Wednesday, December 18, 2019

கான்க்ரீட் காடு


பொட்டல் பெருவெளியான பாலையில் 
உருவாகிக் கொண்டிருந்தது அந்த
கான்க்ரீட் காடு.
வெயிலாடிய மதியமொன்றில்
தன் கூடு  தொலைத்த பறவை ஒன்று  
அலைந்தோடியது  அதன் கூட்டைத்  தேடி
அப்பெயர் தெரியா  பறவை போலவே 
தன் வீடு  தொலைத்த  தச்சனின் 
கருணையில் கிடைத்தது ஒரு
தற்காலிகக் கூடு.

மருங்கிய கண்களும் ஒட்டிய வயிறுமாய் 
பசித்து  ஒடுங்கியிருந்த அப்பறவைக்கு 
வங்கனும், தமிழனும்  சிதறிய பருக்கைகளே 
போதுமென்றானது முதலில்.
நாள்பட நாள்பட மதிய சோற்றின் 
முதல் கவளமே அப்பறவைக் கென்றானது.

வங்கனும், தமிழனும் காட்டிய கருணையில்  
கொழுத்திருந்தது அப்பறவை.
வெயில் கரைந்தோடிய
பிறகொருநாளில் 
வந்திறங்கிய வெள்ளைக்கார முதலாளிக்கு 
தெரிந்திருக்க வாய்ப்பில்லை 
அன்பினால் பின்னப்பட்ட 
அப்பறவையின் கூடு.
பிய்த்தெறியப்பட்ட  கூட்டின் குச்சிகளுக்கு 
இடையில் சிதறிக் கிடக்கிறது 
" தொழிலாளிகளின் கருணை."


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!