Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts

Thursday, January 30, 2014

அம்மாவின் பிறந்தநாள் !

"அம்மா"  மூன்றெழுத்து  கவிதை 
ஒரு வார்த்தை அத்தியாயம் 
வரையரைக்குள் அடக்க இயலா பேரன்பு 
உயிரெழுத்தும்  மெய்யெழுத்தும் சேர்ந்து
உயிர் மெய்யாய் நம்முன் நடமாடும் தெய்வம்.

இன்னும் அடுக்கிக்கொண்டே   போகலாம் அம்மாவின் அருமைகளை. என் அம்மாவும் அப்படிப்பட்ட ஒரு தெய்வம்தான்.வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொடுத்தவர். கடுமுகமோ சுடுசொல்லோ காட்டாதவர்.பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஒரு  ஜீவன். எவ்வளவோ செய்ய நினைத்து செய்தாலும் அவை அனைத்தும் அம்மாவின் அன்புக்கு முன்னால்  சிறியதாகவே பட்டது .

அம்மாவின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்படி ஒன்று செய்ய வேண்டுமென நினைத்தேன். கடவுளின் ஆசிர்வாதமாக நான் கருதும் எனது நண்பர்களின் உதவியுடன் சிறப்பாக நடந்தேறியது அது அம்மாவின் பிறந்தநாள்  கொண்டாட்டம், அம்மாவின்  இந்த வருட பிறந்தநாள் வார விடுமுறையான   வெள்ளிக்கிழமையன்று வர, 

எனது நண்பர்கள் அனைவரிடமும்  இதனை சர்ப்ரைஸாக கொண்டாட வேண்டுமென கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டேன்.வெகு சாதாரணமாக தொடங்கிய அந்த நாளில் ,இன்று  அம்மாவின் பிறந்தநாள் என அப்பா நினைவூட்ட, நானோ எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வாழ்த்துகளை கூறிவிட்டு அமைதியாக இருந்து விட்டேன். 

பக்கத்து வீடும் எனது நண்பனின் வீடாகிப் போனதால், அனைத்து நண்பர்களையும் அங்கு வரவழைத்து விட , அவர்கள்  வீடு முழுவதையும் அலங்கரித்து  அசத்திகொண்டு இருக்க, நானோ மதியம் லஞ்சுக்கு வெளியில் போகலாம் என்று சொல்லிவிட்டு அவ்வப்போது பக்கத்து வீடு சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.  

எல்லாம் தயாராகி விட்டது, வீட்டை  நன்றாய் அலங்கரித்து, கேக்கில் மெழுவர்த்தி  எல்லாம் ரெடியாய் வைத்து விட்டு அம்மாவை அழைத்து வர சென்றேன். குடும்பத்துடன் அனைவரும் வெளிவருகையில், அம்மாவிடம்  எதார்த்தமாய் நண்பனது பக்கத்து  வீட்டில் சொல்லிவிட்டு போகலாம் என்று அம்மாவையே கதவை திறக்க சொல்ல  ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் பூம். பிறந்தநாள் வாழ்த்துப்பாடலை நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாட, அம்மாவோ ஆச்சர்யம் மற்றும் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போய்விட  நெகிழ்ச்சியாய் என் கையைப்  பிடித்துக் கொண்டார்கள் . பிறகு கேக் வெட்டி, மதிய சாப்பாட்டுடன் இனிமையாக முடிந்தது கொண்டாட்டம்.

அன்று முழுவதும் ஆச்சர்யமும்,மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தியது  அம்மாவின் முகம். அப்படி ஒரு மனம்  கொள்ளா  மகிழ்ச்சி என் அம்மாவின் முகத்தில்,  ஊரில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டார்கள். அவ்வளவு சந்தோஷம்  அவர்களுக்கு. பார்க்க நிறைவாக இருந்தது எனக்கு .

மூன்றாவது பத்தியின் ஆரம்பத்தில் சொன்னது நிறைவேறியது போன்ற எண்ணம் வந்தது  எனக்கு!! உங்களுக்கு ?

டிஸ்கி 1:  நம்ம கோவை நேரம் எழுதிய  இந்த பதிவும் ஒரு காரணம்.

மலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.


டிஸ்கி 2 : முகநூலில் இதனை பகிர்ந்த போது என்   நண்பன் ஒருவன் தானும் இது  போல செய்ய வேண்டும் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பதிவினால் எங்கோ இருக்கும் யாரோ ஒருவரின் அம்மாவின் முகத்தில் சந்தோஷம் கிடைப்பின் அது  இந்த பதிவுக்கு கிடைத்த பெரிய வெகுமதியாக கருதுகிறேன்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Sunday, May 19, 2013

மனதைப் பிசையும் சில விடை தெரியா கேள்விகள்!!


குல்மொஹர் மரம். பூக்கும்  பருவத்தில் இலை  எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு வெறும் பூக்களுடன் மட்டுமே தனக்கான  சகவாசம் என்பதாய் நினைத்துக் கொண்டு இருக்குமே அந்த மரம்தான். அந்த பூக்கள் பூப்பது, பின்  நிறம் மாறுவது  எல்லாமே அழகுதான். முதலில் அடர் சிவப்பாய் கூடவே பச்சையான சில மொட்டுகளுடன், பின் அந்த மொட்டுகளும் பூவாகி,  பின் மெல்ல நிறமிழந்து ஆரஞ்சு சிவப்பாய் கடைசியில் மஞ்சளாய், பிறகு வெளிர் மஞ்சளாய் மாறுவது வெகு அழகு.

எனது அலுவலகத்தின் முன் உள்ள சாலையில் இந்த மரங்கள் வரிசையாக நடப்பட்டு இருக்கும். பூத்து இருக்கும் அவற்றை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பார் அந்த ஓட்டுனர். யாரையோ  இறக்கி விட்டுவிட்டு அவர்களின் வருகைக்காக வண்டியிலேயே காத்துக் கொண்டிருந்தார் ஒரு குல்மொஹர்  மர  நிழலின் கீழ். வெகுநேரம் காத்துக் கொண்டிருப்பார் போல, அவ்வப்போது கீழிறங்குவதும், அலைபேசியில் பேசுவதுமாக இருந்தார்.

