Sunday, April 21, 2013

பசுமை நிறைந்த பால்யம் - 4

முந்தைய பகுதிகளை படிக்க,
பசுமை நிறைந்த பால்யம் - 1
பசுமை நிறைந்த பால்யம் -2
பசுமை நிறைந்த பால்யம் -3 

பால்யத்தின்   விடியற்காலைப் பொழுதுகள்  சுகமானவை . அதிலும் விடுமுறை நாளின்  காலைப்பொழுதுகள்  எந்தவித நெருக்கடிகளும் இல்லாதவை. புத்தகத்தை விரித்து வைத்தவாறே படிப்பதாய் பாவனை செய்யும்  காலைப் பொழுதுகளும், அதிலிருந்து தப்பிப்பதற்கென்றே அமைந்து விடும்  வேலைகளும்,   சில நாட்களில்  நெல் அவிப்பதும்,  அதற்கான  ஆயத்தங்களும், அவித்த நெல்லை வாசலில் கொட்டும் போது வெளிவரும் நெல்மனமும்,  குவியலாக கொட்டி காலால் பரவலாக்கப்பட்ட விதங்களும்,  காய்ந்து கொண்டிருக்கும் நெல்லை அடிக்கடி பதம்  பார்த்துகொண்டிருக்கும் ஆயாவும், விளையாட செல்கையில்  எதிர்பாராமல் காய்ந்து கொண்டிருக்கும் நெல்லுக்கு  காக்கா  விரட்ட காவலாக ஆக்கபடுவதும் அதனை தவிர்க்க போராடுவதும்,   இப்போது நினைத்தாலும் அவ்வளவு பிடித்தமானதாக இருக்கிறது.

வெயில் பொழுதுகள் மிகவும் பிடித்தமானவை. வெளியில் சென்று விளையாடுவதற்கு எந்தவிதமான நிர்பந்தத்தையும்  தராதவை. உக்கிரமான வெயிலில் தெரு முழுவதும்  அலைந்து  திரிந்து விளையாடுவதும், வேர்த்து வழியும் உடம்பும், காலில் அப்பியுள்ள தெருப்புழுதியும்,    தாகமெடுத்த போது உடல் முழுவதும் வழிந்தோடுமாறு குடித்த தண்ணியும், களைத்த பொழுதுகளில் கூட விளையாடிய நண்பர்களுடன்    ஓய்வெடுக்கும் பெரிய  வேப்பமரத்து   நிழலும், தண்ணென்று வீசும் மெல்லிய காற்றின் குளிர்ச்சியும், தற்காலத்து எந்த காரணியாலும்  ஈடுகட்ட இயலாதவை.

பண்டிகை கால வீடு திரும்பல்கள் தித்திப்பானவை. எத்தனை நாள் விடுமுறையாயிருக்கும் என்று திரும்ப திரும்ப பார்க்கும் மாத  காலண்டரும், அடையாளமாய் மடித்து வைத்த தினசரி காலண்டரும், நண்பர்களுடனான பேச்சுகளே அந்தந்த பண்டிகை கொண்டாட்டத்திற்கு நிகரானவை. 

பொங்கலின் போது கரும்பு கடைகளுக்கு வருமுன்னே எங்களின் பேச்சு மூலம் அனைத்தும் சக்கையாக்கப் பட்டிருக்கும்.
தீபாவளின் போது  வெடிக்கும் வெடிகளை விட அதிக சந்தோஷத்தை தருபவை  அதை பற்றிய எங்களின்  பேச்சுகள். சற்றே மிகைப்படுத்தப்பட்ட பேச்சாயினும் அத்தனையையும் ரசிக்க வைத்த பண்டிகை கொண்டாட்டங்கள்.
                                               
இவை அனைத்துமே இப்பொழுதும் கிடைப்பவைதான், ஆனால்  நமது சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவற்றை   எல்லாம் ரசிக்கும் மனநிலையை விட்டு  வெகு தூரத்திற்கு நம்மை கொண்டு வந்து விட்டது என்பதுதான் மறுக்க முடியாத நிஜம்.

