Monday, September 10, 2012

சினிமாவும் சிக்கித்தவித்த நானும் !!!

                                             சின்னப்பையனா இருக்கும் போது நம்மள தியேட்டருக்கு அதிகமா கூட்டிட்டு போகமாட்டாங்க. ஏன்னா போன கொஞ்ச நேரத்துல படத்துல சண்டை எப்போவரும், எப்போவரும்னு கேட்டு நச்சரிக்கிறது. இல்லைன்னா கும்பகர்ணனை குசலம் விசாரிக்க போயிடுறது. டிக்கெட்  எடுத்து தூங்கினது  கூட அவங்களுக்கு கடுப்பாகாது, படம் முடிஞ்சதுக்கப்பறம்  தூக்க கலக்கத்துல என்னைய தூக்கிட்டு போக சொல்லி சண்டை போடுறதுல  ரொம்ப கடுப்பாகிடுவாங்க (நம்மதான் மாடு மாதிரி இருப்போமே!!!! ).  இதுனாலேயே என்னைய அடிக்கடி கழட்டி விட்டுட்டு படத்துக்கு போயிருவாங்க.
 ஒருநாள்   சாயந்திரம்  நான் கராத்தே கிளாசுக்கு  வந்துட்டேன். மாஸ்டர் வர லேட்டானதால  கிரௌண்டுக்கும் ரோட்டுக்குமா கராத்தே  ட்ரெஸ்ஸோட ஓடி ஓடி அவர் வர்ராறா  இல்லையானு  பார்த்து விளையாண்டுட்டு இருந்தோம். அப்ப  என்னோட பிரெண்ட் ஒருத்தன் வந்து உன்னோட அம்மா வர்றாங்கடான்னு சொல்ல, ஓடிவந்து பார்த்தா  என்னோட அம்மாவும், புதுசா டீச்சர் வேலையில சேர்ந்திருந்த  என்னோட அத்தாச்சியும் வந்துகிட்டு இருந்தாங்க, நான் ஓடிப்போய் அவங்க முன்னாடி நின்னவுடனே அவங்க  ஷாக்காகி,
 ஒண்ணுமில்லப்பா, அத்தாச்சிக்கு  நோட்ஸ் ஆப் லெசன் பார்மேட் வாங்கணும் அதான் இந்த டீச்சர் வீட்டுக்கு போறோம்னு   எனக்கு தெரிஞ்ச ஒரு டீச்சர் பேரையும்   சொல்லிட்டு  போனாங்க. கரெக்ட்டா  6.30 மணிக்கு அவசர அவசரமா  நோட்ஸ் ஆப் லெசனான்னு??  நம்ம மனசுக்குள்ள ஒரு அலாரம்  அடிச்சுக்கிட்டே இருந்ததால  கேட் ஓரமா நின்னு பார்த்துகிட்டே இருந்தேன் .

 லெப்ட்ல போனா டீச்சர் வீடு, ரைட்ல போனா தியேட்டர்ன்னு  பார்த்துகிட்டே இருக்க , நம்ம வில்லத்தனம் தெரியாத  நம்மாளுங்க திரும்பி கூட பார்க்காம  ரைட்ல திரும்ப, நண்பனொருவனை என்னோட டிரெஸ்ஸ வீட்டுக்கு எடுத்துட்டு போகச் சொல்லிட்டு, கராத்தே  ட்ரெஸ்ஸோட வடிவேலு சொல்ற மாதிரி "எடுத்தேன் பாருங்க ஓட்டம்" ரோடு, மார்கெட்டுன்னு  ஒன்னும் பார்க்கலையே. எங்கம்மா டிக்கெட்  எடுக்க போற நேரத்துல உள்ள போய்  சேர்ந்துட்டேன். மாஸ்டர் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்னு பிட்டை  வேற  போட்டுட்டு, படத்தையும்  தூங்காம பார்த்துட்டேன் .

