Saturday, September 29, 2012

தாண்டவம் தண்டனையா !!!

நம்ம சீயான்  விக்ரம், அனுஷ்கா வோட சோடி போட்டு நடிக்க, படம் பட்டைய கிளப்பும்ன்னு பார்த்தா நம்மளுக்கு கடுப்பதான் கிளப்புது.
தாண்டவம் படத்தோட கதை என்னன்னா நண்பனோட துரோகத்தால  "ரா" ல   இந்தியாவின் டாப்  அஞ்சு  பேருல ஒருத்தரா இருக்குர விக்ரம் அவரு     பொண்டாட்டியையும் , கண்ணையும் ஒரு குண்டு வெடிப்புல பறிகொடுத்த கடுப்புலஅதுக்கு காரணமான எல்லாரையும்  பழிவாங்குறது தான் கதை.  
 
கண்ணு தெரியாமல் நம்ம விக்ரம் அசால்ட்டா போய் , நாயர் கடையில டீ குடிக்கிறமாதிரி  கொலைகளை பண்றாரு கூடவே நம்மளையும். இதெல்லாம் அவரு எப்படி செய்ராருன்னு நாம தண்ணிய குடிச்சு குடிச்சு யோசிக்கும் போது படத்துல சொல்றாங்க அது ஒரு " எக்கோ லொகேஷன்  டெக்னாலஜியாம்"   என்னமோ போடா மாதவா !!!
இடையில் எமி ஜாக்சன் வேறு, போட்டோ ஷூட்டுக்கு அப்புறம் கண்ணு தெரியாத விக்ரமை இம்ப்ரெஸ் பண்ண சர்ச்சில் சர்வீஸ் செய்வதும், கண்ணைக்கட்டி கொண்டு நடந்து மூஞ்சி,  முகரையை உடைத்து கொள்வதும் சகிக்கல. 
அடுத்ததா அத்தாச்சி லட்சுமிராய் , விக்ரமிடம்  கொல்லவேண்டியவனை பற்றி தகவல் தருவது ஏதோ CIA  ஏஜென்ட்  ரகசியம் காப்பது போல சொல்கிறார்கள் முகத்தயே காட்டாமல். பின்பு முகவரியை ஐ போனில் sms வேறு அனுப்புகிறார். கண்ணு தெரியாதவர் எப்படி படிப்பாருன்னு(ப்ரைலி எல்லாம் இதுல வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல) கேட்டா அதுக்கு  ஏதாவது   "தடவிங்  டெக்னாலஜி" என்று புது பெயர் சொன்னாலும் சொல்வார்கள்.

கல்யாண பொண்ணு  அனுஷ்கா மாப்பிள்ளை என்னாவா இருக்காருன்னு கூட தெரியாம அவர கல்யாணம் பண்ண சம்மதிச்சு டெல்லிலேருந்து  வர்ற அப்பாவி  கண் டாக்டர் . விக்ரம் சொல்ல நினைச்சிருக்கும் அதே மொக்கை காரணங்களை சொல்லி ( பார்க்கணும், பிடிக்கணும் ,பழகனும் , பிரண்ட்ஸ் , காதல் ,கல்யாணம் அப்புறம்தான்   லொட்டு லொசுக்காம்" )
இதையெல்லாம் "லொட்டு லொசுக்குக்கான"  ராத்திரியில  அனுஷ்கா சொல்றாங்க, கூடவே விக்ரம் மச்சினிச்சி (நல்ல பிகருங்க ) அக்காவின் அருமை பெருமைகளை சொல்ல  இதைகேட்டு விக்ரம் இம்ப்ரெஸ் ஆகி பியானோவும்,  கையுமா சுத்துறார் பொண்டாட்டிய  லவ் பண்ண !! புதுசா இருக்குல்ல!!!! ( மௌன ராகம் படத்துக்கும் இதுக்கும் சம்மந்தம்  இல்ல!!!!!! ) .

