உனக்கு நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு நன்கு நினைவில் உள்ளது நீ சிறுவயதில் கைகளில் பிரில் வைத்த ரோஸ் கலர் பாவாடை சட்டை அணிந்து வளைய வந்த நாட்கள். நீ வாசலில் கூட்டி பெருக்கி கோலம் போட எத்தனிக்கையில் அதற்கு இடைஞ்சலாக மட்டுமே நானிருப்பேன் உன்னை பெருக்க விடாமல் உன் கழுத்தை கட்டிக்கொண்டோ அல்லது நீ கோலம் போட வைக்கும் புள்ளிகளுக்கு இணையாக நானும் எதாவது புள்ளிகளை வைத்துக்கொண்டோ இருப்பேன்.
உன் வயதையொத்த தோழிகள் என்னை ஏதாவது சொன்னாலும் அதை சிரித்துக் கொண்டே தவிர்த்துவிட்டு "என் தம்பி " இவன் என்ற வாத்சல்யத்தோடு பார்ப்பாய் என்னை . எவ்வளவு தான் உன்னை தொந்தரவு செய்தாலும் அம்மா இவனைப் பாருங்கம்மா என்றதொரு செல்ல சிணுங்கலுடன் நிறுத்தி விடுவாய் !!! அந்த சிணுங்கலுக்காகவே உன்னை மீண்டும் மீண்டும் சீண்டுவேன் நான்.
உன் வயதையொத்த தோழிகள் என்னை ஏதாவது சொன்னாலும் அதை சிரித்துக் கொண்டே தவிர்த்துவிட்டு "என் தம்பி " இவன் என்ற வாத்சல்யத்தோடு பார்ப்பாய் என்னை . எவ்வளவு தான் உன்னை தொந்தரவு செய்தாலும் அம்மா இவனைப் பாருங்கம்மா என்றதொரு செல்ல சிணுங்கலுடன் நிறுத்தி விடுவாய் !!! அந்த சிணுங்கலுக்காகவே உன்னை மீண்டும் மீண்டும் சீண்டுவேன் நான்.
பள்ளியில் இருந்து நீ நடந்து வந்ததால் கால் வலிக்கிறது என்றவுடன் தினமும் உன்னை தூக்கி கொண்டு போய் விட்டுவிட்டு வந்த தாத்தாவும், என் பேத்தி ,என் பேத்தி என எங்கு போனாலும் உன்னை கூட்டி திரிந்த ஆயாவும் , மகளுக்கென்று அப்பாவால் ஸ்பெஷலாக வாங்கி வரப்படும் கோலாலம்பூர் லக்ஸ் சோப்பும் , டீச்சர் ஒருமுறை உன்னை கிள்ளியதால் அந்த டீச்சருடன் சண்டைக்கு போன அம்மாவும் என எல்லோருக்கும் செல்லமாக நீ இருந்தாலும், உனக்கு செல்லமாக நான்தான் இருந்தேன்.
பள்ளிகளில் நல்லவை எல்லாவற்றிற்கும் முன்னுதாரணம் நீயாகத்தான் இருப்பாய். நான் உனக்கு நேரெதிர் . பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி, நான் எந்த தப்பு செய்தாலும் அது உன்னையே சுட்டும். எல்லாவற்றிர்க்கும் நீதான் நீதிபதி அது பெரும்பாலும் என்னை காப்பதாகவே இருக்கும்.
பத்தாவதில் கணக்கில் எனக்கு சென்டம் வருமென்று கணித்தது தவறாய் போக, அதை ஏற்றுக்கொள்ள இயலாத நீ சிறுபிள்ளை போல அழுததை நினைத்து நான் மனங்கசிந்த நாட்கள் ...
திருமணம் முடிந்து கணவன் வீடு செல்கையில் துணைக்கு யாரை அனுப்பலாம் என்று பேசுகையில், இடைபுகுந்த நீ தம்பியை அனுப்புங்கள் அவன் பார்த்து கொள்வான் என்று எனக்கே இல்லாத ஆளுமையை, தன்னம்பிக்கையை நீ ஊட்டிய நாள் ...
சென்னையில் இருந்து கொண்டு வாரம் ஒருமுறைகூட உங்களால் வந்து போக முடியாதோ என்று ஆதங்கப்பட்ட நாள்... நீ கர்ப்பம் தரித்த காலத்தில் வந்த டைபாயிடும், உன்னை அழைத்து செல்ல அம்மா அப்பா வந்த போதும் நீயும் வாயேண்டா என்று உன் கண்கள் உரைத்ததை உணர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நீ ஊருக்கு செல்லும் நாளில் வந்ததும், நானும் உன்னுடன் ஊருக்குதான் வருகிறேன் என்று நீ அறிந்தவுடன் உன் விழிகளில் கண்ணீர் துளிர்த்த நாட்களும் .....
ஸ்லேட்டு குச்சி முதல் பாரின் சாக்லேட் வரை உனக்கான பங்கை எனக்கு விட்டு தந்திருக்கிறாய் . ஆனால் நான் மட்டும் நமது அம்மாவின் பாசத்தில் உனக்குரிய பங்கை விட்டு தரவே இல்லை . அது எல்லாம் எனக்கு மட்டுமே வேண்டும் என்று சுயநலமாக நடந்து கொண்ட பின்னும் , என்றும் மாறா அதே புன்னகையுடன் நீ சிரித்த நாட்கள், நீ எல்லாமுமானவள் என்பதை எனக்கு உணர்த்திய நாட்கள் !!!
அக்காக்கள் இன்னொரு அம்மாக்கள் !!!
வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன்!!!