Tuesday, July 31, 2012

கரைமேல் பிறக்க வைத்தான் ...

"சங்கறுப்பதெங்கள் குலம்என்று பெருமையாக  பாடப்பட்ட பரதவரின் சங்கு தான்  இன்று இனவெறி பிடித்த சிங்கள நாய்களால் அறுக்கப்படுகின்றன.
போராட்டமே வாழ்க்கையாகிப் போன நம் மீனவர்களுக்கு, கடலோரப் பாதுகாப்பு என்ற  பெயரில் சிங்கள கடலோர காவற்படையால் அனுதினமும் சித்திரவதைக்கோ, உளவியல் ரீதியாக  துன்புறுத்தப்பட்டோதான்   இந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள் . தினமும் மீன்பிடி வலைகள்  அறுபட்டோ, படகுகள் சேதப்படுதப்பட்டோ, உடமைகள் இழக்கப்பட்டோ சமயங்களில் உயிர் இழக்கப்பட்டோதான் மீனவர்களின் பிழைப்பு நடைபெறுகிறது. அதுவும் தமிழன்  ரத்தத்தை  குடிப்பதில் சிங்கள தோட்டாக்களுக்கு ஒரு அலாதி பிரியம்.
"சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்"
என்ற முண்டாசுக்கவியின் கனவு நம் தமிழனின் சவங்களின் மேல்தான் அமையும் போலிருக்கிறது.

 பிழைப்பு சம்மந்தமாக ஒரு ஒப்பீடு செய்து பாருங்கள் நமக்கும் அவர்களுக்கும் உள்ள மலையளவு வித்தியாசம் புரியும்

  • அனுதினமும் உருமாறும் குணாதிசயங்களை கொண்டது இல்லை நமது  பிழைப்புக்கான தளம்.
  • நமது  மனதைரியமும், வாழ்வாதரத்திற்கான  அடிப்படையும் தினமும் சோதிக்கப்படுவது இல்லை.
  • உழைப்பின் அளவுகோலை தவிர்த்துவிட்டுநமது  அதிர்ஷ்டத்தை நினைத்து பார்க்கவேண்டிய அவசியம்  இல்லை .
  • எல்லாவற்றிற்கும்  மேலாக நாம்  துப்பாக்கி முனையிலோ அல்லது எப்போது சுடப்படுவோம் என்று தெரியாமலோ வேலை பார்ப்பது இல்லை.
 
வெறுங்கையுடன்  உடலும் மனமும் வெறுத்து , உயிர் மீண்டுகரை திரும்புவது என்பது   எவ்வளவு கொடுமையான நிகழ்வு. இதே போன்ற நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்ந்தன என்ற நிலை மாறி அனுதினமும் அவர்களை சாகடிப்பது போன்றதொரு நிலை வருவதற்கு மிக முக்கியமான காரணம் நமது அரசாங்கமும் அதன் மெத்தன போக்கும்தான்.  இதில் கட்சி பாகுபாடு எல்லாம் கிடையாது. எத்தனை பேரை சிறை பிடித்து சென்றாலும் அல்லது சுட்டு கொன்றாலும்  நமது அரசாங்கத்தின் அதிகபட்ச செயலாக்கம்  நமது நடுவண் அரசுக்கு ஒரு கடிதம் எழுதுவது, அல்லது காதலியுடன் உரையாடுவது போல தொலைபேசியில் கதைப்பது.  இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நம்மளை இப்படி  ஏமாற்றிக்கொண்டு இருக்கப்போகிறார்களோ  தெரியவில்லை? இதை எல்லாம் கேட்கிற நமக்கே இவ்வளவு வேகம் வருகிறதென்றால் பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு ஆற்றாமையினாலும்,இயலாமையால் வருகிற  கோபம்  எப்படி இருக்கும்? அந்த உணர்ச்சிகள்  எங்கனம் வெளிப்படும்?

இதெல்லாம் நமக்கு தொலைக்கட்சிகளிலோ அல்லது செய்தித்தாள்களிலோ வருகிற ஒரு செய்தி.இதில் நாமா  பாதிக்கப்படுகிறோம்எங்கோ ஒரு மூலையில் அழுகுரல் கேட்கும் அதுவும் சவலை பிள்ளையின்  அழுகுரல் போல . இதற்கெல்லாமா நாம் கவலைப்படுவது!!! நாம் கவலைப்படுவதற்கு  எத்தனையோ விஷயங்கள் ,
குஷ்புவின் இடுப்பை கிள்ளியது யார்நித்தியானந்தாவின் சிஷ்யையா கவுசல்யா? மகத் எனக்கு தம்பி மாதிரி டாப்சி  பேட்டி !!!

