Wednesday, December 3, 2014

நாதனும் குருவும் !!!!!!!

நெறைய நாள் காலேஜுக்கு வெளியேயும்  கொஞ்ச நாள் காலேஜுக்கு  உள்ளேயும் படிக்கிறோம்ன்னு  சொல்லிட்டு சுத்திகிட்டு இருந்த அந்த நாள்ல, எங்கள கொஞ்சம் தெறிக்க விடுற ஆள் யாருன்னா எங்க காலேஜ் வாட்ச்மேன்கள் ,
#1:நாதன் :
அவரு பேரு நாதன். மெல்லிசா ஊதினா பறக்குற மாதிரி இருப்பார், ஆனா டூட்டில ரொம்ப வெறைப்பா இருப்பாரு.   காலையில  எட்டரைக்கு மேல மெயின் கேட்டை பூட்டிருவாங்க.  அதுக்கு காவலா  இந்த ஆளு உட்கார்ந்து   லேட்டானதுக்கு   காரணம்   கேப்பார் . காரணம் கேக்குறது பெருசு இல்ல அதை  இங்கிலிஷ்ல கேப்பார். அதான் பிரச்சினையே.

 நம்மளுக்கு இங்கிலீஷ்  எல்லாம் இன்கமிங் மட்டும்தான் .நோ அவுட் கோயிங். அதுனால அவரு கேக்குற அத்தனை கேள்விக்கும் சளைக்காம டக்கு டக்குன்னு   தமிழ்லயே பதில்  சொல்லி ரொம்ப சில நாள்  மட்டும் உள்ளேயும் பலநாள் வெளியே "அக்கா கடை" இல்லன்னா "மாமா கடை"யில  இருந்து எங்க காலேஜை பத்திரமா பார்த்துக்குவோம் . 

இப்புடி எங்களப் போன்ற அவுட்ஸ்டேண்டிங் ஸ்டுடண்ட்ஸ கடுப்பேத்துற 
"வெள்ளைக்கார நாதன்" எங்க ப்ளாக்ல இருந்த பாத்ரூமுக்கு  போக, இதைப்  பார்த்த நாங்க, அந்த ரூமை வெளிய பூட்டிட்டோம் . கொஞ்ச நேரம் கழிச்சு அவரு கதவ தட்ட, நாங்க யாருன்னு கேட்க,  அவரு மெதுவா "நாதன்" ன்னு சொல்ல நாங்க "நாந்தான்னா" யாருய்யா ? உன் பேர  சொல்லுன்னு சொல்லி ரொம்ப   நேரம் சத்தெடுத்தோம் .இடைக்கு இடையில அந்த கதவு நாதங்கிய புடிச்சு தொறக்கிற மாதிரி நாங்க  பாவ்லா  பண்ணுறதும் , அவரும் வேகமா கதவைத் தொறக்க முயற்சி பண்ணுறதுமா ரொம்ப சுவாரஸ்யமா போச்சு எங்களுக்கு. 
அப்புறம்  போனா போகட்டும்ன்னு  அவரு வயசு, காலேஜ்க்கு அவர் பண்ணின சர்வீஸ் எல்லாத்தையும் மனசுல வச்சி கடைசி வரைக்கும் கதவை  தொறக்காமலே அப்புடியே விட்டுட்டு போய்ட்டோம். 

 அப்புறம் என்ன  அவரு டூட்டில  இருந்தாருன்னா , நாங்க கேட்டை மட்டும் பார்த்து தொட்டு கும்பிட்டுட்டு,13வரியில உள்ளதை செய்ய ஆரம்பிச்சுடுவோம் .
#2:குரு :
இவர் பேர் குரு, அவரு ஊதினா நாம பறந்திடுற மாதிரி நல்லா ஓங்கு  தாங்கா இருப்பார். இவரும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுதான்.ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்குற குரு கையில ரெண்டு, மூணு சிகரெட்டை  அவர் கையில வச்சு அழுத்துனா போதும் கேட்டு திறந்திடும். உள்ளே போக, வெளியே வர ரெண்டுக்கும் இதுதான் ப்ரொஸீஜர்.         