படத்தில் கொஞ்சம் ஆறுதலான விஷயம் சந்தானம் வருமிடங்கள்.முதல் கொலையை சந்தானம் போலீசிடம் சொல்கையில்
 சார் திஸ் இஸ் டெட் பாடி, கம்மிங் ப்ரம் மொட்ட மாடி, கமிங் கமிங் அண்ட் டேமேஜிங் கார் பாடி என்று கிளாஸ் டம்ளரை உடைக்குமிடமாகட்டும், விபத்து நடந்தவுடன் டைமிங்காக வரும் "ஒளிமயமான எதிர்காலம் பாடலும்"  நாசருக்கு நக்கலாக பதில் சொல்வதாகட்டும் எல்லா இடங்களும் சரவெடி பட்டாசு.
 நீரவ் ஷா வோட ஒளிப்பதிவு அட்டகாசமா இருக்குது. அனுஷ்கா புறாக்களுக்கு இரை  போடுமிடமும், கல்யாணப் புடவையில் வருமிடமும்  அருமை. பின்ணணி இசை பொருந்தி இருக்கிறது  .இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்.

கேள்வி கேட்கணும்னா கேட்டு கிட்டே இருக்கலாம் அவ்வளவு லாஜிக் ஓட்டைகள். வேற வழியே இல்லன்னா ஒரு படம் பார்த்தே தீரனும்னா, இல்லாட்டி ஓசி டிக்கெட்டுன்னா  பாருங்க படத்த, விக்ரம் படம், தெய்வதிருமகள் விசய் படம்ன்னு போனீங்கன்னா உங்க பர்சுக்கும், கடுப்பாகி உங்க உடம்புக்கும்   சேதாரம்தான்!!!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, September 27, 2012

கரண்ட மிச்சம் பண்ண சில யோச(ரோத ) னைகள் !!!


பின் விளைவுகளுக்கு  கம்பெனி பொறுப்பல்ல !!!!!

1. எங்கெங்க  ட்ரான்ஸ்பார்மர் இருக்கோ  அங்கெல்லாம் எதோ ரிப்பேர் வேல பார்க்குறமாதிரி  நல்லா சீன்  போடுங்க . 
நாங்களும் சரி சரி  இந்த வேல முடிஞ்சோன்ன சீசன்ல குற்றாலத்துல தண்ணி வந்து பாயுறமாதிரி  கரண்ட் வந்து பாயும்ன்னு நெனைச்சி நாங்களும் மனச தேத்திக்கிவோம் . ஒரு  ஏரியாவுல ஒரு   ட்ரான்ஸ்பார்மர்  வேலை முடிஞ்சதும் அதே ஏரியாவுல  அடுத்த நாள் அடுத்த ட்ரான்ஸ்பார்மர் வேல பார்க்க  ஆரம்பிக்கணும்.  (நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா  பண்ணனும் மங்குனியாரே !!!!)
2 . கரண்ட் எப்போ வரும்ன்னு  போட்டி ஒன்னு வைச்சு எல்லாரையும்  sms  அனுப்ப சொல்லலாம். யாரு சரியா கணிச்சு  சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு  பன்னெண்ண்ண்ண்ண்ண்.............டு     மணி நேரம் கரண்ட் குடுப்பதாக சொல்லலாம். ஒரு நாளைக்கா, ஒரு வாரத்துக்கான்னு சொல்லிராதீங்க !!!

3 . டிவியும் இல்ல பொழுது போக, அதுனால  தெருமுனையில, ஜங்க்ஷன்ல  ஜோடி நம்பர் 1,   மானாட மயிலாட,  போட்டியில ஆடுனவுங்களை ஆட விட்டிங்கன்னா மக்களுக்கு பொழுதும் போகும், கொஞ்சம்  கோபமும் கொறையும்.

4. எல்லா டிவியிலையும்  வீராசாமி,லத்திகா போன்ற உன்னத திரை  காவியங்களை திருப்பி திருப்பி போட சொல்லலாம், தப்பி தவறி உங்களுக்கு தெரியாம கரண்ட் இருந்துச்சின்னாலும், அந்த படத்த பாக்குறவங்களுக்கு  டிவி பார்க்குற ஆசையே போயிரும். உங்களுக்கும் கரண்ட் மிச்சமாகும். (சொல்ல முடியாது நம்ம பவர் ஸ்டார் புளகாங்கிதம் அடைஞ்சு கட்சிக்கு நிதி ஏதாவது குடுப்பாரு.)

5 . காலேஜ் டே, பஸ் டே மாதிரி "பவர் கட் டே" என்று புதுசா ஒன்ன ஆரம்பிச்சு பகல் நேரத்துல கொண்டாடலாம். சாக்லேட்டுக்கு பதிலா மெழுகுவர்த்தி குடுக்கலாம். என்ன  ஒன்னு இதை வாராவாரம்  கொண்டாடனும்.