நிஜத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் போலி பிம்பத்துடன் இயைந்து இயல்பாய் இருக்கவும் இயலாமல் ஊசலாடி கொண்டிருக்கிறது எனது  பால்யம் குறித்த நினைவுகள். இந்த நினைவுகளின் மீட்சிதான் இன்னும் என்னை உயிர்ப்புடன் இயக்கிக் கொண்டிருக்கிறது.
நன்றாய்  இயக்கட்டும்  மீட்சிகளின் ஆளுமை ...

                                                                                                     பால்யம் மலரும் ...

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


6 comments:

  1. இவை அனைத்துமே இப்பொழுதும் கிடைப்பவைதான், ஆனால் நமது சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவற்றை எல்லாம் ரசிக்கும் மனநிலையை விட்டு வெகு தூரத்திற்கு நம்மை கொண்டு வந்து விட்டது என்பதுதான் மறுக்க முடியாத நிஜம்.
    namathu juniors athai repeat pannuvathai paarththu santhosapadalamea

    ReplyDelete
    Replies
    1. நமது அடுத்த சந்ததியருக்கு நாம் அனுபவித்த நிறைய விஷயங்கள் கிடைப்பதில்லை நண்பா. எனது ஆதங்கமும் அதுதான். நாம் வளர்ந்த விதம், விளையாடிய விளையாட்டுக்கள், அந்த குழு மனப்பான்மையும், விட்டுக்குடுக்கும் தன்மையும் மிகவும் குறைந்து விட்டது.இன்றைய காலச்சூழலில் எத்தனை குழந்தைகள் வீதியில் வந்து விளையாடுகிறார்கள்? நாம் எத்தனை பேர் அதை அனுமதிக்கிறோம்?. பெரும்பாலும் வீடியோ கேம்ஸிலும், சுட்டி டீவியிலும் கழிந்து விடுகிறது இவர்களின் பொழுது போக்குகள்.. வருகைக்கும் மறுமொழிட்டமைக்கும் நன்றி நண்பா...

      Delete
    2. very true.... சத்தியமான உண்மைகள்..இன்றைய தளிர்களின் வாழ்க்கை சூழ்நிலை வீட்டிலே அடைந்திருக்கிற மாதிரிதான் அமைந்திருக்கிறது.எல்லாம் கிடைக்கிறது...உயிரோட்டம் மிஸ்சிங்...பொன்

      Delete
    3. வருகைக்கும்,மறுமொழியிட்டமைக்கும் நன்றி நண்பரே..

      Delete
  2. பண்டிகை சந்தோஷங்கள் கூட இப்போது ஒப்பனை பூசியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்! நம் பெற்றோர் காலத்தில் அன்பு, உறவுகள்தான் பெரிதாய் இருந்தது...இப்ப எல்லாமே பணம்... பணம்.. அதை தேடுவதிலும் சேர்த்து கொண்டிருப்பதிலும் இயல்பை தொலைத்து கொண்டிருக்கிறோம். அருமையான பால்ய நினைவுகள் தொடருங்க...!

    ReplyDelete
    Replies
    1. ஒப்பனை பூசியிருக்கிறது// சரியான வார்த்தை பதம் தான்.எதையுமே வெகு மேலோட்டமாக எடுத்து கொள்ளும் மனநிலைக்கு வந்து விட்டோம். ஒன்றே ஒன்றை சேர்ப்பதுதான் நமது குறிக்கோள் என்றாகி விட்டது. நாம் விரும்புகிறோமோ இல்லையோ படிப்பு, வாழ்க்கை எல்லாமே அதை நோக்கித்தான் தள்ளப்படுகிறோம்... வருகைக்கு நன்றி டீச்சர்.

      Delete