Thursday, August 23, 2012

பசுமை நிறைந்த பால்யம் -2

பசுமை நிறைந்த பால்யம்-1  

மின்சாரமில்லா மழைக்கால ராத்திரிகள் மனதுக்கு ஒருவித நெருக்கமானவை. சாயந்திரத்தில் லாந்தரையும், சிம்னி விளக்குகளை துடைத்து மண்ணெண்னை ஊற்றும் அம்மாவும், அக்காக்கள் படிப்பதற்காக ஏற்றப்படும் சிம்னி விளக்குகளும், தீச்சுடருடன் இயைந்தவாறு நேர்க்கோட்டில் வெளிவரும் புகைச்சுடரும், காற்றின் வேகத்தில் அலைக்கழிக்கப்படும்போது அலையும் நிழல்களையும், அணைவது  போல போக்கு காட்டும்  சுடரை  ரசிப்பதும்,  ஆவி பறக்க பரிமாறப்படும் சோற்றின்
சூடும்தலை முதல் கால் வரை கம்பளி போர்த்தி கதகதப்பாக படுத்துறங்கிய  சுகமும்  இன்னும் என்னுள்  இருப்பது போல ஒரு உணர்வு...
 
கீற்றும் , குடலையும் முடைவதற்காக  குளத்து நீரில் ஊறவைத்து கொண்டு வரப்படும்  தென்னை  மட்டைகளும், அவற்றை நொடிப்பொழுதில் நெட்டாக  இரண்டு துண்டாக  வகுந்து விடும் பாளை அருவாளும், லாவகமாக  கீற்று முடையும் தாத்தாக்களும், ரீங்காரமிடும் சில்வண்டுகளும், இணைக்காக சப்தமெழுப்பும்  தவளைகளைப்  பார்த்து  அதுபோலவே கட்டை குரலில் சப்தமிடுவதாகவும்  கழியும் எனது மழைக்கால ராத்திரிகள்.....

கார்காலத்தின்  பகற்போதுகள் வண்ணமயமானவை அடிக்கடி பெய்யும் மழையும் அதனால் முளைத்த தும்பை பூச்செடிகளும், ஆளரவமில்லா கொல்லைகளில் பச்சைப்பசேலென்று  மண்டிக்கிடக்கும். நட்சத்திரங்களை இரைத்தார்போல பொலேரென்று  பூத்து கிடக்கும் தும்பைப்பூக்களும், அப்பூவில் தேனுண்ண வரும் வண்ணத்துப்பூச்சிகளும் அதை பிடித்து அதன்  வயிற்றில்  நூல்கட்டி அதை துரத்தி விளையாடுவதும் , திடீரென முளைத்தது  போல பறக்கும் ஈசல்களும், அவற்றை பிடிக்க ஓடுவதும். அடிக்கடி  எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கும் ஆயாவையும் பொருட்படுத்தாமல்
விளையாடிக்கொண்டே இருந்த எனது பால்ய நாட்கள் மீண்டும் கிடைக்காதவை ......

அவ்வப்போது  கிடைக்கும் பொன்வண்டுகளும், அதற்கு  கொன்றை, கொடுக்காபுளி  இலைகளையும் உணவாக ஊட்டுவதும், பட்டு கத்தரிப்பது போல நறுக்நறுக்கென்று அவ்விலைகளை பொன்வண்டு தின்பதை பார்த்துக்கொண்டிருப்பதும்,  அதன் முட்டைகளை  நல்லெண்ணெய் பூசி வெயிலில் வைத்து  அது குஞ்சு பொறிக்க நண்பர்களுடன் காத்து கிடந்ததும், அதன் கழுத்தும் உடம்பும் சேருமிடத்தில்  கையை வைக்கும் போது  கடிப்பதும்,  அக்கழுத்தில் நூலொன்றை கட்டி கையில் பிடித்துக்கொண்டு அது என்னுடைய  உடலில் ஊர்வதை பெருமையாய்  ரசித்ததும், அது பறக்கும் போது நூலைப்பிடித்து  அதனுடன் ஓடித்திரிவதும், எத்தனை  கொடுத்தாலும் திரும்ப வராத நாட்கள்.

பழைய நினைவுகளுடன் மட்டுமே வாழ்வது என்பதாகிவிட்டது  இப்போதைய வாழ்க்கை. எழுத்து ஒன்று மட்டுமே பால்யத்தை கிளறி  அந்த வாசனையை திரும்ப கொண்டு வருகிறது.

 நன்றாய் வரட்டும் வாசனையும்,  எழுத்தும்!!!

                                                                                                         பால்யம் மலரும் ....


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, August 16, 2012

பசுமை நிறைந்த பால்யம்!!!

