Thursday, January 31, 2013

"விஸ்வரூப” அம்மா





பெண்களின் தைரியத்தை பற்றி  பேச நினைக்கையில் முதலில் நினைவுக்கு வருவது நீங்கள்தான். உங்களது தீர்க்கமான முடிவெடுக்கும் திறனும் தைரியமும் அசாத்தியமானதுதான். ஆனால் அது சில நேரங்களில் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்” என்று பிடிவாதம் பிடிக்கையில் அந்த நம்பிக்கை நீர்த்துப் போகிறது. 

என்ன செய்தான் அந்த “விஸ்வரூபக் கலைஞன்” உங்களை? ஏன் இத்தனை சித்திரவதை அவனுக்கு? வாழ்ந்து வளர்ந்த இடத்தை விட்டு நான் வெளிப்போகிறேன் என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது உங்களது ஆட்சி பரிபாலனம். திறமையும் கலையும் ஒருங்கே அமையப் பெற்றவன் சற்றுக் கர்வத்துடன் இருப்பது பொது விதிதானே!! இது கலைத்துறையில் இருந்த உங்களுக்கு தெரியாதா?

எது உங்களின் காழ்ப்புணர்ச்சியை தூண்டி விட்டது?
வியாபார ரீதியாக உங்கள் சேனலுக்கு பிடி குடுக்காததா? அல்லது தந்த சேட்டிலைட் உரிமையை திரும்ப வாங்கியதா?
இல்லை அதை உங்களுக்கு எதிரான சேனலுக்கு விற்றதா?
இல்லை ஒரு வேட்டி  தமிழன் பிரதமராக வேண்டும் என்று சொன்னதை மஞ்சள் துண்டார் திரித்து உங்களை தொடர்பு படுத்தி  சொன்னதால் ஏற்பட்ட கடுப்பா?

சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்த பின்னரும், நீதிமன்றம் தடையை நீக்கிய பின்னர் தடைக்கு தடை வாங்கி உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொண்டீர்களே, இதை என்னவென்று சொல்வது?

கீழே விழுந்தாலும் மூஞ்சில் மண் ஒட்டாத கதையாக கலவரம் வெடிக்குமென்று உளவுத்துறை சொன்னது, மொசாட் சொன்னதுன்னு சின்னப் புள்ள மாதிரி சொல்றீங்க, கூடவே மொத்த காவலர்கள், திரையிடப்படும் திரையரங்குகள், பாதுகாப்புக்கு தேவைப்படும் காவலர் என்று புள்ளிவிபரம் சொல்லி ஒரு எமெர்ஜென்சி ரேஞ்சுக்கு எங்களை கலவரப்படுத்துறீங்களே, இதை என்னவென்று சொல்வது?   
அப்புறமா சம்மந்தப்பட்டவர்கள் கூடிப் பேசி சுமூக முடிவு ஏற்பட்டால் அரசுக்கு அதற்கு ஒத்துழைக்கும் என்கிறீர்கள்!! இது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போலல்லவா இருக்கிறது!!
ஒரு ப்ரச்சனையை (நாமே கிளப்பியது தானே)  தெளிவாக தீர்க்க இயலாமல் அதை அன்னியப்படுத்தி வைத்திருக்கும் நமக்கு பிரதமர் பதவி கிடைக்குமா? அல்லது கிடைத்தால் நிலைக்குமா??

குடும்ப அரசியல் அராஜகம் தாங்காமல் இம்முறை உங்களுக்கு மகுடம் சூட்டியதற்கு 16 மணி நேர பவர் கட், பஸ் கட்டண அதிரடி உயர்வு, விவசாயிகளின் தொடர் தற்கொலை அப்படின்னு எங்களுக்கு ரொம்ப செஞ்சிட்டீங்க. போதாக்குறைக்கு இப்போ  இந்த மலிவான அரசியல்??

நான்கைந்து குடும்பமாய் சேர்ந்து போன ஆட்சிக்கு அவர்களே குழி பறித்ததை போல நீங்கள் ஒருவரே உங்கள் ஏதேச்சதிகார  குணத்தால் உங்கள் ஆட்சிக்கு நீங்களே உலை வைத்து விடாதீர்கள்..

