Monday, October 8, 2012

மறைந்து விட்ட திண்ணைகள் !!!

                                        திண்ணைக்கும் நமக்குமான தொடர்பு அலாதியானது.   வீட்டின் எத்தனையோ இடங்கள் நமக்கு  பிடித்தமான ஒன்றாக இருந்த போதிலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் எதோ ஒருவிதமான நெருக்கத்தை , அன்யோன்யத்தை  தந்திருக்கும் இந்த திண்ணைகள்.
சிறுவயதில் வெளியில் விளையாடி விட்டு தாமதமாய் வீடு திரும்பும் போதோ, அல்லது அனுமதி இல்லாமல்  பஞ்சாயத்து டி.வியில் படம் பார்த்துவிட்டு, தாமதமாய்  ஒருவித கலக்கமான மனநிலையில் வீடு திரும்பும் போதோ  வீட்டின் நிலவரத்தை நிசப்தத்தின் வாயிலாக  அறிவிப்பது   இந்த  திண்ணைகள் தாம்.
                          
ரேங்க் கார்டை அப்பாவிடம் கொடுத்துவிட்டு   நேர்கொண்டு பேச இயலாமல் தவித்த எத்தனையோ பொழுதுகளில் தாய்க்கோழியாய்  அடைகாத்த  அந்த தூண்களும்,  போட்டி போட்டு கொண்டு சுண்ணாம்பு அடித்த தூண்களில் கிறுக்கிய பெயர்களும், பொங்கலன்று புதிதாய் உடுத்திகொள்ளும்  காவி பார்டர்களும்,    திண்ணையில் உள்ள உத்திரத்தை எட்டி தொட்டு பார்த்து எனது    உயரத்தை அளந்த விதங்களும்,
 உச்சிவெயிலில் ஊர்சுற்றிவிட்டு வர, மிளகாயும், வற்றலையும் காய  வைத்து விட்டு , வாகாய்  தூணில் சாய்ந்து கொண்டு அம்மாவும், அக்காக்களும் பேசிக்    கொண்டிருக்கும் இடமாய் , கோபம் கொண்ட இரவுகளில் சாப்பிடாமல் வீம்பாய் சுருண்டு    படுத்துக்கொள்ளும் இடமாய்,  விடுமுறை நாட்களின் உச்சி வெயில் போதுகளில் தாயமோ, பரமபதமோ  விளையாடும்  இடமாய், யாருமற்ற  தனிமையில் மல்லாந்து  படுத்து ஓடுகளையும், குறுக்கு சட்டங்களையும் எண்ணிக்கொண்டு இருக்கும் இடமாய்  இருந்தது இந்த திண்ணைகள் தாம். 

படம் பார்க்கவோ, ஆற்றில் குளிப்பதற்கோ அனுமதி கிடைத்த   சந்தோஷத்தில்  துள்ளி குதித்து கொண்டு வெளி வரும் போது  எனக்கு சொல்லப்பட்டு கொண்டிருக்கும் நிபந்தனைகளின்  கடைசி  வார்த்தைகளின் சாட்சியாக நின்றவை  இந்த தூண்களும், திண்ணைகளும்  தான் .

வெவ்வேறு கால உருமாற்றங்களின் சாட்சியான திண்ணை   தாழ்வாரமாகி, பிறகு மரச்சட்டமிடப்பட்ட தட்டிக்குள்  அடைந்து, இன்று வழக்கொழிந்து போய்விட்டன.

விருந்தோம்பலின் அடையாளமாய் ஒரு காலத்தில் திகழ்ந்த இந்த திண்ணைகள் இன்று நமது நினைவுகளிலும், புகைப்படங்களிலும் மட்டுமே இருக்கின்றன,                        
கால எந்திரம் சுழற்றிய சுழற்சிகளின் மௌன சாட்சியாய் !!!


வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!! 
15 comments:

 1. திண்ணை என்றதுமே உள்ளே நுழைந்து விட்டேன் நீங்கள் கூரிய அனைத்து விதமான உணர்வுகளையும் இந்த திண்ணையில் அனுபவித்தவள் நானும் என்பதால் படங்களிலேயே மனம் ஒன்றி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஆம். மனதை ஒன்றித்து விடும் அது ஒருவிதமான லயிப்பு, வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி சகோ.