அடுத்தடுத்து நம்மளை சந்தோஷப்படுத்த நித்தியானந்தா சி.டி யோ அல்லது ஒரு நடிகையின் ஆபாச  சி.டி யோ வந்து சேரும். அந்த  சி.டி உண்மையா பொய்யா? என்று நீயா? நானா ?அளவுக்கு விவாதம் நடைபெறும்... ஏன்னா நம்மள யாரும் ஏமாத்திடக்கூடது இல்ல!!!.
 இவை எல்லாமே   நான்கு  நாட்களுக்குத்தான்.அதற்கப்புறம் அம்மணமாய் சி.டி யில்  இருந்தவன் வந்து அருள்வாக்கு சொல்வான் .அதற்கும் கூட்டம் கூடும் ஏனென்றால் மறதிதான்  நமது தேசிய சொத்தாயிற்றே !!!. 

"கடாரம் , ஸ்ரீ விஜயமும் கொண்டு" கீழ்த்திசை கடல்  முழுவதும் கோலோச்சிய பண்டைய தமிழனின்  வீரமும், விவேகமும் இன்று இத்தாலி நாட்டுக்காரியின் கண்ணசைவுக்கு காத்து இருக்கின்றன.

நமது மீனவர்களுக்கு   தொழில் ரீதியான வசதிகளை அதிகப் படுத்தி, மாநில அரசின் மூலம் அதிகப்படியான  அழுத்தத்தை  நடுவண் அரசிற்கு  கொடுத்து, "சீக்கியனின் மயிரை  விட தமிழ் மீனவனின் உயிர் மலிவானதல்ல" என்ற நிலையை உருவாக்காவிட்டால்   இத்துயரங்களுக்கு விடிவு கிடையாது.

தமிழ் மீனவரின் துயரை தீர்க்காமல்நாம் சாப்பிடும் மீன்கள் எல்லாம் கறை  படிந்த மீன்கள் .. ஆம்  நம் "தமிழ் மீனவர்களின் ரத்தக்கறை படிந்த மீன்கள்".!!!


வாழ்க வளமுடன்!!!  தமிழ் தந்த புகழுடன் !!!
Thursday, July 26, 2012

கணிணியால் காய்ந்தவன்...


கணக்குக்கும் நம்மளுக்கும் உள்ள சம்மந்தம் உலகம் அறிந்ததுதான். அதே மாதிரி நான் படுத்தி எடுத்த இன்னொரு விஷயம்தான் கணிணி. பத்தாவது பொதுத்தேர்வு எல்லாரையும் போல மாநிலத்துலேயே முதலாவதா  வருவேன்னு நெனைச்சு எழுதிட்டு வீட்ல டாப் அடிச்சுகிட்டு இருந்தப்போ, கணிணி வகுப்புல வழக்கம் போல நம்மள கேட்க்காம சேர்த்து விட்டாங்க…..

“சனிப்பொணம் தனியா போகாதுங்கற மாதிரி” நான் என்னோட நண்பனையும் சேர்த்துகிட்டு போனேன். ரெண்டு பேரும் சேர்ந்து கடமைக்கு போறது வர்றதுன்னு இருந்தோம். அப்போதான் ஒரு செமையான டெல்லி ஃபிகர்  ஒன்னு வந்து சேர்ந்துச்சு, அது எதோ விடுமுறைக்கு வந்த இடத்துல பொழுது போகாம அங்க வந்துச்சு, அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ரொம்ப சின்சியரா கடமையே கண்ணும் கருத்துமா இருந்தோம். ஆனா எங்கள விட ஒருத்தர் ரொம்ப சின்சியரா இருந்தார், அவர்தான் எங்க இன்ஸ்ட்ரக்டர். அடடா... அடடா அவரு பண்ற பந்தா இருக்கே ஸ்ஸ்....அப்பா தாங்கல!!  இன்டர்நெட் சம்மந்தமா கிளாஸ் எடுக்கும் (அப்போ யாஹூ பிரபலமாகாத காலம்) போது அவரு www. யோகா .காம்,  அப்படின்னு வெப்சைட் இருக்குன்னு அப்டின்னு அடிக்கடி சொல்லுவார் ரெண்டு கூமுட்டை (நாங்கதான்) அதையும் ஆ ன்னு கேட்டுகிட்டு இருக்கும் . ரொம்ப உலக நடப்பு தெரிஞ்ச மாதிரி அவரு சீன் போட்டு இந்த மாதிரி சொல்லும்  போது பொறுத்து  பொறுத்து பார்த்த நம்ம டெல்லி ஃபிகர் பொங்கி எழுந்து சார் அது யோகா.காம்  இல்ல அது யாஹூ.காம்  சொல்லி பல்பு குடுத்துச்சு பாருங்க, நாங்களும் சத்தமா சிரிக்க , நம்மாளு மூஞ்சி இஞ்சி தின்ன எதுவோ மாதிரி ஆயிடுச்சி...


