Sunday, May 19, 2013

மனதைப் பிசையும் சில விடை தெரியா கேள்விகள்!!


குல்மொஹர் மரம். பூக்கும்  பருவத்தில் இலை  எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு வெறும் பூக்களுடன் மட்டுமே தனக்கான  சகவாசம் என்பதாய் நினைத்துக் கொண்டு இருக்குமே அந்த மரம்தான். அந்த பூக்கள் பூப்பது, பின்  நிறம் மாறுவது  எல்லாமே அழகுதான். முதலில் அடர் சிவப்பாய் கூடவே பச்சையான சில மொட்டுகளுடன், பின் அந்த மொட்டுகளும் பூவாகி,  பின் மெல்ல நிறமிழந்து ஆரஞ்சு சிவப்பாய் கடைசியில் மஞ்சளாய், பிறகு வெளிர் மஞ்சளாய் மாறுவது வெகு அழகு.

எனது அலுவலகத்தின் முன் உள்ள சாலையில் இந்த மரங்கள் வரிசையாக நடப்பட்டு இருக்கும். பூத்து இருக்கும் அவற்றை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பார் அந்த ஓட்டுனர். யாரையோ  இறக்கி விட்டுவிட்டு அவர்களின் வருகைக்காக வண்டியிலேயே காத்துக் கொண்டிருந்தார் ஒரு குல்மொஹர்  மர  நிழலின் கீழ். வெகுநேரம் காத்துக் கொண்டிருப்பார் போல, அவ்வப்போது கீழிறங்குவதும், அலைபேசியில் பேசுவதுமாக இருந்தார்.

சட்டென்று வந்து நின்றது துபாயின் போலிஸ் வாகனம். வரிசையாக அங்கு சாலையை ஒட்டி நிறுத்தி இருந்த வாகனங்களுக்கு அபராதம் எழுதியவர். தொடர்ச்சியாய் இந்த வண்டிக்கும் எழுத, பதறிப்போன அந்த பெரியவர் கீழிறங்கி அந்த போலீசிடம் மன்றாட, எதையும் பொருட்படுத்தாத  அந்த போலிஸ், அபராதம் எழுதி நீட்ட, சட்டென்று அந்த பெரியவர் அந்த போலிஸின் காலில் விழுந்து விட்டார்.

சகலமும் ஆடிப் போய்விட்டது எனக்கு. அதுவரை சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, மனதில் பெரிய பாராங்கல்லை வைத்தது  போலாகிவிட்டது. என் தந்தை வயதிருக்கலாம் அவருக்கு . 
பிழைப்புக்கு வழி தேடி வந்த வெளிநாட்டில், தன்மானத்தை விட்டு தன் மகன் வயதே உடைய ஒருவரிடம், காலில் விழ வேண்டிய நிர்பந்தம் என்னவாயிருக்கும்?   எது அவ்வாறு  செய்யத்தூண்டி  இருக்கும்? அந்த நாளின் இரவுப் பொழுது எவ்வாறு இருந்திருக்கும் அவருக்கு? இது போன்ற விடை தெரியாக்  கேள்விகள் மனதை பிசைந்து  கொண்டே இருந்தன.

இருக்கலாம் கல்யாண வயதில் உள்ள மகளுக்கு சேர்க்க வேண்டிய பணமாகவோ  , இல்லை அவர்களது கல்விக் கட்டணமாகவோ , இல்லை குடும்பத்தின் மருத்துவ செலவாகவோ, இல்லையேல் அந்த குடும்பத்தின் உணவாகவோ மாற  இருந்திருக்கலாம் அந்த பணம்.

நன்றாகத்தான் போகிறது வாழ்கை. மனதை பிசையும் சில  விடை தெரியா  கேள்விகள் தோன்றாத வரை. 

அழகாய் பூத்ததுதான் இருக்கிறது அந்த குல்மொஹர் மரம். ஆனால் எனக்குத்தான் ரசிக்க மனமில்லை.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!










  

Tuesday, May 7, 2013

படிப்பது ஒரு பாவச்செயலா ??

பள்ளிக்கூடத்துல நல்ல விஷயம் எதுலயும் நம்ம பேர் வந்ததா வரலாறு,புவியியல் எதுவும் கிடையாது. நம்மளுக்கு சீனியரா ஒரு அண்ணன் இருந்தார். சீனியர்ன்னா ஒவ்வொரு வகுப்பிலும் ரெண்டு வருசமா படிச்சு அஸ்திவாரத்தை ரொம்ப பலமா போட்டுகிட்டு இருந்தார். அவருக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை "படிப்பு "

அண்ணன் படிப்பைத் தவிர மற்ற விஷயத்துல ரொம்ப கெட்டி. எந்த வாத்தியார்  இன்னைக்கு லீவுங்கிறதுல ஆரம்பிச்சு, என்னைக்கு   சத்துணவுல முட்டை போடுறாங்க  வரைக்கும்  அத்துபடி.

எங்களோட அறிவியல் வாத்தியார்  யாரையாவது ஒருத்தனை வாசிக்கச் சொல்லிட்டு நல்ல தூங்கி  பொழுதை போக்குவார். அந்த மாதிரி சமயங்களில் நம்ம அண்ணன் தான் கைகால் புடிச்சு விடுவார். குருபக்தின்னா அப்புடி ஒரு குருபக்தி ஹி ஹி .

தூக்கம் வராத நேரத்துல  அவர்  வகுப்பும் எடுப்பார் . இடையில ஏதாவது பேசினா,சேட்டை செய்தா அடி வெளுத்து விட்டுடுவார். பள்ளிக்கூடமே அவருக்கு பயப்படும்.ஒருநாள் வகுப்புக்கு வந்த அவர் நம்ம அண்ணனை பார்த்து, புத்தகத்தை எடுத்து வாசிக்க சொல்ல, அவன் அங்கும் இங்குமா புத்தகத்தை தேட, புத்தகம் எடுத்துட்டு வரலைன்னு அடி பிரிச்சுட்டாரு.

 அடுத்த நாள் வகுப்புக்கு வந்தவர், என்னடா இன்னைக்கு புத்தகம் கொண்டு வந்தியான்னு கேட்டுட்டு, அவனிடமிருந்தே  புத்தகத்தை வாங்கி வகுப்பெடுக்க, திடீரென சாமி வந்தவர் போல ஆவேசம் கொண்டு நம்ம அண்ணனை அடி வெளு வெளுன்னு வெளுத்துட்டார். அதுமட்டுமில்லாமல் ஸ்டாப் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டு ஒரு அடிமை சிக்கிட்டான்னு சொல்லி  ரெண்டு மூணு வாத்தியார்கிட்ட கூடுதலா அடி கொடுத்து  அனுப்பி வைச்சாரு.

 கண்ணீர்க் கரையோட அழுதுகிட்டே வந்தவனிடம் என்னாச்சு ? எதுக்கு உன்னைய அடிச்சாங்கன்னு கேட்டதுக்கு,  அவன்  புத்தகத்தோட கடைசி பக்க  அட்டையை காமிச்சான். அதுல  இப்படி  திருத்தம் பண்ணி   வைச்சிருந்தான் பாவிப்பய..

 படிப்பது
தீண்டாமை ஒரு பாவச் செயல்.
பள்ளிசெல்வது
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.
 பரீட்சை வைப்பது
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.
 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் ..