வகுப்பிலிருந்து வெளிநடப்பு செஞ்ச ஒரு மதியம், ரூமுக்கு போகலாமுன்னு வந்தா கேட்டுல நம்ம "குரு". சரி சிகரெட்டு ஏதாவது இருக்கான்னு பார்த்தா யார்கிட்டயும் இல்ல. கீழ கிடந்த ஒருகிங்க்ஸ்  சிகரெட்டு பாக்கெட்டுல , அக்கம் பக்கம்  கிடந்த ஒட்டு பீடிய பொருக்கி போட்டு கொண்டு போயி குடுத்தோம்.  சிரிச்சிகிட்டே உள்ள பார்க்காம வேகமா  வாங்கி பேன்ட் பாக்கெட்டுல சொருகிக்கிட்டு கதவை தொறந்து விட்டுட்டாரு.

அடுத்த முறை அவரைப் பார்த்த போது, அவர் திட்டிய திட்டெல்லாம் எழுதினால் அது கெட்ட  வார்த்தைகளின் அகராதியாக இருந்திருக்கும்.
இப்படியாக ரெண்டு வாட்ச்மேன்களிடமும் பஞ்சாயத்து ஆகிவிட்டதால் நாங்க திருந்தி ,  

"காலேஜுக்கு லேட்டா   போறதை படிப்படியா  குறைச்சிக்கிட்டோம்.!!! அவ்வ்வ்வ் ....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!



Monday, June 30, 2014

சலாலா போகலாம் வாரீகளா - 2

சலாலா போகலாம் வாரீகளா -1

நம்ம கம்பெனி கிட்டத்தட்ட ஒரு மன்னாரன் கம்பெனி மாதிரி, இஞ்சினியர்  விசா கிடைக்கலைன்னா கொஞ்சம் கூட கூச்சப் படாம லேபர் விசாவை  அடிச்சு தந்திடுவாங்க.  அதுல என்ன பிரச்சனைன்னா பேமிலி விசா எடுக்க தலைகீழா நின்னு தண்ணி குடிக்கணும். அது மாதிரி போற பத்து பேருல ரெண்டு  பேருக்கு லேபர் விசா.  அல் அய்ன் பார்டர் கேட்டுல விசாரிச்சதுல  லேபர் விசா என்ட்ரி இல்லன்னு சொல்லிட்டாங்க.

நாங்க  உடனே புத்திசாலித்தனமா,  இஞ்சினியர்  விசா இருக்கிற பாஸ்போர்ட்ட முதல்லயும், லேபர் விசா இருக்கிற நண்பர்களோட பாஸ்போர்ட்ட கடைசியாவும்  வச்சி நீட்ட,  நம்ம நேரம் மொத்தமா எல்லா பாஸ்போர்ட்டையும் வாங்கின அந்த ஆபிசர்  அதை நேரா வைக்காம அப்புடியே குப்புற கவுத்தி வைக்க, எனக்கோ  அது எங்களையே கவுத்த மாதிரி ஆயிடுச்சு.

அந்த ஸ்ட்ரிக்ட் ஆப்பிசர் கிட்ட  எவ்வளவோ கெஞ்சி கேட்டும், கால்ல விழுந்து கதறி கேட்டும் வன்மையா மறுத்துட்டாறு அந்த லேபர் விசா உள்ள நண்பர்களுக்கு விசா தர,

நினைச்ச மாதிரியே எட்டு பேருக்கு விசா கிடைச்சிருச்சி அந்த இருவரைத் தவிர்த்து, கொஞ்சம் எதிர்பார்த்து இருந்ததால அவங்களும் பெருசா ஒன்னும் பீல் பண்ணல. ஆனா ஒருத்தன்  மட்டும் வேகமா வெளியில வந்து இன்னொரு நண்பனை கோபமா திட்ட அவனும் ரொம்ப அமைதியா இருந்தான். விஷயம் என்னன்னா விசா வாங்க உள்ள போகும் போதுதான் இவன்  சொல்லி இருக்கான் ஒரு வண்டியில 5 பேரு போறது கொஞ்சம் கஷ்டம் 4 பேருன்னா  நல்ல தாராளமா  போகலாம்ன்னு !!!! "நல்ல வாய் "

அப்புறம் அந்த 8 பேரும்  பயணத்தை தொடர்ந்தோம்.  நீ இனிமே திங்கிறத தவிர வேற  எதுக்கும் வாய தொறக்க கூடாதுங்குற கண்டிஷனோட !!!