எங்களுக்கு வகுப்பு முடிஞ்சு போகும் போது, பல்பு வாங்கின நம்மாளு   என்ன நினைச்சாரோ தெரியல , கணிணியை ஷட்டவுன் பண்ணிட்டு போங்கன்னு சொல்ல, என்னடா பக்கத்துல இருக்கு ஸ்விட்ச் அத அமுக்குறத விட்டுட்டு போற நம்மள பண்ண சொல்றாரே அப்படின்னு நினைச்சுகிட்டு ரொம்ப வேகமா போய்   கணிணியில் இருந்த பவர் பட்டனை வேகமா அமுக்கி ஆப் பண்ணிட்டு வந்துட்டேன், அப்போ அந்த டெல்லிக்காரி என்னைய கேவலமா பார்த்தாளே ஒரு பார்வை, சரி சரி அடிப்படையிலேயே  ஒரு தப்பு நடந்துருச்சு போல விடுடா கைப்புள்ள அப்படின்னு நெனைச்சுக்கிட்டு வெளியில்  வந்துட்டோம். அடுத்த நாள் எங்களுக்கு இருந்த வகுப்பு, கணினியை  ஷட்டவுன் செய்வது எப்படி? 

இப்படிதான் இருந்தது  நம்ம அடிப்படை அறிவு.... சரி கல்லூரியில்தான் நமக்கு கட்டுமான பொறியியல் பிரிவு ஆச்சே ஒன்னும் தொந்தரவு இருக்காதுன்னு பார்த்தா  அங்கேயும் இந்த தொல்லை வந்தது.. வகுப்புலதான் நாமதான் பயங்கர கடமை உணர்ச்சியோட தூங்கியோ  இல்ல விளையாடியோ பொழுத போக்கிட்டோம். தேர்வு நேரத்துல  கணிணி ஆய்வகத்துல  பிரச்சினை ஆயிடுச்சி, எல்லாரும் ப்ரோகிராம எழுதி கண்காணிப்பாளர்கிட்ட காமிச்சுட்டு ஆய்வகத்துல போயி அதையோ ஒட்டி காமிக்கணும். நாம பைக் ஓட்டலாம், இல்ல கார் ஓட்டலாம், இல்ல ரொம்ப முயற்சி எடுத்து எதாவது பிகர ஓட்டலாம். ஆய்வகத்துல நம்ம என்னத்த ஓட்ட ?   நாமதான் கணிணியில புலியாச்சே!! நானும் என்னையே நம்பி இருக்குற கூட்டமும்(!!!!!) உட்கார்ந்தே இருந்தோம். தேர்வு அறை  கிட்டத்தட்ட காலியாகுற  நிலை வந்துடுச்சு,

