Tuesday, July 30, 2013

கொல்லைப்புற கிணற்றடியும் பவள மல்லி மரத்தடியும்..

எத்தனையோ  முறை உன்னைக் கடந்து வந்திருப்பேன் அவசரமாகவோ, இல்லை கண்டும் காணாமலோ. ஆனால்  நான் வெறுமையை உணரும் போதெல்லாம் "தாய் மடி கண்ட சேய்" போல  தஞ்சமடையும் இடம் கொல்லைப்புறத்தில் உள்ள இந்த கிணற்றடியும், அந்த பவள மல்லி மரத்தடியும் தான்.

எப்போதிருந்து ஆரம்பித்தது இந்த சினேகிதமான  நெருக்கம்? பால்யத்தில் விளையாட ஒருவருமின்றி தனித்திருந்த சில பொழுதுகளை வாஞ்சையுடன்   அரவணைத்த போதா? இல்லை அம்மா துணி துவைக்க தண்ணீர் சேந்தி தரும் பொழுதுகளில், கிடைக்கும் இடைவெளியில் ஈரக்   கைகளுடன் அங்கு சிதறிக்கிடக்கும் பவளமல்லி மலர்களை சேகரித்து அதன் வாசனையை ஆழமாய் சுவாசித்து நுரையீரல்களில் நிரப்பிய தருணத்திலா?அல்லது ,
சற்றே பெரியதாய், உயரமாய் அமைந்த துணி துவைக்கும் கல்லின் மேல் படுத்தவாறே சிதறிக்கிடக்கும் நட்சத்திர கூட்டங்களை ஆச்சர்யமாய் எண்ணிக்கொண்டிருந்த போதா?

அல்லது,
வீட்டில் சண்டையிட்டு கோபித்த இரவுகளின் நீட்சியாய் பசியுடனும், கண்ணீர்க் கரையோடிய கன்னங்களுடனும்  கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்த அந்தப் பொழுதிலா?

அல்லது,
வானம் வெளித்த மழை நாளில், கதிரவன் தன் பொன்மஞ்சள் கதிர்களை கலைந்தோடும் முகில்களுக்கிடையே சிதறடித்துக் கொண்டிருந்த மாலையொன்றில், மழைமுத்தை மடியில் ஏந்தியவாறு பச்சைப் புல்வெளிப் பரப்பில் சிதறிக்கிடந்த  பவளமல்லி மலர்களும், கொல்லைப்புறத்தையே தன் வாசனையால்  நிரப்பி வைத்திருந்த, மொட்டவிழ்ந்த சந்தன முல்லை மலர்களுமாய் காட்சியளித்தபோதா?

சரியாய்த் தெரியவில்லை எனக்கு. இருக்கலாம் இவற்றில் எதாவதொரு பொழுதிலோ அல்லது இவை அனைத்தும் சேர்ந்து என்னை ரசவாதம் செய்த ஒரு கலவையான பொழுதிலோ, என் மனதை முற்றிலுமாக  ஆக்கிரமித்திருக்கலாம், இந்த கொல்லைப்புற கிணற்றடியும் அந்த பவள மல்லி  மரத்தடியும்.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!
Monday, July 22, 2013

சலாலா போகலாம் வாரீகளா !!!!

                                                         கல்லூரி நாட்களுக்கு அப்புறமா எத்தனையோ டூர் வடிவேலு ரேஞ்சுக்கு ப்ளான்  பண்ணி, ஆபரேஷன் "டி"ன்னு பேரெல்லாம்  வச்சி, கடைசியா  பவர் ஸ்டார் படம் மாதிரி ப்ளாப் ஆகிடும்.

போன ரம்ஜான் லீவுக்கு  எல்லாரும் சலாலா   போகலாம்னு  ஒருமனதா முடிவு பண்ணி ரெண்டு கார்ல, மூணு  ட்ரைவரோட, நாலு நாள்  பயணமா, அஞ்சு பேரு ஒரு காருக்குன்னு மொத்தமா  பத்து  பேர் ஒரு சுபயோக சுபதினத்தில் கிளம்பிட்டோம்.

