களாகிய  நாம்  தமிழரோடு  தமிழில் பேசுவோம்.
வருங்கால   சந்ததியினருக்கு தமிழ் மொழியை நன்கு பயிற்றுவிப்போம் . அந்நிய மொழியில் குறிப்பாக ஆங்கில மொழியில் பேசுவதுதான் பெருமைக்குரியது என்னும் மாயையை அகற்றுவோம்.
 பல மொழிகளை கற்பதிலோ அதை தேவைப்படும் இடங்களில் பேசுவதோ தவறேதும் இல்லை.
"பன்மொழிப்  புலமையை நமது  உலகாக்கி கொள்வோம்
அதை  பார்க்கும் கண்களாக  நம்  தமிழை ஆக்கிக்கொள்வோம்."

நாளையே இந்த மாற்றம் நடந்து விடப்போவது இல்லை. அதே போல்   பிறமொழிக்   கலப்பும் ஒரே நாளில் நிகழ்ந்தது இல்லை.ஆனால்  இந்த எண்ணப்பரவல்  மிகவும் அவசியமான ஒன்று.
தேமதுரத் தமிழோசை உலகெங்கிலும் பரவி  ஒலிக்கும் நாள் வந்தே தீரும்.
 நல்லதொரு மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்...

பெருங்கவிஞர் கூறியது போல,
"எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால்  தமிழ் ஆளும்" !!!

வாழ்க வளமுடன் , தமிழ் தந்த புகழுடன் !!!

12 comments:

 1. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
  Replies
  1. இணைக்க இயலவில்லை நண்பரே!!

   Delete
 2. தமிழ் போற்றும் ஒரு கட்டுரை வாசித்தேன்.. தங்களின் தமிழ்ப் பற்றை சிறிதேனும் நேசித்தேன்..வாழக் தமிழ்!வாழ்க தமிழ்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி மதுமதி..

   Delete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி...

   Delete
 4. நல்ல பதிவு... தமிழைப் போற்றும் , தமிழை வளர்க்கும் பதிவுகள் பெருக வேன்டும். தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 5. தமிழரோடு தமிழில் பேசுவோம்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக நண்பரே.. வருகைக்கு நன்றி..

   Delete
 6. உங்கள் சீர் தமிழ் அமுதினை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துகிறேன், இப்பொழுது உங்கள் எழுத்தினை படிக்கும்போதும் அந்த கர்வம் தலைதூக்க பெற்றேன், நன்றி, தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.

  -----------------------------------------------------------------------
  தமிழ்மணத்தில் இணைத்தபிறகு முதல் ஒட்டாக உங்கள் ஓட்டை பதியவேண்டும் அப்பொழுதுதான் திரட்டியில் உங்கள் பதிவு காண்பிக்கப்படும், உங்கள் தகவலுக்காக ...

  ReplyDelete
 7. எழுதுகிறேன் நண்பரே..
  வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.. கத்துகுட்டிதான் அதனால தாராளமா சொல்லிகுடுங்க...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...