Tuesday, July 12, 2016

முதல் முத்தம் !


நாம் காதலிக்க ஆரம்பித்த கால கட்டத்தில் நீதான் எப்பொழுதுமே  பேசிக்கொண்டிருப்பாய்.  நான் புன்னகையுடன்  கேட்டுக்கொண்டே இருப்பேன் . நான் பேசிய  வார்த்தைகள் கொஞ்சமே .அதிலும் நானாய்  பேசிய வார்த்தைகள்  கொஞ்சத்திலும் கொஞ்சமே . 

பேசக்  கூடாது என்றெதுவுமில்லை. உன்னருகில் இருக்கையில்  ஒரு வித கிறக்கத்தில் , ஒரு தேவதையிடம் வரம் கேட்கும் ஒரு உபாசகனைப்  போலிருப்பேன் நான்.

ஒரு மழைக்கால மாலைப்பொழுதில் உங்களுக்கு பிடிச்சது பத்தி சொல்லுங்களேன்  என்று  செல்ல சிணுங்கலுடன் ஆரம்பித்தாய்  நீ .

என்ன பிடிக்கும் எனக்கு  ??  சற்றே  யோசனையாய் ஆரம்பித்தேன் ,

முற்றம் வைத்த
வீடு பிடிக்கும்.
முழு நிலா பிடிக்கும்
மொட்டை மாடியில் வானம்
பார்த்து படுக்க பிடிக்கும்.
நட்சத்திரம் எண்ணி
தோற்கப் பிடிக்கும்.
பெரு வெளிப்பரப்பில்
இலக்கின்றி நடக்கப் பிடிக்கும் .

மழை  பிடிக்கும்,
அதனால் கிளர்ந்தெழும்
மண்வாசனை பிடிக்கும்.
மழைக்குப் பின் வெக்காளித்த
வானம் பிடிக்கும்.


நிறைவாய்த்  தளும்பி  இருக்கும்
நீர்நிலை பிடிக்கும்
உழுதுண்டு வாழப்பிடிக்கும்.
கதிர் முற்றி நிலம் நோக்கும்
நெல்வயல் பிடிக்கும்.
பச்சை புல்வெளியில்  கசங்கிய புல்லின்
வாசனை பிடிக்கும்

அந்தி வானம் பிடிக்கும்
அதிலும்
புதுப்பெண் பூசிய வெட்கமாய்
சிவந்து, கலைந்து கிடக்கும்
செக்கர் வானம் பிடிக்கும்
மார்கழி மாதம் பிடிக்கும்

அடர் கானகம் பிடிக்கும்
கடலலைக்கும் கரைக்குமான கொஞ்சல்  பிடிக்கும்
இயல் இசை நாடகமாய் இருக்கும்
முத்தமிழும் மொத்தமாய் பிடிக்கும் .

சுயநலமில்லா  அன்பு பிடிக்கும்
அதன் மறு உருவான
அம்மா பிடிக்கும்
அம்மாக்களுக்கு  பிடித்தமான
குழந்தைகள் பிடிக்கும்.

முத்தாய்ப்பாய்
என் குழந்தையை சுமக்கப் போகும்
உன்னை ரொம்ப  பிடிக்கும் .


என்றேன். காதல் சொட்டும் பார்வையுடன்  என் கன்னத்தில் சட்டென்று உன் இதழ் பதித்து முதல் முத்தத்தை தந்தாய். காதல் கிறக்கத்துடன் முணுமுணுத்தேன், அடி கள்ளி! இது முன்பே கிடைத்திருந்தால்  எனக்கு பிடித்தவைகளின்  பட்டியலில் உன் முத்தமே முதலாவதாய்  இருந்திருக்குமென்றேன். 

வெட்கத்தால் சிவந்திருந்த உன் முகம் இன்னும் சிவப்பாக ஆரம்பித்தது !!!.



வாழ்க வளமுடன் , தமிழ் தந்த புகழுடன் !!!.