Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, March 21, 2017

பெய்யெனப் பெய்யும் மழை

இலக்கின்றி பெரு  வெளிப் பரப்பில்  நடந்துகொண்டிருந்த எனக்கு  சில்லென்று வீசிய காற்று மழை வரப்போவதை கட்டியங்கூறியது . அந்த காற்றில் இருந்த ஈரப்பதம் மனதை இலகுவாக்க ஆரம்பித்தது . 

கோடைமழை பிடித்தால் விடாது என்பதற்கேற்ப கருங்கும்மென்ற மழை மேகங்கள்    குவிய ஆரம்பித்தன. மழையை எதிர்பார்த்து  தானாகவே கால்கள் நடையின் வேகத்தை குறைத்தன.

சொட்டென்று முகத்தில் விழுந்து தெறித்தது முதல் துளி. என்னதொரு  ஆனந்தம்,அடுத்தடுத்த மழைச்  சொட்டுகளுக்காக  இன்னும் மழைத்துளிகளை எதிர்பார்த்து முகம் தன்னிச்சையாய் ஆகாயம் நோக்கியது.

தரையில் விழுந்த துளிகள் மண்ணுடன் கலந்து ஒரு சுகந்தத்தை எங்கும்   பரப்ப  ஆரம்பித்திருந்தது. அது ஒரு வாசனை.வேறேதிலும் நுகர்ந்தறியா வாசனை.   மெதுவாய் நாசி தொட்டு,  நாடி நரம்பெல்லாம் வியாபித்து, என்னுடன் இரண்டறக் கலந்து  என்னைக் கிறங்கடிக்கும் இந்த வாசனை.
கொஞ்ச நேரம்தான், கொஞ்ச நேரமேதான் ஆனால்  மனதை பரவசமாக்கி, கணநேரம் பிரபஞ்ச கவலை  மறக்கடித்து,  ஆகாயத்தில் பறக்க விட்டு  சட்டென்று அதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதவாறு நிறுத்திவிடுவதில் இந்த மண்வாசனைக்கு நிகர் வேறேதுமில்லை . 

ஒன்றாய், இரண்டாய்,  நூறாய், ஆயிராயிரமாய்  வானத்துக்கும் பூமிக்குமான மெல்லிய கம்பித் தொடர்பு ஆரம்பித்திருந்தது. இப்படி உயிர்ப்பிக்கும் மழையில் நனைந்து எத்தனை நாளாகி விட்டன. இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையில் அவ்வப்போது நடக்கும் இது போன்ற ஓரிரு விஷயங்கள் தான் வாழ்க்கையை   இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

கோடை வெயிலில் தகதகத்துப்  போயிருந்த  வெப்ப பூமி ஆவலுடன் மழையை உள்வாங்க ஆரம்பித்தது   பசித்திருக்கும் குழந்தை பசியாறுவதை நினைவு படுத்தியது.மனம் மெதுவாய் மழைக்கான காரணிகளில் லயித்திட ஆரம்பித்தது .

சில சமயங்களில்  கடமை ஏதுமற்ற அந்த கணங்கள் அற்புதமானவை. அதுவும் யாருமற்ற பெரு வெளியில் பெய்யும் பெருமழையில் கரைவதென்பது  ஒரு சுகானுபவம்.  மழை ஒன்றும் பேதம் பார்ப்பதில்லை மனிதனைப் போல,   விருப்பமிருப்பின் வாருங்களேன் மழையில் நனைய !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Tuesday, July 30, 2013

கொல்லைப்புற கிணற்றடியும் பவள மல்லி மரத்தடியும்..

எத்தனையோ  முறை உன்னைக் கடந்து வந்திருப்பேன் அவசரமாகவோ, இல்லை கண்டும் காணாமலோ. ஆனால்  நான் வெறுமையை உணரும் போதெல்லாம் "தாய் மடி கண்ட சேய்" போல  தஞ்சமடையும் இடம் கொல்லைப்புறத்தில் உள்ள இந்த கிணற்றடியும், அந்த பவள மல்லி மரத்தடியும் தான்.

எப்போதிருந்து ஆரம்பித்தது இந்த சினேகிதமான  நெருக்கம்? பால்யத்தில் விளையாட ஒருவருமின்றி தனித்திருந்த சில பொழுதுகளை வாஞ்சையுடன்   அரவணைத்த போதா? இல்லை அம்மா துணி துவைக்க தண்ணீர் சேந்தி தரும் பொழுதுகளில், கிடைக்கும் இடைவெளியில் ஈரக்   கைகளுடன் அங்கு சிதறிக்கிடக்கும் பவளமல்லி மலர்களை சேகரித்து அதன் வாசனையை ஆழமாய் சுவாசித்து நுரையீரல்களில் நிரப்பிய தருணத்திலா?



அல்லது ,
சற்றே பெரியதாய், உயரமாய் அமைந்த துணி துவைக்கும் கல்லின் மேல் படுத்தவாறே சிதறிக்கிடக்கும் நட்சத்திர கூட்டங்களை ஆச்சர்யமாய் எண்ணிக்கொண்டிருந்த போதா?

அல்லது,
வீட்டில் சண்டையிட்டு கோபித்த இரவுகளின் நீட்சியாய் பசியுடனும், கண்ணீர்க் கரையோடிய கன்னங்களுடனும்  கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்த அந்தப் பொழுதிலா?