6. அம்மா இலவசமா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி எல்லாம் இந்த ஆட்சியிலையும், கரண்ட அடுத்த ஆட்சியிலையும் தருவதா ப்ளான் பண்ணி இருக்காங்கலாம் . ஏம்மா நீங்க இதையெல்லாம் தர்றதை நிறுத்திட்டு, மெழுகுவர்த்தி, சிம்னி விளக்கு, பெட்ரோமாக்ஸ் லைட் , இதுகள தாங்களேன் எங்களுக்கு உபயோகமா இருக்கும். அப்புறம் யாராவது   கரண்ட் வேணும்ன்னு கேப்பாங்களா என்ன??

அய்யா அஞ்சு வெரலக்காட்டி ஓட்டு கேட்டப்ப நாங்களும் உதயசூரியனை  சொல்றாருன்னு நினைச்சு ஒட்டு போட்டோம்,  ஆனா  அவரு அஞ்சு மணிநேரம் பவர் கட் பண்ணினாரு.....

அதே மாதிரி அம்மா ரெண்டு விரல காட்டி ஓட்டு  கேட்டப்ப , நாம  கொஞ்சம் சுதாரிச்சு  சர்தான் அம்மா பவர் கட்ட ரெண்டு மணிநேரமா கொறைக்க போறாங்கன்னு அப்பாவியா நெனைச்சுகிட்டு அவங்களுக்கும் ஓட்டை போட்டு தொலைச்சிட்டோம். இப்பதான் புரியுது அந்த ரெண்டு வெரலுக்கு அர்த்தம், ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் பவர்ன்னு ...... என்ன கொடுமை சரவணா இது !!!!!!
ஒட்டு வாங்குறப்ப அஞ்சு விரலையும் , ரெண்டு விரலையும் மாத்தி மாத்தி காமிச்சி  இப்போ எங்களுக்கு நடு விரலை காமிச்சுட்டீங்களே இது நியாயமா ???!!!!!!!!!!!!

வாழ்க வளமுடன்!! தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, September 20, 2012

இலை கொழுக்கட்டையும், விநாயகர் சதுர்த்தியும் !!!

                                                                    விநாயகர் சதுர்த்தி  அதுவுமா பேஸ்புக்குல  நம்ம இரவுவானம் சுரேஷ் ஒரு   கொழுக்கட்டை போஸ்ட்டுல  "நச்" கமெண்டுகளா    போட்டு தாக்க, அந்த கொழுக்கட்டை படத்த பார்த்த   நம்மளுக்கும்  கொழுக்கட்டை சாப்பிடணும்ன்னு ஆசை வர,  "முதல் முறையாக நமது கிச்சன் வரலாற்றில்" அப்படீன்னு சன்  டி.வி எபெக்டோட,   விநாயகர் சதுர்த்தியை  இலைகொழுக்கட்டையோட கொண்டாட  முடிவு பண்ணியாச்சு. செய்முறையை அரை மணி  நேரமா அம்மாகிட்ட   விலாவரியா போன்ல  கேட்டு தெரிஞ்சுகிட்டாச்சு.
நம்ம பரிசோதனை எலிகள்கிட்ட (ஹி...ஹி.. நம்ம ரூம்மேட்ஸ் ) எல்லாம்  சொல்லிட்டு,  சாயந்திரம்  வெல்லம், அரிசிமாவு சகிதம் ரூமுக்கு போனா எந்த இலையில செய்யப் போறேன்னு?  நண்பன் கேட்க , அங்க ஒரு சத்திய சோதனை "இலை வடிவுல".  பூசர  இலைக்காக  துபாய் பூரா  தேடியாச்சு எங்கயும் கிடைக்கல. "மனமிருந்தா மார்க்க பந்துன்னு" சொல்லிட்டு வாழையிலை  வாங்கியாச்சு.

அரிசிமாவை பிசைஞ்சு இலையில தடவ சொல்லிட்டு,    பூர்ணம் செய்வதற்காக வெல்லப்பாகு காய்ச்சி, பருப்பை போட்டு கடைஞ்சா, பாயசம் கணக்கா இருக்குது!! அவ்ளோ தண்ணி, நானும்  மனசு  விடாம  தேங்காய் துருவலை எல்லாம் போட்டு கெட்டியாக்க  பார்க்குறேன் ஒண்ணும் வேலைக்கு ஆகல... அந்த நேரம் பார்த்து வந்த நண்பன் ஒருத்தன் பாயாசம் நல்லாருக்கேன்னு சொல்ல, மனசு ஒடைஞ்ச  நான் அந்த அரிசி மாவை தூக்கி கொட்டி கிளற  கொஞ்சம்  கெட்டியாக ஆரம்பிச்சது,அப்ப உள்ள வந்த இன்னொருத்தன் என்னடா  மச்சான் இலைகொழுக்கட்டை செய்யுறேன்னு சொல்லிட்டு சர்க்கரை பொங்கல் கிண்டிக்கிட்டு இருக்கேன்னு? கேட்க, எனக்கு வந்த கடுப்புல பொங்கலை   ச்சே.. அந்த பூர்ணத்தை  நல்லா  கிண்ட ஆரம்பிச்சேன்.

