Wednesday, April 3, 2013

ப்ளஸ் டூ பொண்ணு . !!!

   தலையை துவட்டியவாறே குளியலறையில் இருந்து வெளிப்பட்டான் ரஞ்சன், 27 வயது  இளைஞன். பார்த்தவுடன் பிடித்து போகும் முகம் , நல்ல  உயரமும் அதற்கேற்ற உடம்புமாய்  இருந்தான். சாப்ட்வேர் கம்பெனியில் லண்டனில் இரண்டு வருடமாய் குப்பை கொட்டிவிட்டு அம்மாவின் வற்புறுத்தலால் தற்போது சென்னைவாசி

 இன்றைக்கு  அம்மாவிற்கு  ஆர்த்தோ டாக்டரிடம்  மூட்டு வலிக்கான அப்பாயின்மென்ட்  என்பது திடும்மென நினைவுக்கு வர , அவசர அவசரமாக கிளம்பத் தொடங்கினான். ப்ருட்டை உடலில் விசிறி விட்டு, டி சர்ட் , ஜீனுக்கு தாவி, தலைவாரியபடியே வெளியே வந்தான்.

படிக்கட்டில் இறங்கி வரும்  மகனை  சற்றே பெருமிதமாய்  பார்த்த பூங்கோதை, தட்டில் இட்லியும் அவனுக்கு பிடித்த கொத்தமல்லி சட்னியை வைத்து நீட்ட , அவரசமாய் சாப்பிட ஆரம்பித்தவன்,  

அம்மா ஏதோ சொல்ல வருவது போல தோன்ற, சிரிப்புடன் என்னம்மா என்றான்தரகர் வந்துட்டு போனார், மூணு  ஜாதகம் நல்ல பொருத்தமா இருக்காம் நீ சரின்னு சொன்னா  பார்க்கலாம்.

கொஞ்ச நாள் போகட்டும்  என்று பொதுவாய் சொல்லிவிட்டு கைகழுவினான். அவ்வளவுதான் அதற்கு  மேல் எதுவும் கேட்க முடியாது.

எப்போது எதனால் கோபம் வருமென்று சொல்ல முடியாது,  அந்த கோபத்தின் உக்கிரத்தை தாங்க இயலாது, ஆனால் கோபம் தணிந்த அடுத்த நொடியில் குழந்தை போலாகிவிடுவான், இதை தவிர வேறு ஒன்றும் குறை சொல்ல முடியாது அவனிடம்

பூங்கோதையின் கவலை எல்லாம் வரப்போகும் பெண்ணை பற்றித்தான், வருபவள் அவனை புரிந்து நடந்து கொள்வாளா என்ற ஏக்கம் சில நாளாக அதிகரித்து இருந்தது.    

யாரையாவது காதலிக்கிறான்  என்றால் கூட  கல்யாணம் செய்து வைக்க அவள் தயார்தான், ஆனால் அவனோ பிடி கொடுத்து பேசுவேனா  என்கிறான்.

இதே நினைப்புடன் கிளம்பியவளை ரஞ்சனின் குரல் இவ்வுலகிற்கு கொண்டு வந்தது,    ஹாஸ்பிட்டல் பைலை  எடுத்துகிட்டிங்களா
என்றவாறு  பைக்கின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான் . 

ரஞ்சனுக்கு  காதல்  என்று இல்லாவிட்டாலும், உடனே  திருமணம் செய்ய வேண்டுமென தோன்றவில்லை. ஆனால் அம்மாவுக்கோ ஒரு பேரனையோ பேத்தியையோ பார்க்க வேண்டுமென ஆசை

 காதலிக்கும் நண்பர்கள் அவர்களின் முதல் சந்திப்பையோ அல்லது வேறேதை பற்றியோ  சொல்லும் போது மட்டும் ஒருவித ஏக்கம் மனசுக்குள் வந்தமரும். நமக்கு ஏதும் இது போன்று நடந்ததில்லையே என்று, பிறகு நமக்கா? என்றொரு  சிரிப்புடன் அந்த எண்ணம் எங்கோ சென்று ஒளிந்து கொள்ளும் .

வீட்டை பூட்டிவிட்டு அம்மா வர , ஹாஸ்பிட்டலை நோக்கி பைக்  அனிச்சையாய் ஓடியது. வழியில் அம்மா ஏதும் பேசவேயில்லை. மருத்துவமனையை அடைந்து, அம்மாவை பரிசோதனைக்கு உள்ளே  அழைத்து சென்று விட,

அவன்  மட்டும் வரவேற்பு அறையில் உட்கார்ந்து டி .வியில் ஓடிய குத்துபாட்டை ரசிக்க மனமின்றி   வேறெங்கோ  வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்கல்லூரி மாணவி போல் தோற்றமுடைய  ஒரு பெண்  காலில் ஒரு சிறிய கட்டுடன் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தாள்.

ஏதேனும் நடைபயிற்சி என்று  நினைத்து கொண்டிருக்கும் போதே, அவனை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவாறு அருகில் வந்து,சில்லறை வேண்டுமென  கேட்க,  அவன் தனது வாலெட்டிலிருந்து  எடுத்து நீட்ட ,சின்ன சிரிப்புடன்  தேங்க்ஸ் ஒன்றை உதிர்த்தவாறு  நகர்ந்தாள் .