ஆனா நம்ம நேரந்தான் நாம பஸ்ல போன அது பிளைட்டுல நம்மளுக்கு முன்னாடி வந்து நிக்குமே !!!.
நான் இப்படி பாக்யராஜ் மாதிரி  ஸ்லோமோஷன்ல கராத்தே  ட்ரெஸ்ஸோட ஓடி வந்ததை லேட்டா  வந்துகிட்டு இருந்த  கராத்தே  மாஸ்டர் பார்த்துட்டார். அப்பறம்  என்ன?  அடுத்த கிளாசுல  நாந்தான்   அவருக்கு  "பஞ்சிங் பேக் " . குத்துங்க மாஸ்டர் குத்துங்கன்னு  நான் நிக்க, பைனல் டச்சா கைல மடக்கி வைச்சிருந்த பெல்ட்டால என்னை அடிக்க ஓங்க , எசகு பிசகா திரும்புன நான்  இன்னொருத்தர்  மேல நல்லா  மோத  என்னோட சில்லு மூக்கு ஒடைஞ்சு  மூக்குலேருந்து  ரத்தம் கொட்டோ கொட்டென கொட்டிடுச்சு. சரி சரி  தக்காளி சட்னிதானே விடுன்னு   தொடச்சிக்கிட்டு வீடு போய்  சேர்ந்தேன். (பின்னே இதையெல்லாம் சொல்லி அங்க வேற அடி வாங்கனுமா என்ன???)

ம்ம்ம்.....  சொல்ல மறந்துட்டேனே, சாகசமெல்லாம் பண்ணி, பஞ்செல்லாம் வாங்கி   அப்படி   நான் பார்த்த படம் நம்ம இளைய திலகம் பிரபு நடிச்சது , படத்தோட பேரு அதாங்க அதான், நான்  அந்த க்ரௌண்டுக்கு  கொடுத்தது,  








   "ரத்த தானம் ".


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!






Tuesday, September 4, 2012

வெங்காயமும் கண்ணீரும் !!!

                                                               நாளெல்லாம்    உழைச்சு களைச்சு  ரூமுக்கு போனா  அங்க வந்து தக்காளிய வெட்டு , வெங்காயத்த வெட்டு ,பொடலங்காய வெட்டுன்னு ஒரே இம்சைங்க ,  அதுலயும் அந்த  வெங்காயம் வெட்டும்போது  வரும் பாருங்க  கண்ணீர் ஸ்ஸ் ப்பா ... உரிக்க உரிக்க ஒண்ணுமில்லாத வெங்காயத்தால  இவ்வளவு கண்ணீர் வருதேன்னு காரணம்  என்னன்னு ஒரு கதையை  நண்பர்கள்கிட்ட சொன்னேன் பாருங்க,  அதுலேர்ந்து அவங்க என்னைய கிச்சன் பக்கமே வரவேண்டாம் அப்படின்னு கெஞ்சி கேட்டுகிட்டாங்க. யாருக்காகவும் திரும்ப சொல்லாத அந்த கதை உங்களுக்காக கீழே !!!

ஒரு காலத்துல  தக்காளி , வெங்காயம் ,உப்பு  மூணும் நண்பர்களா  இருந்தாங்களாம்.   ஒருநாள் மூணு பேருமா நடந்து   போகும் போது  தாறுமாறா வந்த தண்ணி லாரியில அடிபட்டு "தக்காளி" செத்து போச்சு. நண்பன் செத்துபோயிட்டான்னு ரொம்ப உருகி உருகி அழுதாங்களாம் நம்ம வெங்காயமும், உப்பும் .    அந்த சோகத்தோட கடற்கரைக்கு போனவங்க சும்மா இருக்காம  அலையில கால் நெனைக்க ஆசைப்பட , வெங்காயம் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காம  உப்பு தண்ணியில போய்  நிக்க அதுவும் கரைஞ்சு செத்து போச்சாம் !!!