கடைசியாய் கர்வக் கலைஞன் சொன்னதுதான்

“விழுந்தால் விதையாய் விழுவேன்

எழுந்தால் விருட்சமாய் எழுவேன்”

“விஸ்வரூபக் கலைஞன்” மகா விருட்சமாய் உருமாறும் நாளை நோக்கி, நம்பிக்கையோடும் நாங்களும்….

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன்!!

Wednesday, January 30, 2013

கேம்லின் பேனாவும், வெள்ளை சட்டையும்.






“கேம்லின் பேனா” இந்த பேனாவுக்கு பள்ளி பருவத்தில் எனக்கு இருந்த ஆசை அளவில்லாதது. நண்பர்களில் பெரும்பாலானோர் “ஹீரோ” பேனா மீது நாட்டம் செலுத்த எனக்கோ முழு ஆசையும் இதன் மீதுதான்.

அப்பாவுடன் வெளியில் செல்லுகையில்  என்ன வேண்டும் என்று கேட்கும் போதெல்லாம் நான் கேட்பது இந்த பேனாதான். சில சமயம் பேனாவும், சில சமயம் திட்டும் கிடைக்கும்.பேனா வாங்கும் ஒவ்வொரு முறையும் இதுதான் கடைசி, இதில்தான் பப்ளிக் எக்ஸாம் எழுத வேண்டும் என்ற தீர்மானங்கள் எல்லாம் அடுத்த மாடல் பேனாவை பார்க்கும் வரையே!!

புது பேனா வாங்கி இங்க் ஊற்றியவுடன் எதாவது சாமி பேரை எழுதி பார்த்துவிட்டு திருப்தியாய் சட்டைப் பையில் வைத்துக் கொள்வதுடன் அடிக்கடி அதை தொட்டுப் பார்த்துக் கொண்டு பள்ளிக்கு செல்வது. பள்ளியில் நண்பர்கள்  அதை வாங்கி எழுதி பார்த்து விட்டு சில சமயங்களில் “முள்ளு கீறுது” என்பார்கள், உடனே அதை மென்மையாக்க டிபன் பாக்ஸின் பின்புறம் வைத்து சர சரவென்று கிறுக்கி அதை சரிப்படுத்துவது. சமயங்களில் இங்க் சரியாக வராத போது ப்ளேடால் அந்த முள்ளில் சிறிதாக கீறி அதை சரியாக்குவது. அப்படியும் சரிவராத பேனாக்களின் நிஃப்பை ப்ளேடால் அழுத்தமாக கோடு போட்டு அதிக இங்க் வர வைப்பது இப்படியாக சில நாட்கள் செல்லும் எங்கள் ஆராய்ச்சி.

அது போல எனது ஒரு புது பேனாவை நண்பனொருவன் நன்றாக கீறி ஆப்பரேஷன் செய்யும் பொழுது, என்னுடைய தலைமை ஆசிரியர் என்னை அழைத்து பேங்குக்கு போயிருந்த இன்னொரு வாத்தியாரிடம் ஒரு செக்கை குடுத்துவிட்டு வருமாறு கூற நானும் வாங்கி அதை சட்டைப் பையில் வைத்து கொண்டு ஆப்பரேஷனில் இருந்த அந்த பேனாவையும் வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு (புதுப் பேனாவாச்சே!!!)

சைக்கிளில் வெகு வேகமாக பேங்குக்கு போயி அந்த வாத்தியாரிடம் தர செக்கை எடுத்தால் இண்டியன் பேங்க் செக் “இங்க் செக்” ஆகி விட்டது.. இதில் நமது வேர்வைத் துளிகள் வேறு… என் வெள்ளை சட்டை பாதி  ஊதா சட்டையாகி விட்டது. பள்ளிக்கு வந்தவுடன் தீபாவளி கொண்டாடி விட்டார் நம்ம தலைமை ஆசிரியர்.அப்புறம் தான் தெரிந்தது அது அவர்களின் சம்பள செக் என்று.

