Saturday, December 22, 2012

செத்துப் போ விவசாயியே 2

செத்துப் போ விவசாயியே - 1

தண்ணீர் இல்லை நிலத்தடி நீர்  எத்தனையோ அடிக்கு மேலே  போய்விட்டது என்று சொல்லும் நாம்தான்,   நிலத்தடி நீரைச் சேமிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் செய்யமாட்டோம். மழை  இல்லை   என்று புலம்பும் நாம்தான் இரண்டு நாட்கள் தொடர்ந்தாற்  போல மழை பெய்தால் ஊரே வெள்ளக்காடாகி விட்டது, ரோடெல்லாம் ஒரே தண்ணீர்  என்று புலம்புகிறோம்.



அதற்கும்  முழு காரணமும் நாமாகத்தான் இருப்போம். இருக்கும் குளங்களையும், வாரிகளையும் தூர்த்து, சிறுகச் சிறுக சேர்த்து பிளாட் போட்டு விற்றிருப்போம்.அடுத்த ஒரு வாரம்   கழித்து  தண்ணீர் இல்லை ,மழை இல்லை என்று அதே பஞ்சப்  பாட்டை திரும்ப  பாடுவோம்.

  • படிக்காத ஒன்றும் அறியாதவர்கள் என்று நாம் நினைக்கும் நமது பாட்டனும் முப்பாட்டனும், முன்னோர்களும்  அமைத்து வைத்திருந்த விவசாய முறை நாம் அறிவோமா ?
  • பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்து தஞ்சை டெல்டா முதல்  தலைக்காவிரி வரை கோலோச்சிய தமிழனின் யுக்திகளை  நாம் தொடர்கிறோமா ?? 
  • அவர்கள்  செய்த நீர்ப்பங்கீடு முறை நமக்கு நினைவில் உள்ளதா? மழைக்காலத்தில் நமது கிராமங்களில் உள்ள குளங்கள் வரிசைக்கிரமமாக  நிரம்புவதை இப்போது பார்க்க முடியுமா?
  • பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வீட்டிற்கு ஒருவர் என முறை வைத்து வாய்க்கால்களையும், வாரிகளையும் வெட்டி சீரமைப்பார்களே அந்த முறை இப்போது  உள்ளதா ?
  •  உபரி நீரை வெளியேற்றுவதற்காக காட்டாற்றுடன் இணைக்கப்பட்டுள்ள வாய்க்கால்  இருக்கிறதா இப்போது ? 
  • சிறுவயதில் நமக்கு தெரிந்து பயிர் செய்த, குருதாளி, பனிப்பயறு,கேப்பை என  எத்தனை தானியங்கள் காலப்போக்கில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. அவற்றை  முக்கியப் பயிர்களின் அறுவடைக்கு பின் இடையிடையே  பயிர் செய்வதன் மூலம் நுண்ணுயிர் சத்துக்கள் சம நிலைப்படுத்தப்பட்டு இருந்ததை நாம் செய்கிறோமா இப்போது? 
பதில்  நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

நகர மயமாக்கலும், நாகரீகமாக்கலும் சேர்ந்து விவசாயத்தை அடியோடு சீர்குலைத்து போட்டு விட்டது.எந்த அரசாங்கம் வந்தாலும் விவசாயியின் வறுமையோ தற்கொலையோ   ஒரு பொருட்டு அல்ல.

அவர்களின் தாரக மந்திரம் இதுவாகக் கூட இருக்கலாம்  விவசாய நிலங்களை கான்க்ரீட் காடுகளாக்கி, நிலத்தடி நீரை தொலை தூரத்திற்கு அனுப்பி, மிச்சமிருக்கும் உவடு தட்டி போன நிலத்தை  சுடுகாடாக்கிவிட்டு   விவசாயிகளை  பார்த்து  "செத்து போ விவசாயியே  " என்று சொல்வதாக கூட இருக்கலாம்...

விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு,தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று  சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் ...


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Tuesday, December 18, 2012

செத்துப் போ விவசாயியே ...

"வரப்புயர நீர் உயரும்
 நீர் உயர நெல் உயரும்
 நெல் உயர  குடி உயரும்
 குடி உயரக்  கோன் உயர்வான்."

 என்று ஒரு விவசாய குடியின் வளர்ச்சி  நாட்டின் வளர்ச்சியாகப் பார்த்த காலங்கள் மலையேறிப் போய்விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிநாதமாய்,  பெருமையாய்  பாடப்பட்ட விவசாயி தான் இன்று வரிசையாய்  தற்கொலை செய்து கொள்கிறான்.  இது விதர்பாவிலோ, அல்லது நமக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத நாட்டின்  ஏதோ  ஒரு மூலையிலோ  நடந்த செய்தி அல்ல. உலகுக்கே  படியளந்த தஞ்சை டெல்டாவில் தான் இந்த தொடர் தற்கொலை சம்பவங்கள்.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
 தான்அமிழ்தம்  என்றுணரற் பாற்று.  "

 என்று உலகத்து உயிர்களை எல்லாம் வாழ வைக்கும் அமிர்தம் போன்ற மழைதான் இன்று "ஆலகாலமாய்" மாறி, பெய்க்காமல் பொய்த்து, விவசாயிகளை காவு வாங்குகிறது.

