Thursday, September 13, 2012

கசாபை தூக்கிலிட வேண்டாம்!!!

                                                            கசாபை தூக்கிலிட வேண்டாம்.  அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டான்? மூளைசலவை செய்யப்பட அவனும் அவன் கூட்டாளிகளும்  இயந்திர துப்பாக்கியால் குழந்தைகள் , பெண்கள் என்ற வேறுபாடின்றி கொஞ்சமே கொஞ்சமாக 166 பேரை குருவி சுடுவது போல சுட்டுக்கொன்றான்  அவ்வளவே !!! இது  என்ன மரண தண்டனை தரக்கூடிய அளவுக்கு கொடிய குற்றமா என்ன? அப்படியே இருந்தாலும் "கண்ணுக்கு கண்"  "பல்லுக்கு பல்" என்பது காட்டு மிராண்டிகளின் சட்டம். நாகரீக வளர்ச்சியில் நாம் எவ்வளவு முன்னேறி விட்டோம்.
"கொலைக்கு இன்னொரு கொலை நியாயமாகிவிடாது "

உண்மைதான். இத்தகைய கொடூர கொலைகளுக்கு  சாதாரணமாக வழங்கப்படும் மரணதண்டனை போதாது  மாறாக அணுஅணுவாய்  அவனை சித்திரவதை செய்து வெட்டி கொல்ல வேண்டும் .

கசாபுக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தவுடன், மரண தண்டனைக்கு எதிராக  சிலர் பேசுவது என்னவோ அவர்கள் மட்டும் தான் நாகரீகத்தின் விளைவாக மிகவும் பண்பட்டவர்கள் போலும், இதை ஆதரிப்பவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் போலும் ஒரு மாயை உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது சமூக வலைதளங்களில்.

எவ்வளவு திமிரும், அரக்கத்தனமும் இருந்தால் எதிரி நாட்டின் வர்த்த தலைநகரில்  நுழைந்து  குழந்தைகள், பெண்கள்  என்ற வேறுபாடின்றி  நூற்றுக் கணக்கில் சுட்டுக்கொல்லுவான் ஒருவன் அந்த  அரக்கனுக்கு  நாம் இரக்கம் காட்ட வேண்டுமாம். நடந்த செயல் ஓர் "அறிவிக்கப்படாத போர்". கொடூரத்தின் உச்சகட்டம். என்ன நடக்கிறது என்று ஆறாம் அறிவு சிந்திக்கப்படும் முன்பே  மூளையை  சிதறடித்தது இந்த பாதகனின் தோட்டாக்கள் தான்.
இது காந்திய தேசமாம் மரண தண்டனை கூடாதாம் , பூக்களை விட மென்மையான குழந்தைகளுக்கு  தோட்டாக்களை  பரிசளித்தவனுக்கு, பூவையா  கொண்டு அர்ச்சிக்க வேண்டும்!! என்ன ஒரு அபத்தம் !

நம்மிடம்  உள்ள  மனிதாபிமானம் உணர்ச்சிவேகத்தில் தன்னிலை மறந்து தவறிழைத்தவர்களுக்கு வேண்டுமானால் கருணை  காட்டலாம். ஆனால் கொல்லப்படுவோம் என்று தெரிந்தே, மனது முழுக்க வன்மத்தோடும்  , வெறியோடும் வந்த இவனுக்கு தண்டனை குறைப்பு  என்ற கூப்பாடு எதற்கு ? ஆயுள் தண்டனையாக்கினால் மட்டும் இவன் திருந்தி விடுவானா  என்ன ?  எத்தனை பேரின் கனவுகளை சிதறடித்தான், எத்தனை குடும்பங்கள் தங்கள்  வாழ்வாதாரத்தின் அடிப்படையான அப்பாவையோ, அம்மாவையோ , அண்ணனையோ, அக்காவையோ இழந்து விட்டு  நிர்க்கதியாய் நிற்கின்றன ?  அந்த  குடும்பங்களுக்கு  நாம் தரும் பதில் என்ன?

 பொக்கேவுடன்  விருந்திற்கு வந்தவர்களுக்கு நாம் மரணதண்டனை வழங்கவில்லை . மாறாக நம்மீது படையெடுத்து வந்தவர்களுக்குதான்  ஆம் இதுவும் ஒருவகையான  படையெடுப்புதான்!  இந்த தண்டனை.  போர்க்களத்தில் மட்டும் நம் வீரர்கள் என்ன பூவா பறிக்கப்போகிறார்கள் ? அங்கும் உயிர் தானே பலியிடப்படுகிறது. பின் என்ன ? போரிலாவது யுத்த தர்மத்தை எதிர்பார்க்கலாம். மும்பையில் நடந்தது அதற்கும் குறைவானதுதானே .இத்தண்டனை  தேவை இல்லை என்றால்  காந்தீய தேசத்திற்கு படை எதற்கு? படைக்கலங்கள் எதற்கு ? அக்னி , ப்ரமோஸ் என்று  ஒவ்வொரு  பரிசோதனையின்   வெற்றின் போது நாம் மயிர் கூச்செறிய முஷ்டி  மடக்கி பெருமிதம் அடைவது  ஏன் ?

