Tuesday, November 5, 2013

பொய்யாய்க் கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா.

அன்பாயிருந்த மகனுக்கு,

ஒரு மழைக்கால ராத்திரியில்தான் நீ பிறந்து என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினாய்.என் கைச்சூடு கண்டுகொண்டதால்   என்னவோ பிறந்த சில மாதங்களுக்கு  என்னைத்தவிர யாரிடமும் சென்றதில்லை நீ. ஒருநாளில்  எனக்காக நான் ஒதுக்கிய நேரம் சில  நிமிடங்கள்  மட்டுமே.

மழைக்  காலமாகையால் நீ ஈரமாக்கிய துணிகளை துவைத்து   வெளியில் காய வைக்க இயலாமல் விறகு அடுப்பின் வெம்மையில் உலர்த்தி  தருவார்  உனது அம்மாச்சி.  

"முந்தித்  தவமிருந்து
முன்னூறு நாட்  சுமந்து
அந்திப் பகலாய் இறைவனை வந்தித்து" 

பெற்றெடுத்த உன்னை, உடலால் தோளிலும், மனதால் நெஞ்சிலும் சுமந்து திரிந்தார் உனது தந்தை.உனது மழலைச்  சொல் தான்  எங்கள் வேதமாகியது.நீ இருக்கும் இடம்தான் எங்களுக்கு விருப்பிடமானது.   உலகினை பொறுத்தமட்டிலும் நீ வளர்ந்து கொண்டே இருந்தாய் நானோ சிறுபிள்ளையாகிக் கொண்டிருந்தேன்.

நடைவண்டியோட்டி நீ  நடை பழகிய காலத்தில் கொல்லைப்புற வாசல்  ஓரமாய் இருந்த கல் தடுக்கி  நீ விழுந்து விட்டாய். உனக்கு அடிபட்டு விட்ட ஆதங்கத்தில் உன் தந்தை பெயர்த்து எறிந்த அந்தக் கல்,எல்லைக் கல் ஆனதால்  பங்காளி வீட்டு  பகையாகி காவல் நிலையம் வரை சென்றது தனிக்கதை.

நீ பள்ளி சென்ற முதல் நாளின் வெறுமையை  தாங்க இயலாமல், நாள் முழுவதும் பித்து பிடித்தாற்  போல இருந்தது உனக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

எனக்கும் உன் தந்தைக்குமான கருத்து வேறுபாடுகள் மிக சொற்பமே. உன்னால்,  உன் பருவ வயதில் நீ செய்த தவறுகளால்  எனக்கும் உன் தந்தைக்குமான மனஸ்தாபங்கள் ஏராளம்.

நீ உடுத்திய  உடை முதல்  படித்த  கல்லூரி மற்றும் கட்டிய மனைவி  வரை உனது விருப்பமே பிரதானமாக இருந்தது. நீயும் நன்கு படித்து நல்ல நிலைமைக்கு வந்து விட்டாய். மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் உனக்குத்தான் நான் மிகவும் வேண்டாதவளாகிப் போய்விட்டேன். தளர்ந்த உடலும்,  சுருக்கம் விழுந்த முகமுமாக நான்தான்  அந்நியப்பட்டுப் போய்விட்டேன்.

முன்பொரு காலத்தில் முழு வீட்டையுமே ஆக்கிரமித்து இருந்தாய் நீ.  அதில்  எனக்கொரு ஒட்டுத்திண்ணை கூட கிடைக்காதது எனது துரதிர்ஷ்டமே. எனக்கு வசதியாய் இருக்கட்டும் என்று,  என்னைப்போல அனாதைகள் நிரம்ப உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளாய்.

 நன்றாகத்தான் இருக்கிறது மகனே நீ சேர்த்து விட்டிருக்கும் முதியோர் இல்லம்,  என் போன்ற அனாதைகளின் ஏக்கப் பெருமூச்சோடு. எதற்கும் இருக்கட்டும் இந்த அறையையும் முன்பதிவு செய்து கொள். உன் காலத்தில் இதற்கும் வரலாம் இடப்பற்றாக்குறை!!!.  

இப்படிக்கு 
பொய்யாய்க்   கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா .


