Thursday, August 23, 2012

பசுமை நிறைந்த பால்யம் -2

பசுமை நிறைந்த பால்யம்-1  

மின்சாரமில்லா மழைக்கால ராத்திரிகள் மனதுக்கு ஒருவித நெருக்கமானவை. சாயந்திரத்தில் லாந்தரையும், சிம்னி விளக்குகளை துடைத்து மண்ணெண்னை ஊற்றும் அம்மாவும், அக்காக்கள் படிப்பதற்காக ஏற்றப்படும் சிம்னி விளக்குகளும், தீச்சுடருடன் இயைந்தவாறு நேர்க்கோட்டில் வெளிவரும் புகைச்சுடரும், காற்றின் வேகத்தில் அலைக்கழிக்கப்படும்போது அலையும் நிழல்களையும், அணைவது  போல போக்கு காட்டும்  சுடரை  ரசிப்பதும்,  ஆவி பறக்க பரிமாறப்படும் சோற்றின்
சூடும்தலை முதல் கால் வரை கம்பளி போர்த்தி கதகதப்பாக படுத்துறங்கிய  சுகமும்  இன்னும் என்னுள்  இருப்பது போல ஒரு உணர்வு...
 
கீற்றும் , குடலையும் முடைவதற்காக  குளத்து நீரில் ஊறவைத்து கொண்டு வரப்படும்  தென்னை  மட்டைகளும், அவற்றை நொடிப்பொழுதில் நெட்டாக  இரண்டு துண்டாக  வகுந்து விடும் பாளை அருவாளும், லாவகமாக  கீற்று முடையும் தாத்தாக்களும், ரீங்காரமிடும் சில்வண்டுகளும், இணைக்காக சப்தமெழுப்பும்  தவளைகளைப்  பார்த்து  அதுபோலவே கட்டை குரலில் சப்தமிடுவதாகவும்  கழியும் எனது மழைக்கால ராத்திரிகள்.....

கார்காலத்தின்  பகற்போதுகள் வண்ணமயமானவை அடிக்கடி பெய்யும் மழையும் அதனால் முளைத்த தும்பை பூச்செடிகளும், ஆளரவமில்லா கொல்லைகளில் பச்சைப்பசேலென்று  மண்டிக்கிடக்கும். நட்சத்திரங்களை இரைத்தார்போல பொலேரென்று  பூத்து கிடக்கும் தும்பைப்பூக்களும், அப்பூவில் தேனுண்ண வரும் வண்ணத்துப்பூச்சிகளும் அதை பிடித்து அதன்  வயிற்றில்  நூல்கட்டி அதை துரத்தி விளையாடுவதும் , திடீரென முளைத்தது  போல பறக்கும் ஈசல்களும், அவற்றை பிடிக்க ஓடுவதும். அடிக்கடி  எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கும் ஆயாவையும் பொருட்படுத்தாமல்
விளையாடிக்கொண்டே இருந்த எனது பால்ய நாட்கள் மீண்டும் கிடைக்காதவை ......

அவ்வப்போது  கிடைக்கும் பொன்வண்டுகளும், அதற்கு  கொன்றை, கொடுக்காபுளி  இலைகளையும் உணவாக ஊட்டுவதும், பட்டு கத்தரிப்பது போல நறுக்நறுக்கென்று அவ்விலைகளை பொன்வண்டு தின்பதை பார்த்துக்கொண்டிருப்பதும்,  அதன் முட்டைகளை  நல்லெண்ணெய் பூசி வெயிலில் வைத்து  அது குஞ்சு பொறிக்க நண்பர்களுடன் காத்து கிடந்ததும், அதன் கழுத்தும் உடம்பும் சேருமிடத்தில்  கையை வைக்கும் போது  கடிப்பதும்,  அக்கழுத்தில் நூலொன்றை கட்டி கையில் பிடித்துக்கொண்டு அது என்னுடைய  உடலில் ஊர்வதை பெருமையாய்  ரசித்ததும், அது பறக்கும் போது நூலைப்பிடித்து  அதனுடன் ஓடித்திரிவதும், எத்தனை  கொடுத்தாலும் திரும்ப வராத நாட்கள்.

பழைய நினைவுகளுடன் மட்டுமே வாழ்வது என்பதாகிவிட்டது  இப்போதைய வாழ்க்கை. எழுத்து ஒன்று மட்டுமே பால்யத்தை கிளறி  அந்த வாசனையை திரும்ப கொண்டு வருகிறது.

 நன்றாய் வரட்டும் வாசனையும்,  எழுத்தும்!!!

                                                                                                         பால்யம் மலரும் ....


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

10 comments:

  1. அற்புதம், எப்போதும் போல...

    ReplyDelete
  2. நன்றி யாஸிர்....

    ReplyDelete
  3. கமல் ஒருமுறை சொன்னார்... இருட்டை அனுபவிப்பதற்காகவே கொடைக்கானலில் குடிசையில் தங்குவேன் என்று .... உண்மையான உண்மை

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு மிகவும் பிடித்தமான இடமும் அதுதான்..........

      Delete
  4. இயற்கையின் ஆழமும் அழகும் அடர்த்தியும் அனுபவிப்பவர்க்கே புரியும்.. மிக அழகான பதிவு...தொடர்ந்து இதுபோல எழுதுங்கள்

    ReplyDelete
  5. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  6. ரசனையுடன் கூடிய நினைவுகள்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி..

      Delete
  7. நாமெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியா வாழ்க்கையை கழித்தோம்! நம் பிள்ளாஇகள்தான் பாவம்!! சொர்க்கத்தை இழந்துவிட்டார்கள்!! நான் அப்பப்போ பிள்ளாஇகளுடன், மண்சொப்பு வைத்து சோறாக்கி, மண் இட்லி செஞ்சி, தும்பி பிடிச்சு வந்து கயிறு கட்டி பறக்க விட்டுன்னு சிறு பிள்ளையாய் மாறிடுவேன். அதுங்களுக்கும் இந்த டிவி, படிப்புல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். ஒவ்வொரு தலைமுறையினர் அனுபவித்த வாழ்க்கை , சந்தோஷங்கள் அடுத்த தலைமுறைக்கு கிடைப்பதில்லை. அதிலும் இனிவரும் தலைமுறைகள் என்னன்னவற்றை இழந்தோம் என்று கூட தெரியப்போவதில்லை . மறுமொழியிட்டமைக்கு நன்றிக்கா ....

      Delete