உயிரின் மதிப்பு தெரிந்தவர்களுக்கு, மனிதர்களுக்கு வேண்டுமானால் கருணை காட்டலாம். ஆனால் சில மாக்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மொழியில் பதில் பேசுவதே பொருத்தமாயிருக்கும். அந்த மொழிதான் "மரணம் "   அது போரிலாவது இல்லை தண்டனையிலாவது  .
  உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த பின்னும்  இன்னும் மறுமுறையீட்டு மனு (review petition)  தீர்வு மனு (curative petition), கடைசியாக கருணை மனு (mercy petition) எல்லாம் போட்டு (கூடவே பிரியாணியும் போட்டு) சிலபல அரசியல் சித்து விளையாட்டு விளையாடி கடைசியிலாவது  கசாபுக்கு  மரண தண்டனையை  தருவதே இதில் இறந்த அப்பாவிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் . இல்லாவிட்டால் அவர்களின்  ஆன்மா  நம்மை மன்னிக்கவே மன்னிக்காது .   நினைவில் கொள்ளுங்கள் 
"தாமதமாக கிடைக்கும் நீதியும் ஒரு வகையான அநீதியே".

இதையெல்லாம் விட்டுவிட்டு   "கொலைக்கு இன்னொரு கொலை நியாயமாகிவிடாது " இது காட்டு மிராண்டித்தனம், இப்படி செய்பவர்கள் காட்டுமிராண்டிகள் என்றால்  நான் எப்பொழுதும் காட்டுமிராண்டியாக,  வெறி பிடித்த காட்டுமிரண்டியாகவே  இருக்க விரும்புகிறேன் இத்தகைய  வெறி   பிடித்த மனித மிருகங்களுக்கு !!!!!!!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!! 




10 comments:

  1. நான் எதிர்பார்த்தது இதுதான் !!!!வலை பக்கத்தின் தலைப்புக்கு ஏற்ற உங்களின் முதல் பதிவு !!!தொடர வாழ்த்துகிறேன் !!!! (எனது சமுதாய கோபங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு காரணியாய், ஒரு வடிகாலாய் இந்த தளம் உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும்!)

    ReplyDelete
    Replies
    1. முன்பு அதிலே உள்ள இன்னொரு வார்த்தையான உணர்வுகளை வெளிப்படுத்தினேன். இப்பொழுது முதல் வார்த்தையினை!!!! வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சிவா....

      Delete
  2. சலாம் சகோ.ராபர்ட்,
    'நச்' பதிவு..! நன்றி சகோ..!

    ReplyDelete
  3. நன்றி சகோ.முஹம்மத் ஆஷிக் தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துரைக்கும்..

    ReplyDelete
  4. சட்டத்துறை சில சமயங்களில் அரசியல்வாதிகளின் சட்டைப்பையில் இருப்பது போன்ற தோற்றத்தை இது போன்ற செயல்கள் நம்மை உண்மை என்ற நிலைக்கு உணரச்செய்கின்றது. இதுவரைக்கும் தூக்கு தண்டனை விதித்து அதை நடைமுறைப் படுத்தாதற்கான காரணம் அரசாங்கத்தால் சொல்லப்படாதது ரொம்ப வியப்பாகவுள்ளது. எனக்கு என்னமோ நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளை மறந்துவிட்டது போல இதுவும் நடந்துவிடுமோ என்ற கோபம் இருக்கின்றது. என்ன செய்ய இந்தியா-பாக்கிஸ்தான் டுவெண்டி டுவண்டி அட்டவனை வந்தவுடன் இந்த விசயத்தை மறந்துவிட்டு, இந்தியா கப்பு வாங்க பிராத்தனை செய்யும் சராசரி இந்தியனாக இருக்கத்தான் வேண்டுமா????????

    ReplyDelete
  5. உண்மைதான். எல்லாவற்றிலும் அரசியல் கலந்து விட்டது.அதுதான் சாபக்கேடு என்று கருதினாலும் சில படித்தவர்களும் அதற்கு எதிராக பேசுவதுதான் வெறுப்பாக இருக்கிறது.இறந்து போன அந்த முகமறியா அப்பாவிகளை இப்போது நினைத்தாலும் மனது வேதனைக்குள்ளாகிறது.இவர்களோ அவனுக்கு சாமரம் வீசுகிறார்கள். அவன் இறப்பால் யாருக்கும் எதுவும் கிடைக்கப்போவது இல்லை என்றாலும் அடுத்து அது மாதிரியான காரியங்களை செய்ய சிறிதளவேனும் அச்சம் மற்றவர்களுக்கு வருமல்லவா? அதுபோதும்.
    நன்றி யாஸிர் வருகைக்கும், கருத்துரைக்கும்..

    ReplyDelete
  6. அருமையான பதிவு சகோ... எல்லா கேள்விகளும் நச்!

    முன்பு நான் எழுதிய மரணதண்டனை பற்றிய பதிவையும் முடியும் போது படிங்க http://www.kuttisuvarkkam.com/2012/07/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும். கண்டிப்பாக வாசிக்கிறேன் சகோதரி. தொடரட்டும் தங்கள் வருகை.

      Delete
  7. வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!! //

    அட இது என்ன புதுசு ஆனா நல்லா இருக்கு அன்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே!!

      Delete