 இன்னொரு நண்பன் கொஞ்சம் கடலை மாவை போட்டு கிண்டுனா  கெட்டியாகும்னு சொல்ல, கொய்யால போடு அதையும்!!! எல்லாத்தையும்  போட்டு கிண்டி ஒருவழியா ஒரு பதத்துக்கு கொண்டுவந்தாச்சு.  இலைக்கொழுக்கட்டையை அவிச்சு எடுத்தவுடன் ஒருத்தன் சாப்பிட்டுட்டு சூப்பர்ன்னு சொல்லிட்டு  (உண்மையிலே நல்லா  தான் இருந்துச்சு ) சாப்பிட ஆரம்பிக்க, ஆனா செஞ்சு முடிச்ச   எனக்குதான் நாக்கு தள்ளிப்போச்சு .   ஆரம்பம் முதல் நான்  பட்ட கஷ்டத்தை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு  நண்பன் கேட்டான் என்ன, இனிமே இதுமாதிரி எல்லாம் செய்யவேண்டாம்ன்னு தானே நினைக்குறேன்னு கேட்க, சேச்சே அப்படி எல்லாம் இல்லைடா  மச்சான்,  
 

என்ன செய்யுறமோ அதோட பேரு சொல்லாம செஞ்சோம்னா , ரிசல்ட்டுக்கு தக்கமாதிரி பேரு வைச்சிருக்கலாமேன்னு யோசிச்சேன் என்றேன் நான்!!!.

வாழ்க வளமுடன்!!!தமிழ் தந்த புகழுடன் !!!Thursday, September 13, 2012

கசாபை தூக்கிலிட வேண்டாம்!!!

                                                            கசாபை தூக்கிலிட வேண்டாம்.  அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டான்? மூளைசலவை செய்யப்பட அவனும் அவன் கூட்டாளிகளும்  இயந்திர துப்பாக்கியால் குழந்தைகள் , பெண்கள் என்ற வேறுபாடின்றி கொஞ்சமே கொஞ்சமாக 166 பேரை குருவி சுடுவது போல சுட்டுக்கொன்றான்  அவ்வளவே !!! இது  என்ன மரண தண்டனை தரக்கூடிய அளவுக்கு கொடிய குற்றமா என்ன? அப்படியே இருந்தாலும் "கண்ணுக்கு கண்"  "பல்லுக்கு பல்" என்பது காட்டு மிராண்டிகளின் சட்டம். நாகரீக வளர்ச்சியில் நாம் எவ்வளவு முன்னேறி விட்டோம்.
"கொலைக்கு இன்னொரு கொலை நியாயமாகிவிடாது "

உண்மைதான். இத்தகைய கொடூர கொலைகளுக்கு  சாதாரணமாக வழங்கப்படும் மரணதண்டனை போதாது  மாறாக அணுஅணுவாய்  அவனை சித்திரவதை செய்து வெட்டி கொல்ல வேண்டும் .

கசாபுக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தவுடன், மரண தண்டனைக்கு எதிராக  சிலர் பேசுவது என்னவோ அவர்கள் மட்டும் தான் நாகரீகத்தின் விளைவாக மிகவும் பண்பட்டவர்கள் போலும், இதை ஆதரிப்பவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் போலும் ஒரு மாயை உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது சமூக வலைதளங்களில்.