நானும் புதுசு புதுசா என்னென்னவோ ப்ரோகிராம் எழுதுறேன், கண்காணிப்பாளர் அசராம  ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு திருத்தம் சொல்லி திருப்பி அனுப்பிக்கிட்டே இருந்தாரு. "தன்  முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன்" போல  நானும் விடாமல் திரும்ப திரும்ப போய்கிட்டே இருந்தேன். கண்காணிப்பாளர் மாத்தாதது என் தேர்வு எண்  மட்டும்தான்கிற நிலைமையில,   நான் ரொம்ப களைப்பாகி கடைசியா எல்லா திருத்தமும் செஞ்சு கொண்டு போனேன், கண்காணிப்பாளர் திரும்பவும் ஒரு திருத்தம் சொன்னார், நான் அதுக்கு சொன்ன பதிலுக்கு ரொம்ப சாதுவான அவர் கொடூர கோபம் கொண்டு தேர்வுத்தாளை தூக்கி வீசிட்டு, திட்டிகிட்டே  அடிக்க அடிக்க வந்தாரு, நான் ரொம்ப பவ்யமா தேர்வுத்தாளை எடுத்துக்கிட்டு  என்னோட இடத்துல உட்கார்ந்தவுடனே என் நண்பன் கேட்டான் அவரு கோபப்படுற அளவுக்கு அப்படி என்னடா சொன்ன? அவர்கிட்ட  நான்  சொன்னது என்னன்னா,
                    *
                    *
                    *

                    *
                    *
                    *
                    *
                    *
                    *
 அந்த திருத்தத்தையும் நீங்களே எழுதிடுங்க சார்....!!!!!!!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Thursday, July 19, 2012

தமிழ்…..தமிழ்…தமிழ்…அமிழ்து!!!


 மனதுக்கு மிக நெருக்கமாக சில விஷயங்கள் மட்டும் தோன்றும். கடினமான சில தருணங்களில்  மனது  சிக்கி தவிக்கும் போது  நம்மை வேறு உலகிற்கு அழைத்து, அமிழ்த்தி மனதை கரைக்க    நண்பர்கள் , முழுமதி , மழலை, கானகம், மழை, மழைநேரத்து தேனீர், வெயில்  போன்றவை இருந்தாலும் அவையனைத்தும் தேவையான போது கூட வருவதில்லைஎல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி முதலிடம்  என் தாய்க்கும் என் தமிழுக்கும்  தலையாய இடமுண்டு .. ....

எப்பொழுது தொடங்கியது தமிழ் மீதான காதல்!!!! தமிழ் தமிழ்  என்று தொடர்ச்சியாய் சொல்லும் போது  வார்த்தை மருவி வருவதுஅமிழ்து.... அமிழ்து என்று  தமிழாசிரியர் வகுப்பு எடுத்தபோதா !!!

பொதிகை மலையின் சிறப்பு பற்றி வரும் செய்யுளில்,   ஓங்கி உயர்ந்த தென்னை மரத்தின் இளநீர் குலைகளின்  பாரம் தாங்காமல் பக்கத்தில் உள்ள பலா மரத்தின் மீது சாயும் . பலா மரம்   பாரம் தாங்காமல்  பக்கத்தில் உள்ள கமுகு  மரத்தின் மீது சாயும். கமுகு மரம் அருகில் உள்ள பாக்கு மரத்தின் மீது சாயும். பாக்கு மரம் அருகில் உள்ள வாழைமரத்தின் மீது சாயும்.
என்று படிக்கும் போதே அதனை கற்பனை உருவில் என் தமிழ்  கொண்டு வந்தபொழுதா !!

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி அருளொடு  நிறைந்ததுவே 
என்று பிரபஞ்ச தத்துவத்தை பகுத்த போதா  !!!

அகநானூற்றில், தலைவியை பிரிந்து  சென்ற தலைவன் வருவதாக கூறிய கார்காலம்  வந்தபிறகும் வராத தலைவனையும் அதனால் பசலை நோய் பிடித்திருந்த தலைவின் கூற்றின் போதா !!
தலைவன் வரும் வழியில்  பொல்லென  பூத்திருந்த முல்லைபூக்கள்  கார்காலத்தின் வருகையை  தலைவனுக்கு உணர்த்தியது என்றதை பருவ வயதில்  ரசித்து  வாசித்த போதா !!

தேடிச்சோறு நிதந்  தின்று  பல
சின்னஞ்சிறு   கதைகள் பேசி
..
..
பல வேடிக்கை மனிதரைப்  போலே வீழ்வேனென்று நினைத்தாயோ !!!
என்று பாரதியை படித்து விட்டு கண்ணில் கனலும், நெஞ்சில் திமிரும்  கொண்டும்  அலைந்த போதா !!!