சட்டென்று வந்து நின்றது துபாயின் போலிஸ் வாகனம். வரிசையாக அங்கு சாலையை ஒட்டி நிறுத்தி இருந்த வாகனங்களுக்கு அபராதம் எழுதியவர். தொடர்ச்சியாய் இந்த வண்டிக்கும் எழுத, பதறிப்போன அந்த பெரியவர் கீழிறங்கி அந்த போலீசிடம் மன்றாட, எதையும் பொருட்படுத்தாத  அந்த போலிஸ், அபராதம் எழுதி நீட்ட, சட்டென்று அந்த பெரியவர் அந்த போலிஸின் காலில் விழுந்து விட்டார்.

சகலமும் ஆடிப் போய்விட்டது எனக்கு. அதுவரை சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, மனதில் பெரிய பாராங்கல்லை வைத்தது  போலாகிவிட்டது. என் தந்தை வயதிருக்கலாம் அவருக்கு . 
பிழைப்புக்கு வழி தேடி வந்த வெளிநாட்டில், தன்மானத்தை விட்டு தன் மகன் வயதே உடைய ஒருவரிடம், காலில் விழ வேண்டிய நிர்பந்தம் என்னவாயிருக்கும்?   எது அவ்வாறு  செய்யத்தூண்டி  இருக்கும்? அந்த நாளின் இரவுப் பொழுது எவ்வாறு இருந்திருக்கும் அவருக்கு? இது போன்ற விடை தெரியாக்  கேள்விகள் மனதை பிசைந்து  கொண்டே இருந்தன.

இருக்கலாம் கல்யாண வயதில் உள்ள மகளுக்கு சேர்க்க வேண்டிய பணமாகவோ  , இல்லை அவர்களது கல்விக் கட்டணமாகவோ , இல்லை குடும்பத்தின் மருத்துவ செலவாகவோ, இல்லையேல் அந்த குடும்பத்தின் உணவாகவோ மாற  இருந்திருக்கலாம் அந்த பணம்.

நன்றாகத்தான் போகிறது வாழ்கை. மனதை பிசையும் சில  விடை தெரியா  கேள்விகள் தோன்றாத வரை. 

அழகாய் பூத்ததுதான் இருக்கிறது அந்த குல்மொஹர் மரம். ஆனால் எனக்குத்தான் ரசிக்க மனமில்லை.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!










  

Tuesday, May 7, 2013

படிப்பது ஒரு பாவச்செயலா ??

பள்ளிக்கூடத்துல நல்ல விஷயம் எதுலயும் நம்ம பேர் வந்ததா வரலாறு,புவியியல் எதுவும் கிடையாது. நம்மளுக்கு சீனியரா ஒரு அண்ணன் இருந்தார். சீனியர்ன்னா ஒவ்வொரு வகுப்பிலும் ரெண்டு வருசமா படிச்சு அஸ்திவாரத்தை ரொம்ப பலமா போட்டுகிட்டு இருந்தார். அவருக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை "படிப்பு "

அண்ணன் படிப்பைத் தவிர மற்ற விஷயத்துல ரொம்ப கெட்டி. எந்த வாத்தியார்  இன்னைக்கு லீவுங்கிறதுல ஆரம்பிச்சு, என்னைக்கு   சத்துணவுல முட்டை போடுறாங்க  வரைக்கும்  அத்துபடி.

எங்களோட அறிவியல் வாத்தியார்  யாரையாவது ஒருத்தனை வாசிக்கச் சொல்லிட்டு நல்ல தூங்கி  பொழுதை போக்குவார். அந்த மாதிரி சமயங்களில் நம்ம அண்ணன் தான் கைகால் புடிச்சு விடுவார். குருபக்தின்னா அப்புடி ஒரு குருபக்தி ஹி ஹி .

தூக்கம் வராத நேரத்துல  அவர்  வகுப்பும் எடுப்பார் . இடையில ஏதாவது பேசினா,சேட்டை செய்தா அடி வெளுத்து விட்டுடுவார். பள்ளிக்கூடமே அவருக்கு பயப்படும்.ஒருநாள் வகுப்புக்கு வந்த அவர் நம்ம அண்ணனை பார்த்து, புத்தகத்தை எடுத்து வாசிக்க சொல்ல, அவன் அங்கும் இங்குமா புத்தகத்தை தேட, புத்தகம் எடுத்துட்டு வரலைன்னு அடி பிரிச்சுட்டாரு.

 அடுத்த நாள் வகுப்புக்கு வந்தவர், என்னடா இன்னைக்கு புத்தகம் கொண்டு வந்தியான்னு கேட்டுட்டு, அவனிடமிருந்தே  புத்தகத்தை வாங்கி வகுப்பெடுக்க, திடீரென சாமி வந்தவர் போல ஆவேசம் கொண்டு நம்ம அண்ணனை அடி வெளு வெளுன்னு வெளுத்துட்டார். அதுமட்டுமில்லாமல் ஸ்டாப் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டு ஒரு அடிமை சிக்கிட்டான்னு சொல்லி  ரெண்டு மூணு வாத்தியார்கிட்ட கூடுதலா அடி கொடுத்து  அனுப்பி வைச்சாரு.

 கண்ணீர்க் கரையோட அழுதுகிட்டே வந்தவனிடம் என்னாச்சு ? எதுக்கு உன்னைய அடிச்சாங்கன்னு கேட்டதுக்கு,  அவன்  புத்தகத்தோட கடைசி பக்க  அட்டையை காமிச்சான். அதுல  இப்படி  திருத்தம் பண்ணி   வைச்சிருந்தான் பாவிப்பய..

 படிப்பது
தீண்டாமை ஒரு பாவச் செயல்.
பள்ளிசெல்வது
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.
 பரீட்சை வைப்பது
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.
 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் ..






Tuesday, August 28, 2012

அக்காவை அதிகம் பிடித்த நாட்கள் !!!