எவ்வளவு திமிரும், அரக்கத்தனமும் இருந்தால் எதிரி நாட்டின் வர்த்த தலைநகரில்  நுழைந்து  குழந்தைகள், பெண்கள்  என்ற வேறுபாடின்றி  நூற்றுக் கணக்கில் சுட்டுக்கொல்லுவான் ஒருவன் அந்த  அரக்கனுக்கு  நாம் இரக்கம் காட்ட வேண்டுமாம். நடந்த செயல் ஓர் "அறிவிக்கப்படாத போர்". கொடூரத்தின் உச்சகட்டம். என்ன நடக்கிறது என்று ஆறாம் அறிவு சிந்திக்கப்படும் முன்பே  மூளையை  சிதறடித்தது இந்த பாதகனின் தோட்டாக்கள் தான்.
இது காந்திய தேசமாம் மரண தண்டனை கூடாதாம் , பூக்களை விட மென்மையான குழந்தைகளுக்கு  தோட்டாக்களை  பரிசளித்தவனுக்கு, பூவையா  கொண்டு அர்ச்சிக்க வேண்டும்!! என்ன ஒரு அபத்தம் !

நம்மிடம்  உள்ள  மனிதாபிமானம் உணர்ச்சிவேகத்தில் தன்னிலை மறந்து தவறிழைத்தவர்களுக்கு வேண்டுமானால் கருணை  காட்டலாம். ஆனால் கொல்லப்படுவோம் என்று தெரிந்தே, மனது முழுக்க வன்மத்தோடும்  , வெறியோடும் வந்த இவனுக்கு தண்டனை குறைப்பு  என்ற கூப்பாடு எதற்கு ? ஆயுள் தண்டனையாக்கினால் மட்டும் இவன் திருந்தி விடுவானா  என்ன ?  எத்தனை பேரின் கனவுகளை சிதறடித்தான், எத்தனை குடும்பங்கள் தங்கள்  வாழ்வாதாரத்தின் அடிப்படையான அப்பாவையோ, அம்மாவையோ , அண்ணனையோ, அக்காவையோ இழந்து விட்டு  நிர்க்கதியாய் நிற்கின்றன ?  அந்த  குடும்பங்களுக்கு  நாம் தரும் பதில் என்ன?

 பொக்கேவுடன்  விருந்திற்கு வந்தவர்களுக்கு நாம் மரணதண்டனை வழங்கவில்லை . மாறாக நம்மீது படையெடுத்து வந்தவர்களுக்குதான்  ஆம் இதுவும் ஒருவகையான  படையெடுப்புதான்!  இந்த தண்டனை.  போர்க்களத்தில் மட்டும் நம் வீரர்கள் என்ன பூவா பறிக்கப்போகிறார்கள் ? அங்கும் உயிர் தானே பலியிடப்படுகிறது. பின் என்ன ? போரிலாவது யுத்த தர்மத்தை எதிர்பார்க்கலாம். மும்பையில் நடந்தது அதற்கும் குறைவானதுதானே .இத்தண்டனை  தேவை இல்லை என்றால்  காந்தீய தேசத்திற்கு படை எதற்கு? படைக்கலங்கள் எதற்கு ? அக்னி , ப்ரமோஸ் என்று  ஒவ்வொரு  பரிசோதனையின்   வெற்றின் போது நாம் மயிர் கூச்செறிய முஷ்டி  மடக்கி பெருமிதம் அடைவது  ஏன் ?

உயிரின் மதிப்பு தெரிந்தவர்களுக்கு, மனிதர்களுக்கு வேண்டுமானால் கருணை காட்டலாம். ஆனால் சில மாக்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மொழியில் பதில் பேசுவதே பொருத்தமாயிருக்கும். அந்த மொழிதான் "மரணம் "   அது போரிலாவது இல்லை தண்டனையிலாவது  .
  உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த பின்னும்  இன்னும் மறுமுறையீட்டு மனு (review petition)  தீர்வு மனு (curative petition), கடைசியாக கருணை மனு (mercy petition) எல்லாம் போட்டு (கூடவே பிரியாணியும் போட்டு) சிலபல அரசியல் சித்து விளையாட்டு விளையாடி கடைசியிலாவது  கசாபுக்கு  மரண தண்டனையை  தருவதே இதில் இறந்த அப்பாவிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் . இல்லாவிட்டால் அவர்களின்  ஆன்மா  நம்மை மன்னிக்கவே மன்னிக்காது .   நினைவில் கொள்ளுங்கள் 
"தாமதமாக கிடைக்கும் நீதியும் ஒரு வகையான அநீதியே".