அல்லது,
வானம் வெளித்த மழை நாளில், கதிரவன் தன் பொன்மஞ்சள் கதிர்களை கலைந்தோடும் முகில்களுக்கிடையே சிதறடித்துக் கொண்டிருந்த மாலையொன்றில், மழைமுத்தை மடியில் ஏந்தியவாறு பச்சைப் புல்வெளிப் பரப்பில் சிதறிக்கிடந்த  பவளமல்லி மலர்களும், கொல்லைப்புறத்தையே தன் வாசனையால்  நிரப்பி வைத்திருந்த, மொட்டவிழ்ந்த சந்தன முல்லை மலர்களுமாய் காட்சியளித்தபோதா?

சரியாய்த் தெரியவில்லை எனக்கு. இருக்கலாம் இவற்றில் எதாவதொரு பொழுதிலோ அல்லது இவை அனைத்தும் சேர்ந்து என்னை ரசவாதம் செய்த ஒரு கலவையான பொழுதிலோ, என் மனதை முற்றிலுமாக  ஆக்கிரமித்திருக்கலாம், இந்த கொல்லைப்புற கிணற்றடியும் அந்த பவள மல்லி  மரத்தடியும்.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!








Monday, January 7, 2013

அன்பென்றால் அம்மா!!!


அம்மா இந்த ஒற்றைச் சொல்லுக்கு அர்த்தம்  ஒரு வரியில் தர இயலுமா ? நான் எத்தனையோ பக்கம் பக்கமாய் எழுதினாலும் என்னால் முழுவதும்  ஒரு விவரனத்துள் அடைக்க  இயலாத ஒரே விஷயம்  உன்  அன்புதான் அம்மா.
என் கன்னித்தமிழும் தடுமாறிய தருணங்கள் உனக்கான வரையறையை அகராதியில் தேடிய போதுதான். அவள் "கன்னி" என்பதால்தான் உன் அருமை பெருமையை உணர்த்த இயலவில்லையோ ஓரிரு வார்த்தைகளில் !!!

பால்யத்தில் நான் எழுந்திரிக்கும்  காலைப்பொழுது உனது அன்பான கொஞ்சலுடன் தான் ஆரம்பிக்கும் எப்படிப்பட்டதொரு வேலைப்பளுவிலும் எனக்கான உனது பக்கங்கள் ஒதுக்கப்பட்டே இருக்கும்அவை முழுக்க முழுக்க உன் அன்பினால் நிரம்பியே கிடக்கும்.

நான் சொல் பேச்சு கேளாமல் இருக்கும் சமயங்களில்,  என்னை விளையாட்டாய் கோபப்படுத்த “ தவிட்டுக்கு வாங்கிய பிள்ளைதானே நீ”  என்று சொல்லுவாய். கோபத்துடன்  வீம்பாய் முறைத்து கொண்டிருக்கும் என்னை சமாதானம் செய்ய கொஞ்சுவாய் நீ . அந்த அதீத கொஞ்சலுக்காய்  இன்னொரு முறை நீ அப்படி சொல்லக் காத்துக் கொண்டிருப்பேன் நான் . 


பண்டிகை காலங்களில் அடுப்பும், வாணலியுமாய்  இருக்கும் உன்னைக் கழுத்தில் கட்டிக்கொண்டு கொஞ்சுவேன் தள்ளிப்போ என்ற உன் எச்சரிக்கையையும் மீறி, அவ்வாறான நாளொன்றில் பொங்கி என் மேல் தெறித்து விட்ட இரண்டொரு எண்ணெய்த்துளிகளும், நான் செய்த ஆர்ப்பாட்டமும், மனம் கலங்கி, தவிப்பும் அழுகையுமாய்  மருந்திட்டு என்னை சமாதானம்செய்த பின்னர் நான் கவனித்தேன் அம்மா, உன்மேல் என்னை விட அதிகமாய் தெறித்திருந்த எண்ணெய்த் துளிகளை!!!  

நான் எவ்வளவு சாப்பிட்டால் திருப்தி அடையும் உன் மனசு? இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று எவ்வளவு தான் சோறு போடுவாய் நீ ? உன் அன்பினால் வழக்கத்தை மீறி அதிகமாய் சாப்பிட்டு விட்டு நடக்க இயலாமல் ஊரும்  போது,  அருகிலுள்ள யாரிடமாவது  அங்கலாய்த்து கொண்டிருப்பாய்முன்னாடி மாதிரி இவன் சாப்பிடுவதே இல்லை என்று!!!  

வேலைக்கென்று வெளி உலகம்   வந்த பின்னர் எனது வட்டம் பெரிதாகிப் போனது . ஆனால்  உனக்கோ நானே உலகமாகிப் போனேன். நான் எப்போதாவது  மனதளவில்  கஷ்டப்படும் போது  அது  உனக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத்  தெரியாது. உடனே உனது அழைப்பு வந்து விடும் எனது அலைபேசியில். அம்மா என்று வரும் பேரைக் கண்டவுடன் எனது மனக்கிலேசங்கள் எல்லாம் பறந்து விடும்

நான் அம்மா என்று சொல்வதை வைத்தே  என் மனநிலையை துல்லியமாக கணித்து விடுவாய் ஒரு கை தேர்ந்த மருத்துவர்  போலபிறகென்ன போதும் போதுமென்ற அளவுக்கு உன் அன்பு மழையில் நனையவிட்டு, தனி ஒருவனாய் இந்த உலகை எதிர்த்துப் போராடும் அளவுக்கு மனதைரியத்தை தந்து  உன் அன்பினால் என்னை நிறையச் செய்வாய்.
உன் மடித்தலையணை தந்த நிம்மதியும், அரவணைப்பும் பாச உணர்வுகளும் இதுவரை மட்டுமல்ல இனிமேலும் வேறெங்கிலும் கிட்டப்போவது இல்லை அம்மா.