                                                உனக்கு நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை  ஆனால் எனக்கு நன்கு நினைவில் உள்ளது நீ சிறுவயதில்  கைகளில் பிரில் வைத்த ரோஸ் கலர் பாவாடை சட்டை அணிந்து   வளைய வந்த நாட்கள்.   நீ வாசலில் கூட்டி  பெருக்கி கோலம் போட எத்தனிக்கையில் அதற்கு  இடைஞ்சலாக மட்டுமே நானிருப்பேன் உன்னை பெருக்க விடாமல் உன் கழுத்தை கட்டிக்கொண்டோ அல்லது  நீ கோலம் போட வைக்கும் புள்ளிகளுக்கு இணையாக நானும் எதாவது புள்ளிகளை வைத்துக்கொண்டோ இருப்பேன்.

உன் வயதையொத்த தோழிகள் என்னை ஏதாவது சொன்னாலும் அதை சிரித்துக் கொண்டே தவிர்த்துவிட்டு "என் தம்பி " இவன் என்ற வாத்சல்யத்தோடு  பார்ப்பாய் என்னை .    எவ்வளவு தான் உன்னை தொந்தரவு செய்தாலும் அம்மா இவனைப் பாருங்கம்மா என்றதொரு செல்ல சிணுங்கலுடன் நிறுத்தி விடுவாய் !!! அந்த சிணுங்கலுக்காகவே  உன்னை மீண்டும் மீண்டும் சீண்டுவேன் நான்.

                                                          பள்ளியில் இருந்து நீ நடந்து வந்ததால் கால் வலிக்கிறது என்றவுடன் தினமும் உன்னை தூக்கி கொண்டு போய் விட்டுவிட்டு  வந்த தாத்தாவும், என் பேத்தி ,என் பேத்தி  என எங்கு போனாலும் உன்னை கூட்டி திரிந்த ஆயாவும் , மகளுக்கென்று அப்பாவால்  ஸ்பெஷலாக வாங்கி வரப்படும் கோலாலம்பூர் லக்ஸ் சோப்பும் , டீச்சர் ஒருமுறை உன்னை கிள்ளியதால் அந்த டீச்சருடன் சண்டைக்கு போன அம்மாவும்  என எல்லோருக்கும்   செல்லமாக நீ இருந்தாலும், உனக்கு செல்லமாக நான்தான்  இருந்தேன்.


பள்ளிகளில் நல்லவை  எல்லாவற்றிற்கும் முன்னுதாரணம் நீயாகத்தான் இருப்பாய். நான் உனக்கு நேரெதிர் . பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி, நான் எந்த தப்பு செய்தாலும் அது உன்னையே சுட்டும். எல்லாவற்றிர்க்கும் நீதான்  நீதிபதி அது பெரும்பாலும் என்னை காப்பதாகவே இருக்கும்.

பத்தாவதில் கணக்கில் எனக்கு  சென்டம் வருமென்று கணித்தது தவறாய் போக, அதை ஏற்றுக்கொள்ள இயலாத நீ சிறுபிள்ளை போல அழுததை நினைத்து  நான் மனங்கசிந்த நாட்கள் ...
திருமணம் முடிந்து கணவன் வீடு செல்கையில் துணைக்கு யாரை அனுப்பலாம் என்று பேசுகையில், இடைபுகுந்த நீ தம்பியை அனுப்புங்கள் அவன் பார்த்து கொள்வான் என்று எனக்கே இல்லாத ஆளுமையை,               தன்னம்பிக்கையை நீ ஊட்டிய நாள் ...

சென்னையில் இருந்து கொண்டு வாரம் ஒருமுறைகூட உங்களால் வந்து போக முடியாதோ என்று ஆதங்கப்பட்ட நாள்... நீ கர்ப்பம் தரித்த காலத்தில் வந்த டைபாயிடும், உன்னை அழைத்து செல்ல அம்மா அப்பா வந்த போதும் நீயும் வாயேண்டா  என்று உன் கண்கள் உரைத்ததை  உணர்ந்து செங்கல்பட்டு  ரயில் நிலையத்தில் நீ ஊருக்கு செல்லும் நாளில் வந்ததும், நானும் உன்னுடன்  ஊருக்குதான் வருகிறேன் என்று நீ  அறிந்தவுடன் உன் விழிகளில் கண்ணீர்  துளிர்த்த நாட்களும் .....   

ஸ்லேட்டு குச்சி முதல் பாரின் சாக்லேட் வரை உனக்கான  பங்கை எனக்கு  விட்டு தந்திருக்கிறாய் . ஆனால்  நான் மட்டும் நமது அம்மாவின் பாசத்தில் உனக்குரிய பங்கை விட்டு தரவே இல்லை .  அது எல்லாம் எனக்கு மட்டுமே வேண்டும் என்று  சுயநலமாக நடந்து கொண்ட பின்னும் , என்றும் மாறா  அதே புன்னகையுடன் நீ சிரித்த நாட்கள், நீ எல்லாமுமானவள் என்பதை எனக்கு உணர்த்திய நாட்கள் !!!

அக்காக்கள் இன்னொரு அம்மாக்கள் !!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன்!!!





Wednesday, August 8, 2012

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க !!!


திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற  கூட்டம் வேடிக்கை தான்  பார்க்குது. இதை நிரூபிப்பது போல ரெண்டு சம்பவம் நடந்தது,
சம்பவம் #1
போன வாரத்துல என்னோட  நண்பனிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதாவது அவர்  லண்டனுக்கு   ஒரு வேலை விஷயமா போனப்ப  அங்க எதோ ஒரு  பிரச்சினையில மாட்டிகிட்டதாகவும், அதை தீர்க்க ஒரு ரெண்டு லட்சம் அனுப்ப சொல்லி இருந்தான் . உன்கிட்ட அவ்வளவு  பணம் இல்லாட்டி பரவாயில்ல உன்கிட்ட எவ்வளோ இருக்கோ அதை அனுப்பு. மீதிய நான் மத்த நண்பர்களிடம் இருந்து வாங்கிக்கிறேன். உன் பணத்த ஊருக்கு வந்த உடனே  எப்படியாவது திருப்பி தந்துடுறேன்னு  உறுதிமொழி வேற.லண்டன்ல ஒரு தெளிவான முகவரி மட்டும் இருந்தது ஆனால் அலைபேசி எண் எதுவும் இல்லை. எனக்கு  கொஞ்சம் சந்தேகம் வர   அவனோட துபாய் அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்ட போது சாட்சாத் அவனே எடுத்து பேசினான். அவனோட மின்னஞ்சலை யாரோ ஹாக் செய்து விட்டதாகவும், இதே போன்ற பல மின்னஞ்சல்களை பலருக்கும் அனுப்பி விட்டதாகவும்  கூறினான். அப்போது அவன் கேட்டான் மச்சான் உனக்கு சந்தேகம் எப்படி வந்ததுன்னு? கடுப்பில் இருந்த நான் கூறினேன் “தக்காளி இந்த மூஞ்சி எல்லாம் போற அளவுக்கு லண்டன் ஒன்னும் அவ்வளவு மோசமாகலைன்னு”

சம்பவம் #2
நண்பன் ஒருவனை வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். ரொம்ப மும்முரமாக வேலை தேடிக்கொண்டிருந்தான். பாரபட்சமில்லாமல் கிடைக்கும் எல்லா  நாடுகளுக்கும், எல்லாவிதமான வேலைக்கும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் மிகவும் சந்தோஷமாக பேசினான். மச்சான் லண்டன்ல ஒரு வேலை கிடைச்சிருக்கு, நியமனக் கடிதம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைப்பதாகவும் கூறினான். மாத சம்பளம் 8000 பவுண்டு கிடைக்கும் என்றும் கூறினான். ரெண்டு நாள் கழித்து ஒரு நியமனக் கடிதத்தை எனக்கு அனுப்பி இருந்தான். அதில் கூறப்படாத சலுகைகளே இல்லை எனலாம். நின்னா பவுண்டு, நடந்தா பவுண்டுதான். அப்புறமா உங்களோட சான்றிதழ், கடவுச்சீட்டு நகல் எல்லாம் அனுப்ப சொல்லி இருந்தாங்க. எங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் எல்லாமே நகல்தானே கேட்கிறான்னு அதையும் அனுப்பினான்.
அப்புறம் கேட்டான் பாருங்க உங்களுக்கு விசா  எடுக்கனும். தங்குமிடம் ஏற்பாடு செய்யனும், டவுசர கழட்டனும் அப்படி இப்படின்னு சொல்லி கொஞ்சமே கொஞ்சமா ஒரு 1000 பவுண்டு கேட்டுட்டு, அடைப்பு குறிக்குள்ள இதையும் நீங்க இங்க வந்த உடனே  திரும்ப வாங்கிக்கலாம்ன்னு சொல்லி, ஒரு வங்கி கணக்கு எண் அனுப்பி அவனொரு திருட்டுபயல் என்பதை உறுதி செய்து இருந்தான்.  கடுப்பான நண்பன் அவனை திட்டி  எவ்வளவு கெட்ட வார்த்தை கொண்டு எழுத முடியுமோ அவ்வளவையும் எழுதி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான்.


அந்த திட்டுதலின் ஆரம்பம் மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த அவனுடைய கொள்ளு பாட்டியில் நடத்தையில் சந்தேகப்படுவதில் இருந்து ஆரம்பித்து இருந்தது!!! 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Monday, May 28, 2012

நாங்க அப்பவே அப்படி



பொதுவா ஒரு தெரியாத விஷயத்த பத்தி நாம அவ்வளவா பேசவிரும்ப மாட்டோம்.அப்பிடியே பேசினாலும் கொஞ்சம் பட்டும் படாமலும் பேசுவோம். ஆனா எத பத்தியும் கொஞ்சம் கூட கண்டுக்காம நம்ம பய புள்ள ஒருத்தன் ஆங்கிலம் பேசுவான். நமக்கு தெரியுற கொஞ்சம் நஞ்ச ஆங்கிலமும் மறந்துபோய்ரும்.. அப்பிடி பேசுவான். எப்படின்னா,
I will give yesterday .
You go, I go, touching touching office (நாம அலுவலகத்துல சந்திப்போம்) . 
Project Manager calling Me (உன்னைய டேமேஜர் கூப்பிடுறார்).

அப்படிபட்டவனுக்கு டஃப் குடுக்குற ஒரே ஆளு எங்க ப்ராஜெக்ட் மேனேஜர் தான்… அவரும் அவ்வளவு அழகா ஆங்கிலம் பேசுவார். எதாவது படிக்கும் போது கொஞ்சம் கடினமான ஆங்கில வார்த்தை வந்தால் ப்ளா.. ப்ளா…. அப்படின்னு சொல்லியே காலத்தை ஒட்டுறவர்..

இது எல்லாம் சும்மா ஒரு சாம்பிள் தான். வயிறு வலிக்க சிரித்த அனுபவம் எல்லாம் உண்டு.
ஒரு தடவை எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கையில்  நம்ம கூட வேலை பார்க்கிற ஒரு அமெரிக்கன் அவனும் சாப்பிட வந்தான். வந்தவன் சும்மா இருக்காம இதுதான் பிரியாணியா? நல்ல வாசனையா இருக்கேன்னு சொல்லி அவனும் ஒரு பிரியாணி வாங்கிட்டு வர சொன்னான் அலுவலக பையன்கிட்ட….. அது கூட ப்ளாஸ்டிக் ஸ்பூனும் குடுப்பாங்க.. நம்ம மலையாளி பண்ற  பிரியாணி  ப்ளாஸ்டிக் ஸ்பூனுக்கா மசியும்…. அந்த ஸ்பூன் உடைஞ்சு போச்சு…. அப்பிடியே பாவமா என்னய பார்க்க நானும் அலுவலக பையன்கிட்ட சொல்லி ஸ்பூன் கொண்டு வரச் சொன்னேன். அவன் ஒரு 3- 4 ஸ்பூன கொண்டு வந்த ஒடனே நம்ம அமெரிக்கன் ஒன்ன எடுத்திகிட்டு மீதிய பாக்கெட்டுல எடுத்து வச்சிகிட்டான். இத பார்த்த உடனே நம்மாளு பார்றா எவ்வளவு கன்ஜூஸா இருக்கான்னு சொல்ல, அவனுக்கு எதாவது புரிந்துவிடுமோன்னு நாங்க கொஞ்சம் டரியலாகி எதுவா இருந்தாலும் நம்ம தேசிய மொழியில பேசுன்னு சொல்ல நம்மாளு வேகமா இது ஆங்கிலமா?? இது ஆங்கிலமா?? கேட்டுட்டு, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு  அப்படின்னா அதுக்கு ஸ்பெல்லிங் சொல்லுன்னு சொன்னான் பாருங்க …….