அண்டை மாநிலங்கள் தண்ணீர் தராமல்  வஞ்சிக்க, பருவமழை பொய்க்க, நிலத்தடி நீரும் குறைந்து, குண்டு பல்பு எரியகூடிய அளவு மின்சாரத்தையே வழங்க  வக்கத்த, துப்புகெட்ட அரசாங்கமும் கைவிட, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட  முடியாமலும், வறண்ட வீறு விட்ட வயலை காணச் சகிக்காமலும், பூச்சி மருந்திலும், புளிய மரத்தில் நான்கு  முழக் கயிறுடன்  நிரந்தர நிம்மதி தேடிக்கொள்கிறான் ஏழை விவசாயி.

வறட்சி காலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டிய அரசாங்கம்,  வாய்தா வாங்கும் சாமர்த்தியத்தில் பாதி காண்பித்தால் கூட போதும் காவிரி கைவிரிக்காது. முல்லைப் பெரியாறு முரண்டு பிடிக்காது. ராஜ தந்திரமாய் காரியம் சாதித்து கொள்ள நமது அரசியல்வாதிகளுக்கு துப்பில்லை. ஆனால் அறிக்கை போர் புரிவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

  • நதி நீர் இணைப்பு குறித்த தெளிவான பார்வை இல்லை. அதை மேற்கொள்ள எந்த விதமான முனைப்புத்  தன்மையும் இல்லை.
  • நீராதாரத்தை நிலைப்படுத்த எந்தவிதமான  தொலை நோக்கு திட்டங்களும் இல்லை.  
  • போதிய தடுப்பணைகள் அமைத்து உபரியாய் கடலில் கலக்கும்  நீரைச் சேமிக்க எந்த ஒரு முயற்சியும் இல்லை.  
  • குறிப்பாக விவசாயம் குறித்தோ விவசாயிகள் குறித்தோ யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை .

அரசியல்வாதிதான் அப்படி இருக்கிறார்கள் என்றால்  நன்கு மெத்த படித்த நல்ல பதவியில் உள்ள வேளாண்மை அதிகாரிகள்  அதுக்கு மேல் !!!!  விவசாயி எங்கு போய்  முட்டிக்கொள்வது???  மண்பரிசோதனை  செய்ய நான் பட்ட பாடு சொல்லி மாளாது ....


                                                                             மீண்டும்  புலம்புவான் விவசாயி  .......

விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு, தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று  சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் .


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!











Thursday, December 13, 2012

மாலை நேரத்து மழை.


 
                                                                அகமும் புறமும் 
                                                                இதமாய் நனைத்து 
                                                                குழந்தையாய் 
                                                                உள்ளம் குதூகலிக்க 
                                                                வைத்து  
                                                                மறந்திருந்த பால்யம் 
                                                                உசுப்பி 
                                                                தற்கால கவலை
                                                                மரணித்து 
                                                                இயல்பாய் உயிரினில்
                                                                ஒரு சிலிர்ப்பை  
                                                                 தந்தது  அந்த 
                                                                 மாலை நேரத்து 
                                                                 மழை .
                                                                அந்த அற்புத 
                                                                 கணங்கள்  
                                                                 மண் நனைத்து 
                                                                 வாசனை கிளப்பி 
                                                                 என்னை ஏகாந்தத்தில் 
                                                                 திளைக்க விடலாம்.
                                                                 இல்லை 
                                                                 நெஞ்சில் சூல் கொண்டு 
                                                                 கவிதையாய் பிரசவிக்கலாம்.
                                                                 எப்போது வேண்டுமானாலும் !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!





Monday, December 10, 2012

செய்திலா வினைகள்.


உன் வெட்கத்தின்  நிறமான இளஞ்சிவப்பை 
பூசி இருந்திருக்கலாம் அந்த  சுவர்களில்
மொத்தமாய் உனது உருவம் பார்க்க
பொருத்தி இருந்திருக்கலாம் அந்த கண்ணாடியை
காலை  வெயிலின்  கடுமை   குறைக்க
 மாட்டி இருந்திருக்கலாம் அந்த திரைச்சீலையை
வாகாய்  துணி  உலர்த்த  கொடி  ஒன்றை
கட்டி இருந்திருக்கலாம் அந்த மொட்டை மாடியில்
உனக்கென்ன
இப்படியாய் கேட்டு  நிராசையாய் போன
எத்தனையோ  ஆசைகளுடன்  இதுவும் ஒன்று
எனக்கோ
மனதை பிசையும் பிரிவுத்துயருடன்
இலவச இணைப்பாய் உறுத்தும்
செய்திலா வினைகளின் மிச்சங்களும் 
அதன்  நினைவுச் சேர்க்கைகளும் 
இருந்தாலென்ன  அனைத்தையும் செய்து
முடிக்க இன்னொரு வருட விடுமுறை
வராமலா போய்விடும் எனக்கு ???!!! 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!