ஒருமுறை திரு.அப்துல் கலாம் கூறினார்,
ஒரே ஒருநாள் நீ அழும்போது
உன் அம்மா புன்னகைத்தது
அது “நீ பிறந்த தினத்தன்று”.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். உனக்கென்ன எப்பொழுதுமே முழுக்க முழுக்க அன்பினாலே என்னை  நனைத்து விட்டு  இயல்பாய்  இருந்து விடுவாய், நானோ உன் அன்பின் முழு பரிமாணத்தையும் தாங்க இயலாமல் அடிக்கடி நெட்டுயிர்த்துப் போய்விடுகிறேன் அம்மா.சுருக்கமாகச் சொன்னால்

தெய்வங்களின் மறு உருவம் அம்மாக்கள்.
இல்லையில்லை
அம்மாக்களின் மறு உருவம்தான் தெய்வங்கள் !!!




வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!










Saturday, December 22, 2012

செத்துப் போ விவசாயியே 2

செத்துப் போ விவசாயியே - 1

தண்ணீர் இல்லை நிலத்தடி நீர்  எத்தனையோ அடிக்கு மேலே  போய்விட்டது என்று சொல்லும் நாம்தான்,   நிலத்தடி நீரைச் சேமிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் செய்யமாட்டோம். மழை  இல்லை   என்று புலம்பும் நாம்தான் இரண்டு நாட்கள் தொடர்ந்தாற்  போல மழை பெய்தால் ஊரே வெள்ளக்காடாகி விட்டது, ரோடெல்லாம் ஒரே தண்ணீர்  என்று புலம்புகிறோம்.



அதற்கும்  முழு காரணமும் நாமாகத்தான் இருப்போம். இருக்கும் குளங்களையும், வாரிகளையும் தூர்த்து, சிறுகச் சிறுக சேர்த்து பிளாட் போட்டு விற்றிருப்போம்.அடுத்த ஒரு வாரம்   கழித்து  தண்ணீர் இல்லை ,மழை இல்லை என்று அதே பஞ்சப்  பாட்டை திரும்ப  பாடுவோம்.

  • படிக்காத ஒன்றும் அறியாதவர்கள் என்று நாம் நினைக்கும் நமது பாட்டனும் முப்பாட்டனும், முன்னோர்களும்  அமைத்து வைத்திருந்த விவசாய முறை நாம் அறிவோமா ?
  • பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்து தஞ்சை டெல்டா முதல்  தலைக்காவிரி வரை கோலோச்சிய தமிழனின் யுக்திகளை  நாம் தொடர்கிறோமா ?? 
  • அவர்கள்  செய்த நீர்ப்பங்கீடு முறை நமக்கு நினைவில் உள்ளதா? மழைக்காலத்தில் நமது கிராமங்களில் உள்ள குளங்கள் வரிசைக்கிரமமாக  நிரம்புவதை இப்போது பார்க்க முடியுமா?
  • பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வீட்டிற்கு ஒருவர் என முறை வைத்து வாய்க்கால்களையும், வாரிகளையும் வெட்டி சீரமைப்பார்களே அந்த முறை இப்போது  உள்ளதா ?
  •  உபரி நீரை வெளியேற்றுவதற்காக காட்டாற்றுடன் இணைக்கப்பட்டுள்ள வாய்க்கால்  இருக்கிறதா இப்போது ? 
  • சிறுவயதில் நமக்கு தெரிந்து பயிர் செய்த, குருதாளி, பனிப்பயறு,கேப்பை என  எத்தனை தானியங்கள் காலப்போக்கில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. அவற்றை  முக்கியப் பயிர்களின் அறுவடைக்கு பின் இடையிடையே  பயிர் செய்வதன் மூலம் நுண்ணுயிர் சத்துக்கள் சம நிலைப்படுத்தப்பட்டு இருந்ததை நாம் செய்கிறோமா இப்போது? 
பதில்  நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

நகர மயமாக்கலும், நாகரீகமாக்கலும் சேர்ந்து விவசாயத்தை அடியோடு சீர்குலைத்து போட்டு விட்டது.எந்த அரசாங்கம் வந்தாலும் விவசாயியின் வறுமையோ தற்கொலையோ   ஒரு பொருட்டு அல்ல.

அவர்களின் தாரக மந்திரம் இதுவாகக் கூட இருக்கலாம்  விவசாய நிலங்களை கான்க்ரீட் காடுகளாக்கி, நிலத்தடி நீரை தொலை தூரத்திற்கு அனுப்பி, மிச்சமிருக்கும் உவடு தட்டி போன நிலத்தை  சுடுகாடாக்கிவிட்டு   விவசாயிகளை  பார்த்து  "செத்து போ விவசாயியே  " என்று சொல்வதாக கூட இருக்கலாம்...

விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு,தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று  சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் ...


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Tuesday, December 18, 2012

செத்துப் போ விவசாயியே ...

"வரப்புயர நீர் உயரும்
 நீர் உயர நெல் உயரும்
 நெல் உயர  குடி உயரும்
 குடி உயரக்  கோன் உயர்வான்."

 என்று ஒரு விவசாய குடியின் வளர்ச்சி  நாட்டின் வளர்ச்சியாகப் பார்த்த காலங்கள் மலையேறிப் போய்விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிநாதமாய்,  பெருமையாய்  பாடப்பட்ட விவசாயி தான் இன்று வரிசையாய்  தற்கொலை செய்து கொள்கிறான்.  இது விதர்பாவிலோ, அல்லது நமக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத நாட்டின்  ஏதோ  ஒரு மூலையிலோ  நடந்த செய்தி அல்ல. உலகுக்கே  படியளந்த தஞ்சை டெல்டாவில் தான் இந்த தொடர் தற்கொலை சம்பவங்கள்.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
 தான்அமிழ்தம்  என்றுணரற் பாற்று.  "

 என்று உலகத்து உயிர்களை எல்லாம் வாழ வைக்கும் அமிர்தம் போன்ற மழைதான் இன்று "ஆலகாலமாய்" மாறி, பெய்க்காமல் பொய்த்து, விவசாயிகளை காவு வாங்குகிறது.

