Tuesday, September 11, 2012

குழலினிது யாழினிது!!!




இன்று காலை  என்ன செய்தான் தெரியுமா?                           
இப்பொழுது என்ன செய்கிறான் தெரியுமா ?
என்று
உன்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளுடன் 
தொடங்குகின்றன உன் அம்மாவின்
உரையாடல்கள்  சற்றே  பெருமையுடன்,
வெகு சீக்கிரமாய்  எழுந்து
விழித்திடாத  உன் அம்மாவின்
முகம் பார்த்து சிரித்து கிடந்தது,
வெளியே செல்லும் தாத்தாவுடன்
கிளம்பிட துடித்த உன் தாவல்கள்,
சாப்பிட மறுத்து நீ மாற்றும்
முகபாவனைகளும்,
 பிடிவாதமாய் ஊட்டியதால்
உதடு துடிக்க  வெடித்து கிளம்ப
காத்திருக்கும் உன் அழுகையும்,

பொய்க்கோபம் கொண்டு அதட்டும்
உன் அம்மாவும், அதை  நேர்செய்யும் 
விதமாய் உன் மந்தகாசப் புன்னகையும்
உன் ஒவ்வொரு அசைவையும்
துளித்துளியாய்
ரசித்துக்கொண்டிருக்கின்றனர் வீட்டில்.
"குழலினிது யாழினிது" என்னும் வள்ளுவன்
வாக்கோடு வாழ்ந்து  கொண்டிருக்கிறேன்
உன் அப்பா  அந்நிய தேசத்தில் .
அங்கு நீ தவழ்ந்து கொண்டிருக்கிறாய்
உன் பிரிவால்
நான் இங்கு தவித்துகொண்டிருக்கின்றேன் .

சில வார்த்தைகளை   படிக்கும் போது
உணராத   அர்த்தங்களை
வாழ்வின் பக்கங்கள்
அவற்றை கடக்கும் போது
அழகாய்  உணர்த்திவிடுகின்றன 
சில நேரங்களில் வலியுடன் !!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!






10 comments:

  1. வேலை நிமித்தமோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்களிடத்தில் தற்க்காலப்பிறிவு என்பது தவிர்க்க இயலாதுதான்..ஆனால் எந்த உறவையும் பிரிந்திருக்கும் போது எழாத ஒரு வருத்தமும் தாக்கமும், குழந்தைகலைப் பிரிவதில் எழுகிறது..குழந்த்தைப்பருவம் என்பது பின்பு கிடைக்காது...அந்தப்பருவத்தை நாம் கூட இருந்து அனுபவிக்காமல் போனால் அந்த இயலாமையை வார்த்தைகளில் சொல்ல இயலாது.வலி பெரியது..பொன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

      Delete
  2. நாளை 27-12-12 வலைச்சரத்தில் உங்கள் பதிவு அறிமுகம்.
    http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி...

      Delete
  3. இப்பொழுது என் 3 மாத பேத்தியின் ஆ, ஊ என்ற சின்ன சப்தங்களே எனக்கு சங்கீதமாய் இருக்கிறது.

    //உன் அப்பா அந்நிய தேசத்தில் .
    அங்கு நீ தவழ்ந்து கொண்டிருக்கிறாய்
    உன் பிரிவால்
    நான் இங்கு தவித்துகொண்டிருக்கின்றேன் . //

    ரொம்ப கொடுமைதான். காலையில் அலுவலகம் வந்துவிட்டு மாலை வீடு செல்வதற்குள் இருக்கும் நேரத்தில் குழந்தையைப் பிரிவதே வருத்தமாக இருக்கும்.

    அருமையான வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பிரிவு வருத்துவது உண்மைதான்...வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி..

      Delete
  4. குழலினிது யாழினிது" என்னும் வள்ளுவன்
    வாக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி..

      Delete
  5. /சில வார்த்தைகளை   படிக்கும் போது
    உணராத   அர்த்தங்களை
    வாழ்வின் பக்கங்கள்
    அவற்றை கடக்கும் போது
    அழகாய்  உணர்த்திவிடுகின்றன 
    சில நேரங்களில் வலியுடன் !!!/ உணர்வுப் பூர்வமான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி நண்பா...

      Delete