கொஞ்சம் ஓமன் கரன்சி கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு எக்சேஞ்சுக்கு போயி ஒரு 500 ஓமன் ரியால்(நம்ம ரூபாய்  70,000)  மாத்திக்கிட்டு  இருக்கும் போது         "காறித் துப்பினா காக்காசு பெறமாட்டான்னு" சொலவடைக்கு மிகப்பொருத்தமான  சுடிதார் போட்ட பாகிஸ்தானி ஒருத்தன், அவனை சுற்றி அவனுக்கே  உண்டான பாதுகாப்பு வளையத்துடன்(!!!) அவனும்  ஓமன் ரியால்  மாற்றிக்கொண்டிருந்தான். அவன் மாற்றியது எவ்வளவு தெரியுமா மக்களே ? 6000 ஓமன் ரியால்!!!. நம்மூரு மதிப்புக்கு கிட்டத்தட்ட 9 லட்சம் . என்னோட வாயில போன ஈயை துப்பிட்டு, என்னோட  சில்லறைய   வாங்கிகிட்டு  நின்ன இடம் தெரியாம கிளம்பி வந்துட்டேன்.

கூட வர்ற யாரும் முன்னபின்ன   அங்க போனதில்லை. நம்ம கூகுளாண்டவர் துணையோட ரூட் மேப்பை , லேண்ட்மார்க் போட்டோவோட  ஸ்பைரல் பைண்டிங் போட்டு  ரெடி பண்ணிட்டாரு நண்பர் ஒருத்தர். இந்த பெர்பக்க்ஷனை வேலையில  காட்டி இருந்தார்ன்னு வைங்க, "வெரிகுட்"ன்னுருப்பான் வெள்ளைக்காரன். ஏன்னா  அவரு பாஸ் ஒரு வெள்ளைக்காரன் !!!! ஹிஹிஹி  ...

கைப்புள்ளைங்களோட   ப்ளான்  இதுதான் ,

1.அபுதாபி(abudhabi  ) to  அல் அய்ன் பார்டர் கேட் (Al Ain barder  )-150 km
2.அல் அய்ன் (Al Ain) to  இப்ரி(Ibri  ) -125 km
3. இப்ரி(Ibri) டு ரோடு 29 -31 சந்திப்பு -213 km
4.ரோடு 29 -31 சந்திப்பு டு ஹைமா(haimah)-229 km
5. ஹைமா(Haimah) டு முஸ்கின் (Mushkin)-223 km
6. முஸ்கின்(Mushkin) டு  தும்ரைத் (Thumrait)-188 km
7. தும்ரைத்(Thumrait) டு சலலாஹ்(Salalah) -82 km


அத்து வானத்துல பறக்குற ஹெலிகாப்டருக்கே எழுமிச்சம்பழத்தை முன்னாடி கட்டி, சந்தனம் குங்குமம் வைக்கிற ஆளுங்க  நாம, காருக்கு விட்டுடுவோமா என்ன, அதுவும் லாங் ரூட் வேற , கற்பூரம் காட்டி ,சாமி எல்லாம் கும்பிட்டு  எலுமிச்சம் பழத்தை எல்லாம் வைச்சு நசுக்கிட்டு கிளம்பியாச்சு.

ரம்ஜான் மாசம்  வேறயா, வழியில சாப்பிட ஏதும் கிடைக்காதுங்கிறதால வடிவேலு சொல்றமாதிரி  "எவ்வளவு  முடியுமோ அவ்வளவு " ஸ்நாக்ஸும், பழங்களும்  வாங்கி வண்டிய நிரப்பியாச்சு.

போற யாருக்கும் வழியும் தெரியாது, அரபியும் தெரியாது. சமந்தா  மேல பாரத்த போட்டுட்டு  விட்றா  சம்முவம் போவட்டும்ன்னு  கிளம்பிட்டோம்.