 ஆரம்பமே அமர்க்களமா இருக்கேன்னுட்டு ஒமானுக்குள்ள நுழைஞ்சா ஆச்சர்யம்!!!  நல்ல தென்றல் காத்தும் மிதமான வெயிலுமா ரொம்ப இதமா  இருந்துச்சு  அந்த மக்களைப்போலவே. நானும் கேள்விப்பட்டதுண்டு அந்த நாட்டு  குடிமகன்களுக்கு நிறைய உதவும் மனப்பான்மை உண்டுன்னு, அதை  உணர்ந்து  கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது. எதுக்காகவேனும்  வழியில்  வண்டியை நிறுத்தி நின்றாலும்,   நம்மை கடந்து செல்லும் வாகனம் சற்று வேகம் குறைந்து நாம் பிரச்சினை ஏதும்  இல்லையென சைகை செய்தவுடன்  தான் கடந்தார்கள்.

எட்டு மணிக்கு ஒரு பெட்ரோல் பம்ப்பில் வண்டியை நிறுத்தி டேங்க் பில் பண்ணிட்டு, அங்க இருந்தவன்கிட்ட  ஏதாவது  டிபன் பார்சல் வாங்க ஹோட்டல் இருக்கான்னு  கேட்டது தான் தாமதம், கிரகம் எங்களைப் பிடிக்க ஆரம்பித்தது ,
                                                                                                               இன்னும் போவோம் ....

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Wednesday, March 5, 2014

வெட்கங்களின் தேவதை!!!

உன்னை முதலில் பார்த்தது கிராமத்து   நண்பனின் வீட்டு விஷேசத்தின் போதுதான். நட்சத்திர பரிவாரங்களுடன் வெளிவரும் வெண்மதியாய்,இளஞ்சிவப்பு நிற தாவணியில்  தேவதையாய்  உன் தோழிகளுடன்   தரிசனம் தந்தாய்  அன்று.

தேவதை சிரிப்பதையும்,பேசுவதையும்,  தரையில் கால் பாவாமல் நடப்பதையும் அன்றுதான் நேரில் கண்டேன். கண்டவுடன் காதல் என்பதில் எல்லாம் நம்பிக்கையற்று இருந்த எனது உறுதியை அசைத்து போட்டு விட்டது நீ தவற விட்ட கைக்குட்டை .

காதல்,  பெண்கள் என எதிலும் சுவாரஸ்யமற்று இருந்த எனக்கு நீயே மிகுந்த சுவாரஸ்யமானாய்.சற்றே அலுப்பு தட்டின எனது வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமாக்கியது  உனது வருகை.

நண்பனின் தங்கையும்,அவளது தோழிகளும் அண்ணா என்றே என்னை அழைக்க, வெறும் வாங்க போங்கவுடன் நிறுத்திக் கொண்ட உனது செம்மொழியும், உன் பார்வை என்மேல்  பட்டபோது தெரிவித்த விழிமொழியும்,  எனக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த ரசவாதம் உன்னிலும் நிகழ்வதை எனக்கு உணர்த்தியது.

யாருடா அந்தப் பொண்ணு? என்று கேட்ட என்னை அதிசயமாய் பார்த்தவாறே   உன்னைப் பற்றி ஒப்பித்தான் என் நண்பன் . அவ்வப்போது உன்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் சொல்வதும் அவன்தான்.

நான் விசாரித்ததைப்  போலவே நீயும் என்னைக்குறித்து விசாரித்ததை பின்னாளில் அறிந்தவுடன் கண்டவுடன் காதல் என்பதில் எனக்கு அதீத  நம்பிக்கை பிறந்தது.காதல் தேவதையின் ஆசிர்வாதமோ என்னவோ, உனக்கான வேலையும் எனது ஊரிலேயே கிடைத்து விட எனக்கோ கொண்டாட்டமாகிப் போனது.

