Showing posts with label பால்யம். Show all posts
Showing posts with label பால்யம். Show all posts

Monday, June 10, 2013

வாழ்வில் வரக்கூடாத நாள் .

மனதிற்குள்  அழுகை ,பயம், வெறுப்பு மற்றும் இன்ன பிற உணர்ச்சிகளும் கலந்து கட்டி அடித்துக் கொண்டிருக்கும் நாள்.

விடுமுறை முடியும் சமயங்களில், நினைத்து நினைத்து பயந்து வெறுத்துக்  கொண்டிருக்கும் ஒரு நாள்.

கடந்த வருட நோட்டுகளின் எழுதப்படாத பக்கங்கள், கிழிபட்டு  ரஃப்  நோட்டாக உருமாறி பையினுள் ரெடியாக இருக்கும் நாள்.

பழைய யூனிபார்ம் துவைத்து மிகச்சரியாக  அயர்ன் செய்து வைக்கப் பட்டிருக்கும் நாள்.

 


புது வகுப்பில் யார் லீடராவது முதல்,கணக்கு டீச்சராக வருவது யார் என்று மனம் குமைய ஆரம்பிக்கும் நாள்.

எந்த ஆசிரியர்  வந்தாலும் கீறல் விழுந்த ரெக்கார்டாய் சொல்லும் "போன  வருஷம் மாதிரி விளையாட்டுத்தனமாய் இருக்கக்கூடாது". ஒழுங்கா படிக்கணும் என்று சொல்லும் நாள்.

நம்மை விட மோசமாய் படிப்பவன் (!!!) கொண்டு வரும் புது ஜாமென்ட்ரி பாக்சும்,அதை வைத்து அவன் செய்யும் அலம்பல்களை பார்த்து வயிறு எரியும் நாள் .

பாட்டி வீட்டு விடுமுறைக்கால குதூகலக் கொண்டாட்டங்கள் ,அத்தை மகள்கள் மற்றும்  சொந்தங்களுடன் அடித்த கும்மாளங்கள்   அனைத்தையும் ஒரு வாக்கியத்தில் போக்கடித்து விடும் அந்த நாள் ...

"இன்று  பள்ளி மறு திறப்பு நாள் "


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!





Sunday, April 21, 2013

பசுமை நிறைந்த பால்யம் - 4

முந்தைய பகுதிகளை படிக்க,
பசுமை நிறைந்த பால்யம் - 1
பசுமை நிறைந்த பால்யம் -2
பசுமை நிறைந்த பால்யம் -3 

பால்யத்தின்   விடியற்காலைப் பொழுதுகள்  சுகமானவை . அதிலும் விடுமுறை நாளின்  காலைப்பொழுதுகள்  எந்தவித நெருக்கடிகளும் இல்லாதவை. புத்தகத்தை விரித்து வைத்தவாறே படிப்பதாய் பாவனை செய்யும்  காலைப் பொழுதுகளும், அதிலிருந்து தப்பிப்பதற்கென்றே அமைந்து விடும்  வேலைகளும்,   சில நாட்களில்  நெல் அவிப்பதும்,  அதற்கான  ஆயத்தங்களும், அவித்த நெல்லை வாசலில் கொட்டும் போது வெளிவரும் நெல்மனமும்,  குவியலாக கொட்டி காலால் பரவலாக்கப்பட்ட விதங்களும்,  காய்ந்து கொண்டிருக்கும் நெல்லை அடிக்கடி பதம்  பார்த்துகொண்டிருக்கும் ஆயாவும், விளையாட செல்கையில்  எதிர்பாராமல் காய்ந்து கொண்டிருக்கும் நெல்லுக்கு  காக்கா  விரட்ட காவலாக ஆக்கபடுவதும் அதனை தவிர்க்க போராடுவதும்,   இப்போது நினைத்தாலும் அவ்வளவு பிடித்தமானதாக இருக்கிறது.

வெயில் பொழுதுகள் மிகவும் பிடித்தமானவை. வெளியில் சென்று விளையாடுவதற்கு எந்தவிதமான நிர்பந்தத்தையும்  தராதவை. உக்கிரமான வெயிலில் தெரு முழுவதும்  அலைந்து  திரிந்து விளையாடுவதும், வேர்த்து வழியும் உடம்பும், காலில் அப்பியுள்ள தெருப்புழுதியும்,    தாகமெடுத்த போது உடல் முழுவதும் வழிந்தோடுமாறு குடித்த தண்ணியும், களைத்த பொழுதுகளில் கூட விளையாடிய நண்பர்களுடன்    ஓய்வெடுக்கும் பெரிய  வேப்பமரத்து   நிழலும், தண்ணென்று வீசும் மெல்லிய காற்றின் குளிர்ச்சியும், தற்காலத்து எந்த காரணியாலும்  ஈடுகட்ட இயலாதவை.

