Saturday, December 22, 2012

செத்துப் போ விவசாயியே 2

செத்துப் போ விவசாயியே - 1

தண்ணீர் இல்லை நிலத்தடி நீர்  எத்தனையோ அடிக்கு மேலே  போய்விட்டது என்று சொல்லும் நாம்தான்,   நிலத்தடி நீரைச் சேமிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் செய்யமாட்டோம். மழை  இல்லை   என்று புலம்பும் நாம்தான் இரண்டு நாட்கள் தொடர்ந்தாற்  போல மழை பெய்தால் ஊரே வெள்ளக்காடாகி விட்டது, ரோடெல்லாம் ஒரே தண்ணீர்  என்று புலம்புகிறோம்.



அதற்கும்  முழு காரணமும் நாமாகத்தான் இருப்போம். இருக்கும் குளங்களையும், வாரிகளையும் தூர்த்து, சிறுகச் சிறுக சேர்த்து பிளாட் போட்டு விற்றிருப்போம்.அடுத்த ஒரு வாரம்   கழித்து  தண்ணீர் இல்லை ,மழை இல்லை என்று அதே பஞ்சப்  பாட்டை திரும்ப  பாடுவோம்.

  • படிக்காத ஒன்றும் அறியாதவர்கள் என்று நாம் நினைக்கும் நமது பாட்டனும் முப்பாட்டனும், முன்னோர்களும்  அமைத்து வைத்திருந்த விவசாய முறை நாம் அறிவோமா ?
  • பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்து தஞ்சை டெல்டா முதல்  தலைக்காவிரி வரை கோலோச்சிய தமிழனின் யுக்திகளை  நாம் தொடர்கிறோமா ?? 
  • அவர்கள்  செய்த நீர்ப்பங்கீடு முறை நமக்கு நினைவில் உள்ளதா? மழைக்காலத்தில் நமது கிராமங்களில் உள்ள குளங்கள் வரிசைக்கிரமமாக  நிரம்புவதை இப்போது பார்க்க முடியுமா?
  • பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வீட்டிற்கு ஒருவர் என முறை வைத்து வாய்க்கால்களையும், வாரிகளையும் வெட்டி சீரமைப்பார்களே அந்த முறை இப்போது  உள்ளதா ?
  •  உபரி நீரை வெளியேற்றுவதற்காக காட்டாற்றுடன் இணைக்கப்பட்டுள்ள வாய்க்கால்  இருக்கிறதா இப்போது ? 
  • சிறுவயதில் நமக்கு தெரிந்து பயிர் செய்த, குருதாளி, பனிப்பயறு,கேப்பை என  எத்தனை தானியங்கள் காலப்போக்கில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. அவற்றை  முக்கியப் பயிர்களின் அறுவடைக்கு பின் இடையிடையே  பயிர் செய்வதன் மூலம் நுண்ணுயிர் சத்துக்கள் சம நிலைப்படுத்தப்பட்டு இருந்ததை நாம் செய்கிறோமா இப்போது? 
பதில்  நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

நகர மயமாக்கலும், நாகரீகமாக்கலும் சேர்ந்து விவசாயத்தை அடியோடு சீர்குலைத்து போட்டு விட்டது.எந்த அரசாங்கம் வந்தாலும் விவசாயியின் வறுமையோ தற்கொலையோ   ஒரு பொருட்டு அல்ல.

அவர்களின் தாரக மந்திரம் இதுவாகக் கூட இருக்கலாம்  விவசாய நிலங்களை கான்க்ரீட் காடுகளாக்கி, நிலத்தடி நீரை தொலை தூரத்திற்கு அனுப்பி, மிச்சமிருக்கும் உவடு தட்டி போன நிலத்தை  சுடுகாடாக்கிவிட்டு   விவசாயிகளை  பார்த்து  "செத்து போ விவசாயியே  " என்று சொல்வதாக கூட இருக்கலாம்...

விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு,தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று  சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் ...


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Tuesday, December 18, 2012

செத்துப் போ விவசாயியே ...

"வரப்புயர நீர் உயரும்
 நீர் உயர நெல் உயரும்
 நெல் உயர  குடி உயரும்
 குடி உயரக்  கோன் உயர்வான்."