அவ்வப்போது கிடைக்கும் தேவதையின் தரிசனமே மீண்டும் மீண்டும் என்னை காதலோகத்தில் சஞ்சரிக்க வைத்தது. எதிர்ப்படுகையில் வழக்கமான நல விசாரிப்புகளுடன் என்னைக் கடந்து போய்விடுவாய்.  தயக்கம் கலைத்த ஒரு மாலையொன்றில் அலைபேசினாய், எனக்கோஅது குயிலின் கீதம்.

ஏதோ கனவில் பேசுவது  போல இருந்தது. அதன் பின்னர்  தினமும் என்னை எழுப்புவதே உனது குட்மார்னிங்  குறுந்தகவல்கள்தான்.

உடன் வேலை செய்யும் பெண்களுடன் எத்தனையோ பேசினாலும், உன்னுடனான வார்த்தைகள் சொற்பமே.   எனக்கும் சேர்த்து  நீதான் எல்லாம் பேசுவாய்.
ஏன் ஒன்னும் பேச மாட்டேங்கிறீங்க ? என்ற உன் கேள்விக்கும்  வழக்கம் போல் என் புன்னகையே  மௌனமாய் பதில் சொல்லும்.

காதலை சொல்லிக் கொள்ளவில்லை நாமிருவரும் அவ்வளவுதான்.இருவருக்குமான மனவோட்டங்களை குறித்து  மனதளவில்  புரிந்துணர்வு இருந்தாலும் கூடவே ஒரு தயக்கமும் இருந்தது.  திருமணம் செய்து வைக்க எனது  வீட்டில் காட்டிய தீவிரம் எனது தயக்கத்தை தூரப்போட வைத்தது.

உனக்கு மிகவும் பிடித்த தினமான   கார்த்திகை தீபத்தன்று  உன்னை என்  வீட்டிற்கு அழைத்தேன். நிறைய பரவசமும் கொஞ்சம் தயக்கமுமாய் என் வீட்டில் அடியெடுத்து வைத்தாய். அமர்க்களப்பட்டது வீடு.

சிரிப்பும் சந்தோஷமுமாய் இருந்து விட்டு, நமக்கென வாய்த்த ஒரு தருணத்தில் தீபங்களுக்கிடையில்  ஒரு மகா  தீபமாய், படர்த்திய பெரிய விழிகளுடன் என்னை பார்த்து, உன் அம்மாவிடம்  என்னை யாரென்று  கூறினாய்? எனக் கேட்டாய் .

வழக்கம் போல மொழியறியா  என்  புன்னகையை கண்வழியே கடத்தி   உன் விழியுடன் நன்றாக உறவாட விட்டு    "இன்று உன் மருமகளை கூட்டி வருவதாகச் சொன்னேன் " என்றவுடன், குறுகுறுத்த பார்வையும் , லேசாகத்  தெரியும் அந்த தெத்துப்பல்லுமாய் மெல்லிய  அதிர்ச்சி கலந்த சந்தோஷத்துடன் வெட்கப்பட்டாய் நீ.

அதுவரை  தேவதையாய் இருந்த  நீ,  அன்றுதான் "வெட்கங்களின் தேவதை" ஆனாய். நானோ கொண்ட  காதல் கைகூடிய மகிழ்ச்சியில்  தீபங்களின் ஒளியில் கரையலானேன்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, January 30, 2014

அம்மாவின் பிறந்தநாள் !

"அம்மா"  மூன்றெழுத்து  கவிதை 
ஒரு வார்த்தை அத்தியாயம் 
வரையரைக்குள் அடக்க இயலா பேரன்பு 
உயிரெழுத்தும்  மெய்யெழுத்தும் சேர்ந்து
உயிர் மெய்யாய் நம்முன் நடமாடும் தெய்வம்.