நம்ம அமெரிக்கன்  இருந்த இடம் தெரியாம எந்திரிச்சு போய்ட்டான்.
அதுக்கு அப்புறம் நம்ம கூட பழக்கம் வச்சிக்கிக்க அவன் ஒன்னும்  அவ்வளவு கேனையன் கிடையாது…!!!!!!!!!!!!!

இன்னொரு முறை நம்ம டேமேஜர் கூப்பிட்டு அவங்கிட்ட ரொம்ப சீரியசா பேசிகிட்டு இருந்தார், அவர் தான் இவனுக்கு டஃப் குடுக்குற ஆளாச்சே…… அதா.. அதா.. அப்படின்னு பாதிய அரபி+ பாதி ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னது நமக்கு படியளக்குற மஹராசன் (கிளையன்ட்) ஒரு டாக்டர், அவரு U.S போயி ஏதோ ஆப்பரேஸன் பண்ணி இருக்காரு அவருக்கு ஒரு நல்ல பொக்கே வாங்கி அனுப்பிட்டு வா அப்படின்னு சொல்லிட்டு இது ரொம்ப முக்கியம், உடனே செய் அப்படின்னு வழக்கமான டயலாக விட்டுகிட்டு இருந்தாரு ….. நம்மாளும் உடனே செய்துட்டு வந்துட்டான். கொஞ்ச  நேரம் கழித்து அலுவலகமே இடிந்து  விழுவதை போல நம்ம டேமேஜர் காட்டு கத்தல் கத்திக்கொண்டு இருந்தார். இடி மழை எல்லாம் விட்ட பிறகு நம்மாளு மெதுவாக வெளியில் வந்தான். என்ன ஆச்சு என்றதற்கு, அந்த டாக்டருக்கு ஒரு பொக்கே அனுப்பியது கொஞ்சம் தப்பாயிடுச்சு,

இதுல என்ன பிரச்சினை? அவர்தான அனுப்ப சொன்னார் அப்புறம் என்ன? என்றேன்… இல்லடா மச்சான் அவரு Ph.D படிச்ச டாக்டராம்,  அவரு U.S போயி வேற யாருக்கோ ஆப்பரேஷன் பண்ணலையாம், அவருக்கு தான் ஆப்பரேஷன் பண்ணாங்கலாம்.!!!!!!!  நான் இவரு பெரிய டாக்டர் போல,  ஒரு சவாலான ஆப்பரேஷன் செஞ்சு சாதனை பண்ணி இருக்காருன்னு நெனைச்சு, அந்த பொக்கேவ அனுப்பிச்சுட்டேன்… என்றான்..  நெஞ்சு வலியால U.S போயி ஆப்பரேஸன் பண்ணிக்கிட்டு வந்தவர்க்கு  நம்மாளு அனுப்பின பொக்கேவோட வாசகம் என்ன தெரியுமா???
.
.
.
.
.
.
.
நீங்கள் மென்மேலும் இதே போன்று பல ஆப்பரேஷன்கள்  செய்ய வாழ்த்துகிறோம்………….!!!!!!!!!!!!

வாழ்க வளமுடன்……… தமிழ் தந்த புகழுடன்………………

Wednesday, April 4, 2012

தமிழ் எங்கள் உயிர், ஹிந்தி எங்கள் _ ​ _ _


சென்னைல வேலை பார்க்கும் போது கொஞ்சம் ஹிந்தி பேசும் மக்களும் என்கிட்டே வேலை பார்த்தாங்க, அவங்க கிட்ட பேசும் போது மேல சொன்ன வார்த்தை கூட கடைசில ரைமிங்கா ஒரு வார்த்தைய சேர்த்து பேசுறது ரொம்ப பிரசித்தி !!! 
அப்படி எல்லாம் பேசுனதுக்கு வட்டியும் மொதலுமா துபாய்ல கிடைச்சது பெரிய பெரிய  பல்ப்  ....    

