Monday, April 23, 2012

குறையொன்றுமில்லை

வழக்கம் போல் இம்முறையும் வானம் பொய்த்திருக்கும்,
இருக்கும் தண்ணிக்கு வச்சுள்ள கத்திரியில்
இலைச்சுருட்டை விழுந்திருக்கும்
நிலவள வங்கியின் நகை ஏல அறிவிப்பு
தபால் கார்டில் வந்து சேரும் 
காதுகுத்தும் பிள்ளைக்கு தோடு போடவேண்டுமென
இளைய தங்கை சொல்லி போவாள்
முகங்கண்ட மறுகணமே அம்மாவென குரலெழுப்பும்
காளைகளை விற்று விட்டு ஊர் திரும்புவாய் நீ
பஸ் ஸ்டாண்டில்  நீ விரும்பிய  பெண் தான் விரும்பிய
புருஷனுடன் எதிர்ப்படுவாள் திரும்பி நிற்கும் உன்னிடத்தே
வலிய வந்து உரையாடி சௌக்கியமா எனக்  கேட்பாள்
நல்ல சௌக்கியம் என்று சொல் .......
 சு . செங்குட்டுவன் .

இது விகடனில்  முத்திரை கவிதையாக பவள விழா மலரில் வெளிவந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை,படித்தவுடனே இந்த கவிதை மனதில் ஆழமாக  தங்கி விட்டது.  எப்போது ஓய்வு கிடைத்தாலும் இதை எழுதி ரசிப்பது என்ற அளவுக்கு பிடித்தமானது.

சில நேரங்களில் யோசித்தது உண்டு இந்த கவிதை ஏன் இவ்வளவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று ஆனாலும் இதுவரை பிடி கிட்டியது இல்லை ..
சொல்லப்பட்டிருக்கும் எல்லா  விஷயங்களும்  நான் நெருக்கமாக  அனுபவித்தவை போலவே  தோன்றும் ..
வானம் பார்த்து கஷ்டத்தில் இருக்கும் ஒரு விவசாய குடும்பத்தின் சூழ்நிலையை தத்ரூபமாக சித்தரிக்கபட்டிருக்கும் ...  
"நிலவள வங்கியின் நகை ஏல அறிவிப்பு  தபால் கார்டில் வந்து சேரும் "   எல்லா விவசாய குடும்பத்திலும் இருப்பதுதான் .. சிறுபிள்ளையாக இருந்த பொழுது தபால் காரர் விட்டெறிந்த தபால் கார்டை எடுத்து அம்மாவிடம் கொடுக்கும் போது அம்மாவின் முகம் வாடிப் போகும்,
இளைய தங்கை என்றதில் இருந்து மற்றுமோர் தங்கையும் இருக்ககூடும் அவளுக்கும் இதே போன்றதொரு நிகழ்வுகள் நடக்கக்கூடும் அல்லது நடந்திருக்க கூடும் ...இவ்வளவு இடைஞ்சலுக்கு மத்தியில் அவனுக்கோர் ஒருதலை காதலோ அல்லது  நிராகரிக்கப்பட்ட காதலோ இருந்திருக்கலாம்.... அது நிறைவேறாத மன உளைச்சலில் இருக்கும் போது, பஸ் ஸ்டாண்டில்  அவளை பார்த்து  தவிர்க்க நினைத்தபின்  அவள்  வலிய வந்து உரையாடி சௌக்கியமா ?? எனக்கேட்பாள்.. நல்ல சௌக்கியம் என்று சொல் ...!!!!!
 எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உணர்வுபூர்வமாக கையாளும் போது வெறுப்பாக மட்டுமே பதில் அளிக்க தோன்றும்..
 என்ன ஒரு  மனோதிடமும் பக்குவமும் இருந்தால் அவ்வாறு பதிலளிக்க தோன்றும்!!! '' நல்ல சௌக்கியம் என்று சொல்" மிகவும் பிடித்த என்னை பாதித்த வரிகள்.

உணர்வுப்பூர்வமாக நான்  தாக்கப்படும்  போது எல்லாம் எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன்   "நல்ல சௌக்கியம் என்று சொல்" ....   

                                  வாழ்க வளமுடன் .... தமிழ் தந்த புகழுடன்......






     

2 comments:

  1. வாழ்க வளமுடன் .... தமிழ் தந்த புகழுடன்......

    ரொம்ப நல்லா இருக்குது. வார்த்த விளையாடுது!!!!!!

    ReplyDelete