அண்டை மாநிலங்கள் தண்ணீர் தராமல்  வஞ்சிக்க, பருவமழை பொய்க்க, நிலத்தடி நீரும் குறைந்து, குண்டு பல்பு எரியகூடிய அளவு மின்சாரத்தையே வழங்க  வக்கத்த, துப்புகெட்ட அரசாங்கமும் கைவிட, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட  முடியாமலும், வறண்ட வீறு விட்ட வயலை காணச் சகிக்காமலும், பூச்சி மருந்திலும், புளிய மரத்தில் நான்கு  முழக் கயிறுடன்  நிரந்தர நிம்மதி தேடிக்கொள்கிறான் ஏழை விவசாயி.

வறட்சி காலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டிய அரசாங்கம்,  வாய்தா வாங்கும் சாமர்த்தியத்தில் பாதி காண்பித்தால் கூட போதும் காவிரி கைவிரிக்காது. முல்லைப் பெரியாறு முரண்டு பிடிக்காது. ராஜ தந்திரமாய் காரியம் சாதித்து கொள்ள நமது அரசியல்வாதிகளுக்கு துப்பில்லை. ஆனால் அறிக்கை போர் புரிவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

  • நதி நீர் இணைப்பு குறித்த தெளிவான பார்வை இல்லை. அதை மேற்கொள்ள எந்த விதமான முனைப்புத்  தன்மையும் இல்லை.
  • நீராதாரத்தை நிலைப்படுத்த எந்தவிதமான  தொலை நோக்கு திட்டங்களும் இல்லை.  
  • போதிய தடுப்பணைகள் அமைத்து உபரியாய் கடலில் கலக்கும்  நீரைச் சேமிக்க எந்த ஒரு முயற்சியும் இல்லை.  
  • குறிப்பாக விவசாயம் குறித்தோ விவசாயிகள் குறித்தோ யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை .

அரசியல்வாதிதான் அப்படி இருக்கிறார்கள் என்றால்  நன்கு மெத்த படித்த நல்ல பதவியில் உள்ள வேளாண்மை அதிகாரிகள்  அதுக்கு மேல் !!!!  விவசாயி எங்கு போய்  முட்டிக்கொள்வது???  மண்பரிசோதனை  செய்ய நான் பட்ட பாடு சொல்லி மாளாது ....


                                                                             மீண்டும்  புலம்புவான் விவசாயி  .......

விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு, தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று  சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் .


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!











Saturday, November 3, 2012

சொல்ல நினைத்து சொல்லாதவை!!!

                                                             சொல்ல நினைக்கும் எல்லாவற்றையும் நினைத்தாற்  போல சொல்லி விடமுடிவதில்லை எப்போதும். அப்படி சொல்லாமல் விட்டு  போன வார்த்தைகள் தொலைந்து போய்விட்டாலும், அதன்  அடிநாதமான நினைவுகள் மனதை  அவ்வப்போது வருடிப்போகின்றன .

மருத்துவமனைக்கு மனவளர்ச்சி குன்றிய பதின்ம வயது மகளை  சக்கர நாற்காலியில் வைத்து  தள்ளிக்கொண்டு வந்த  ஒரு தாயின் கண்களில் கவ்விக்கிடந்த  சோகமும், அம்மகள் தொடர்ச்சியாய் அவரையும், சுற்றத்தாரையும்   தொந்தரவு செய்த போதும்  அவர் காட்டிய பொறுமையும், அக்கறையையும் பார்த்த போது   ''நீங்கள் ஒரு சிறந்த தாய்"   என்று  சொல்ல நினைத்து சொல்லாதது.




பிழைப்புக்காய் சுற்றத்தின் நிர்பந்தத்தால், தன்னால்  அழைத்து  வரப்பட்ட மருமகன்   வந்த இடத்தில்  மருந்தை குடித்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராட, அவருடைய வேலைத்தளத்தில் இருந்து வரும் நிர்பந்தங்கள் ஒருபுறம், போலீசாரின் விசாரணை மறுபுறம், ஊரிலிருந்து  வந்து   கொண்டே இருக்கும் அலைபேசி அழைப்புகள் ஒருபுறம், மொழியும், மனிதர்களும் அறியாத நாட்டில் கஷ்டபட்டுக்கொண்டிருந்த ஒரு பெரியவரை பார்க்கும் போது ஆதரவாய் தோள்  சேர்த்து  " இதுவும் கடந்து போகும்"    என்று சொல்ல நினைத்து சொல்லாதது.

மருத்துவமனையில் உயிருக்கு நண்பன் போராடிகொண்டிருக்கும் அந்த வேளையில், வெறுமனே கடனுக்காய், வேண்டா வெறுப்பாய் பதிலளித்து அங்குமிங்கும் அலைய விட்டுக்கொண்டிருந்த அரபிகளுக்கு மத்தியில்  கனிவாய், இன்முகத்துடன் அவரது வேலையாக அது இல்லாத போதும்  சரியாய் வழிநடத்திய அந்த பெண் அரபி மருத்துவருக்கு  மனம் நெகிழ்ந்து, நன்றியுடன்  பாராட்டுதலாய் சில வார்த்தைகளை  சொல்ல நினைத்து சொல்லாதது.