இன்னும் அடுக்கிக்கொண்டே   போகலாம் அம்மாவின் அருமைகளை. என் அம்மாவும் அப்படிப்பட்ட ஒரு தெய்வம்தான்.வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொடுத்தவர். கடுமுகமோ சுடுசொல்லோ காட்டாதவர்.பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஒரு  ஜீவன். எவ்வளவோ செய்ய நினைத்து செய்தாலும் அவை அனைத்தும் அம்மாவின் அன்புக்கு முன்னால்  சிறியதாகவே பட்டது .

அம்மாவின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்படி ஒன்று செய்ய வேண்டுமென நினைத்தேன். கடவுளின் ஆசிர்வாதமாக நான் கருதும் எனது நண்பர்களின் உதவியுடன் சிறப்பாக நடந்தேறியது அது அம்மாவின் பிறந்தநாள்  கொண்டாட்டம், அம்மாவின்  இந்த வருட பிறந்தநாள் வார விடுமுறையான   வெள்ளிக்கிழமையன்று வர, 

எனது நண்பர்கள் அனைவரிடமும்  இதனை சர்ப்ரைஸாக கொண்டாட வேண்டுமென கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டேன்.வெகு சாதாரணமாக தொடங்கிய அந்த நாளில் ,இன்று  அம்மாவின் பிறந்தநாள் என அப்பா நினைவூட்ட, நானோ எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வாழ்த்துகளை கூறிவிட்டு அமைதியாக இருந்து விட்டேன். 

பக்கத்து வீடும் எனது நண்பனின் வீடாகிப் போனதால், அனைத்து நண்பர்களையும் அங்கு வரவழைத்து விட , அவர்கள்  வீடு முழுவதையும் அலங்கரித்து  அசத்திகொண்டு இருக்க, நானோ மதியம் லஞ்சுக்கு வெளியில் போகலாம் என்று சொல்லிவிட்டு அவ்வப்போது பக்கத்து வீடு சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.  

எல்லாம் தயாராகி விட்டது, வீட்டை  நன்றாய் அலங்கரித்து, கேக்கில் மெழுவர்த்தி  எல்லாம் ரெடியாய் வைத்து விட்டு அம்மாவை அழைத்து வர சென்றேன். குடும்பத்துடன் அனைவரும் வெளிவருகையில், அம்மாவிடம்  எதார்த்தமாய் நண்பனது பக்கத்து  வீட்டில் சொல்லிவிட்டு போகலாம் என்று அம்மாவையே கதவை திறக்க சொல்ல  ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் பூம். பிறந்தநாள் வாழ்த்துப்பாடலை நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாட, அம்மாவோ ஆச்சர்யம் மற்றும் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போய்விட  நெகிழ்ச்சியாய் என் கையைப்  பிடித்துக் கொண்டார்கள் . பிறகு கேக் வெட்டி, மதிய சாப்பாட்டுடன் இனிமையாக முடிந்தது கொண்டாட்டம்.

அன்று முழுவதும் ஆச்சர்யமும்,மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தியது  அம்மாவின் முகம். அப்படி ஒரு மனம்  கொள்ளா  மகிழ்ச்சி என் அம்மாவின் முகத்தில்,  ஊரில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டார்கள். அவ்வளவு சந்தோஷம்  அவர்களுக்கு. பார்க்க நிறைவாக இருந்தது எனக்கு .

மூன்றாவது பத்தியின் ஆரம்பத்தில் சொன்னது நிறைவேறியது போன்ற எண்ணம் வந்தது  எனக்கு!! உங்களுக்கு ?

டிஸ்கி 1:  நம்ம கோவை நேரம் எழுதிய  இந்த பதிவும் ஒரு காரணம்.

மலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.


டிஸ்கி 2 : முகநூலில் இதனை பகிர்ந்த போது என்   நண்பன் ஒருவன் தானும் இது  போல செய்ய வேண்டும் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பதிவினால் எங்கோ இருக்கும் யாரோ ஒருவரின் அம்மாவின் முகத்தில் சந்தோஷம் கிடைப்பின் அது  இந்த பதிவுக்கு கிடைத்த பெரிய வெகுமதியாக கருதுகிறேன்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!