எங்களுக்கு முதல் சோதனை அல் அய்ன் பார்டர் கேட்டுல ஆரம்பிச்சது விசா வடிவுல...
                                                                                                       இன்னும் போவோம் ....

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Sunday, July 7, 2013

மரணித்து விட்டதா மனிதம்???

சமீபத்தில் எக்ஸ்ப்ரெஸ் அவென்யு வில்  நிகழ்ந்த தற்கொலை காணொளியை பார்க்க  நேரிட்டது. சண்முகம் என்ற இளைஞர்  மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்தார்.  சுயநலம் பிடித்த மால் நிர்வாகம் அதை செய்து முடித்து விட்டது .  

என்னதொரு கொடூரம். கீழே  விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மனிதனை காப்பாற்ற முயற்சி செய்யாமல் வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது ?

இதுவே தனது மாமனோ அல்லது மச்சானாகவோ இருந்தால் இதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருந்திருக்குமா ?? மனசாட்சி உள்ளவர்கள் சிலர் சேர்ந்து சிகிச்சை அளிக்க எடுத்துச் செல்ல வற்புறுத்தியும் ,பார்மாலிட்டிஸ்   என்று கூறி மறுத்துவிட்டதாம் மால் நிர்வாகம், குறைந்த பட்ச முதலுதவியைக்கூட செய்ய வில்லை நிர்வாகம்.

ஆம்பூலன்ஸ் மற்றும் கடமை தவறாத காவல்துறை வந்து  உயிரற்ற சடலத்தை எடுத்து சென்றார்களாம் சிகிச்சைக்கு !!!!

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் "  என்ற வள்ளலார் பிறந்த மண் இது .. ஆனால் நாம் தான்  ஒரு மனித உயிர்  துள்ளத் துடிக்கப்  போராடும் போது  கவைக்குதவாத சட்டத்தையும் பார்மாலிட்டிஸ் பற்றி பேசி ஒரு மனித உயிரை கொன்று விட்டோம். 

இன்னும் சிலரோ ஏன் திமிரெடுத்து தற்கொலை செய்து கொண்டான் என்கின்றனர். வாழ்க்கையை லாவகமாக  வளைத்தோ  அல்லது வளைந்தோ   வாழும்  கலை எல்லோருக்கும் வருவது இல்லை. கணப்பொழுது தடுமாற்றம் வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது என்ன செய்வது ??

அற்ப விஷயங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் விபரீத சமூகத்தை தான் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். பணம் காய்க்கும்  இயந்திரங்களாகத்தான் நாம் அடுத்த தலைமுறையை உருவாக்கி வருகிறோமே  தவிர வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து  வாழ  கற்றுத்தரவோ, கற்றுத்கொள்ளவோ விரும்புவதில்லை நாம் என்பதே நிதர்சனம்  .

ஒளி படைத்த கண்ணும், உறுதி கொண்ட நெஞ்சுமாய் அடுத்த தலைமுறையை உருவாக்கும்  உறுதியோடு உங்களில் ஒருவன்.


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!


Thursday, July 4, 2013

420 ஏர்டிக்கெட்டும், அடிபொலி அக்கௌன்டன்ட்டும்!!

என்னோட நண்பன் ஒரு மன்னாரன்   கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தான்  (பின்னே நம்மளோட  ப்ரண்டு மலேசியா கம்பெனிலையா   வேல பார்ப்பான்) அப்படி ஒரு டுபாக்கூர் கம்பெனி அது. எப்படின்னா,

வெக்கேஷன்ல ஊருக்கு போயிருக்கவனுக்கெல்லாம் சம்பளம் போட்டு இருப்பானுங்க. இங்க வேல பார்க்குறவனுக்கு சம்பளம் போட்டு இருக்க மாட்டாங்க  கேட்டா , 

ஓ, நீ  நாட்டிலேருந்து திறுச்சி வந்தோ ?? எப்போ ? 
அப்படின்னு கேட்டு நம்மளை கொலைகாரன் ஆக்கப் பார்ப்பாங்க. 