இதையெல்லாம் விட்டுவிட்டு   "கொலைக்கு இன்னொரு கொலை நியாயமாகிவிடாது " இது காட்டு மிராண்டித்தனம், இப்படி செய்பவர்கள் காட்டுமிராண்டிகள் என்றால்  நான் எப்பொழுதும் காட்டுமிராண்டியாக,  வெறி பிடித்த காட்டுமிரண்டியாகவே  இருக்க விரும்புகிறேன் இத்தகைய  வெறி   பிடித்த மனித மிருகங்களுக்கு !!!!!!!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!! 
Tuesday, September 11, 2012

குழலினிது யாழினிது!!!
இன்று காலை  என்ன செய்தான் தெரியுமா?                           
இப்பொழுது என்ன செய்கிறான் தெரியுமா ?
என்று
உன்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளுடன் 
தொடங்குகின்றன உன் அம்மாவின்
உரையாடல்கள்  சற்றே  பெருமையுடன்,
வெகு சீக்கிரமாய்  எழுந்து
விழித்திடாத  உன் அம்மாவின்
முகம் பார்த்து சிரித்து கிடந்தது,
வெளியே செல்லும் தாத்தாவுடன்
கிளம்பிட துடித்த உன் தாவல்கள்,
சாப்பிட மறுத்து நீ மாற்றும்
முகபாவனைகளும்,
 பிடிவாதமாய் ஊட்டியதால்
உதடு துடிக்க  வெடித்து கிளம்ப
காத்திருக்கும் உன் அழுகையும்,

பொய்க்கோபம் கொண்டு அதட்டும்
உன் அம்மாவும், அதை  நேர்செய்யும் 
விதமாய் உன் மந்தகாசப் புன்னகையும்
உன் ஒவ்வொரு அசைவையும்
துளித்துளியாய்
ரசித்துக்கொண்டிருக்கின்றனர் வீட்டில்.
"குழலினிது யாழினிது" என்னும் வள்ளுவன்
வாக்கோடு வாழ்ந்து  கொண்டிருக்கிறேன்
உன் அப்பா  அந்நிய தேசத்தில் .
அங்கு நீ தவழ்ந்து கொண்டிருக்கிறாய்
உன் பிரிவால்
நான் இங்கு தவித்துகொண்டிருக்கின்றேன் .

சில வார்த்தைகளை   படிக்கும் போது
உணராத   அர்த்தங்களை
வாழ்வின் பக்கங்கள்
அவற்றை கடக்கும் போது
அழகாய்  உணர்த்திவிடுகின்றன 
சில நேரங்களில் வலியுடன் !!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!


Monday, September 10, 2012

சினிமாவும் சிக்கித்தவித்த நானும் !!!

                                             சின்னப்பையனா இருக்கும் போது நம்மள தியேட்டருக்கு அதிகமா கூட்டிட்டு போகமாட்டாங்க. ஏன்னா போன கொஞ்ச நேரத்துல படத்துல சண்டை எப்போவரும், எப்போவரும்னு கேட்டு நச்சரிக்கிறது. இல்லைன்னா கும்பகர்ணனை குசலம் விசாரிக்க போயிடுறது. டிக்கெட்  எடுத்து தூங்கினது  கூட அவங்களுக்கு கடுப்பாகாது, படம் முடிஞ்சதுக்கப்பறம்  தூக்க கலக்கத்துல என்னைய தூக்கிட்டு போக சொல்லி சண்டை போடுறதுல  ரொம்ப கடுப்பாகிடுவாங்க (நம்மதான் மாடு மாதிரி இருப்போமே!!!! ).  இதுனாலேயே என்னைய அடிக்கடி கழட்டி விட்டுட்டு படத்துக்கு போயிருவாங்க.
 ஒருநாள்   சாயந்திரம்  நான் கராத்தே கிளாசுக்கு  வந்துட்டேன். மாஸ்டர் வர லேட்டானதால  கிரௌண்டுக்கும் ரோட்டுக்குமா கராத்தே  ட்ரெஸ்ஸோட ஓடி ஓடி அவர் வர்ராறா  இல்லையானு  பார்த்து விளையாண்டுட்டு இருந்தோம். அப்ப  என்னோட பிரெண்ட் ஒருத்தன் வந்து உன்னோட அம்மா வர்றாங்கடான்னு சொல்ல, ஓடிவந்து பார்த்தா  என்னோட அம்மாவும், புதுசா டீச்சர் வேலையில சேர்ந்திருந்த  என்னோட அத்தாச்சியும் வந்துகிட்டு இருந்தாங்க, நான் ஓடிப்போய் அவங்க முன்னாடி நின்னவுடனே அவங்க  ஷாக்காகி,
 ஒண்ணுமில்லப்பா, அத்தாச்சிக்கு  நோட்ஸ் ஆப் லெசன் பார்மேட் வாங்கணும் அதான் இந்த டீச்சர் வீட்டுக்கு போறோம்னு   எனக்கு தெரிஞ்ச ஒரு டீச்சர் பேரையும்   சொல்லிட்டு  போனாங்க. கரெக்ட்டா  6.30 மணிக்கு அவசர அவசரமா  நோட்ஸ் ஆப் லெசனான்னு??  நம்ம மனசுக்குள்ள ஒரு அலாரம்  அடிச்சுக்கிட்டே இருந்ததால  கேட் ஓரமா நின்னு பார்த்துகிட்டே இருந்தேன் .