 சிறிது நேரம் கழித்து  திரும்பி வந்தவள் அவனது பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து  வெகுநாள் பழக்கம் போல பேச ஆரம்பித்தாள்

ரஞ்சனிடம் இயல்பாகவே இருந்த கூச்ச சுபாவத்தால் அவளின்  கேள்விகளுக்கு பதில் சொல்வதோட நிறுத்த  அவளோ   அவளின் அப்பா, அம்மா  வேலை செய்வதில்  இருந்து, அவளது  அக்காவின் பொறியியல் படிப்பு மற்றும் அக்காவின்  சமீபத்திய    காதல் வரைக்கும் சொல்லிக்கொண்டு  இருந்தாள்

ரஞ்சனுக்கு மிகவும்  வியப்பாக இருந்தது. இப்பொழுது பார்த்த ஒருவருடன் எப்படி இத்தனை இயல்பாக பேச முடிகிறது என்று நினைத்தவாறே ஒரு குறுகுறுப்புடன்  அவளின் காலில் எப்படி அடிபட்டது என்று கேட்க?

 ஸ்கூட்டியில  போகும் போது  இன்னொரு வண்டிக்காரன் வந்து இடித்ததாக   சொல்ல, ஒரு  சந்தேகத்துடன்  லைசென்ஸ் இருக்கா? என்றதற்கு வெறுமனே சிரித்து வைத்தாள்.   

 இப்ப   என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
 என்று  கேட்டதற்கு பதிலாய் ஒரு வெடிகுண்டை வீசினாள்  + 2 படிப்பதாக

பார்ப்பதற்கு காலேஜ்  பொண்ணு மாதிரி இருக்கிறாய் என்றான் அவன், அதற்கு அவளோ நான் எங்க அப்பா மாதிரி என்றாள்  வெகுளியாய் .அவள் இவ்வளவு நேரம் லொடலொடவென்று  பேசினதின்  அர்த்தம் புரிந்தது ரஞ்சனுக்கு .
  
 கொஞ்ச நேரத்துல அவனது அம்மாவும் வந்து விட, அந்தப்பெண்ணிடம் சொல்லிவிட்டு  அம்மாவிடம்  செல்ல, மருந்து சீட்டை அவனிடம் தந்தவாறே உன்னுடன் வேலை செய்யும் பெண்ணா? என்று கேட்க,
இல்லை அவள்  +2 என்று  சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு, ஆமாமென்று தலையசைத்துவிட்டு,  வண்டிக்கருகில் இருக்குமாறு சொல்லிவிட்டு  பார்மஸிக்கு  சென்றவன்,அவளின்  பெயரைக்கூட கேட்கவில்லையே  என்று நினைத்தவாறே   அவளை தேட, ரிசப்ஷன் அருகே அவள் இல்லை

 அவனது திறமையை அவனே மெச்சிக்கொண்டு  மாத்திரை வாங்கி வந்தால், அவனது வண்டியருகில் அவளும், அவனது  அம்மாவும் பேசிக்கொண்டு  இருக்க  அவனுக்கோ பகீரென்றது .

அவன் ஒன்றும் சொல்லாமல்   வண்டியை  ஸ்டார்ட் பண்ண,  பார்த்து போங்க என்று அவள் புன்னகைத்தவாறே  சொல்ல, எரிச்சலில்  இருந்த அவன்  என்னிடம்  லைசென்ஸ்  இருக்கு என்று சொல்லியவாறே கிளம்பினான்
மருத்துவமனை தாண்டியவுடன் அவனிடம் அம்மா கூறினாள்   ,

அந்த பொண்ணு பேரு "வெண்ணிலா"வாம்  +2 படிச்சிக்கிட்டு இருக்காம். அவன் காற்று வேகத்தில் காதில் விழாத பாவனையுடன்  வண்டியை செலுத்த ஆரம்பித்தான்.


வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!

8 comments:

  1. கதையில் முதலின் அவன், அவன் என்று வந்து பின்பு நான், நான்னு வருகிறதே. சொந்த கதையோ???????

    ReplyDelete
  2. திருத்தி விட்டேன் நண்பா. நன்றி. அப்புறம் சபையில கட்டுச்சோத்தை பிரிக்காதீங்க ஆமா சொல்லிப்புட்டேன்....

    ReplyDelete
  3. அவ்வளவு தானா...? "டும் டும்" ஆனதா....? இல்லையா...?

    ReplyDelete
    Replies
    1. டும் டும் டும் நடந்திருக்கும் ரெண்டு பேருக்கும் தனித்தனியா :-).. வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  4. என்னதான் சொல்ல வர்றிங்க? என்னய மாதிரி மரமண்டைக்கு புரியர மாதிரி சொன்னாதான் என்னவாம்?

    ReplyDelete
    Replies
    1. புரியிற மாதிரி சொல்லனும்னா "அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்". அவ்வளவுதான் போங்க...

      Delete
  5. இது உங்க அனுபவம்தான் போல...

    ReplyDelete
    Replies
    1. அய்யையோ டீச்சர் அப்படி எல்லாம் இல்லை..

      Delete