 நான் வேல பார்க்கிற சைட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு ஒரு வண்டி வரும். கொஞ்ச நாள்ல நல்லா இருக்குறியா, என்ன செய்ற அப்படின்னு கொஞ்சம் போல ஹிந்தில பேசுறது... அந்த ஓட்டுனர் அவன் சொந்த கதை அப்படி இப்படின்னு கொஞ்சம் மொக்க போடுவான்...நம்மளுக்கு புரியுதோ இல்லையோ ஆமாம்  போடுறது .... ஒருநாள் காலையில வரும் போது மாப்ள கொஞ்சம் டல்லா வந்தான் ..என்னடா ஆச்சுன்னு கேட்டேன், ஏதோ சொல்ல ஆரம்பிச்சான், அவன் சொன்னதுல நம்மளுக்கு புரிஞ்சது என்னன்னா , நேத்து சாயந்திரம் வேகமா போனேன் கேமரா ,பிளாஷ்  அப்படின்னு ... இது போதாதா  நம்ம   கற்பனை குதிரைய தட்டி அவன் ஒரு கேமரா வாங்கி இருக்கான்னு நெனைச்சுகிட்டு , ஒ அப்படியா .. வெரி குட், என்ன பிராண்ட் , எங்க வாங்கின அப்படின்னு ரொம்ப சந்தோசமா  கேட்க அவன் மூஞ்சி போன போக்க பார்க்கணுமே... சரி எதோ அடிப்படையிலே தப்பு நடந்து இருக்குன்னு  புரிஞ்சுகிட்டு வராத போன அட்டென்ட் பண்றமாதிரி பாவ்லா பண்ணிட்டு வண்டிய விட்டு இறங்கியவுடன் கூட வந்த இன்னொரு பட்டானிடம் கேட்ட போது தான் புரிந்தது அவன் ஓவர் ஸ்பீடில் சென்றதால், ஸ்பீட் கன்ட்ரோல் காமிராவில் அவன் வண்டி பதிவாகி விட்டது [அப்படி பதிவாகும் போது பிளாஷ் வரும் ] அதற்கு அபராதம்  நமது ரூபாய் மதிப்பில்  7500  கட்ட  வேண்டுமாம். அதை சொல்லி அவன் புலம்பும் போது நான் என்னடாவென்றால்   வெரி குட், என்ன பிராண்ட் அப்படி எல்லாம்  கேட்டால் எப்படி இருக்கும் !!!! நல்ல வேளை வேற எதுவும் திட்டாம விட்டானேன்னு நெனைச்சுகிட்டு  நம்மளோட ஹிந்தி புலமைக்கு நானே ஒரு சபாஷ் போட்டுட்டு வேலைய பார்த்தேன்.       

     **********               ****************                  *************               
வேலைக்கு சேர்ந்த  புதுசுல  வர விடுமுறைய கொண்டாட நண்பர்களின்  ரூமுக்கு வரசொல்லி  இருந்தாங்க, எங்கே இருந்து டாக்ஸி எடுக்கணும், எங்க இறங்கனும் எல்லாம் தெளிவா சொல்லி  இருந்தாங்க, கூடவே டாக்ஸி கட்டணம் எவ்வளவு ஆகும்ன்னு சொல்லி இருந்தாங்க, டாக்ஸி- ல பட்டான்  டாக்ஸி ன்னு ஒன்னு இருக்கு, நம்மளுக்கு ரொம்ப பிடிக்காத பக்கத்துக்கு நாட்டுகாரன்  ஓட்டுறது, அதுல மீட்டர் எல்லாம் இருக்காது நம்ம ரேட்  பேசிட்டு ஏறிக்க வேண்டியதுதான், என்ன ரெண்டு வாரம் குளிக்காம மூணு வாரமா தொவைக்காத ட்ரெஸ்ஸ போட்டுட்டு இருப்பான் அத மட்டும் நாம சகிச்சுக்கனும்  மத்தபடி ரேட் கம்மியா இருக்கும்... மொழிதெரியாத நம்மள மாதிரி எவனாவது சிக்குனா அவனுக்கு கொண்டாட்டம்.... இத எல்லாம் நமக்கு சொல்லி குடுத்து, ஒரு  15 இல்ல  20  கேட்பான் ...  அவன் ரேட் கூட  சொன்ன அதிக  பட்சமா   நீ பீஸ் திராம்ன்னு   [20 dhs]  சொல்லிட்டு ஏறிக்க அப்டின்னாங்க..    நானும் ரொம்ப கெத்தா வந்து ஒரு பட்டான் டாக்ஸி காரன்கிட்ட எவ்ளோன்னு கேட்க அவன் பந்த்ரா திராம்ன்னு[15 dhs]   சொல்ல, அவன்  கட்டணத்த அதிகமா சொல்றான்னு நெனைச்சுகிட்டு, இல்ல இல்ல   [20 dhs]     அப்படின்னு நான் சொல்ல அவன் என்னைய மேலயும் கீழயும் பார்த்துட்டு  சரின்னு சொல்லிட்டான்.எறங்க போறப்ப  நீ மதராசியான்னு  கேட்க எனக்கு முகம் கொள்ளா சந்தோசத்தோட [பின்னே திரை கடலோடி திரவியம் தேடுன்னு சும்மாவா  சொன்னான்,, தமிழன் பேர நாட்டிடாண்டா ன்னு நெனைச்சிக்கிட்டு ]  ஆமாம்ன்னு  சொல்லிட்டு   எறங்கிட்டேன்.

வழக்கம் போல கொஞ்ச நேரம் கழிச்சு தான் நம்ம சிறு மூளை வேல செஞ்சது, அவன் அத நக்கலா கேட்ட மாதிரி இருந்துச்சேன்னு நெனைச்சு  நம்ம நம்ம நண்பர்கள் கிட்ட கேட்ட போதுதான் விஷயமே தெரிஞ்சது.. அவன் கொறச்சு கேட்டு நான் கூட குடுத்ததும்..    அப்புறம் முக்கியமா நம்ம  நாட்டுலேர்ந்து  ஒருத்தன் ஹிந்தி தெரியாம வர்ரான்ன அது ஒரு தமிழனா தான் இருப்பான்றதும்.. !!!!!!!!! 

  வாழ்க வளமுடன்  தமிழ் தந்த புகழுடன் !!!!!

Sunday, April 1, 2012

நம்மளோட தினம் ..................