ரெண்டு நண்பர்களையும்  ஒரே நேரத்துல பறிகொடுத்த  துக்கத்துல வெங்காயம் "ஓ " ன்னு அழுதுகிட்டே இருக்க,  நம்ம கடவுள் தான் ரொம்ப இரக்க மனசுக்காரர்   ஆச்சே, வெங்காயத்துகிட்ட பிரசன்னமாகி உனக்கு என்ன வேண்டும்னு கேட்க , வெங்காயம் சொல்லுச்சாம்   என் பிரெண்டு தக்காளி செத்தப்ப   நானும் , உப்பும் அழுதோம். அதே உப்பு கரைஞ்சு செத்தப்ப நான் மட்டும் தனியா அழுதேன். இனிமே நான் செத்தா  எனக்காக யார் அழுவான்னு  கண்ணீரோட கேட்க, செண்டிமெண்டா அட்டாக் ஆன கடவுள் சொன்னாராம்
கொய்யால இனிமே எவன் உன்னை சாவடிச்சாலும்   அவனும் அவன்கூட உள்ள எல்லாரும்  கண்ணீர் விட்டு  கதறுவாங்கன்னு  சொல்லிட்டு மறைஞ்சுட்டாராம்.

மக்களே இப்ப தெரியுதா வெங்காயம் வெட்டுனா  கண்ணீர் வரக் காரணம் !!!
(நோ ஆட்டோ............... நோ பேட் வோர்ட்ஸ்!!!!!!!!!)


வெங்காயம் பற்றிய சில தகவல்கள் 
  • வெங்காயம் வெட்டும் போது கண் எரிவதற்கு காரணமான வேதிப்பொருள் ப்ரோப்பேன்தியல் எஸ் ஆக்ஸைடு . (அமினோ ஆசிட் சல்பாக்சைடு மற்றும் தண்ணீரின் கலவையால் வருவது ) 

  • வெங்காய உற்பத்தியில் சீனாதான் முதலிடம்.

  • பழங்கால பண்டமாற்றத்தில்  மிகவும் மதிப்பு மிக்க பொருளாக கருதப்பட்டது (இதுனால ஆட்சியே கவுந்திருக்கு நம்ம நாட்டுல!!!!!!)

  • கல்யாணம் செய்யபோற பிரம்மச்சாரிகள் சின்ன வெங்காயம் சாப்பிடுறது ரொம்ப நல்லதாம். (சொன்னதுலேருந்து ரூம்ல ரெண்டுபேர் வெறும் சின்ன வெங்காயமாதான் சாப்பிடுறாங்க)

  • வெங்காயம் வெட்டுறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி ப்ரீசர்ல வச்சு எடுத்தா, இல்ல ஏதாவது சூவிங்கம் மென்னுகிட்டே வெட்டினால், இல்ல வெங்காய  அடிப்பாகத்த கடைசியா வெட்டுனாலோ  கண்ணு அதிகமா எரியாதாம். 
 
இதையும் மீறி கண்ணு எரிஞ்சா   இத ட்ரை பண்ணுங்க !!!!!!! 



படிச்சுட்டு,பார்த்துட்டு  திட்டணும்னு தோணுச்சுன்னா  என்னை  "போடா வெங்காயம்ன்னு  " திட்டுங்க ....அவ்வ்வ்வவ் !!!!!!!!!!!!!!!!!!!!!



வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!












Tuesday, August 28, 2012

அக்காவை அதிகம் பிடித்த நாட்கள் !!!


                                                உனக்கு நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை  ஆனால் எனக்கு நன்கு நினைவில் உள்ளது நீ சிறுவயதில்  கைகளில் பிரில் வைத்த ரோஸ் கலர் பாவாடை சட்டை அணிந்து   வளைய வந்த நாட்கள்.   நீ வாசலில் கூட்டி  பெருக்கி கோலம் போட எத்தனிக்கையில் அதற்கு  இடைஞ்சலாக மட்டுமே நானிருப்பேன் உன்னை பெருக்க விடாமல் உன் கழுத்தை கட்டிக்கொண்டோ அல்லது  நீ கோலம் போட வைக்கும் புள்ளிகளுக்கு இணையாக நானும் எதாவது புள்ளிகளை வைத்துக்கொண்டோ இருப்பேன்.