அழாக் குறையாக வகுப்புக்கு வந்த சற்று நேரத்தில் அந்த ஆப்பரேஷன் நண்பன் கேட்டான் “என்னடா இப்போ இங்க் நல்லா வருதான்னு?” கடுப்புடன் நான் சொன்னேன் ம்..ம்.. அடிவாங்கி குடுக்குற அளவுக்கு வருதுன்னு ..

இப்பொழுது பார்க்கர், க்ராஸ் என்று எத்தனையோ விதவிதமான விலை உயர்ந்த பேனா கொண்டு எழுதினாலும், அந்த கேம்லின் பேனா கொண்டு எழுதிய போது இருந்த மகிழ்ச்சியோ ஆர்வமோ இப்போது இல்லை. பழைய நினைவுகள் ஒரு பொக்கிஷம் தான். அது துக்கமோ, சந்தோஷமோ, வலி தந்தவை அனுபவமாகவும், உவப்பானவை மென்மையாய் மயிலிறகைப் போலவும் மனதை வருடிப் போகின்றன இதமாக.

வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!


Saturday, January 19, 2013

சமர் – பார்த்தீங்கன்னா உங்களுக்கு திமிர்.

“மனித வேட்டை”ன்னு ஒரு சுபா எழுதின ஒரு கதையில 4 பணக்காரங்க பொழுது போகாம காட்டு மிருகங்களை அவங்களோட தீவுல வேட்டையாடி போரடிச்சு, மனிதனை கொண்டு வந்து அந்த தீவுல விட்டு வேட்டையாடுவாங்க அதேமாதிரியான கதைதான் இதுவும்.

ரெண்டு பணக்காரத் திமிர் பிடிச்ச  _ _ _  _ _ _ _ கேப்புல எதாவது கெட்ட வார்த்தை போட்டுக்கங்க. ஹீரோவை டார்ச்சர் பண்ணுறதா நெனைச்சு படம் பார்க்க போன நம்மள மாதிரியான அப்பாவிகளை டார்ச்சர் பண்ணுறதுதான் கதை. படத்தோட ஆரம்பத்துலேயே “எலெக்ட்ரிக் சா” கொண்டு வருவாங்க நான் கூட மரம் அறுக்கத்தான் கொண்டு வராங்கன்னு நெனைச்சா அப்புறம் தான் தெரிஞ்சது அது படம் பார்க்க போன நம்ம கழுத்த அறுக்கத்தான்னு.. என்னத்தை செய்ய?? விதி வலியது!!!

பாங்காங்க்கு ஒசி டிக்கெட்டுல போன நம்ம விசாலு ரொம்ப திறமையா நவரசத்தையும் மூஞ்சில காட்டி நடிச்சுருக்காப்ல. ஆனா நம்மளுக்குத்தான் கடுப்பைத் தவிர வேற எந்த உணர்ச்சியும் வரமாட்டேங்குது.

இந்த ஊரில பெரிய டான் அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஸ்ரீமனைக் காட்டுறாங்க அப்போ அவரும் கைல டாட்டூ குத்திக்கிட்டு ரொம்ப டெரரா இருக்காரு.. படம் பார்க்குற எல்லாரும் பயத்துல கண்ணை மூடிக்கிட்டாங்க…. (வடிவேலுவுக்கு ரீப்ளேஸ்மென்ட் போல பார்த்த ஒடனே சிரிப்பு வருது….)