விடியலில்  இருள் கரையதொடங்குவது போல, பால்யம் சுமந்த நினைவுகள் முழுவதும்  என்னுள்  கரைந்து  வியாபிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து  பூனை படம் போட்ட  நீலகலர் பனியனை போட்டுக்கொண்டு அலைந்து  திரிந்த நாட்கள் ஒரு வசந்த காலம். பச்சைக் கம்பளம் விரித்த பசிய வயல்களுக்கு நடுவே தாத்தாவின் கைபிடித்து வரப்பில் நடந்ததும், வயலில் நடவு நடும் வேலையாட்களின் குலவை சத்தமும், நாற்று பறித்து லாவகமாக முடிச்சிடும் போது பசுந்தளிர் சிறிதாக கசங்குவதால் ஏற்படும் ஒருவித வாசமும்  இன்னும் என் மனதை விட்டு அகலாதவை.

எல்லோரும் பள்ளி செல்லும் நாளில், மட்டம் போடுவதைப் போல மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை  பால்யத்தில். பள்ளி செல்லா நாளொன்றின் முற்பொழுதுகளில் அலை அலையாய் இறங்கி கொண்டிருக்கும் வெயிலின் ஊடாக அலைந்து திரிவதும், கிரீச்சென்றும், மெல்லிய முனங்களுடனும்   விதவிதமான ஒலிகளை எல்லாம் எழுப்பிகொண்டு  சுற்றி வரும் செக்கடியும், அந்த செக்கு மரத்தண்டில் அமர்ந்து காலால் மணல்  தரையில்  கோடிழுத்து செல்வதும், அந்த  வெம்மையிலும் வாணியொழுக செக்கிழுக்கும் மாடுகளுடன்  சுற்றுவதுமாக  கழியும் எனது பள்ளி செல்லா நாட்களின் பகல்  பொழுதுகள்.

கோடைக்கால வெயிலின் உக்கிரம்  தணிந்த ஒரு  சாயந்திரத்தின்வீட்டின்  முற்றத்தில் இருந்த வேப்பமரத்தின்  அடியில் கழியும் எனது இரவுப்   பொழுதுகள். வெயிலின் வெக்கை தெரியாமலிருக்க வாசலில்  தெளிக்கப்படும் தண்ணீரும், அதனால்  கிளம்பும்  மண்வாசனையும், சிறிது ஈரம் காயவிட்டு அதில் ஒரு பாயை போட்டு படுத்திருக்கும் போது  வேப்பமரத்திலிருந்து வீசும் மிதமான இளந்தென்றலும்,  அவ்வப்போது ஆசிர்வதிப்பது போல உதிர்க்கப்படும் வேப்பம்பூக்களும்...   யப்பா அனுபவித்தறியா  பேரானந்தம் இன்னும் என் நினைவுகளில்!!!

 எப்போது நினைத்தாலும் பெருமூச்சிட்டு ஏங்க  வைத்த எனது  பால்யம் சுமந்த நினைவுகள்  இப்போது பசுமையாய்  எனது நினைவுகளில் மட்டும்.!!!

                                                                                                                     பால்யம் மலரும் .....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Thursday, August 9, 2012

மழலைகள் ....




எப்படி எடுத்தாலும்
எல்லா புகைப்படத்திலும்
அழகாய் இருக்கின்றனர்
குழந்தைகள்.

எப்படி  கேட்டும்
அனுமதி கிடைப்பதில்லை
மழையில்  நனைந்திட,

கொஞ்சும் மழலையில்
மிரற்றுவது போல்
கேட்கப்படுகின்றன
பதிலளிக்க இயலவிலா
கேள்விகள்.

எத்தனையோ முறை
எத்தனித்த கோபத்தை
நீர்க்குமிழியாய்
உடைத்துவிட்ட உன்
பொக்கைவாய் புன்னகைகள் ,

வாழ்வின் அர்த்தத்தையே
உணர்த்திவிடும்
எனக்கான  உனது தருணங்கள் !!!!!!!















Wednesday, August 8, 2012

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க !!!


திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற  கூட்டம் வேடிக்கை தான்  பார்க்குது. இதை நிரூபிப்பது போல ரெண்டு சம்பவம் நடந்தது,
சம்பவம் #1
போன வாரத்துல என்னோட  நண்பனிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதாவது அவர்  லண்டனுக்கு   ஒரு வேலை விஷயமா போனப்ப  அங்க எதோ ஒரு  பிரச்சினையில மாட்டிகிட்டதாகவும், அதை தீர்க்க ஒரு ரெண்டு லட்சம் அனுப்ப சொல்லி இருந்தான் . உன்கிட்ட அவ்வளவு  பணம் இல்லாட்டி பரவாயில்ல உன்கிட்ட எவ்வளோ இருக்கோ அதை அனுப்பு. மீதிய நான் மத்த நண்பர்களிடம் இருந்து வாங்கிக்கிறேன். உன் பணத்த ஊருக்கு வந்த உடனே  எப்படியாவது திருப்பி தந்துடுறேன்னு  உறுதிமொழி வேற.லண்டன்ல ஒரு தெளிவான முகவரி மட்டும் இருந்தது ஆனால் அலைபேசி எண் எதுவும் இல்லை. எனக்கு  கொஞ்சம் சந்தேகம் வர   அவனோட துபாய் அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்ட போது சாட்சாத் அவனே எடுத்து பேசினான். அவனோட மின்னஞ்சலை யாரோ ஹாக் செய்து விட்டதாகவும், இதே போன்ற பல மின்னஞ்சல்களை பலருக்கும் அனுப்பி விட்டதாகவும்  கூறினான். அப்போது அவன் கேட்டான் மச்சான் உனக்கு சந்தேகம் எப்படி வந்ததுன்னு? கடுப்பில் இருந்த நான் கூறினேன் “தக்காளி இந்த மூஞ்சி எல்லாம் போற அளவுக்கு லண்டன் ஒன்னும் அவ்வளவு மோசமாகலைன்னு”

சம்பவம் #2
நண்பன் ஒருவனை வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். ரொம்ப மும்முரமாக வேலை தேடிக்கொண்டிருந்தான். பாரபட்சமில்லாமல் கிடைக்கும் எல்லா  நாடுகளுக்கும், எல்லாவிதமான வேலைக்கும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் மிகவும் சந்தோஷமாக பேசினான். மச்சான் லண்டன்ல ஒரு வேலை கிடைச்சிருக்கு, நியமனக் கடிதம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைப்பதாகவும் கூறினான். மாத சம்பளம் 8000 பவுண்டு கிடைக்கும் என்றும் கூறினான். ரெண்டு நாள் கழித்து ஒரு நியமனக் கடிதத்தை எனக்கு அனுப்பி இருந்தான். அதில் கூறப்படாத சலுகைகளே இல்லை எனலாம். நின்னா பவுண்டு, நடந்தா பவுண்டுதான். அப்புறமா உங்களோட சான்றிதழ், கடவுச்சீட்டு நகல் எல்லாம் அனுப்ப சொல்லி இருந்தாங்க. எங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் எல்லாமே நகல்தானே கேட்கிறான்னு அதையும் அனுப்பினான்.
அப்புறம் கேட்டான் பாருங்க உங்களுக்கு விசா  எடுக்கனும். தங்குமிடம் ஏற்பாடு செய்யனும், டவுசர கழட்டனும் அப்படி இப்படின்னு சொல்லி கொஞ்சமே கொஞ்சமா ஒரு 1000 பவுண்டு கேட்டுட்டு, அடைப்பு குறிக்குள்ள இதையும் நீங்க இங்க வந்த உடனே  திரும்ப வாங்கிக்கலாம்ன்னு சொல்லி, ஒரு வங்கி கணக்கு எண் அனுப்பி அவனொரு திருட்டுபயல் என்பதை உறுதி செய்து இருந்தான்.  கடுப்பான நண்பன் அவனை திட்டி  எவ்வளவு கெட்ட வார்த்தை கொண்டு எழுத முடியுமோ அவ்வளவையும் எழுதி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான்.


அந்த திட்டுதலின் ஆரம்பம் மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த அவனுடைய கொள்ளு பாட்டியில் நடத்தையில் சந்தேகப்படுவதில் இருந்து ஆரம்பித்து இருந்தது!!! 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Saturday, August 4, 2012

கொண்டவனின் கோபம் ...

 
கோபத்தில் கொந்தளிக்கிறது உன்  தேகம்
வார்த்தைகளால் காயப்படுத்த
துடித்து கொண்டே இருக்கிறது உன் குரூர மனம்  
உன் உதட்டு சூட்டின் வெப்பம் தாளாமல் 
ஒளிந்து கொள்கிறது ஆறாவது அறிவு
கொல்லும் குரூரம் வார்த்தைகளில்
தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாமல்
 நிராயுதபாணியாய் நான்,
 விஷமாய் இருக்கும் உடலில் இருந்து 
வரும் வார்த்தைகளில்  மட்டும்
அமிர்தமா சொட்டப்போகிறது ???
வார்த்தை கத்திகளில்  விஷம் தோய்த்து
லாவகமாக   வீசத்தெரிந்த உனக்குத்
தெரியவில்லை இப்போதெல்லாம் 
நீ காயப்படுத்துவது என்  உடலைத்தான்
உணர்வுகளை அல்ல என்று  
ஏனென்றால்
அவைதான் மரணித்து மாதங்களாகி விட்டதே.!!!