பண்டிகை கால வீடு திரும்பல்கள் தித்திப்பானவை. எத்தனை நாள் விடுமுறையாயிருக்கும் என்று திரும்ப திரும்ப பார்க்கும் மாத  காலண்டரும், அடையாளமாய் மடித்து வைத்த தினசரி காலண்டரும், நண்பர்களுடனான பேச்சுகளே அந்தந்த பண்டிகை கொண்டாட்டத்திற்கு நிகரானவை. 

பொங்கலின் போது கரும்பு கடைகளுக்கு வருமுன்னே எங்களின் பேச்சு மூலம் அனைத்தும் சக்கையாக்கப் பட்டிருக்கும்.
தீபாவளின் போது  வெடிக்கும் வெடிகளை விட அதிக சந்தோஷத்தை தருபவை  அதை பற்றிய எங்களின்  பேச்சுகள். சற்றே மிகைப்படுத்தப்பட்ட பேச்சாயினும் அத்தனையையும் ரசிக்க வைத்த பண்டிகை கொண்டாட்டங்கள்.
                                               
இவை அனைத்துமே இப்பொழுதும் கிடைப்பவைதான், ஆனால்  நமது சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவற்றை   எல்லாம் ரசிக்கும் மனநிலையை விட்டு  வெகு தூரத்திற்கு நம்மை கொண்டு வந்து விட்டது என்பதுதான் மறுக்க முடியாத நிஜம்.

நிஜத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் போலி பிம்பத்துடன் இயைந்து இயல்பாய் இருக்கவும் இயலாமல் ஊசலாடி கொண்டிருக்கிறது எனது  பால்யம் குறித்த நினைவுகள். இந்த நினைவுகளின் மீட்சிதான் இன்னும் என்னை உயிர்ப்புடன் இயக்கிக் கொண்டிருக்கிறது.
நன்றாய்  இயக்கட்டும்  மீட்சிகளின் ஆளுமை ...

                                                                                                     பால்யம் மலரும் ...

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Tuesday, November 20, 2012

பசுமை நிறைந்த பால்யம்-3

முந்தைய பகுதிகளை படிக்க,
பசுமை நிறைந்த பால்யம் -1
பசுமை நிறைந்த பால்யம் -2
                           
பள்ளி செல்லும் காலை பொழுதுகள் சற்று கசப்பானவை. ஜோல்னா பையை தலையில் மாட்டியபடி  அவசர அவசரமாய் நடந்து  செல்வதும் , நண்பன் கேட்கையில் மாத்திரம் நினைவுக்கு வரும் எழுத  மறந்து விட்ட வீட்டுப்பாடங்களும், எழுத ஆரம்பித்து பாதியில் தொக்கி நிற்கும் கணக்கும் செல்லும் வழியில் பயத்தை தருபவை.

கணக்கு டீச்சர் வராத நாட்களை எண்ணி குதூகலித்த தருணங்கள்  மிகவும் அதிகம்.பள்ளி நெருங்குகையில்  உரத்து  கேட்கும்  வாய்ப்பாட்டை  கேட்கும் பொழுதே சொரேரென்றிருக்கும்.  எங்கே சுழற்சி முறையில் நாமும்  சொல்ல வேண்டுமோ என்று பயந்து முன்னால் இருப்பவனின் முதுகுக்கு  பின்னால் ஒளிந்திருந்தது   ஒரு காலம் பால்யத்தில் . 

மழை பெய்யும் பள்ளி நாட்கள் இதமானவை. மழையின் ஆரம்பத்தில் வரும் மண்வாசனையும், இரைச்சல் மிகுதியால் நின்று விடும் வகுப்புகளும், மைதானத்தில் புள்ளியாய் ஆரம்பித்து தாழ்வான பகுதியை நோக்கி வாரிவாரியாக ஓட ஆரம்பிக்கும் மழை  நீரும், தேங்கிய மழைநீரில் விழுந்து  குடைவிரித்தவாறே  மறையும் நீர் முத்துகளும் கண்ணெதிரில் நடக்கும் அற்புதம்.