நாமளும், திருச்சியும் வரல்ல, திண்டிவனமும் வரல்ல நான்தான் துபாய் வந்தேன்னு  சொல்லி கதறி  நம்மளோட சம்பளத்தை கேட்டா, 

இன்னும் டைம் ஷீட் வந்திட்டில்லை பாய் அப்படிப்பாங்க!!!!

"டேய் நாங்க வேலை பார்க்குறோமோ  இல்லையோ டைம் ஷீட்டை   சரியா அனுப்பிடுவோமேடான்னு" சொல்லிட்டு
கொஞ்சம் ட்ரேஸ் பண்ணினா, அந்த பேப்பரை கீழ விரிச்சி சாப்பாடு சாப்பிட்டு இருப்பான் அந்த புண்ணியவான்.
மொத்தத்துல  சம்பளம் வாங்குறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும்.

இப்படியெல்லாம் நன்கு  அனுபவப்பட்ட  நம்மாளு, ஒருமுறை ஊருக்கு போக   ஒருவாரம் மட்டுமே  அனுமதி கிடைக்க, சொன்ன தேதிக்கு திரும்பி வர்ற  ப்ரூப்புக்கு டூ வே  டிக்கெட்டையும் குடுக்கச் சொல்லிட்டாரு அவனோட டேமேஜர் ,  

லீவை எக்ஸ்டென்ட் பண்ற ஐடியால இருந்த நம்மாளு  ஒன் வே டிக்கெட்டை    டூ வே டிக்கெட்டா  வோர்டுல மாத்தி அவனோட டேமேஜர்கிட்ட கையெழுத்தை  வாங்கி   அக்கவுன்ட்ஸ்  க்ளைமுக்கு  அனுப்பிச்சுட்டான்.

எங்கே குட்டு வெளியாயிருமோன்னு கொஞ்சம் டென்ஷன்ல நம்மாளு  இருக்கும் போது,  அடுத்த நாள் சைட்ல அவனோட நண்பன் ஒருத்தன் வந்து அக்கவுன்ட்ஸ்லேருந்து போன்  பண்ணாங்க, உனக்கு  சிக்னல் கிடைக்கலயாம் (பேஸ்மென்ட் ல  சிலநேரம் சிக்னல் கிடைக்காது )  ஏர் டிக்கெட் சம்மந்தமா ஏதோ பேசணுமாம்  உன்னைய உடனே போன்  பண்ண சொன்னாங்கன்னு சொல்ல,  

அவ்வளவுதான்.தெறிச்சிட்டான் நம்மாளு.ரொம்ப கலவரத்தோட அக்கவுண்டண்டுக்கு  போன் பண்ண, 

அவரோ, சாரே  நிண்ட ஏர் டிக்கெட்டுல வல்லிய தட்டாயி (உன்னோட ஏர்  டிக்கெட்ல பெரிய தப்பு நடந்து போச்சி )  , ரிடர்ன் டிக்கெட்டுல  அதே பிளைட்  நம்பர் ,துபாய் டு திருச்சின்னு இருக்கு அப்படின்னாரே  பார்க்கலாம். நண்பனும்  மிக சாமர்த்தியமாக பாருங்க சார் எவ்வளோ பொறுப்பில்லாம ட்ராவல் ஏஜென்சி இப்படி  தப்பு பண்ணிட்டான்  சொல்லி  எஸ்கேப் ஆயிட்டான்.

நடந்தது இதுதான், வேர்டுல காப்பி  பேஸ்ட் பண்ண நம்மாளு திரும்பி வர்ற பிளைட்  நம்பர், ஊரை  எடிட் பண்ண மறந்துட்டான் . ஆனாலும் அந்த அடிபொலி அக்கௌவுண்டன்ட்  இப்பவும் எங்களுக்கு ஊறுகாய் தான்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!! 

Related Posts Plugin for WordPress, Blogger...