உன் வயதையொத்த தோழிகள் என்னை ஏதாவது சொன்னாலும் அதை சிரித்துக் கொண்டே தவிர்த்துவிட்டு "என் தம்பி " இவன் என்ற வாத்சல்யத்தோடு  பார்ப்பாய் என்னை .    எவ்வளவு தான் உன்னை தொந்தரவு செய்தாலும் அம்மா இவனைப் பாருங்கம்மா என்றதொரு செல்ல சிணுங்கலுடன் நிறுத்தி விடுவாய் !!! அந்த சிணுங்கலுக்காகவே  உன்னை மீண்டும் மீண்டும் சீண்டுவேன் நான்.

                                                          பள்ளியில் இருந்து நீ நடந்து வந்ததால் கால் வலிக்கிறது என்றவுடன் தினமும் உன்னை தூக்கி கொண்டு போய் விட்டுவிட்டு  வந்த தாத்தாவும், என் பேத்தி ,என் பேத்தி  என எங்கு போனாலும் உன்னை கூட்டி திரிந்த ஆயாவும் , மகளுக்கென்று அப்பாவால்  ஸ்பெஷலாக வாங்கி வரப்படும் கோலாலம்பூர் லக்ஸ் சோப்பும் , டீச்சர் ஒருமுறை உன்னை கிள்ளியதால் அந்த டீச்சருடன் சண்டைக்கு போன அம்மாவும்  என எல்லோருக்கும்   செல்லமாக நீ இருந்தாலும், உனக்கு செல்லமாக நான்தான்  இருந்தேன்.


பள்ளிகளில் நல்லவை  எல்லாவற்றிற்கும் முன்னுதாரணம் நீயாகத்தான் இருப்பாய். நான் உனக்கு நேரெதிர் . பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி, நான் எந்த தப்பு செய்தாலும் அது உன்னையே சுட்டும். எல்லாவற்றிர்க்கும் நீதான்  நீதிபதி அது பெரும்பாலும் என்னை காப்பதாகவே இருக்கும்.

பத்தாவதில் கணக்கில் எனக்கு  சென்டம் வருமென்று கணித்தது தவறாய் போக, அதை ஏற்றுக்கொள்ள இயலாத நீ சிறுபிள்ளை போல அழுததை நினைத்து  நான் மனங்கசிந்த நாட்கள் ...
திருமணம் முடிந்து கணவன் வீடு செல்கையில் துணைக்கு யாரை அனுப்பலாம் என்று பேசுகையில், இடைபுகுந்த நீ தம்பியை அனுப்புங்கள் அவன் பார்த்து கொள்வான் என்று எனக்கே இல்லாத ஆளுமையை,               தன்னம்பிக்கையை நீ ஊட்டிய நாள் ...

சென்னையில் இருந்து கொண்டு வாரம் ஒருமுறைகூட உங்களால் வந்து போக முடியாதோ என்று ஆதங்கப்பட்ட நாள்... நீ கர்ப்பம் தரித்த காலத்தில் வந்த டைபாயிடும், உன்னை அழைத்து செல்ல அம்மா அப்பா வந்த போதும் நீயும் வாயேண்டா  என்று உன் கண்கள் உரைத்ததை  உணர்ந்து செங்கல்பட்டு  ரயில் நிலையத்தில் நீ ஊருக்கு செல்லும் நாளில் வந்ததும், நானும் உன்னுடன்  ஊருக்குதான் வருகிறேன் என்று நீ  அறிந்தவுடன் உன் விழிகளில் கண்ணீர்  துளிர்த்த நாட்களும் .....   

ஸ்லேட்டு குச்சி முதல் பாரின் சாக்லேட் வரை உனக்கான  பங்கை எனக்கு  விட்டு தந்திருக்கிறாய் . ஆனால்  நான் மட்டும் நமது அம்மாவின் பாசத்தில் உனக்குரிய பங்கை விட்டு தரவே இல்லை .  அது எல்லாம் எனக்கு மட்டுமே வேண்டும் என்று  சுயநலமாக நடந்து கொண்ட பின்னும் , என்றும் மாறா  அதே புன்னகையுடன் நீ சிரித்த நாட்கள், நீ எல்லாமுமானவள் என்பதை எனக்கு உணர்த்திய நாட்கள் !!!