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!


Monday, September 23, 2013

நிக்கோடினா ஒரோல்ஸ்.

1999
காலேஜ் பர்ஸ்ட் இயர்  படிக்கும்(??!!) போது படிக்கிறத தவிர மத்த எல்லாத்தையும்  செய்யுறது.  எங்க பக்கத்து ரூம்ல ஒரு அஜீத் குமார் இருந்தான். அவன் எப்போதும் கண்ணாடிக்கு முன்னாடி நின்னுகிட்டே  வராத மீசையை வா வான்னுட்டு இருப்பான். ஒரு பரு வந்துடுச்சுன்னா  போதும் ரூம் புல்லா கலர் கலரா மருந்து வாங்கி வைச்சிருப்பான்,  நைட்டு படுக்க போறதுக்கு முன்னாடி  மூஞ்சில எதையாவது   அப்பிக்கிட்டு பக்கத்துல இருக்கிறவங்களை பயமுறுத்தி கிட்டு இருப்பான்.

வழக்கம் போல படிக்காம  பேசிக்கிட்டு இருக்கிற "சைலன்ஸ் அவர்ல" அவனைக் கலாய்க்கிறதுக்காக ஒரு ப்ளான் போட்டோம் . நம்மாளுதான் மூஞ்சுக்கு போடுற பவுடர் அல்லது  க்ரீம்ன்னா  உயிரை விடுவானே அதுனால அவனுக்காக ஒரு  பவுடர் தயார் பண்ணினோம், அதோட மூலப் பொருட்கள் என்னன்னா

1.சர்ப்  சோப் பவுடர்
2.பாண்ட்ஸ் பவுடர் (கொஞ்சம் )
3.ப்ளீச்சிங் பவுடர்   (கொஞ்சத்துல கொஞ்சமா)

நல்லா  மிக்ஸ் பண்ணிட்டு,  ஒரு சின்ன டப்பால போட்டு வச்சிட்டோம் . நாங்க பேசிக்கிட்டு இருக்கும் போது  ஒருத்தன் ரொம்ப கேஷுவலா கேக்குற மாதிரி மச்சான் ஜோதி, உங்க மாமா லண்டன்லேருந்து வாங்கி வந்த பேஸ்  வாஷ் நல்ல இருக்குடா அப்படின்னு சொன்ன உடனே,

"மசால் வடையை பார்த்த எலி மாதிரி'' பாஞ்சு வந்து எனக்கு எங்கடான்னு, எனக்கு எங்கடான்னு எக்கோ எபக்ட்டுல கேட்டுட்டு, கூடவே அதோட பேரு என்னடான்னு கேட்க, நாங்கள் திகைக்க  என் நண்பன் ஒருவனோ சட்டென்று வைச்சான் பாருங்க பேரு "நிக்கோடினா  ஒரோல்ஸ் ."

பேரே பாரின் பிகர் மாதிரி இருக்கதால நம்மாளுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.
மச்சான் ரொம்ப காஸ்ட்லியான பவர்புல்  பவுடர் கொஞ்சமா தண்ணில கலந்து போடு, மூஞ்சில  அரிச்சா பவுடர் வேலை செய்யுறதா அர்த்தம்னு சொல்லிட்டு சபையை கலைச்சிட்டோம்.

நம்மாளும் அதை தொடர்ச்சியா நாலஞ்சு நாள்  போட்டு மூஞ்சில வெள்ளை வெள்ளையா சொறி வந்ததுதான் மிச்சம். மூஞ்சை சொறிஞ்சது சகிக்காம நண்பன் ஒருத்தன் "நிக்கோடினா  ஒரோல்ஸ்" சோட பார்முலாவை நம்ம அஜித்குமார்கிட்ட சொல்ல, அப்புறம் கேப்டன் விசயகாந்த் ரேஞ்சுக்கு கண்ணு செவக்க  செவக்க  "செந்தமிழ்" ல ஒரு அரைமணி நேரம் சிறப்பு வகுப்பு எடுத்தான் எங்களுக்கு .