   Delete
 2. "திண்ணை" சொன்னவைகள் அனைத்தும் உண்மையே..திண்ணையைக்கேட்டால் சொல்லும் கதை கதையாய்...எத்தனை பெரிய மனிதரிகல் /ஆண்கள் பெண்க‌ள் என்று அதில் உட்க்கார்ந்து சொந்தக் கதைகல் ஊர்க்கதைக‌ல் என்று பேசியது..எல்லா இரகசியமும் தெரிந்திருக்குமோ...சின்னஞ் சிறார்களின் குதித்து விளையாடும், ஒரு அரங்கமும் கூட..அன்று, ஊர் பேர் தெரியாத மனிதர்களின் விருந்தோம்பல்கலும், அடைக்கலமும் கொடுத்திருக்கும் ஒரு கெஸ்ட் ஹொள‌ஸ்..போட்டோ வெரி குட்..வந்தாரை எல்லாம் வறவேற்று, மோர் தண்ணீர் என்று கொடுத்து இளப்பாற இடமளிக்கும் ஒரு வரவேற்ப்பரை.pon

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி நண்பரே..

   Delete
 3. இதை கவிதையாக வடித்திருக்கலாம். அத்தனை அற்புதமான நினைவுகள்!

  ReplyDelete
 4. இதை கவிதையாக வடித்திருக்கலாம். அத்தனையும் அழகான நினைவுகள்

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? இல்லை ஒருமுறை கவிதை எழுதுறேன்னு எழுதி நம்ம "வெளங்காதவன்" கிட்ட நல்லா வாங்கி கட்டிகிட்டேன்...அதான் :-):-)

   Delete
 5. அன்பின் ராபர்ட் - திண்ணைகள் மறக்க இயலாதவை - திண்ணைகளை பற்றிய மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்திப்பது மனதிற்குப் பிடித்த செயல்.. பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா ..

   Delete
 6. பல காதல் உருவான இடம்,
  அப்பா, அம்மாக்கு டிமிக்கி கொடுத்துட்டு திருட்டு தம்மு, தண்ணி, சினிமான்னு சதி திட்டம் தீட்டப்பட்ட இடம், நாத்தனார், மாமியார், மருமகள் பற்றி புரணி பேசிய இடம்,
  காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தப்போன்னு தாத்தா வரலாறு பேசிய இடம்..,
  ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டின்னு பாட்டி கதை சொன்ன இடம்...,
  அ, ஆன்னு எழுத தெரியாம பக்கத்து வீட்டு அண்ணா கைப்பிடித்து எழுத கற்று கொடுத்த இடம்
  விவசாயம், மாடு, கண்ணு, மகனின் படிப்பி மகளின் கல்யாண கடன் பற்றி நண்பரிடம் அப்பா அழுத இடம் ,
  சீட்டு ஏலம், கள்ளா காதல் பஞ்சாயத்து, திருவிழா ஏற்பாடுலாம் நடந்த இடம் கூட இதான்.

  ReplyDelete
  Replies
  1. அய்யைய்யோ இம்பூட்டு நினைவுகளா ??? வருகைக்கும் இந்த நினைவுப் பகிர்வுக்கும் நன்றிக்கா .

   Delete
 7. நல்லதொரு நினைவோட்ட பதிவு !!.அகலக்கால் வைத்து தின்னைகளுக்கிடையே தாண்டி மூக்குடைத்துக்கொண்ட சிறு வயது அனுபவம் எனக்குண்டு,திண்ணையில் சாயங்காலம் அடுத்த வீடு,பக்கத்து வீடு என அனைவரும் அமர்ந்து கதை பேசிகொண்டிருப்பார்கள்..,யாரென்றே அறியாத அழையா விருந்தினர்களை உபசரிக்க இவை அமைக்கப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்...இந்த காலத்துக்கு திண்ணை வேண்டாம் என்றே தோன்றுகிறது.,காலமாற்றம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் !! :) ,

  ReplyDelete
  Replies
  1. காலப்போக்கில் மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது தான். வருகைக்கும், மறுமொழியிட்டமைக்கும் நன்றி நண்பரே ...

   Delete
 8. சரியான ஒரு மழை நாளில் சாரலுக்காக திண்ணையில் தொங்க விட பட்டிருந்த கோணி பை திரையில் இருந்த ஒரு சின்ன ஓட்டையில் தலையை மட்டும் நுழைத்து தெருவுக்கு காட்டிக் கொண்டு, 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு...' பாட்டு பாடிக் கொண்டிருந்த போது கோணி பை அறுந்து தொபுகடீரென்று கீழே தாழ்வாரத்தில் விழுந்து மூக்கையும், பல்லையும் உடைத்துக் கொண்டது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு வகையில் திண்ணை என்பது நம் கலாசாரத்தின் அடையாளமாகவே காணப் பட்டது. இன்றைய வரவேற்பறையை விட திகம் மதிக்கப் பட்டது அன்றைய திண்ணை..... உங்கள் ஞாபகத்துக்கு மிக்க நன்றி....

  ReplyDelete
  Replies
  1. மறுமொழியிட்டமைக்கு நன்றி நண்பரே .

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...