வானம் வெக்காளித்த  பின் வழக்கத்தை விட சற்று முன்னதாக விடப்படும் பள்ளியும், வெளிவருகையில் உணரும் வெம்மையும், செல்லும் வழி எல்லாம் தண்ணீரை எத்தி விளையாடிய படியே செல்வதும், மரம் செடிகளில் இருந்து சொட்டி கொண்டிருக்கும் நீர்த்திவலைகளும், சிறுமரத்தினடியில் யாரையேனும் எதார்த்தமாய் நிற்க வைத்து, அவர்கள் மீது  ஆட்டி விடப்பட்டு, சொட்டிய மழைத்துளிகளும்,

அம்மாவால் சூடாக   தரப்படும்  மழை நேரத்து தேநீரும், கூடவே தித்திப்பாய்  தேங்காய்,வெல்லமிட்டு தரப்படும்  ஊறவைத்த அரிசியும், அதில்  எதிர்பாராமல்  கடிபட்ட கல்லால் ஒரு வினாடி  கூசிப்போகும் உடலும்,  அதை நினைக்கையில்  அதே  உடல் கூசும் உணர்வை இப்பொழுதும்  உணரும் அதிசயத்தையும்    என்னவென்று சொல்வது!

பால்யம் குறித்த நினைவுகளை  எழுதுவது என்பது, கோடை நாளொன்றின் மீது கோபம் கொண்டு பெய்யும் பெருமழையின் சாரலில் நனைவது  போல என் மனதை சுகமாய்   நனைக்கிறது .

நன்றாய்  நனைக்கட்டும்  பெருமழையின் சாரல் !!!

                                                                                                                      பால்யம் மலரும் ....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


 

Thursday, August 23, 2012

பசுமை நிறைந்த பால்யம் -2

பசுமை நிறைந்த பால்யம்-1  

மின்சாரமில்லா மழைக்கால ராத்திரிகள் மனதுக்கு ஒருவித நெருக்கமானவை. சாயந்திரத்தில் லாந்தரையும், சிம்னி விளக்குகளை துடைத்து மண்ணெண்னை ஊற்றும் அம்மாவும், அக்காக்கள் படிப்பதற்காக ஏற்றப்படும் சிம்னி விளக்குகளும், தீச்சுடருடன் இயைந்தவாறு நேர்க்கோட்டில் வெளிவரும் புகைச்சுடரும், காற்றின் வேகத்தில் அலைக்கழிக்கப்படும்போது அலையும் நிழல்களையும், அணைவது  போல போக்கு காட்டும்  சுடரை  ரசிப்பதும்,  ஆவி பறக்க பரிமாறப்படும் சோற்றின்
சூடும்தலை முதல் கால் வரை கம்பளி போர்த்தி கதகதப்பாக படுத்துறங்கிய  சுகமும்  இன்னும் என்னுள்  இருப்பது போல ஒரு உணர்வு...
 
கீற்றும் , குடலையும் முடைவதற்காக  குளத்து நீரில் ஊறவைத்து கொண்டு வரப்படும்  தென்னை  மட்டைகளும், அவற்றை நொடிப்பொழுதில் நெட்டாக  இரண்டு துண்டாக  வகுந்து விடும் பாளை அருவாளும், லாவகமாக  கீற்று முடையும் தாத்தாக்களும், ரீங்காரமிடும் சில்வண்டுகளும், இணைக்காக சப்தமெழுப்பும்  தவளைகளைப்  பார்த்து  அதுபோலவே கட்டை குரலில் சப்தமிடுவதாகவும்  கழியும் எனது மழைக்கால ராத்திரிகள்.....

கார்காலத்தின்  பகற்போதுகள் வண்ணமயமானவை அடிக்கடி பெய்யும் மழையும் அதனால் முளைத்த தும்பை பூச்செடிகளும், ஆளரவமில்லா கொல்லைகளில் பச்சைப்பசேலென்று  மண்டிக்கிடக்கும். நட்சத்திரங்களை இரைத்தார்போல பொலேரென்று  பூத்து கிடக்கும் தும்பைப்பூக்களும், அப்பூவில் தேனுண்ண வரும் வண்ணத்துப்பூச்சிகளும் அதை பிடித்து அதன்  வயிற்றில்  நூல்கட்டி அதை துரத்தி விளையாடுவதும் , திடீரென முளைத்தது  போல பறக்கும் ஈசல்களும், அவற்றை பிடிக்க ஓடுவதும். அடிக்கடி  எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கும் ஆயாவையும் பொருட்படுத்தாமல்
விளையாடிக்கொண்டே இருந்த எனது பால்ய நாட்கள் மீண்டும் கிடைக்காதவை ......