2013
இப்போ அந்த அஜித்குமார் யு. எஸ் ல இருக்கான்.  கொஞ்ச நாளைக்கு முன்பு பேசியவன் ஊருக்கு போறப்போ ட்ரான்ஸிட்  துபாய் வர்றதாகவும் , கண்டிப்பா மீட் பண்ணுவோம்னு சொல்லிட்டு   வர்றப்போ   என்னடா வேணும்ன்னு   கேட்க,  யு .கேன்னா கிடைக்கும் மச்சான் ஆனா  யு. எஸ் ல கிடைக்குமான்னு தெரியலயேன்னு  சொல்ல அப்படி என்னடா இங்க கிடைக்காததுன்னு  கேட்க, நானோ "நிக்கோடினா  ஒரோல்ஸ் " ன்னு சொல்ல, டமார்ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சு அது அவனோட மொபைலா இருக்குமோன்னு தோணுது!!! உங்களுக்கு என்ன  தோணுது ??



வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, September 5, 2013

ஆ "சிறந்தோர்" தினம்.

"டேய் மொட்டை நீ வந்து வாசி" .

போர்டில் டீச்சர் எழுதி போட்டிருப்பதை   வாசிக்க வேண்டும்.தவறாய் வாசிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் டீச்சருக்கு வாகாய்  இருக்கும்  இடத்தில் தலையிலோ, பின்பக்கத்திலோ  அடி விழும்.

"ஜ"வுக்கும்   " ஐ "க்கும் வித்தியாசம் தெரியாமல் தவறுதலாய் வாசிக்க, டீச்சரிடம்  இருந்த பிரம்புதான்  அந்த வித்தியாசத்தை உணர்த்தியது.
ஒரு நாள்  நீரில் மிதக்கும் பொருள்களை சொல்லுமாறு வகுப்பில் பொதுவாய் கேட்க நான் "கரித்துண்டு" என்று பட் டென்று சொல்லி வாங்கிய "முதல் கைத்தட்டலுடன்" ஆரம்பமானது எனது பள்ளிப்படிப்பு.

சராசரி மாணவனாக இருந்த என்னை  நன்கு படிக்கும் மாணவனாக  மாற்றியது அந்த மூணாப்பு  டீச்சரின் அன்பும் வழிகாட்டுதலும் தான்.

அதன்பின் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு விதமான வழிகாட்டுதல்கள். ஐந்தாம் வகுப்பில் நடந்த க்விஸ் ப்ரோகிராமில் ஜெயித்தது.ஆறாம்  வகுப்பில் நடந்த  க்விஸ் ப்ரோகிராமில்  ஜோனல் லெவலில் முதல் பரிசு பெற்றது. இப்படி நிறைய ..
ஏழாம்  வகுப்பில்  தேசியப்பறவை வரைந்து அதனடியில் ஒரு கவிதை கட்டாயம் எழுதவேண்டும் என டீச்சர்  சொல்ல,எனக்குள்ள ஒரு கவிஞன் பார்ம் ஆனது அப்போதுதான்,

பெண் கூந்தல்  போன்ற 
தோகை உடைய மயிலே 
நீ 
அடைபட்டது  கூண்டிலே அல்ல 
எனது மனச் சிறையிலே!!

என்று எழுதி பாராட்டப் பெற்றது, என பள்ளிப்பருவத்தின்  ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு எதையோ  கற்றுத்தந்து என்னை செம்மைப்படுத்தியவைதான்.

நடை பழகும் குழந்தைக்கு  விரல் பிடித்து நடக்க கற்றுத்தரும் ஒரு அன்னை போல் அனைத்தையும் கற்றுத்தந்து, கூடவே
"கற்றது கைம்மண்ணளவு கல்லாதது  உலகளவு" என்பதையும் சொல்லித்தந்து, அனுதினமும் கற்றல் நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர வைத்த எனது ஆசிரியப் பெருமக்களுக்கு "ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

டிஸ்கி :  இது கவிதையா என்று யாரும் கல்லெடுக்க வேண்டாம் ... அவ்வப்போது எனக்குள் வீறு கொண்டு எழும் கவிஞனை, பதிவுலகத்தின் நன்மை கருதி அண்ணன் "வெளங்காதவன்" கமெண்டை  காட்டி கட்டிப் போட்டுள்ளேன் .ஹிஹிஹி....     