எப்போது வந்தது  இந்த பற்று? எதனால் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் போது வார்த்தைகளில் அனலடிக்கிறது? தமிழ்  சம்மந்தமான அனைத்தும்  ஏன் நண்பர்களுக்குள்ளே அடிக்கடி விவாதப் பொருளாகிறது ?
அமீரகத்தில் வேலைக்கென்று வந்த புதிதில், வாகன ஓட்டுனர் முதல் கொண்டு திட்ட இயக்குனர்  வரை எனக்கு ஹிந்தி தெரியாததை ஆயுதமாக்கியபோதும் தமிழன் என்று கர்வமுடனே விவாதம் புரிந்தது  ஏன் ?
  இதற்க்கான பதிலை இதுவரையிலும் ஆராய்ந்ததும்  இல்லை. ஆராய  வேண்டிய அவசியமும் இல்லை . இது எனது மொழி .. எனது சுவாசம்.... எனது இருப்பு.. எனது தமிழ் மொழி ஒப்பிடுதலுக்கும்  விவாதத்திற்கும்  அப்பாற்பட்டது. எத்தனை விதமான பிறமொழிக்கலப்புகள்  , கலாசாரத் தாக்குதலுக்கு உட்பட்டாலும் இன்னும் கன்னித்தன்மை குன்றாமல்,  
"உன் சீரிளமை திறம்வியந்து செயல்மறந்து" என்று 
 வாழ்த்தப்பட்டும், வாழவைத்து கொண்டும் இருக்கிறது

 நான் ஏதோ தமிழையே காக்க வந்தவன்  மாதிரி எழுதுகிறேன்   என்று நினைக்க வேண்டாம் .  உங்கள் மனதில் எழுவது  என்னமாதிரியான கேள்விகள் என்று எனக்கும் புரிகிறது . நீங்கள் நினைப்பது போலவே என்னாலும் பிழையின்றி , பிறமொழிக் கலப்பின்றி பேசுவதோ, எழுதுவதோ சரிவரக் கைவரவில்லை.இதற்கு நான் மட்டுமா காரணம்இந்த சமூகமும், வளர்க்கப்பட்ட விதமும் , நான் இருந்த சுற்றுசூழலும் தானே  காரணம். இது எல்லாமுமே நம் மீது திணிக்கப்பட்டது தானே.

இதே மாதிரியான  ஒரு சுற்றுசூழலையா , சமூக அமைப்பையா , தாய் மொழியை பாதி மறந்த உலகத்தையா நாம் அடுத்த தலைமுறைக்கு தரப்போகிறோம் ??? சொல்லுங்கள்.

கண்களை காயப்படுத்தி கொண்டே ஓவியங்களை ரசிக்க சொல்லி தருகிறோம்.சுவாசிக்கின்ற காற்று, சுற்றுகின்ற  பூமிதண்ணீர்  என அனைத்தையும் பாழ்படுத்தி விட்டோம். குறைந்த பட்சம் தமிழ் மொழியையாவது விட்டு வைப்போம்

தமிழர்களாகிய  நாம்  தமிழரோடு  தமிழில் பேசுவோம்.
வருங்கால   சந்ததியினருக்கு தமிழ் மொழியை நன்கு பயிற்றுவிப்போம் . அந்நிய மொழியில் குறிப்பாக ஆங்கில மொழியில் பேசுவதுதான் பெருமைக்குரியது என்னும் மாயையை அகற்றுவோம்.
 பல மொழிகளை கற்பதிலோ அதை தேவைப்படும் இடங்களில் பேசுவதோ தவறேதும் இல்லை.
"பன்மொழிப்  புலமையை நமது  உலகாக்கி கொள்வோம்
அதை  பார்க்கும் கண்களாக  நம்  தமிழை ஆக்கிக்கொள்வோம்."

நாளையே இந்த மாற்றம் நடந்து விடப்போவது இல்லை. அதே போல்   பிறமொழிக்   கலப்பும் ஒரே நாளில் நிகழ்ந்தது இல்லை.ஆனால்  இந்த எண்ணப்பரவல்  மிகவும் அவசியமான ஒன்று.
தேமதுரத் தமிழோசை உலகெங்கிலும் பரவி  ஒலிக்கும் நாள் வந்தே தீரும்.
 நல்லதொரு மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்...

பெருங்கவிஞர் கூறியது போல,
"எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால்  தமிழ் ஆளும்" !!!

வாழ்க வளமுடன் , தமிழ் தந்த புகழுடன் !!!

Related Posts Plugin for WordPress, Blogger...