Tuesday, November 5, 2013

பொய்யாய்க் கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா.

அன்பாயிருந்த மகனுக்கு,

ஒரு மழைக்கால ராத்திரியில்தான் நீ பிறந்து என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினாய்.என் கைச்சூடு கண்டுகொண்டதால்   என்னவோ பிறந்த சில மாதங்களுக்கு  என்னைத்தவிர யாரிடமும் சென்றதில்லை நீ. ஒருநாளில்  எனக்காக நான் ஒதுக்கிய நேரம் சில  நிமிடங்கள்  மட்டுமே.

மழைக்  காலமாகையால் நீ ஈரமாக்கிய துணிகளை துவைத்து   வெளியில் காய வைக்க இயலாமல் விறகு அடுப்பின் வெம்மையில் உலர்த்தி  தருவார்  உனது அம்மாச்சி.  

"முந்தித்  தவமிருந்து
முன்னூறு நாட்  சுமந்து
அந்திப் பகலாய் இறைவனை வந்தித்து" 

பெற்றெடுத்த உன்னை, உடலால் தோளிலும், மனதால் நெஞ்சிலும் சுமந்து திரிந்தார் உனது தந்தை.உனது மழலைச்  சொல் தான்  எங்கள் வேதமாகியது.நீ இருக்கும் இடம்தான் எங்களுக்கு விருப்பிடமானது.   உலகினை பொறுத்தமட்டிலும் நீ வளர்ந்து கொண்டே இருந்தாய் நானோ சிறுபிள்ளையாகிக் கொண்டிருந்தேன்.

நடைவண்டியோட்டி நீ  நடை பழகிய காலத்தில் கொல்லைப்புற வாசல்  ஓரமாய் இருந்த கல் தடுக்கி  நீ விழுந்து விட்டாய். உனக்கு அடிபட்டு விட்ட ஆதங்கத்தில் உன் தந்தை பெயர்த்து எறிந்த அந்தக் கல்,எல்லைக் கல் ஆனதால்  பங்காளி வீட்டு  பகையாகி காவல் நிலையம் வரை சென்றது தனிக்கதை.

நீ பள்ளி சென்ற முதல் நாளின் வெறுமையை  தாங்க இயலாமல், நாள் முழுவதும் பித்து பிடித்தாற்  போல இருந்தது உனக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

எனக்கும் உன் தந்தைக்குமான கருத்து வேறுபாடுகள் மிக சொற்பமே. உன்னால்,  உன் பருவ வயதில் நீ செய்த தவறுகளால்  எனக்கும் உன் தந்தைக்குமான மனஸ்தாபங்கள் ஏராளம்.

நீ உடுத்திய  உடை முதல்  படித்த  கல்லூரி மற்றும் கட்டிய மனைவி  வரை உனது விருப்பமே பிரதானமாக இருந்தது. நீயும் நன்கு படித்து நல்ல நிலைமைக்கு வந்து விட்டாய். மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் உனக்குத்தான் நான் மிகவும் வேண்டாதவளாகிப் போய்விட்டேன். தளர்ந்த உடலும்,  சுருக்கம் விழுந்த முகமுமாக நான்தான்  அந்நியப்பட்டுப் போய்விட்டேன்.

முன்பொரு காலத்தில் முழு வீட்டையுமே ஆக்கிரமித்து இருந்தாய் நீ.  அதில்  எனக்கொரு ஒட்டுத்திண்ணை கூட கிடைக்காதது எனது துரதிர்ஷ்டமே. எனக்கு வசதியாய் இருக்கட்டும் என்று,  என்னைப்போல அனாதைகள் நிரம்ப உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளாய்.

 நன்றாகத்தான் இருக்கிறது மகனே நீ சேர்த்து விட்டிருக்கும் முதியோர் இல்லம்,  என் போன்ற அனாதைகளின் ஏக்கப் பெருமூச்சோடு. எதற்கும் இருக்கட்டும் இந்த அறையையும் முன்பதிவு செய்து கொள். உன் காலத்தில் இதற்கும் வரலாம் இடப்பற்றாக்குறை!!!.  

இப்படிக்கு 
பொய்யாய்க்   கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா .


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!


2 comments:

  1. இதுதான்...இப்படிதான்... முடிக்க போகிறீர் என தெரிந்தும் முடிவு வரை வாசிக்க வைப்பதில்தான் அவரவர் அம்மாக்கள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்...

    ReplyDelete
  2. உண்மைதான். வருகைக்கும் மறுமொழி யிட்டமைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...