Tuesday, July 30, 2013

கொல்லைப்புற கிணற்றடியும் பவள மல்லி மரத்தடியும்..

எத்தனையோ  முறை உன்னைக் கடந்து வந்திருப்பேன் அவசரமாகவோ, இல்லை கண்டும் காணாமலோ. ஆனால்  நான் வெறுமையை உணரும் போதெல்லாம் "தாய் மடி கண்ட சேய்" போல  தஞ்சமடையும் இடம் கொல்லைப்புறத்தில் உள்ள இந்த கிணற்றடியும், அந்த பவள மல்லி மரத்தடியும் தான்.

எப்போதிருந்து ஆரம்பித்தது இந்த சினேகிதமான  நெருக்கம்? பால்யத்தில் விளையாட ஒருவருமின்றி தனித்திருந்த சில பொழுதுகளை வாஞ்சையுடன்   அரவணைத்த போதா? இல்லை அம்மா துணி துவைக்க தண்ணீர் சேந்தி தரும் பொழுதுகளில், கிடைக்கும் இடைவெளியில் ஈரக்   கைகளுடன் அங்கு சிதறிக்கிடக்கும் பவளமல்லி மலர்களை சேகரித்து அதன் வாசனையை ஆழமாய் சுவாசித்து நுரையீரல்களில் நிரப்பிய தருணத்திலா?



அல்லது ,
சற்றே பெரியதாய், உயரமாய் அமைந்த துணி துவைக்கும் கல்லின் மேல் படுத்தவாறே சிதறிக்கிடக்கும் நட்சத்திர கூட்டங்களை ஆச்சர்யமாய் எண்ணிக்கொண்டிருந்த போதா?

அல்லது,
வீட்டில் சண்டையிட்டு கோபித்த இரவுகளின் நீட்சியாய் பசியுடனும், கண்ணீர்க் கரையோடிய கன்னங்களுடனும்  கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்த அந்தப் பொழுதிலா?

அல்லது,
வானம் வெளித்த மழை நாளில், கதிரவன் தன் பொன்மஞ்சள் கதிர்களை கலைந்தோடும் முகில்களுக்கிடையே சிதறடித்துக் கொண்டிருந்த மாலையொன்றில், மழைமுத்தை மடியில் ஏந்தியவாறு பச்சைப் புல்வெளிப் பரப்பில் சிதறிக்கிடந்த  பவளமல்லி மலர்களும், கொல்லைப்புறத்தையே தன் வாசனையால்  நிரப்பி வைத்திருந்த, மொட்டவிழ்ந்த சந்தன முல்லை மலர்களுமாய் காட்சியளித்தபோதா?

சரியாய்த் தெரியவில்லை எனக்கு. இருக்கலாம் இவற்றில் எதாவதொரு பொழுதிலோ அல்லது இவை அனைத்தும் சேர்ந்து என்னை ரசவாதம் செய்த ஒரு கலவையான பொழுதிலோ, என் மனதை முற்றிலுமாக  ஆக்கிரமித்திருக்கலாம், இந்த கொல்லைப்புற கிணற்றடியும் அந்த பவள மல்லி  மரத்தடியும்.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!








Monday, July 22, 2013

சலாலா போகலாம் வாரீகளா !!!!

                                                         கல்லூரி நாட்களுக்கு அப்புறமா எத்தனையோ டூர் வடிவேலு ரேஞ்சுக்கு ப்ளான்  பண்ணி, ஆபரேஷன் "டி"ன்னு பேரெல்லாம்  வச்சி, கடைசியா  பவர் ஸ்டார் படம் மாதிரி ப்ளாப் ஆகிடும்.

போன ரம்ஜான் லீவுக்கு  எல்லாரும் சலாலா   போகலாம்னு  ஒருமனதா முடிவு பண்ணி ரெண்டு கார்ல, மூணு  ட்ரைவரோட, நாலு நாள்  பயணமா, அஞ்சு பேரு ஒரு காருக்குன்னு மொத்தமா  பத்து  பேர் ஒரு சுபயோக சுபதினத்தில் கிளம்பிட்டோம்.