அவ்வப்போது  கிடைக்கும் பொன்வண்டுகளும், அதற்கு  கொன்றை, கொடுக்காபுளி  இலைகளையும் உணவாக ஊட்டுவதும், பட்டு கத்தரிப்பது போல நறுக்நறுக்கென்று அவ்விலைகளை பொன்வண்டு தின்பதை பார்த்துக்கொண்டிருப்பதும்,  அதன் முட்டைகளை  நல்லெண்ணெய் பூசி வெயிலில் வைத்து  அது குஞ்சு பொறிக்க நண்பர்களுடன் காத்து கிடந்ததும், அதன் கழுத்தும் உடம்பும் சேருமிடத்தில்  கையை வைக்கும் போது  கடிப்பதும்,  அக்கழுத்தில் நூலொன்றை கட்டி கையில் பிடித்துக்கொண்டு அது என்னுடைய  உடலில் ஊர்வதை பெருமையாய்  ரசித்ததும், அது பறக்கும் போது நூலைப்பிடித்து  அதனுடன் ஓடித்திரிவதும், எத்தனை  கொடுத்தாலும் திரும்ப வராத நாட்கள்.

பழைய நினைவுகளுடன் மட்டுமே வாழ்வது என்பதாகிவிட்டது  இப்போதைய வாழ்க்கை. எழுத்து ஒன்று மட்டுமே பால்யத்தை கிளறி  அந்த வாசனையை திரும்ப கொண்டு வருகிறது.

 நன்றாய் வரட்டும் வாசனையும்,  எழுத்தும்!!!

                                                                                                         பால்யம் மலரும் ....


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, August 16, 2012

பசுமை நிறைந்த பால்யம்!!!

விடியலில்  இருள் கரையதொடங்குவது போல, பால்யம் சுமந்த நினைவுகள் முழுவதும்  என்னுள்  கரைந்து  வியாபிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து  பூனை படம் போட்ட  நீலகலர் பனியனை போட்டுக்கொண்டு அலைந்து  திரிந்த நாட்கள் ஒரு வசந்த காலம். பச்சைக் கம்பளம் விரித்த பசிய வயல்களுக்கு நடுவே தாத்தாவின் கைபிடித்து வரப்பில் நடந்ததும், வயலில் நடவு நடும் வேலையாட்களின் குலவை சத்தமும், நாற்று பறித்து லாவகமாக முடிச்சிடும் போது பசுந்தளிர் சிறிதாக கசங்குவதால் ஏற்படும் ஒருவித வாசமும்  இன்னும் என் மனதை விட்டு அகலாதவை.

எல்லோரும் பள்ளி செல்லும் நாளில், மட்டம் போடுவதைப் போல மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை  பால்யத்தில். பள்ளி செல்லா நாளொன்றின் முற்பொழுதுகளில் அலை அலையாய் இறங்கி கொண்டிருக்கும் வெயிலின் ஊடாக அலைந்து திரிவதும், கிரீச்சென்றும், மெல்லிய முனங்களுடனும்   விதவிதமான ஒலிகளை எல்லாம் எழுப்பிகொண்டு  சுற்றி வரும் செக்கடியும், அந்த செக்கு மரத்தண்டில் அமர்ந்து காலால் மணல்  தரையில்  கோடிழுத்து செல்வதும், அந்த  வெம்மையிலும் வாணியொழுக செக்கிழுக்கும் மாடுகளுடன்  சுற்றுவதுமாக  கழியும் எனது பள்ளி செல்லா நாட்களின் பகல்  பொழுதுகள்.

கோடைக்கால வெயிலின் உக்கிரம்  தணிந்த ஒரு  சாயந்திரத்தின்வீட்டின்  முற்றத்தில் இருந்த வேப்பமரத்தின்  அடியில் கழியும் எனது இரவுப்   பொழுதுகள். வெயிலின் வெக்கை தெரியாமலிருக்க வாசலில்  தெளிக்கப்படும் தண்ணீரும், அதனால்  கிளம்பும்  மண்வாசனையும், சிறிது ஈரம் காயவிட்டு அதில் ஒரு பாயை போட்டு படுத்திருக்கும் போது  வேப்பமரத்திலிருந்து வீசும் மிதமான இளந்தென்றலும்,  அவ்வப்போது ஆசிர்வதிப்பது போல உதிர்க்கப்படும் வேப்பம்பூக்களும்...   யப்பா அனுபவித்தறியா  பேரானந்தம் இன்னும் என் நினைவுகளில்!!!

 எப்போது நினைத்தாலும் பெருமூச்சிட்டு ஏங்க  வைத்த எனது  பால்யம் சுமந்த நினைவுகள்  இப்போது பசுமையாய்  எனது நினைவுகளில் மட்டும்.!!!

                                                                                                                     பால்யம் மலரும் .....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!