இப்படியாக  நாம் செல்லும் வழிநெடுகிலும், நம்மைச்  சுற்றிலும்  அலைந்து திரிந்து கொண்டுதான் இருக்கின்றன யாருக்காகவோ, எதற்காகவோ  நாம் சொல்ல நினைத்து  சொல்லாமல் விட்ட வார்த்தைகளும் அதனூடாக மங்கிய  அதன்  நினைவுகளும்!!!!!


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!







Thursday, October 11, 2012

மரம்தான் மறந்தான்!!!

                                                         நம்மில் எத்தனை பேருக்கு  ஏழூர்  அய்யாசாமி அல்லது  ஜாதவ் பயாங் பற்றி தெரியும். நமக்கு ஒருவரை பற்றி தெரியவேண்டுமானால்   அவர்கள்  ஒரு  அரசியல்வாதியாகவோ, சினிமா பிரபலமாகவோ  அல்லது கிரிக்கெட் வீரராகவோ இருக்க வேண்டும். இவர்கள் அப்படி கிடையாது ஆனால் அதை விட மேலானவர்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள்.

அசாமை  சேர்ந்த ஜாதவ் பயாங் ஒரு தனி மனிதனாக 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கியவர் . மரங்கள் வளர்வதற்கு ஏற்றதாக இல்லை என்று     வனத்துறையால்  கைவிடப்பட்ட     இடத்தில்தான்  இவர் இதை உருவாக்கி காட்டியுள்ளார். நினைத்து பாருங்கள் ஒரு எளிய,  தனி  மனிதனின் முயற்சி எப்பேர்பட்ட காரியத்தை சாதித்துள்ளது .
 

 இன்னொருவர் நம்ம ஊர்க்காரர் ஏழூர்  அய்யாசாமி சத்தியமங்கலம் அருகே   இவர் கிட்டத்தட்ட ஒரு 10000 மரங்களை பொது நல நோக்கோடு  வளர்த்துள்ளார் . இவரும் ஒரு  எளியவர் . தண்ணீர் தட்டுப் பாடு உள்ள கோடைகாலத்திலும் வீட்டிலிருந்து  தண்ணீர் ஊற்றி வளர்த்துள்ளார்.  நாம் என்ன செய்தோம் அவர் வளர்த்ததில் 7000 மரங்களை திட்டமிட்டு வெட்டினோம்.

இத்தகைய செய்திகளை பார்க்கும் போது படிக்க நேரமில்லாமல் கடந்து விடுகிறோம் அல்லது படித்துவிட்டு  அதிகபட்சமாக அவரை மனதிற்குள் பாராட்டுகிறோம்  அவ்வளவுதான்.

நிற்க நேரமில்லாமல் நாம் ஓடி உழைத்துக் கொண்டிருப்பது யாருக்காக ? நமது அடுத்த தலைமுறைக்காகத்தானே! நம்மை விட மேம்பட்ட ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு கொடுக்கத்தானே நாம் இவ்வளவு போராடுகிறோம் . ஆனால்  உண்மையில்  நாம் அவர்களுக்கு என்ன கொடுக்க போகிறோம் தெரியுமா?

மலடாக்கப்பட்ட மண்.
ஓட்டையிடப்பட்ட  ஆகாயம்.
ஆழ்துளையிட்டாலும் கிடைக்காத நிலத்தடி நீர்.
கற்பழிக்கப்பட்ட காற்று .

என பஞ்ச பூதங்களையும் நாசமாக்கிவிட்டோம்  நெருப்பைத்தவிர . சொல்லுங்கள்  இதை கொடுக்கவா நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ? 
முன்பு இலவசமாய் ,சாதாரணமாய் கிடைத்தவை எல்லாமே இப்போது காசு கொடுத்து வாங்குகிறோம். சொல்லமுடியாது நமது அடுத்த சந்ததி காற்றை கூட காசு கொடுத்து வாங்கும் நிலை வந்தாலும்  வரலாம்.

 இவை அனைத்தையும் மரம் வளர்ப்பதின் மூலமாக சரி செய்ய இயலும். நகரத்தில் வாழ்கிறேன் என்னால் இங்கு செய்ய இயலாது என்று சப்பைக்கட்டு கட்டினாலும், நாம் நினைத்தால் சாதிக்க இயலாது ஒன்றும் இல்லை நண்பர்களே . நமக்கெல்லாம் ஒரு வேர்பிடிப்பாய் கட்டாயம் நமது கிராமங்கள் இன்னமும்  இருந்து கொண்டுதான் இருக்கின்றன.  அங்கு செய்யுங்கள். எதுவுமே செய்ய இயலாது என்றால்  குறைந்த பட்சம் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.
முடிந்தவர்கள் செய்யட்டும்.முடியாதவர்கள் உதவட்டும்.

ஒன்று ஒன்றாய் தான்  நூறு.
சிறு துளி  பெரு  வெள்ளம்.
சிறு விதை பெரு விருட்சம் !!!

தனிமரமும்  தோப்பாகும்  நண்பர்களே நாம் மனது வைத்தால்  !!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!


Monday, October 8, 2012

மறைந்து விட்ட திண்ணைகள் !!!

                                        திண்ணைக்கும் நமக்குமான தொடர்பு அலாதியானது.   வீட்டின் எத்தனையோ இடங்கள் நமக்கு  பிடித்தமான ஒன்றாக இருந்த போதிலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் எதோ ஒருவிதமான நெருக்கத்தை , அன்யோன்யத்தை  தந்திருக்கும் இந்த திண்ணைகள்.
சிறுவயதில் வெளியில் விளையாடி விட்டு தாமதமாய் வீடு திரும்பும் போதோ, அல்லது அனுமதி இல்லாமல்  பஞ்சாயத்து டி.வியில் படம் பார்த்துவிட்டு, தாமதமாய்  ஒருவித கலக்கமான மனநிலையில் வீடு திரும்பும் போதோ  வீட்டின் நிலவரத்தை நிசப்தத்தின் வாயிலாக  அறிவிப்பது   இந்த  திண்ணைகள் தாம்.
                          
