Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, December 18, 2019

கான்க்ரீட் காடு


பொட்டல் பெருவெளியான பாலையில் 
உருவாகிக் கொண்டிருந்தது அந்த
கான்க்ரீட் காடு.
வெயிலாடிய மதியமொன்றில்
தன் கூடு  தொலைத்த பறவை ஒன்று  
அலைந்தோடியது  அதன் கூட்டைத்  தேடி
அப்பெயர் தெரியா  பறவை போலவே 
தன் வீடு  தொலைத்த  தச்சனின் 
கருணையில் கிடைத்தது ஒரு
தற்காலிகக் கூடு.

மருங்கிய கண்களும் ஒட்டிய வயிறுமாய் 
பசித்து  ஒடுங்கியிருந்த அப்பறவைக்கு 
வங்கனும், தமிழனும்  சிதறிய பருக்கைகளே 
போதுமென்றானது முதலில்.
நாள்பட நாள்பட மதிய சோற்றின் 
முதல் கவளமே அப்பறவைக் கென்றானது.

வங்கனும், தமிழனும் காட்டிய கருணையில்  
கொழுத்திருந்தது அப்பறவை.
வெயில் கரைந்தோடிய
பிறகொருநாளில் 
வந்திறங்கிய வெள்ளைக்கார முதலாளிக்கு 
தெரிந்திருக்க வாய்ப்பில்லை 
அன்பினால் பின்னப்பட்ட 
அப்பறவையின் கூடு.
பிய்த்தெறியப்பட்ட  கூட்டின் குச்சிகளுக்கு 
இடையில் சிதறிக் கிடக்கிறது 
" தொழிலாளிகளின் கருணை."


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!


Thursday, December 13, 2012

மாலை நேரத்து மழை.


 
                                                                அகமும் புறமும் 
                                                                இதமாய் நனைத்து 
                                                                குழந்தையாய் 
                                                                உள்ளம் குதூகலிக்க 
                                                                வைத்து  
                                                                மறந்திருந்த பால்யம் 
                                                                உசுப்பி 
                                                                தற்கால கவலை
                                                                மரணித்து 
                                                                இயல்பாய் உயிரினில்
                                                                ஒரு சிலிர்ப்பை  
                                                                 தந்தது  அந்த 
                                                                 மாலை நேரத்து 
                                                                 மழை .
                                                                அந்த அற்புத 
                                                                 கணங்கள்  
                                                                 மண் நனைத்து 
                                                                 வாசனை கிளப்பி 
                                                                 என்னை ஏகாந்தத்தில் 
                                                                 திளைக்க விடலாம்.
                                                                 இல்லை 
                                                                 நெஞ்சில் சூல் கொண்டு 
                                                                 கவிதையாய் பிரசவிக்கலாம்.
                                                                 எப்போது வேண்டுமானாலும் !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!





Monday, December 10, 2012

செய்திலா வினைகள்.


உன் வெட்கத்தின்  நிறமான இளஞ்சிவப்பை 
பூசி இருந்திருக்கலாம் அந்த  சுவர்களில்
மொத்தமாய் உனது உருவம் பார்க்க
பொருத்தி இருந்திருக்கலாம் அந்த கண்ணாடியை
காலை  வெயிலின்  கடுமை   குறைக்க
 மாட்டி இருந்திருக்கலாம் அந்த திரைச்சீலையை
வாகாய்  துணி  உலர்த்த  கொடி  ஒன்றை
கட்டி இருந்திருக்கலாம் அந்த மொட்டை மாடியில்
உனக்கென்ன
இப்படியாய் கேட்டு  நிராசையாய் போன
எத்தனையோ  ஆசைகளுடன்  இதுவும் ஒன்று
எனக்கோ
மனதை பிசையும் பிரிவுத்துயருடன்
இலவச இணைப்பாய் உறுத்தும்
செய்திலா வினைகளின் மிச்சங்களும் 
அதன்  நினைவுச் சேர்க்கைகளும் 
இருந்தாலென்ன  அனைத்தையும் செய்து
முடிக்க இன்னொரு வருட விடுமுறை
வராமலா போய்விடும் எனக்கு ???!!! 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Tuesday, September 11, 2012

குழலினிது யாழினிது!!!




இன்று காலை  என்ன செய்தான் தெரியுமா?                           
இப்பொழுது என்ன செய்கிறான் தெரியுமா ?
என்று
உன்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளுடன் 
தொடங்குகின்றன உன் அம்மாவின்
உரையாடல்கள்  சற்றே  பெருமையுடன்,
வெகு சீக்கிரமாய்  எழுந்து
விழித்திடாத  உன் அம்மாவின்
முகம் பார்த்து சிரித்து கிடந்தது,
வெளியே செல்லும் தாத்தாவுடன்
கிளம்பிட துடித்த உன் தாவல்கள்,
சாப்பிட மறுத்து நீ மாற்றும்
முகபாவனைகளும்,
 பிடிவாதமாய் ஊட்டியதால்
உதடு துடிக்க  வெடித்து கிளம்ப
காத்திருக்கும் உன் அழுகையும்,

பொய்க்கோபம் கொண்டு அதட்டும்
உன் அம்மாவும், அதை  நேர்செய்யும் 
விதமாய் உன் மந்தகாசப் புன்னகையும்
உன் ஒவ்வொரு அசைவையும்
துளித்துளியாய்
ரசித்துக்கொண்டிருக்கின்றனர் வீட்டில்.
"குழலினிது யாழினிது" என்னும் வள்ளுவன்
வாக்கோடு வாழ்ந்து  கொண்டிருக்கிறேன்
உன் அப்பா  அந்நிய தேசத்தில் .
அங்கு நீ தவழ்ந்து கொண்டிருக்கிறாய்
உன் பிரிவால்
நான் இங்கு தவித்துகொண்டிருக்கின்றேன் .