நம்மள ரொம்ப கடுப்பு  கிளப்புற  விஷயத்துல  ஒன்னு படிக்க சொல்றது இன்னொன்னு அலுவலகத்துல  மீட்டிங் போடுறது....மீட்டிங்குன்னா சமோசா தின்னுட்டு சீட்ட தேச்சிட்டு போறது இல்ல ....நம்மள அத ஏன்  பண்ணல??? இத ஏன் முடிக்கல ன்னு?? கேட்டு சாகடிச்சுடுவானுங்க .. ரொம்ப கொடுமை என்னன்னா  அவங்க மீட்டிங் போடுறது ஆறு மணிக்கு மேல , அப்புறம் அவங்க பேசுறது எல்லாம் அரபி மொழியில .. கடைசியா நம்மள மாதிரி ஒரு சில நல்லவங்கள பார்த்து  ஓகே  வா ? அப்படின்னு கேப்பாங்க . ..  அங்கயும் நம்ம   சிங்க குட்டிகள் அசராம ஓகே  ஓகே .. அப்படின்னு சொல்லிட்டு நாங்களே சிரிச்சுக்குவோம் .... கடைசியா ஏதாவது  ரொம்ப  முக்கியமான விசயம்னா  ஒரு புண்ணியவான் மொழி பெயர்த்து சொல்லுவான்.... இல்லைன்னா  அதுவும் இல்ல...
நாங்களாவது பரவாயில்ல ஒரு அஞ்சாறு  பேரு இருப்போம்.... சின்னதா சிரிக்கவாச்சும் செய்யலாம் .. எங்க கூட ஒரு அமெரிக்கன் இருந்தான் அவன் பாடு ரொம்ப திண்டாட்டம்... நாங்க ஆமாம் சாமி போடும்போதெல்லாம் வாட்? வாட்? ன்னு கேட்டு  நம்மள கொன்னுடுவான் . அதுக்கு அப்பறம் எவனும்  அவன் பக்கத்துலேயே உட்காரது கிடையாது .. அவனும் எல்லார் வாயையும் பார்த்துட்டு எந்திரிச்சு போய்டுவான்...
           
நம்ம நண்பன் கொஞ்ச காலம்  இத பார்த்துட்டு ஒரு நாள் மீடிங்குல இருக்கும்   போது  எங்கிட்ட சொன்னான்,  மச்சான் ஒரு எனக்கு ஒரு  கால்  பண்ணு என்றான், கால் வந்தவுடன் எனது டேமேஜர  பார்த்து ஐ எஸ் டி  கால் என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.. வேலை  நேரம் முடிந்து விட்டதால் அவரும் அவனை விட்டுட்டு எங்கள வறுத்து  எடுத்துட்டார் வழக்கம் போல ...
அடுத்து வாரம் மீட்டிங்குக்கு வரும் போதே இன்னைக்கு பல்ப் எதுவும் வாங்க கூடாதுன்னு வந்தேன். என் நண்பனும் பவ்யமா என் பக்கத்துல உக்கார்ந்துகிட்டு கொஞ்சம் நேரம் போனவுடன் மச்சான் கால் பண்ணுடா என்றான் , நான் ரொம்ப பந்தாவா இல்லன்னு தலைய ஆட்டினேன்.. கொஞ்ச நேரம் என்னையே பார்த்துட்டு அவன் மொபைல  எடுத்து  அவனோட ரிங் டோன ஒலிக்க வச்சுட்டு வழக்கம் போல வெளிய போய்ட்டான்..
அப்புறம் என்ன நான் வழக்கம் போல பல்ப் வாங்கிட்டேன்.
                                   ***          ***          ***         ***    

இன்னைக்கு காலையில அலுவலகம் வந்து கார  பர்க்கிங்குல விட்டுட்டு  உள்ள வந்த கொஞ்ச நேரத்துலேயே நம்ம ஆபீஸ் டிரைவர் வந்து எந்து சாரே வண்டி எங்கனே  பஞ்சர் ஆயின்னு மலையாளத்தில சம்சாரிக்க,  நானும் ரொம்ப ஆர்வபட்டு எந்த வீல்? முன்னாடியா இல்ல பின்னாடியா ??  ட்ரைவர்  சைடான்னு   கேள்விக்கணைகள்  தொடுக்க... என் நண்பன் ஒருவன் பல்ப்ப   காமிச்சு சிரிச்சுட்டு போய்ட்டான் . சரி இன்னைக்கு வேற யாரையாவது பலிகட ஆக்கணும் இல்லைன்னா நம்மதான் ஊறுகான்னு நெனைச்சுக்கிட்டு அடுத்த பலி ஆட்டுக்காக காரிடார்ல நின்னுக்கிட்டு இருந்தேன், அப்பத்தான் நம்ம செகரட்டரி நாலு  அடில வந்துகிட்டு இருந்தான். நாலு அடிங்குறது அவன் உயரம் இல்ல அவனோட அகலம்!!!. வந்தவன் ஒரு வணக்கத்த வச்சிட்டு  உள்ளே  போக நான் ரொம்ப சீரியசா  என்ன ஆச்சு உன் சட்டையில பின்னாடி எதோ   கறுப்பா ஒட்டி இருக்குன்னு சொல்ல, அவன் எட்டாத கைய வச்சிக்கிட்டு   இங்கயா அங்கேயா ன்னு கேட்டு ஒரு கட்டத்துல சர சரன்னு   சட்டைய  கழட்டிடான். இதுல நம்ம ஆபீஸ் பாய்  ஒரு கப்ல தண்ணியும் கொண்டு வர, அதே நேரத்துல நம்மளோட டேமேஜரும் உள்ள வர , ஆகா..  ஆகா ..ஒரு ஆறடி உயரத்துல  நாலடி அகலத்துல  சட்டை இல்லாம  நம்ம செகரட்டரி நிக்க அதுக்கு பக்கத்துல ஆபீஸ் பாய்  கைல தண்ணியோட நிக்க இவங்க  ரெண்டு  பேர சுத்தி  நாங்க எல்லோரும் நிக்க  ஒரே அமர்க்களம்.... நம்ம  டேமேஜர்  அதிசயமா நல்ல மூடுல இருக்க அனைவரும்  சிரித்தபடியே சென்று விட்டோம் அந்த செகரட்டரிய தவிர .........

கொஞ்சம் லேட்டாக வந்த நண்பனின் முகம் சுரத்தில்லாமல் இருக்க நான் ரொம்ப  கேட்டபிறகு சொன்னான் " ஒண்ணுமில்ல  மச்சான் நம்ம HR மேனேஜர  டெர்மினேட்    பண்ணிட்டதா சொன்னாங்க, நானும் ரொம்ப சந்தோசப்பட்டு  அவனுக்கு போன போட்டு கொஞ்சம் கலாசிட்டேன் அப்புறம் தான் சொல்றாங்க இன்னைக்கு  ஏப்ரல் பூல்ன்னு."  
                                     
                        வாழ்க வளமுடன் ...... தமிழ் தந்த  புகழுடன்

Sunday, January 22, 2012

பொங்கலோ பொங்கல்.