அக்காக்கள் இன்னொரு அம்மாக்கள் !!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன்!!!





Monday, August 27, 2012

எப்படி இருக்கிறாய் என் காதலியே ?

                                
  
                         நீ நன்றாக இருக்கின்றாய் என்று  எனது காதல்  எனக்கு சொன்னாலும், உன்னிடமிருந்து வரும் " ம் " ஒற்றை சொல்லில் பொதிந்துள்ள ஒராயிரம் அர்த்தத்தை இந்த பொல்லாத காதல் நீயின்றி உணர்த்திவிடுமா  என்ன?  அந்த காதலின் கர்வத்தை அடக்கவாவது என்னுடன் மறுமொழி பேசிவிடு.

 உன் மீதுள்ள காதலை உனக்கு உணர்த்த ஓராயிரம் முறை உன்னை அலைபேசியில் அழைத்திருப்பேன். எத்துனை முறையோ வாய் வரை வந்து விட்ட சொற்கள் ,   என் காதலின் ஆழத்தை உனக்கு உணர்த்தும் சரியான  வார்த்தைகள்  தெரியாமல்  உன்னுடன் பேசுவதற்கு முன்பே   ஓடி ஒளிந்து கொள்கின்றன. என்ன சொல்லி சமாளிப்பேன் உன்னிடம்?
ஆகவேதான்  அலைபேசி ஒலிப்பதற்குள் துண்டித்து விடுகிறேன் சமயத்தில் உதவாத இந்த சொற்களின் மீது பெருங்கோபம் கொண்டு !!!!

தேவதையிடம் காதலை சொல்ல இயலாமல் ஒளிந்து கொண்ட வார்த்தைகள் என்னிடம்  வந்து மன்னிப்பு கோரி சமரசம் செய்கின்றன. வார்த்தைகளால் சொல்ல இயலாத காதலை வரிகளாக்கி உன்னிடம் சமர்ப்பிப்பதாக!!! . எனது  மௌனத்தையே சம்மதமென கருதி விரைகின்றன வார்த்தைகள், உன் பேரழகையும், காதலையும்    ஒருங்கே எழுதிவிட! . 

அது என்ன அவ்வளவு சுலபமா என்ன ? இருவெளிகளில் வெவ்வேறு திசையை நோக்கி பயணிக்கும் முடிவிலி போன்றது அது.  இதுதான் மிகசிறந்தது என வார்த்தைகளால் வடித்து கொண்டுவரப்படும் அனைத்துமே  சாதாரணமாகத்  தான் தெரிகிறது எனக்கு.
 உனக்கு  அனுப்புவதற்காக காதலைக்கொண்டே  உருகி உருகி எழுதப்பட்ட அத்தனை      மின்னஞ்சல்களுக்கும் உன்  மேலுள்ள  என் காதலை முழுதாய் சொல்லிவிட திராணி இல்லாததால் அவை எனது சேமிப்பறையில் உனக்கான   என் காதலுடன் சுகமாய் உறங்குவது  உனக்கு தெரியுமா?

எனக்கு தெரியும்  உனக்கான என் காதல்  ஒருநாள் உன்னால் உணர்ந்து கொள்ளப்படுமென்று, அதுவரையில் தேவதையிடம் யாசிக்கும் ஓர் யாசகனைப் போல நான் ஒரு ஓரமாய்  காத்திருப்பேன்   என்றோ ஒருநாள்  மகுடமேறப்போகும்  என் காதலுடன் !!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!