பயங்கரமான திருப்பங்கள் படம்  நெடுகவளைஞ்சு வளைஞ்சு ஒட
நம்மளுக்குத்தான் ரொம்ப குஷ்டமா இருக்கு.. ஆனா நம்ம விசாலு   பஸ்,காரை எல்லாம் அப்படியே அலேக்கா தாண்டி, தாண்டி வில்லனை தொரத்திகிட்டு ஒடுறார். அப்படி ஒடி கடைசியா ஒரு ட்ரைனேஜ் மேன்ஹோல் பக்கத்துல ஒக்கார்ந்து உத்து உத்து பார்ப்பார். ஏன்னா மந்திரவாதி படத்துல வர்ற மாதிரி, ட்ரைனேஜ் மேன்ஹோல் அந்த வில்லனை விழுங்கிடும். அப்பாடா இடைவேளை…

ஆனா அந்த சனியன் பிடிச்சவன் சாகுறதுக்கு முன்னாடி வில்லனை பத்தி குடுக்குற பில்டப்பும், ரெண்டு சைக்கோ வில்லனும் கை தட்டி சிரிக்கிறதையும் பர்த்துட்டு சரி இனிமேதான் படமே அப்படின்னு தப்பா கணிச்சுட்டு உள்ளே போனா, ரெண்டு சைக்கோ வில்லனும் சிரிச்சு சிரிச்சே நம்மள சாகடிக்குறானுங்க…

அது எப்படி இருக்கும்ன்னா ஏண்டா எவ்வளவு தெகிரியம் இருந்தா இடைவேளைக்கு அப்புறமாவும் நீங்க படம் பார்க்க வந்திருப்பீங்கன்னு நம்மள பார்த்து கேக்கிற மாதிரி இருக்கும்.

ஒரு ஸீன்ல நம்ம விசால் கேப்பார் ஏண்டா என்னைய சாகடிக்குறீங்கன்னு அதுக்கு உன்னைய மட்டுமா படம் பார்க்க வந்த எல்லாரையும் தானேன்னு மைண்ட் வாய்ஸ் கேக்குறத மறைக்க முடியல..

காஸ்ட்யூம் டிசைனருக்கு பாதி சம்பளம்தான் போல, த்ரிஷாவை ரொம்ப நேரமா ஒரே ட்ரெஸ்ஸோட சுத்த விட்டுட்டாங்க கடைசில. அந்த ட்ரெஸ் எப்படி இருக்கும்னா ரிங் மாஸ்டருக்கு தெரியாம பாதியில கூட்டி வந்த சர்க்கஸ்காரி போட்டிருக்கிற ட்ரெஸ்ஸேதான் அது.

கடைசியா படம் முடிஞ்சதுக்கு அப்புறமும் நம்மளை கடுப்பேத்திட்டாங்க எப்படின்னா “WRITTEN& DIRECTED BY THIRU” ன்னு போட்டு அவரை மறக்க முடியாதபடி செஞ்சிட்டாங்க. (நம்மள கொலைகாரனா ஆக்காம விடமாட்டாங்க போல!!)

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!

Monday, January 7, 2013

அன்பென்றால் அம்மா!!!


அம்மா இந்த ஒற்றைச் சொல்லுக்கு அர்த்தம்  ஒரு வரியில் தர இயலுமா ? நான் எத்தனையோ பக்கம் பக்கமாய் எழுதினாலும் என்னால் முழுவதும்  ஒரு விவரனத்துள் அடைக்க  இயலாத ஒரே விஷயம்  உன்  அன்புதான் அம்மா.
என் கன்னித்தமிழும் தடுமாறிய தருணங்கள் உனக்கான வரையறையை அகராதியில் தேடிய போதுதான். அவள் "கன்னி" என்பதால்தான் உன் அருமை பெருமையை உணர்த்த இயலவில்லையோ ஓரிரு வார்த்தைகளில் !!!

பால்யத்தில் நான் எழுந்திரிக்கும்  காலைப்பொழுது உனது அன்பான கொஞ்சலுடன் தான் ஆரம்பிக்கும் எப்படிப்பட்டதொரு வேலைப்பளுவிலும் எனக்கான உனது பக்கங்கள் ஒதுக்கப்பட்டே இருக்கும்அவை முழுக்க முழுக்க உன் அன்பினால் நிரம்பியே கிடக்கும்.