சில வார்த்தைகளை   படிக்கும் போது
உணராத   அர்த்தங்களை
வாழ்வின் பக்கங்கள்
அவற்றை கடக்கும் போது
அழகாய்  உணர்த்திவிடுகின்றன 
சில நேரங்களில் வலியுடன் !!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!






Thursday, August 9, 2012

மழலைகள் ....




எப்படி எடுத்தாலும்
எல்லா புகைப்படத்திலும்
அழகாய் இருக்கின்றனர்
குழந்தைகள்.

எப்படி  கேட்டும்
அனுமதி கிடைப்பதில்லை
மழையில்  நனைந்திட,

கொஞ்சும் மழலையில்
மிரற்றுவது போல்
கேட்கப்படுகின்றன
பதிலளிக்க இயலவிலா
கேள்விகள்.

எத்தனையோ முறை
எத்தனித்த கோபத்தை
நீர்க்குமிழியாய்
உடைத்துவிட்ட உன்
பொக்கைவாய் புன்னகைகள் ,

வாழ்வின் அர்த்தத்தையே
உணர்த்திவிடும்
எனக்கான  உனது தருணங்கள் !!!!!!!















Saturday, August 4, 2012

கொண்டவனின் கோபம் ...

 
கோபத்தில் கொந்தளிக்கிறது உன்  தேகம்
வார்த்தைகளால் காயப்படுத்த
துடித்து கொண்டே இருக்கிறது உன் குரூர மனம்  
உன் உதட்டு சூட்டின் வெப்பம் தாளாமல் 
ஒளிந்து கொள்கிறது ஆறாவது அறிவு
கொல்லும் குரூரம் வார்த்தைகளில்
தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாமல்
 நிராயுதபாணியாய் நான்,
 விஷமாய் இருக்கும் உடலில் இருந்து 
வரும் வார்த்தைகளில்  மட்டும்
அமிர்தமா சொட்டப்போகிறது ???
வார்த்தை கத்திகளில்  விஷம் தோய்த்து
லாவகமாக   வீசத்தெரிந்த உனக்குத்
தெரியவில்லை இப்போதெல்லாம் 
நீ காயப்படுத்துவது என்  உடலைத்தான்
உணர்வுகளை அல்ல என்று  
ஏனென்றால்
அவைதான் மரணித்து மாதங்களாகி விட்டதே.!!!







Monday, July 16, 2012

வெட்கப்பூக்கள் !!!

           

நமக்கே  நமக்கென வாய்த்த
தருணங்கள்  என்னால்  நழுவும்போதோ
என் அத்தியந்தமான  காதலை உனக்கு
உணர்த்துவதற்கான நொடிகளை தவறவிடும்போதோ
அன்யோன்யமான  நமது  காதல்
குலாவல்களை தொடரவியலாத போதோ
கோபம் கொண்டு பேச மறுப்பாய்  நீ .
தேவதையிடம் யாசிக்கும் பக்தனை போல
என்  சமரசம் தொடங்கும் அலைபேசி வழியாய்
நான் பேசும் சொற்களையே திரும்ப பேசி
ஊடலாடுவாய் நீ
வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத உன்
பேரழகை வரைமுறை தாண்டி
வர்ணிக்கையில் " ச்சீய்  போடா"  போன்ற
வெட்கப்பூக்களை  சிதறிவிட்டு   அணைத்துவிடுகிறாய்
அங்கு அலைபேசியையும், இங்கு என்னையும் !!!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!

Thursday, July 12, 2012

என்னவனின் சொல்லாடல்கள் !!!





பெரும்பாலான நமது உரையாடல்களில் உனது
“ம்“ என்ற ஒற்றைச்சொல்லே பதிலாய் அமையும்!
விழிகளில் தெரிக்கும் அனலே பலநேரங்களில்
மௌனியாக்கிவிடும் எனை!
எதுவும் யாசித்தது இல்லை இதுவரை
நீ எத்தனையோ கேட்டும்!
உனது விருப்பத்தையே எனதாக்கிகொண்ட
எத்தனையோ தருணங்கள் பரிகசிக்கப்பட்டுள்ளன!
அத்தி பூத்தாற்போல வரும் விவாதங்களில்
தேர்ந்தெடுத்த சொல்லாடல்களினால்
வென்றெடுக்கின்றாய் எனை!
சொல்ல நினைத்து தொண்டை குழிக்குள்
சிக்கிக்கொண்ட வார்த்தைகள்
காற்றுடன் மட்டுமே கதைக்கின்றன
எப்போதும் நல்லவனாகிவிடும் உன்னைப்பற்றி !!!!! 

வாழ்க வளமுடன்... தமிழ் தந்த புகழுடன்......