ரேங்க் கார்டை அப்பாவிடம் கொடுத்துவிட்டு   நேர்கொண்டு பேச இயலாமல் தவித்த எத்தனையோ பொழுதுகளில் தாய்க்கோழியாய்  அடைகாத்த  அந்த தூண்களும்,  போட்டி போட்டு கொண்டு சுண்ணாம்பு அடித்த தூண்களில் கிறுக்கிய பெயர்களும், பொங்கலன்று புதிதாய் உடுத்திகொள்ளும்  காவி பார்டர்களும்,    திண்ணையில் உள்ள உத்திரத்தை எட்டி தொட்டு பார்த்து எனது    உயரத்தை அளந்த விதங்களும்,
 உச்சிவெயிலில் ஊர்சுற்றிவிட்டு வர, மிளகாயும், வற்றலையும் காய  வைத்து விட்டு , வாகாய்  தூணில் சாய்ந்து கொண்டு அம்மாவும், அக்காக்களும் பேசிக்    கொண்டிருக்கும் இடமாய் , கோபம் கொண்ட இரவுகளில் சாப்பிடாமல் வீம்பாய் சுருண்டு    படுத்துக்கொள்ளும் இடமாய்,  விடுமுறை நாட்களின் உச்சி வெயில் போதுகளில் தாயமோ, பரமபதமோ  விளையாடும்  இடமாய், யாருமற்ற  தனிமையில் மல்லாந்து  படுத்து ஓடுகளையும், குறுக்கு சட்டங்களையும் எண்ணிக்கொண்டு இருக்கும் இடமாய்  இருந்தது இந்த திண்ணைகள் தாம். 

படம் பார்க்கவோ, ஆற்றில் குளிப்பதற்கோ அனுமதி கிடைத்த   சந்தோஷத்தில்  துள்ளி குதித்து கொண்டு வெளி வரும் போது  எனக்கு சொல்லப்பட்டு கொண்டிருக்கும் நிபந்தனைகளின்  கடைசி  வார்த்தைகளின் சாட்சியாக நின்றவை  இந்த தூண்களும், திண்ணைகளும்  தான் .

வெவ்வேறு கால உருமாற்றங்களின் சாட்சியான திண்ணை   தாழ்வாரமாகி, பிறகு மரச்சட்டமிடப்பட்ட தட்டிக்குள்  அடைந்து, இன்று வழக்கொழிந்து போய்விட்டன.

விருந்தோம்பலின் அடையாளமாய் ஒரு காலத்தில் திகழ்ந்த இந்த திண்ணைகள் இன்று நமது நினைவுகளிலும், புகைப்படங்களிலும் மட்டுமே இருக்கின்றன,                        
கால எந்திரம் சுழற்றிய சுழற்சிகளின் மௌன சாட்சியாய் !!!


வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!! 








Thursday, September 13, 2012

கசாபை தூக்கிலிட வேண்டாம்!!!

                                                            கசாபை தூக்கிலிட வேண்டாம்.  அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டான்? மூளைசலவை செய்யப்பட அவனும் அவன் கூட்டாளிகளும்  இயந்திர துப்பாக்கியால் குழந்தைகள் , பெண்கள் என்ற வேறுபாடின்றி கொஞ்சமே கொஞ்சமாக 166 பேரை குருவி சுடுவது போல சுட்டுக்கொன்றான்  அவ்வளவே !!! இது  என்ன மரண தண்டனை தரக்கூடிய அளவுக்கு கொடிய குற்றமா என்ன? அப்படியே இருந்தாலும் "கண்ணுக்கு கண்"  "பல்லுக்கு பல்" என்பது காட்டு மிராண்டிகளின் சட்டம். நாகரீக வளர்ச்சியில் நாம் எவ்வளவு முன்னேறி விட்டோம்.
"கொலைக்கு இன்னொரு கொலை நியாயமாகிவிடாது "

உண்மைதான். இத்தகைய கொடூர கொலைகளுக்கு  சாதாரணமாக வழங்கப்படும் மரணதண்டனை போதாது  மாறாக அணுஅணுவாய்  அவனை சித்திரவதை செய்து வெட்டி கொல்ல வேண்டும் .

கசாபுக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தவுடன், மரண தண்டனைக்கு எதிராக  சிலர் பேசுவது என்னவோ அவர்கள் மட்டும் தான் நாகரீகத்தின் விளைவாக மிகவும் பண்பட்டவர்கள் போலும், இதை ஆதரிப்பவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் போலும் ஒரு மாயை உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது சமூக வலைதளங்களில்.

எவ்வளவு திமிரும், அரக்கத்தனமும் இருந்தால் எதிரி நாட்டின் வர்த்த தலைநகரில்  நுழைந்து  குழந்தைகள், பெண்கள்  என்ற வேறுபாடின்றி  நூற்றுக் கணக்கில் சுட்டுக்கொல்லுவான் ஒருவன் அந்த  அரக்கனுக்கு  நாம் இரக்கம் காட்ட வேண்டுமாம். நடந்த செயல் ஓர் "அறிவிக்கப்படாத போர்". கொடூரத்தின் உச்சகட்டம். என்ன நடக்கிறது என்று ஆறாம் அறிவு சிந்திக்கப்படும் முன்பே  மூளையை  சிதறடித்தது இந்த பாதகனின் தோட்டாக்கள் தான்.
இது காந்திய தேசமாம் மரண தண்டனை கூடாதாம் , பூக்களை விட மென்மையான குழந்தைகளுக்கு  தோட்டாக்களை  பரிசளித்தவனுக்கு, பூவையா  கொண்டு அர்ச்சிக்க வேண்டும்!! என்ன ஒரு அபத்தம் !

