Tuesday, March 21, 2017

பெய்யெனப் பெய்யும் மழை

இலக்கின்றி பெரு  வெளிப் பரப்பில்  நடந்துகொண்டிருந்த எனக்கு  சில்லென்று வீசிய காற்று மழை வரப்போவதை கட்டியங்கூறியது . அந்த காற்றில் இருந்த ஈரப்பதம் மனதை இலகுவாக்க ஆரம்பித்தது . 

கோடைமழை பிடித்தால் விடாது என்பதற்கேற்ப கருங்கும்மென்ற மழை மேகங்கள்    குவிய ஆரம்பித்தன. மழையை எதிர்பார்த்து  தானாகவே கால்கள் நடையின் வேகத்தை குறைத்தன.

சொட்டென்று முகத்தில் விழுந்து தெறித்தது முதல் துளி. என்னதொரு  ஆனந்தம்,அடுத்தடுத்த மழைச்  சொட்டுகளுக்காக  இன்னும் மழைத்துளிகளை எதிர்பார்த்து முகம் தன்னிச்சையாய் ஆகாயம் நோக்கியது.

தரையில் விழுந்த துளிகள் மண்ணுடன் கலந்து ஒரு சுகந்தத்தை எங்கும்   பரப்ப  ஆரம்பித்திருந்தது. அது ஒரு வாசனை.வேறேதிலும் நுகர்ந்தறியா வாசனை.   மெதுவாய் நாசி தொட்டு,  நாடி நரம்பெல்லாம் வியாபித்து, என்னுடன் இரண்டறக் கலந்து  என்னைக் கிறங்கடிக்கும் இந்த வாசனை.
கொஞ்ச நேரம்தான், கொஞ்ச நேரமேதான் ஆனால்  மனதை பரவசமாக்கி, கணநேரம் பிரபஞ்ச கவலை  மறக்கடித்து,  ஆகாயத்தில் பறக்க விட்டு  சட்டென்று அதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதவாறு நிறுத்திவிடுவதில் இந்த மண்வாசனைக்கு நிகர் வேறேதுமில்லை . 

ஒன்றாய், இரண்டாய்,  நூறாய், ஆயிராயிரமாய்  வானத்துக்கும் பூமிக்குமான மெல்லிய கம்பித் தொடர்பு ஆரம்பித்திருந்தது. இப்படி உயிர்ப்பிக்கும் மழையில் நனைந்து எத்தனை நாளாகி விட்டன. இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையில் அவ்வப்போது நடக்கும் இது போன்ற ஓரிரு விஷயங்கள் தான் வாழ்க்கையை   இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

கோடை வெயிலில் தகதகத்துப்  போயிருந்த  வெப்ப பூமி ஆவலுடன் மழையை உள்வாங்க ஆரம்பித்தது   பசித்திருக்கும் குழந்தை பசியாறுவதை நினைவு படுத்தியது.மனம் மெதுவாய் மழைக்கான காரணிகளில் லயித்திட ஆரம்பித்தது .

சில சமயங்களில்  கடமை ஏதுமற்ற அந்த கணங்கள் அற்புதமானவை. அதுவும் யாருமற்ற பெரு வெளியில் பெய்யும் பெருமழையில் கரைவதென்பது  ஒரு சுகானுபவம்.  மழை ஒன்றும் பேதம் பார்ப்பதில்லை மனிதனைப் போல,   விருப்பமிருப்பின் வாருங்களேன் மழையில் நனைய !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

No comments:

Post a Comment