 லெப்ட்ல போனா டீச்சர் வீடு, ரைட்ல போனா தியேட்டர்ன்னு  பார்த்துகிட்டே இருக்க , நம்ம வில்லத்தனம் தெரியாத  நம்மாளுங்க திரும்பி கூட பார்க்காம  ரைட்ல திரும்ப, நண்பனொருவனை என்னோட டிரெஸ்ஸ வீட்டுக்கு எடுத்துட்டு போகச் சொல்லிட்டு, கராத்தே  ட்ரெஸ்ஸோட வடிவேலு சொல்ற மாதிரி "எடுத்தேன் பாருங்க ஓட்டம்" ரோடு, மார்கெட்டுன்னு  ஒன்னும் பார்க்கலையே. எங்கம்மா டிக்கெட்  எடுக்க போற நேரத்துல உள்ள போய்  சேர்ந்துட்டேன். மாஸ்டர் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்னு பிட்டை  வேற  போட்டுட்டு, படத்தையும்  தூங்காம பார்த்துட்டேன் .

ஆனா நம்ம நேரந்தான் நாம பஸ்ல போன அது பிளைட்டுல நம்மளுக்கு முன்னாடி வந்து நிக்குமே !!!.
நான் இப்படி பாக்யராஜ் மாதிரி  ஸ்லோமோஷன்ல கராத்தே  ட்ரெஸ்ஸோட ஓடி வந்ததை லேட்டா  வந்துகிட்டு இருந்த  கராத்தே  மாஸ்டர் பார்த்துட்டார். அப்பறம்  என்ன?  அடுத்த கிளாசுல  நாந்தான்   அவருக்கு  "பஞ்சிங் பேக் " . குத்துங்க மாஸ்டர் குத்துங்கன்னு  நான் நிக்க, பைனல் டச்சா கைல மடக்கி வைச்சிருந்த பெல்ட்டால என்னை அடிக்க ஓங்க , எசகு பிசகா திரும்புன நான்  இன்னொருத்தர்  மேல நல்லா  மோத  என்னோட சில்லு மூக்கு ஒடைஞ்சு  மூக்குலேருந்து  ரத்தம் கொட்டோ கொட்டென கொட்டிடுச்சு. சரி சரி  தக்காளி சட்னிதானே விடுன்னு   தொடச்சிக்கிட்டு வீடு போய்  சேர்ந்தேன். (பின்னே இதையெல்லாம் சொல்லி அங்க வேற அடி வாங்கனுமா என்ன???)

ம்ம்ம்.....  சொல்ல மறந்துட்டேனே, சாகசமெல்லாம் பண்ணி, பஞ்செல்லாம் வாங்கி   அப்படி   நான் பார்த்த படம் நம்ம இளைய திலகம் பிரபு நடிச்சது , படத்தோட பேரு அதாங்க அதான், நான்  அந்த க்ரௌண்டுக்கு  கொடுத்தது,  
   "ரத்த தானம் ".


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!


Tuesday, September 4, 2012

வெங்காயமும் கண்ணீரும் !!!

                                                               நாளெல்லாம்    உழைச்சு களைச்சு  ரூமுக்கு போனா  அங்க வந்து தக்காளிய வெட்டு , வெங்காயத்த வெட்டு ,பொடலங்காய வெட்டுன்னு ஒரே இம்சைங்க ,  அதுலயும் அந்த  வெங்காயம் வெட்டும்போது  வரும் பாருங்க  கண்ணீர் ஸ்ஸ் ப்பா ... உரிக்க உரிக்க ஒண்ணுமில்லாத வெங்காயத்தால  இவ்வளவு கண்ணீர் வருதேன்னு காரணம்  என்னன்னு ஒரு கதையை  நண்பர்கள்கிட்ட சொன்னேன் பாருங்க,  அதுலேர்ந்து அவங்க என்னைய கிச்சன் பக்கமே வரவேண்டாம் அப்படின்னு கெஞ்சி கேட்டுகிட்டாங்க. யாருக்காகவும் திரும்ப சொல்லாத அந்த கதை உங்களுக்காக கீழே !!!