நம்மிடம்  உள்ள  மனிதாபிமானம் உணர்ச்சிவேகத்தில் தன்னிலை மறந்து தவறிழைத்தவர்களுக்கு வேண்டுமானால் கருணை  காட்டலாம். ஆனால் கொல்லப்படுவோம் என்று தெரிந்தே, மனது முழுக்க வன்மத்தோடும்  , வெறியோடும் வந்த இவனுக்கு தண்டனை குறைப்பு  என்ற கூப்பாடு எதற்கு ? ஆயுள் தண்டனையாக்கினால் மட்டும் இவன் திருந்தி விடுவானா  என்ன ?  எத்தனை பேரின் கனவுகளை சிதறடித்தான், எத்தனை குடும்பங்கள் தங்கள்  வாழ்வாதாரத்தின் அடிப்படையான அப்பாவையோ, அம்மாவையோ , அண்ணனையோ, அக்காவையோ இழந்து விட்டு  நிர்க்கதியாய் நிற்கின்றன ?  அந்த  குடும்பங்களுக்கு  நாம் தரும் பதில் என்ன?

 பொக்கேவுடன்  விருந்திற்கு வந்தவர்களுக்கு நாம் மரணதண்டனை வழங்கவில்லை . மாறாக நம்மீது படையெடுத்து வந்தவர்களுக்குதான்  ஆம் இதுவும் ஒருவகையான  படையெடுப்புதான்!  இந்த தண்டனை.  போர்க்களத்தில் மட்டும் நம் வீரர்கள் என்ன பூவா பறிக்கப்போகிறார்கள் ? அங்கும் உயிர் தானே பலியிடப்படுகிறது. பின் என்ன ? போரிலாவது யுத்த தர்மத்தை எதிர்பார்க்கலாம். மும்பையில் நடந்தது அதற்கும் குறைவானதுதானே .இத்தண்டனை  தேவை இல்லை என்றால்  காந்தீய தேசத்திற்கு படை எதற்கு? படைக்கலங்கள் எதற்கு ? அக்னி , ப்ரமோஸ் என்று  ஒவ்வொரு  பரிசோதனையின்   வெற்றின் போது நாம் மயிர் கூச்செறிய முஷ்டி  மடக்கி பெருமிதம் அடைவது  ஏன் ?

உயிரின் மதிப்பு தெரிந்தவர்களுக்கு, மனிதர்களுக்கு வேண்டுமானால் கருணை காட்டலாம். ஆனால் சில மாக்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மொழியில் பதில் பேசுவதே பொருத்தமாயிருக்கும். அந்த மொழிதான் "மரணம் "   அது போரிலாவது இல்லை தண்டனையிலாவது  .
  உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த பின்னும்  இன்னும் மறுமுறையீட்டு மனு (review petition)  தீர்வு மனு (curative petition), கடைசியாக கருணை மனு (mercy petition) எல்லாம் போட்டு (கூடவே பிரியாணியும் போட்டு) சிலபல அரசியல் சித்து விளையாட்டு விளையாடி கடைசியிலாவது  கசாபுக்கு  மரண தண்டனையை  தருவதே இதில் இறந்த அப்பாவிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் . இல்லாவிட்டால் அவர்களின்  ஆன்மா  நம்மை மன்னிக்கவே மன்னிக்காது .   நினைவில் கொள்ளுங்கள் 
"தாமதமாக கிடைக்கும் நீதியும் ஒரு வகையான அநீதியே".

இதையெல்லாம் விட்டுவிட்டு   "கொலைக்கு இன்னொரு கொலை நியாயமாகிவிடாது " இது காட்டு மிராண்டித்தனம், இப்படி செய்பவர்கள் காட்டுமிராண்டிகள் என்றால்  நான் எப்பொழுதும் காட்டுமிராண்டியாக,  வெறி பிடித்த காட்டுமிரண்டியாகவே  இருக்க விரும்புகிறேன் இத்தகைய  வெறி   பிடித்த மனித மிருகங்களுக்கு !!!!!!!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!! 




Tuesday, July 31, 2012

கரைமேல் பிறக்க வைத்தான் ...

"சங்கறுப்பதெங்கள் குலம்என்று பெருமையாக  பாடப்பட்ட பரதவரின் சங்கு தான்  இன்று இனவெறி பிடித்த சிங்கள நாய்களால் அறுக்கப்படுகின்றன.
போராட்டமே வாழ்க்கையாகிப் போன நம் மீனவர்களுக்கு, கடலோரப் பாதுகாப்பு என்ற  பெயரில் சிங்கள கடலோர காவற்படையால் அனுதினமும் சித்திரவதைக்கோ, உளவியல் ரீதியாக  துன்புறுத்தப்பட்டோதான்   இந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள் . தினமும் மீன்பிடி வலைகள்  அறுபட்டோ, படகுகள் சேதப்படுதப்பட்டோ, உடமைகள் இழக்கப்பட்டோ சமயங்களில் உயிர் இழக்கப்பட்டோதான் மீனவர்களின் பிழைப்பு நடைபெறுகிறது. அதுவும் தமிழன்  ரத்தத்தை  குடிப்பதில் சிங்கள தோட்டாக்களுக்கு ஒரு அலாதி பிரியம்.
"சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்"
என்ற முண்டாசுக்கவியின் கனவு நம் தமிழனின் சவங்களின் மேல்தான் அமையும் போலிருக்கிறது.