Thursday, August 23, 2012

பசுமை நிறைந்த பால்யம் -2

பசுமை நிறைந்த பால்யம்-1  

மின்சாரமில்லா மழைக்கால ராத்திரிகள் மனதுக்கு ஒருவித நெருக்கமானவை. சாயந்திரத்தில் லாந்தரையும், சிம்னி விளக்குகளை துடைத்து மண்ணெண்னை ஊற்றும் அம்மாவும், அக்காக்கள் படிப்பதற்காக ஏற்றப்படும் சிம்னி விளக்குகளும், தீச்சுடருடன் இயைந்தவாறு நேர்க்கோட்டில் வெளிவரும் புகைச்சுடரும், காற்றின் வேகத்தில் அலைக்கழிக்கப்படும்போது அலையும் நிழல்களையும், அணைவது  போல போக்கு காட்டும்  சுடரை  ரசிப்பதும்,  ஆவி பறக்க பரிமாறப்படும் சோற்றின்
சூடும்தலை முதல் கால் வரை கம்பளி போர்த்தி கதகதப்பாக படுத்துறங்கிய  சுகமும்  இன்னும் என்னுள்  இருப்பது போல ஒரு உணர்வு...
 
கீற்றும் , குடலையும் முடைவதற்காக  குளத்து நீரில் ஊறவைத்து கொண்டு வரப்படும்  தென்னை  மட்டைகளும், அவற்றை நொடிப்பொழுதில் நெட்டாக  இரண்டு துண்டாக  வகுந்து விடும் பாளை அருவாளும், லாவகமாக  கீற்று முடையும் தாத்தாக்களும், ரீங்காரமிடும் சில்வண்டுகளும், இணைக்காக சப்தமெழுப்பும்  தவளைகளைப்  பார்த்து  அதுபோலவே கட்டை குரலில் சப்தமிடுவதாகவும்  கழியும் எனது மழைக்கால ராத்திரிகள்.....

கார்காலத்தின்  பகற்போதுகள் வண்ணமயமானவை அடிக்கடி பெய்யும் மழையும் அதனால் முளைத்த தும்பை பூச்செடிகளும், ஆளரவமில்லா கொல்லைகளில் பச்சைப்பசேலென்று  மண்டிக்கிடக்கும். நட்சத்திரங்களை இரைத்தார்போல பொலேரென்று  பூத்து கிடக்கும் தும்பைப்பூக்களும், அப்பூவில் தேனுண்ண வரும் வண்ணத்துப்பூச்சிகளும் அதை பிடித்து அதன்  வயிற்றில்  நூல்கட்டி அதை துரத்தி விளையாடுவதும் , திடீரென முளைத்தது  போல பறக்கும் ஈசல்களும், அவற்றை பிடிக்க ஓடுவதும். அடிக்கடி  எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கும் ஆயாவையும் பொருட்படுத்தாமல்
விளையாடிக்கொண்டே இருந்த எனது பால்ய நாட்கள் மீண்டும் கிடைக்காதவை ......

அவ்வப்போது  கிடைக்கும் பொன்வண்டுகளும், அதற்கு  கொன்றை, கொடுக்காபுளி  இலைகளையும் உணவாக ஊட்டுவதும், பட்டு கத்தரிப்பது போல நறுக்நறுக்கென்று அவ்விலைகளை பொன்வண்டு தின்பதை பார்த்துக்கொண்டிருப்பதும்,  அதன் முட்டைகளை  நல்லெண்ணெய் பூசி வெயிலில் வைத்து  அது குஞ்சு பொறிக்க நண்பர்களுடன் காத்து கிடந்ததும், அதன் கழுத்தும் உடம்பும் சேருமிடத்தில்  கையை வைக்கும் போது  கடிப்பதும்,  அக்கழுத்தில் நூலொன்றை கட்டி கையில் பிடித்துக்கொண்டு அது என்னுடைய  உடலில் ஊர்வதை பெருமையாய்  ரசித்ததும், அது பறக்கும் போது நூலைப்பிடித்து  அதனுடன் ஓடித்திரிவதும், எத்தனை  கொடுத்தாலும் திரும்ப வராத நாட்கள்.

பழைய நினைவுகளுடன் மட்டுமே வாழ்வது என்பதாகிவிட்டது  இப்போதைய வாழ்க்கை. எழுத்து ஒன்று மட்டுமே பால்யத்தை கிளறி  அந்த வாசனையை திரும்ப கொண்டு வருகிறது.

 நன்றாய் வரட்டும் வாசனையும்,  எழுத்தும்!!!

                                                                                                         பால்யம் மலரும் ....


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!