 என்று ஒரு விவசாய குடியின் வளர்ச்சி  நாட்டின் வளர்ச்சியாகப் பார்த்த காலங்கள் மலையேறிப் போய்விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிநாதமாய்,  பெருமையாய்  பாடப்பட்ட விவசாயி தான் இன்று வரிசையாய்  தற்கொலை செய்து கொள்கிறான்.  இது விதர்பாவிலோ, அல்லது நமக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத நாட்டின்  ஏதோ  ஒரு மூலையிலோ  நடந்த செய்தி அல்ல. உலகுக்கே  படியளந்த தஞ்சை டெல்டாவில் தான் இந்த தொடர் தற்கொலை சம்பவங்கள்.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
 தான்அமிழ்தம்  என்றுணரற் பாற்று.  "

 என்று உலகத்து உயிர்களை எல்லாம் வாழ வைக்கும் அமிர்தம் போன்ற மழைதான் இன்று "ஆலகாலமாய்" மாறி, பெய்க்காமல் பொய்த்து, விவசாயிகளை காவு வாங்குகிறது.

அண்டை மாநிலங்கள் தண்ணீர் தராமல்  வஞ்சிக்க, பருவமழை பொய்க்க, நிலத்தடி நீரும் குறைந்து, குண்டு பல்பு எரியகூடிய அளவு மின்சாரத்தையே வழங்க  வக்கத்த, துப்புகெட்ட அரசாங்கமும் கைவிட, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட  முடியாமலும், வறண்ட வீறு விட்ட வயலை காணச் சகிக்காமலும், பூச்சி மருந்திலும், புளிய மரத்தில் நான்கு  முழக் கயிறுடன்  நிரந்தர நிம்மதி தேடிக்கொள்கிறான் ஏழை விவசாயி.

வறட்சி காலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டிய அரசாங்கம்,  வாய்தா வாங்கும் சாமர்த்தியத்தில் பாதி காண்பித்தால் கூட போதும் காவிரி கைவிரிக்காது. முல்லைப் பெரியாறு முரண்டு பிடிக்காது. ராஜ தந்திரமாய் காரியம் சாதித்து கொள்ள நமது அரசியல்வாதிகளுக்கு துப்பில்லை. ஆனால் அறிக்கை போர் புரிவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

  • நதி நீர் இணைப்பு குறித்த தெளிவான பார்வை இல்லை. அதை மேற்கொள்ள எந்த விதமான முனைப்புத்  தன்மையும் இல்லை.
  • நீராதாரத்தை நிலைப்படுத்த எந்தவிதமான  தொலை நோக்கு திட்டங்களும் இல்லை.  
  • போதிய தடுப்பணைகள் அமைத்து உபரியாய் கடலில் கலக்கும்  நீரைச் சேமிக்க எந்த ஒரு முயற்சியும் இல்லை.  
  • குறிப்பாக விவசாயம் குறித்தோ விவசாயிகள் குறித்தோ யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை .

அரசியல்வாதிதான் அப்படி இருக்கிறார்கள் என்றால்  நன்கு மெத்த படித்த நல்ல பதவியில் உள்ள வேளாண்மை அதிகாரிகள்  அதுக்கு மேல் !!!!  விவசாயி எங்கு போய்  முட்டிக்கொள்வது???  மண்பரிசோதனை  செய்ய நான் பட்ட பாடு சொல்லி மாளாது ....


                                                                             மீண்டும்  புலம்புவான் விவசாயி  .......

விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு, தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று  சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் .


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!











Thursday, December 13, 2012

மாலை நேரத்து மழை.


 
                                                                அகமும் புறமும் 
                                                                இதமாய் நனைத்து 
                                                                குழந்தையாய் 
                                                                உள்ளம் குதூகலிக்க 
                                                                வைத்து  
                                                                மறந்திருந்த பால்யம் 
                                                                உசுப்பி 
                                                                தற்கால கவலை
                                                                மரணித்து 
                                                                இயல்பாய் உயிரினில்
                                                                ஒரு சிலிர்ப்பை  
                                                                 தந்தது  அந்த 
                                                                 மாலை நேரத்து 
                                                                 மழை .
                                                                அந்த அற்புத 
                                                                 கணங்கள்  
                                                                 மண் நனைத்து 
                                                                 வாசனை கிளப்பி 
                                                                 என்னை ஏகாந்தத்தில் 
                                                                 திளைக்க விடலாம்.
                                                                 இல்லை 
                                                                 நெஞ்சில் சூல் கொண்டு 
                                                                 கவிதையாய் பிரசவிக்கலாம்.
                                                                 எப்போது வேண்டுமானாலும் !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!