 பிழைப்பு சம்மந்தமாக ஒரு ஒப்பீடு செய்து பாருங்கள் நமக்கும் அவர்களுக்கும் உள்ள மலையளவு வித்தியாசம் புரியும்

  • அனுதினமும் உருமாறும் குணாதிசயங்களை கொண்டது இல்லை நமது  பிழைப்புக்கான தளம்.
  • நமது  மனதைரியமும், வாழ்வாதரத்திற்கான  அடிப்படையும் தினமும் சோதிக்கப்படுவது இல்லை.
  • உழைப்பின் அளவுகோலை தவிர்த்துவிட்டுநமது  அதிர்ஷ்டத்தை நினைத்து பார்க்கவேண்டிய அவசியம்  இல்லை .
  • எல்லாவற்றிற்கும்  மேலாக நாம்  துப்பாக்கி முனையிலோ அல்லது எப்போது சுடப்படுவோம் என்று தெரியாமலோ வேலை பார்ப்பது இல்லை.
 
வெறுங்கையுடன்  உடலும் மனமும் வெறுத்து , உயிர் மீண்டுகரை திரும்புவது என்பது   எவ்வளவு கொடுமையான நிகழ்வு. இதே போன்ற நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்ந்தன என்ற நிலை மாறி அனுதினமும் அவர்களை சாகடிப்பது போன்றதொரு நிலை வருவதற்கு மிக முக்கியமான காரணம் நமது அரசாங்கமும் அதன் மெத்தன போக்கும்தான்.  இதில் கட்சி பாகுபாடு எல்லாம் கிடையாது. எத்தனை பேரை சிறை பிடித்து சென்றாலும் அல்லது சுட்டு கொன்றாலும்  நமது அரசாங்கத்தின் அதிகபட்ச செயலாக்கம்  நமது நடுவண் அரசுக்கு ஒரு கடிதம் எழுதுவது, அல்லது காதலியுடன் உரையாடுவது போல தொலைபேசியில் கதைப்பது.  இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நம்மளை இப்படி  ஏமாற்றிக்கொண்டு இருக்கப்போகிறார்களோ  தெரியவில்லை? இதை எல்லாம் கேட்கிற நமக்கே இவ்வளவு வேகம் வருகிறதென்றால் பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு ஆற்றாமையினாலும்,இயலாமையால் வருகிற  கோபம்  எப்படி இருக்கும்? அந்த உணர்ச்சிகள்  எங்கனம் வெளிப்படும்?

இதெல்லாம் நமக்கு தொலைக்கட்சிகளிலோ அல்லது செய்தித்தாள்களிலோ வருகிற ஒரு செய்தி.இதில் நாமா  பாதிக்கப்படுகிறோம்எங்கோ ஒரு மூலையில் அழுகுரல் கேட்கும் அதுவும் சவலை பிள்ளையின்  அழுகுரல் போல . இதற்கெல்லாமா நாம் கவலைப்படுவது!!! நாம் கவலைப்படுவதற்கு  எத்தனையோ விஷயங்கள் ,
குஷ்புவின் இடுப்பை கிள்ளியது யார்நித்தியானந்தாவின் சிஷ்யையா கவுசல்யா? மகத் எனக்கு தம்பி மாதிரி டாப்சி  பேட்டி !!!

அடுத்தடுத்து நம்மளை சந்தோஷப்படுத்த நித்தியானந்தா சி.டி யோ அல்லது ஒரு நடிகையின் ஆபாச  சி.டி யோ வந்து சேரும். அந்த  சி.டி உண்மையா பொய்யா? என்று நீயா? நானா ?அளவுக்கு விவாதம் நடைபெறும்... ஏன்னா நம்மள யாரும் ஏமாத்திடக்கூடது இல்ல!!!.
 இவை எல்லாமே   நான்கு  நாட்களுக்குத்தான்.அதற்கப்புறம் அம்மணமாய் சி.டி யில்  இருந்தவன் வந்து அருள்வாக்கு சொல்வான் .அதற்கும் கூட்டம் கூடும் ஏனென்றால் மறதிதான்  நமது தேசிய சொத்தாயிற்றே !!!. 

"கடாரம் , ஸ்ரீ விஜயமும் கொண்டு" கீழ்த்திசை கடல்  முழுவதும் கோலோச்சிய பண்டைய தமிழனின்  வீரமும், விவேகமும் இன்று இத்தாலி நாட்டுக்காரியின் கண்ணசைவுக்கு காத்து இருக்கின்றன.

நமது மீனவர்களுக்கு   தொழில் ரீதியான வசதிகளை அதிகப் படுத்தி, மாநில அரசின் மூலம் அதிகப்படியான  அழுத்தத்தை  நடுவண் அரசிற்கு  கொடுத்து, "சீக்கியனின் மயிரை  விட தமிழ் மீனவனின் உயிர் மலிவானதல்ல" என்ற நிலையை உருவாக்காவிட்டால்   இத்துயரங்களுக்கு விடிவு கிடையாது.

தமிழ் மீனவரின் துயரை தீர்க்காமல்நாம் சாப்பிடும் மீன்கள் எல்லாம் கறை  படிந்த மீன்கள் .. ஆம்  நம் "தமிழ் மீனவர்களின் ரத்தக்கறை படிந்த மீன்கள்".!!!


வாழ்க வளமுடன்!!!  தமிழ் தந்த புகழுடன் !!!