      


இந்த ப்ளாக் ஆரம்பிச்சு எழுதணும்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டே இருந்தேன். அதுக்கு இப்பதான் நேரம் அமைஞ்சு வந்துருக்கு. அப்படி என்ன ஆணி புடுங்குற வேலன்னு நீங்க நெனைக்கிறது புரியுது.
அப்பிடியே லூசுல விடுங்க .. மொத நாளே  தண்ணி குடிக்க வைக்காதீங்க...
சமீபத்துல பொங்கல் முடிஞ்சதால  நம்மளோட பொங்கல் அனுபவத்த போடலாம்னு நெனைக்கிறேன்...  



 

படிக்கிற காலத்துல <நாம எங்க படிச்சோம் > பள்ளிக்கூடம் போற வயசுல இந்த பண்டிகையை கொண்டாடுற சந்தோஷத்த விட அதுக்கு முன்னாடி பேசுற பேச்சுதான் ரொம்ப சந்தோஷம்.
அதுவும் பள்ளிக்கூடம் விட்டு வரும் போது எல்லாம் நடராஜா சர்விஸ்தானே.. அதுனாலே பேச்சு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் ...
பொங்கலுக்கு முன்னாடி தொடர்ச்சியா லீவா வர்றதால அசைன்மென்ட் , ஹோம் வொர்க்  எல்லாம்  ஈஸியா ஏமாத்திடலாம். 
பள்ளிகூடத்தில பாதி நாள் இப்படியேதான் போனிச்சு....
பொங்கலுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே பனை ஓலை வெட்டி காய வச்சு   மாட்டு பொங்கல் அன்னைக்கு சாயந்திரம்  வீட்டுக்கு முன்னாடி குழி பறித்து பொங்கல் வைச்சு யார் வீட்டு பானை முதல்ல பொங்குதுன்னு ஒரு பெரிய போட்டியே நடக்கும்.
போற எடத்துல எல்லாம் பொங்கலும் கரும்புமா ஒரே அமர்க்களமா இருக்கும்.
அதெல்லாம்  சின்ன வயசுல ...
 எப்போ வேலன்னு வெளிய வந்ததுலேர்ந்து  பொங்கல் கரும்பு எல்லாம் பேப்பர்ல பார்க்கிறதோட சரி........   இன்னும் சொல்லணும்னா முதன் முதலா  நான் துபாய்   வந்ததே போகி அன்னைக்குதான் ...  
பசங்க எல்லாரும் சொன்னாங்க   தமிழ்நாட்ட பிடிச்ச எதோ தொலஞ்சதுன்னு......    என்னத்த சொல்ல ...............
அதிலிருந்து ஒரு முறை கூட பொங்கலை நான் வீட்டில் கொண்டாடியதில்லை.....  

சரி இந்த முறையாவது நம்ம ரூம்ல பொங்கல் செய்வோம்னு பொங்கலன்னிக்கு    சாயந்திரம்  நம்மளோட குக் கிட்ட சொல்லிட்டு, நான் பசங்களோட கோயிலுக்கு போயிட்டேன். அங்கேருந்து கரும்பு , பூ எல்லாம் வாங்கிட்டு ரூமுக்கு வந்தேன் . உள்ள நுழைஞ்ச உடனே   பொங்கல் வாசன மூக்க தொலைக்கும்ன்னு பார்த்தா ஒரே தீஞ்ச வாசம்... நம்ம குக்  மட்டன் வெட்டுற கத்திய வெச்சு குத்து குத்துன்னு பொங்கல் வச்ச பாத்திரத்த குத்திக்கிட்டு இருக்காரு ....
நான் ரொம்ப ஜெர்க்காகி என்ன ஆச்சுன்னு  கேட்குறேன் மனுஷன் என்ன பார்க்காமலே " கொஞ்சம் தீஞ்சு போயிருச்சி" அப்படின்னாரு ....குத்துற
குத்த பார்த்தா கொஞ்சம் தீஞ்ச மாதிரி தெரியலயேன்னு டிரஸ் மாத்திட்டு கட்டில பார்த்தா, கட்டில கிடந்த  துணி எல்லாம் கசங்கி இருந்தது ....
லைட்டா சந்தேகம் வந்து கிச்சனுக்குள்ள போனா ஒரே சரக்கு வாட .....
அப்பறம் தான் புரிஞ்சது நம்மாளு பொங்கல அவரு  ரூம்ல கொண்டாடிட்டு, நம்ம ரூமை   பொங்க வச்சிட்டாருன்னு....அவரு நல்லா சரக்கு அடிச்சுட்டு,  நம்ம ரூம்ல  மட்டை ஆயிட்டாரு ,பொங்கல் வச்ச பாத்திரம் நல்லா தீஞ்சு, உருகுர நிலைமைக்கு வந்துருச்சு ...

பாத்திரத்துல பாதிக்கு மேல அடிபிடிச்சு கல்லு மாதிரி ஆயிருச்சு ...
நல்லவேள பக்கத்துக்கு ரூம் ஆள் வந்து ஸ்டவ்வ  ஆப் பண்ணி இவர தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டுருக்கான்.அப்புறமா அந்த பாத்திரத்த  குப்பை தொட்டில  போட்டுட்டு கொஞ்சம் கரும்பு , பிரசாதம் அப்பறம் நிறைய திட்டும் வாங்கிட்டு போனாரு...

அப்பறம் என்ன பொங்கல் சாப்பிடலாம்ன்னு வந்துட்டு ரெண்டு பழத்த சாப்பிட்டு படுத்தோம்... படுக்கும் போது நண்பனிடம் கேட்டேன் ஏன்டா ஒருவேள ஸ்டவ் வெடிச்சுருந்தா ???????????       

என்ன ஒங்கிட்ட திட்டு வாங்க அவரு இருந்துருக்க மாட்டாரு !!!!!!!!!
    

                          பொங்கல் நல்வாழ்த்துகள்.