கொஞ்சம் ஓமன் கரன்சி கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு எக்சேஞ்சுக்கு போயி ஒரு 500 ஓமன் ரியால்(நம்ம ரூபாய்  70,000)  மாத்திக்கிட்டு  இருக்கும் போது         "காறித் துப்பினா காக்காசு பெறமாட்டான்னு" சொலவடைக்கு மிகப்பொருத்தமான  சுடிதார் போட்ட பாகிஸ்தானி ஒருத்தன், அவனை சுற்றி அவனுக்கே  உண்டான பாதுகாப்பு வளையத்துடன்(!!!) அவனும்  ஓமன் ரியால்  மாற்றிக்கொண்டிருந்தான். அவன் மாற்றியது எவ்வளவு தெரியுமா மக்களே ? 6000 ஓமன் ரியால்!!!. நம்மூரு மதிப்புக்கு கிட்டத்தட்ட 9 லட்சம் . என்னோட வாயில போன ஈயை துப்பிட்டு, என்னோட  சில்லறைய   வாங்கிகிட்டு  நின்ன இடம் தெரியாம கிளம்பி வந்துட்டேன்.

கூட வர்ற யாரும் முன்னபின்ன   அங்க போனதில்லை. நம்ம கூகுளாண்டவர் துணையோட ரூட் மேப்பை , லேண்ட்மார்க் போட்டோவோட  ஸ்பைரல் பைண்டிங் போட்டு  ரெடி பண்ணிட்டாரு நண்பர் ஒருத்தர். இந்த பெர்பக்க்ஷனை வேலையில  காட்டி இருந்தார்ன்னு வைங்க, "வெரிகுட்"ன்னுருப்பான் வெள்ளைக்காரன். ஏன்னா  அவரு பாஸ் ஒரு வெள்ளைக்காரன் !!!! ஹிஹிஹி  ...

கைப்புள்ளைங்களோட   ப்ளான்  இதுதான் ,

1.அபுதாபி(abudhabi  ) to  அல் அய்ன் பார்டர் கேட் (Al Ain barder  )-150 km
2.அல் அய்ன் (Al Ain) to  இப்ரி(Ibri  ) -125 km
3. இப்ரி(Ibri) டு ரோடு 29 -31 சந்திப்பு -213 km
4.ரோடு 29 -31 சந்திப்பு டு ஹைமா(haimah)-229 km
5. ஹைமா(Haimah) டு முஸ்கின் (Mushkin)-223 km
6. முஸ்கின்(Mushkin) டு  தும்ரைத் (Thumrait)-188 km
7. தும்ரைத்(Thumrait) டு சலலாஹ்(Salalah) -82 km


அத்து வானத்துல பறக்குற ஹெலிகாப்டருக்கே எழுமிச்சம்பழத்தை முன்னாடி கட்டி, சந்தனம் குங்குமம் வைக்கிற ஆளுங்க  நாம, காருக்கு விட்டுடுவோமா என்ன, அதுவும் லாங் ரூட் வேற , கற்பூரம் காட்டி ,சாமி எல்லாம் கும்பிட்டு  எலுமிச்சம் பழத்தை எல்லாம் வைச்சு நசுக்கிட்டு கிளம்பியாச்சு.

ரம்ஜான் மாசம்  வேறயா, வழியில சாப்பிட ஏதும் கிடைக்காதுங்கிறதால வடிவேலு சொல்றமாதிரி  "எவ்வளவு  முடியுமோ அவ்வளவு " ஸ்நாக்ஸும், பழங்களும்  வாங்கி வண்டிய நிரப்பியாச்சு.

போற யாருக்கும் வழியும் தெரியாது, அரபியும் தெரியாது. சமந்தா  மேல பாரத்த போட்டுட்டு  விட்றா  சம்முவம் போவட்டும்ன்னு  கிளம்பிட்டோம்.

எங்களுக்கு முதல் சோதனை அல் அய்ன் பார்டர் கேட்டுல ஆரம்பிச்சது விசா வடிவுல...
                                                                                                       இன்னும் போவோம் ....

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!