ஒரு காலத்துல  தக்காளி , வெங்காயம் ,உப்பு  மூணும் நண்பர்களா  இருந்தாங்களாம்.   ஒருநாள் மூணு பேருமா நடந்து   போகும் போது  தாறுமாறா வந்த தண்ணி லாரியில அடிபட்டு "தக்காளி" செத்து போச்சு. நண்பன் செத்துபோயிட்டான்னு ரொம்ப உருகி உருகி அழுதாங்களாம் நம்ம வெங்காயமும், உப்பும் .    அந்த சோகத்தோட கடற்கரைக்கு போனவங்க சும்மா இருக்காம  அலையில கால் நெனைக்க ஆசைப்பட , வெங்காயம் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காம  உப்பு தண்ணியில போய்  நிக்க அதுவும் கரைஞ்சு செத்து போச்சாம் !!!

ரெண்டு நண்பர்களையும்  ஒரே நேரத்துல பறிகொடுத்த  துக்கத்துல வெங்காயம் "ஓ " ன்னு அழுதுகிட்டே இருக்க,  நம்ம கடவுள் தான் ரொம்ப இரக்க மனசுக்காரர்   ஆச்சே, வெங்காயத்துகிட்ட பிரசன்னமாகி உனக்கு என்ன வேண்டும்னு கேட்க , வெங்காயம் சொல்லுச்சாம்   என் பிரெண்டு தக்காளி செத்தப்ப   நானும் , உப்பும் அழுதோம். அதே உப்பு கரைஞ்சு செத்தப்ப நான் மட்டும் தனியா அழுதேன். இனிமே நான் செத்தா  எனக்காக யார் அழுவான்னு  கண்ணீரோட கேட்க, செண்டிமெண்டா அட்டாக் ஆன கடவுள் சொன்னாராம்
கொய்யால இனிமே எவன் உன்னை சாவடிச்சாலும்   அவனும் அவன்கூட உள்ள எல்லாரும்  கண்ணீர் விட்டு  கதறுவாங்கன்னு  சொல்லிட்டு மறைஞ்சுட்டாராம்.

மக்களே இப்ப தெரியுதா வெங்காயம் வெட்டுனா  கண்ணீர் வரக் காரணம் !!!
(நோ ஆட்டோ............... நோ பேட் வோர்ட்ஸ்!!!!!!!!!)


வெங்காயம் பற்றிய சில தகவல்கள் 
  • வெங்காயம் வெட்டும் போது கண் எரிவதற்கு காரணமான வேதிப்பொருள் ப்ரோப்பேன்தியல் எஸ் ஆக்ஸைடு . (அமினோ ஆசிட் சல்பாக்சைடு மற்றும் தண்ணீரின் கலவையால் வருவது ) 

  • வெங்காய உற்பத்தியில் சீனாதான் முதலிடம்.

  • பழங்கால பண்டமாற்றத்தில்  மிகவும் மதிப்பு மிக்க பொருளாக கருதப்பட்டது (இதுனால ஆட்சியே கவுந்திருக்கு நம்ம நாட்டுல!!!!!!)

  • கல்யாணம் செய்யபோற பிரம்மச்சாரிகள் சின்ன வெங்காயம் சாப்பிடுறது ரொம்ப நல்லதாம். (சொன்னதுலேருந்து ரூம்ல ரெண்டுபேர் வெறும் சின்ன வெங்காயமாதான் சாப்பிடுறாங்க)

  • வெங்காயம் வெட்டுறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி ப்ரீசர்ல வச்சு எடுத்தா, இல்ல ஏதாவது சூவிங்கம் மென்னுகிட்டே வெட்டினால், இல்ல வெங்காய  அடிப்பாகத்த கடைசியா வெட்டுனாலோ  கண்ணு அதிகமா எரியாதாம். 
 
இதையும் மீறி கண்ணு எரிஞ்சா   இத ட்ரை பண்ணுங்க !!!!!!! படிச்சுட்டு,பார்த்துட்டு  திட்டணும்னு தோணுச்சுன்னா  என்னை  "போடா வெங்காயம்ன்னு  " திட்டுங்க ....அவ்வ்வ்வவ் !!!!!!!!!!!!!!!!!!!!!வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!
Related Posts Plugin for WordPress, Blogger...