Monday, December 10, 2012

செய்திலா வினைகள்.


உன் வெட்கத்தின்  நிறமான இளஞ்சிவப்பை 
பூசி இருந்திருக்கலாம் அந்த  சுவர்களில்
மொத்தமாய் உனது உருவம் பார்க்க
பொருத்தி இருந்திருக்கலாம் அந்த கண்ணாடியை
காலை  வெயிலின்  கடுமை   குறைக்க
 மாட்டி இருந்திருக்கலாம் அந்த திரைச்சீலையை
வாகாய்  துணி  உலர்த்த  கொடி  ஒன்றை
கட்டி இருந்திருக்கலாம் அந்த மொட்டை மாடியில்
உனக்கென்ன
இப்படியாய் கேட்டு  நிராசையாய் போன
எத்தனையோ  ஆசைகளுடன்  இதுவும் ஒன்று
எனக்கோ
மனதை பிசையும் பிரிவுத்துயருடன்
இலவச இணைப்பாய் உறுத்தும்
செய்திலா வினைகளின் மிச்சங்களும் 
அதன்  நினைவுச் சேர்க்கைகளும் 
இருந்தாலென்ன  அனைத்தையும் செய்து
முடிக்க இன்னொரு வருட விடுமுறை
வராமலா போய்விடும் எனக்கு ???!!! 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Tuesday, November 20, 2012

பசுமை நிறைந்த பால்யம்-3

முந்தைய பகுதிகளை படிக்க,
பசுமை நிறைந்த பால்யம் -1
பசுமை நிறைந்த பால்யம் -2
                           
பள்ளி செல்லும் காலை பொழுதுகள் சற்று கசப்பானவை. ஜோல்னா பையை தலையில் மாட்டியபடி  அவசர அவசரமாய் நடந்து  செல்வதும் , நண்பன் கேட்கையில் மாத்திரம் நினைவுக்கு வரும் எழுத  மறந்து விட்ட வீட்டுப்பாடங்களும், எழுத ஆரம்பித்து பாதியில் தொக்கி நிற்கும் கணக்கும் செல்லும் வழியில் பயத்தை தருபவை.

கணக்கு டீச்சர் வராத நாட்களை எண்ணி குதூகலித்த தருணங்கள்  மிகவும் அதிகம்.பள்ளி நெருங்குகையில்  உரத்து  கேட்கும்  வாய்ப்பாட்டை  கேட்கும் பொழுதே சொரேரென்றிருக்கும்.  எங்கே சுழற்சி முறையில் நாமும்  சொல்ல வேண்டுமோ என்று பயந்து முன்னால் இருப்பவனின் முதுகுக்கு  பின்னால் ஒளிந்திருந்தது   ஒரு காலம் பால்யத்தில் . 

மழை பெய்யும் பள்ளி நாட்கள் இதமானவை. மழையின் ஆரம்பத்தில் வரும் மண்வாசனையும், இரைச்சல் மிகுதியால் நின்று விடும் வகுப்புகளும், மைதானத்தில் புள்ளியாய் ஆரம்பித்து தாழ்வான பகுதியை நோக்கி வாரிவாரியாக ஓட ஆரம்பிக்கும் மழை  நீரும், தேங்கிய மழைநீரில் விழுந்து  குடைவிரித்தவாறே  மறையும் நீர் முத்துகளும் கண்ணெதிரில் நடக்கும் அற்புதம்.

