Sunday, May 19, 2013

மனதைப் பிசையும் சில விடை தெரியா கேள்விகள்!!


குல்மொஹர் மரம். பூக்கும்  பருவத்தில் இலை  எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு வெறும் பூக்களுடன் மட்டுமே தனக்கான  சகவாசம் என்பதாய் நினைத்துக் கொண்டு இருக்குமே அந்த மரம்தான். அந்த பூக்கள் பூப்பது, பின்  நிறம் மாறுவது  எல்லாமே அழகுதான். முதலில் அடர் சிவப்பாய் கூடவே பச்சையான சில மொட்டுகளுடன், பின் அந்த மொட்டுகளும் பூவாகி,  பின் மெல்ல நிறமிழந்து ஆரஞ்சு சிவப்பாய் கடைசியில் மஞ்சளாய், பிறகு வெளிர் மஞ்சளாய் மாறுவது வெகு அழகு.

எனது அலுவலகத்தின் முன் உள்ள சாலையில் இந்த மரங்கள் வரிசையாக நடப்பட்டு இருக்கும். பூத்து இருக்கும் அவற்றை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பார் அந்த ஓட்டுனர். யாரையோ  இறக்கி விட்டுவிட்டு அவர்களின் வருகைக்காக வண்டியிலேயே காத்துக் கொண்டிருந்தார் ஒரு குல்மொஹர்  மர  நிழலின் கீழ். வெகுநேரம் காத்துக் கொண்டிருப்பார் போல, அவ்வப்போது கீழிறங்குவதும், அலைபேசியில் பேசுவதுமாக இருந்தார்.

சட்டென்று வந்து நின்றது துபாயின் போலிஸ் வாகனம். வரிசையாக அங்கு சாலையை ஒட்டி நிறுத்தி இருந்த வாகனங்களுக்கு அபராதம் எழுதியவர். தொடர்ச்சியாய் இந்த வண்டிக்கும் எழுத, பதறிப்போன அந்த பெரியவர் கீழிறங்கி அந்த போலீசிடம் மன்றாட, எதையும் பொருட்படுத்தாத  அந்த போலிஸ், அபராதம் எழுதி நீட்ட, சட்டென்று அந்த பெரியவர் அந்த போலிஸின் காலில் விழுந்து விட்டார்.

சகலமும் ஆடிப் போய்விட்டது எனக்கு. அதுவரை சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, மனதில் பெரிய பாராங்கல்லை வைத்தது  போலாகிவிட்டது. என் தந்தை வயதிருக்கலாம் அவருக்கு . 
பிழைப்புக்கு வழி தேடி வந்த வெளிநாட்டில், தன்மானத்தை விட்டு தன் மகன் வயதே உடைய ஒருவரிடம், காலில் விழ வேண்டிய நிர்பந்தம் என்னவாயிருக்கும்?   எது அவ்வாறு  செய்யத்தூண்டி  இருக்கும்? அந்த நாளின் இரவுப் பொழுது எவ்வாறு இருந்திருக்கும் அவருக்கு? இது போன்ற விடை தெரியாக்  கேள்விகள் மனதை பிசைந்து  கொண்டே இருந்தன.

இருக்கலாம் கல்யாண வயதில் உள்ள மகளுக்கு சேர்க்க வேண்டிய பணமாகவோ  , இல்லை அவர்களது கல்விக் கட்டணமாகவோ , இல்லை குடும்பத்தின் மருத்துவ செலவாகவோ, இல்லையேல் அந்த குடும்பத்தின் உணவாகவோ மாற  இருந்திருக்கலாம் அந்த பணம்.

நன்றாகத்தான் போகிறது வாழ்கை. மனதை பிசையும் சில  விடை தெரியா  கேள்விகள் தோன்றாத வரை. 

அழகாய் பூத்ததுதான் இருக்கிறது அந்த குல்மொஹர் மரம். ஆனால் எனக்குத்தான் ரசிக்க மனமில்லை.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!










  

6 comments:

  1. இந்த பூ மரம் நீங்க சொல்லித்தான் குல்மொஹர் என்று தெரிந்து கொண்டேன் , சிறுவயதில் கோழி கொண்டை பூ என்று பெயர் சொல்லி அழைப்போம் அந்த பெரியவரின் நிலை சஞ்சலத்தை தந்தது இதுவும் கடந்து போகும் என்று மனதை தேற்றி கொள்வதை தவிர ...

    ReplyDelete
    Replies
    1. புரிந்துணர்வான கருத்துரைக்கு நன்றி நண்பரே..

      Delete
  2. என்னவென்றால், சூழ்நிலை கைதியாக, இயலாமையில் திகைத்துப்போய், ஆபத்திலிருந்து எப்படியாவது தப்ப நம் மனிதர்களுக்கு அனிச்சை செயலாக வ்ருவது காலில் விழுவது. கொடுமை என்னவென்றால், யார் காலில் விழுகிறோம் என்றுக்கூட நினைத்துப்பார்க்க இயலா.ஒரே நொடியில் ஆபத்தின் விபரீததில் இருந்து தப்ப முடியுமா என்று எத்தனைக்கதான மனம் முன்வருகிறதே தவிர அறிவு வேலை செய்வதில்லை....மனதை பிசையும் கோரம்...ஒரு பார்வைளரைபோல பார்த்துக்கொண்டிருப்பதை தவிர என் செய்ய...நல்ல மனிதர் களை இந்த மாதிரியான நிகழ்வு மிகவும் பாதிக்கிறது...

    அழகான மரம் குல்மொஹர்...அதை ரசிக்கும் தருணத்தில் இப்படி ஒரு நிகழ்வா.,...பொன்.

    ReplyDelete
    Replies
    1. புரிதலான கருத்துரைக்கு நன்றி நண்பரே.

      Delete
  3. அவருக்கு என்னச் சூழ்நிலையோ..ஆனாலும் காலில் விழும் பழக்கத்தையும் மற்றவர் தன காலில் விழவேண்டும் என்று விரும்புவதையும் அனைவரும் விட்டுவிட்டால் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். சூழ்நிலை எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றிவிடுகிறது. மறுமொழியிட்டமைக்கு நன்றி சகோ.

      Delete