நான் சொல் பேச்சு கேளாமல் இருக்கும் சமயங்களில்,  என்னை விளையாட்டாய் கோபப்படுத்த “ தவிட்டுக்கு வாங்கிய பிள்ளைதானே நீ”  என்று சொல்லுவாய். கோபத்துடன்  வீம்பாய் முறைத்து கொண்டிருக்கும் என்னை சமாதானம் செய்ய கொஞ்சுவாய் நீ . அந்த அதீத கொஞ்சலுக்காய்  இன்னொரு முறை நீ அப்படி சொல்லக் காத்துக் கொண்டிருப்பேன் நான் . 


பண்டிகை காலங்களில் அடுப்பும், வாணலியுமாய்  இருக்கும் உன்னைக் கழுத்தில் கட்டிக்கொண்டு கொஞ்சுவேன் தள்ளிப்போ என்ற உன் எச்சரிக்கையையும் மீறி, அவ்வாறான நாளொன்றில் பொங்கி என் மேல் தெறித்து விட்ட இரண்டொரு எண்ணெய்த்துளிகளும், நான் செய்த ஆர்ப்பாட்டமும், மனம் கலங்கி, தவிப்பும் அழுகையுமாய்  மருந்திட்டு என்னை சமாதானம்செய்த பின்னர் நான் கவனித்தேன் அம்மா, உன்மேல் என்னை விட அதிகமாய் தெறித்திருந்த எண்ணெய்த் துளிகளை!!!  

நான் எவ்வளவு சாப்பிட்டால் திருப்தி அடையும் உன் மனசு? இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று எவ்வளவு தான் சோறு போடுவாய் நீ ? உன் அன்பினால் வழக்கத்தை மீறி அதிகமாய் சாப்பிட்டு விட்டு நடக்க இயலாமல் ஊரும்  போது,  அருகிலுள்ள யாரிடமாவது  அங்கலாய்த்து கொண்டிருப்பாய்முன்னாடி மாதிரி இவன் சாப்பிடுவதே இல்லை என்று!!!  

வேலைக்கென்று வெளி உலகம்   வந்த பின்னர் எனது வட்டம் பெரிதாகிப் போனது . ஆனால்  உனக்கோ நானே உலகமாகிப் போனேன். நான் எப்போதாவது  மனதளவில்  கஷ்டப்படும் போது  அது  உனக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத்  தெரியாது. உடனே உனது அழைப்பு வந்து விடும் எனது அலைபேசியில். அம்மா என்று வரும் பேரைக் கண்டவுடன் எனது மனக்கிலேசங்கள் எல்லாம் பறந்து விடும்

நான் அம்மா என்று சொல்வதை வைத்தே  என் மனநிலையை துல்லியமாக கணித்து விடுவாய் ஒரு கை தேர்ந்த மருத்துவர்  போலபிறகென்ன போதும் போதுமென்ற அளவுக்கு உன் அன்பு மழையில் நனையவிட்டு, தனி ஒருவனாய் இந்த உலகை எதிர்த்துப் போராடும் அளவுக்கு மனதைரியத்தை தந்து  உன் அன்பினால் என்னை நிறையச் செய்வாய்.
உன் மடித்தலையணை தந்த நிம்மதியும், அரவணைப்பும் பாச உணர்வுகளும் இதுவரை மட்டுமல்ல இனிமேலும் வேறெங்கிலும் கிட்டப்போவது இல்லை அம்மா.

ஒருமுறை திரு.அப்துல் கலாம் கூறினார்,
ஒரே ஒருநாள் நீ அழும்போது
உன் அம்மா புன்னகைத்தது
அது “நீ பிறந்த தினத்தன்று”.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். உனக்கென்ன எப்பொழுதுமே முழுக்க முழுக்க அன்பினாலே என்னை  நனைத்து விட்டு  இயல்பாய்  இருந்து விடுவாய், நானோ உன் அன்பின் முழு பரிமாணத்தையும் தாங்க இயலாமல் அடிக்கடி நெட்டுயிர்த்துப் போய்விடுகிறேன் அம்மா.சுருக்கமாகச் சொன்னால்

தெய்வங்களின் மறு உருவம் அம்மாக்கள்.
இல்லையில்லை
அம்மாக்களின் மறு உருவம்தான் தெய்வங்கள் !!!




வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!