வானம் வெக்காளித்த  பின் வழக்கத்தை விட சற்று முன்னதாக விடப்படும் பள்ளியும், வெளிவருகையில் உணரும் வெம்மையும், செல்லும் வழி எல்லாம் தண்ணீரை எத்தி விளையாடிய படியே செல்வதும், மரம் செடிகளில் இருந்து சொட்டி கொண்டிருக்கும் நீர்த்திவலைகளும், சிறுமரத்தினடியில் யாரையேனும் எதார்த்தமாய் நிற்க வைத்து, அவர்கள் மீது  ஆட்டி விடப்பட்டு, சொட்டிய மழைத்துளிகளும்,

அம்மாவால் சூடாக   தரப்படும்  மழை நேரத்து தேநீரும், கூடவே தித்திப்பாய்  தேங்காய்,வெல்லமிட்டு தரப்படும்  ஊறவைத்த அரிசியும், அதில்  எதிர்பாராமல்  கடிபட்ட கல்லால் ஒரு வினாடி  கூசிப்போகும் உடலும்,  அதை நினைக்கையில்  அதே  உடல் கூசும் உணர்வை இப்பொழுதும்  உணரும் அதிசயத்தையும்    என்னவென்று சொல்வது!

பால்யம் குறித்த நினைவுகளை  எழுதுவது என்பது, கோடை நாளொன்றின் மீது கோபம் கொண்டு பெய்யும் பெருமழையின் சாரலில் நனைவது  போல என் மனதை சுகமாய்   நனைக்கிறது .

நன்றாய்  நனைக்கட்டும்  பெருமழையின் சாரல் !!!

                                                                                                                      பால்யம் மலரும் ....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


 

Tuesday, November 6, 2012

துப்பாக்கி - ஒரு பார்வை.



1.இது எப்புடி ??


2.அப்ப இது?



3.இதுவும் புடிக்கலையா ??




4.கடைசியா இது .
 



5. சரிங்க உங்களுக்கு புடிச்சத நீங்களே பார்த்துக்குங்க !!!!!






சரிங்க துப்பாக்கி - ஒரு பார்வை.  பார்த்துடீங்கள்ள !!???
அடுத்த தடவை பீரங்கி சரியா ?
என்னது டாக்குடர் படமா ?  ஒ.. ஓ .. நீங்க அந்த துப்பாக்கின்னு  நினைச்சிங்களா?  

இப்படி நீங்க தெளிவா கேட்டு இருந்தா முன்னாடியே சொல்லி இருப்பேன்ல இன்னும் ரிலீஸ் ஆகலைன்னு !!!!!



போங்கப்பா போங்க போய் வேல வெட்டிய பாருங்க ....என்னது அட்ரஸா ???
ஆட்டோவா ??? அய்யய்யோ சீக்கிரம் எடத்த காலி பண்ணுடா சூனா  பானா !!!!

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!









Monday, November 5, 2012

அத்தாச்சி போட்ட சூடு !!!

                                                   பொங்கல் நேரத்தில் வீட்டிற்கு வெள்ளை அடிப்பது, வீட்டை சுத்தம் பண்ணுவது என்று எங்களை  சத்தெடுப்பார்கள். வீட்டினுள்  இருக்கும் அனைத்து பொருட்களும் கொல்லைப்புறம் வந்துவிடும். அனைத்தும் கழுவியும்,துடைத்தும் திருப்பி வீட்டிற்குள்  வைக்கப்படும். வீட்டை அலசுவதற்கு அடிபைப்பில்  தண்ணீர் அடிக்கணும்  பாருங்க, அப்பப்பா  கண்ணைக்கட்டிடும். இதுதான் கடைசி குடம், கடைசி குடம்ன்னு சொல்லியே ஒரு ஏழெட்டு  குடம் அடிக்க வைச்சுடுவாங்க.



எல்லாம் முடிஞ்சு சரிதான் இனி விளையாட போகலாம்னு நினைக்கும் போது, நம்மளோட பளிங்கு, சோடாமூடி போன்ற பொக்கிஷம்  எல்லாம் வீட்டுக்குள்ள இருக்கும். அலசிவிட்ட ஈரம் காயுற வரைக்கும் வீட்டுக்குள்ள விடமாட்டாங்க. ஒரே சத்திய சோதனைதான் போங்க ...

நான் தவழும் பிள்ளையா இருக்கும் போது நடந்தது கீழே  ,
அத்தை  பசங்கள் எல்லாம் ஒன்னாதான் படிச்சோம்.சின்னபசங்க   யாராவது   அழும் போதோ அல்லது சுட்டித்தனம் செய்யும் போதெல்லாம் பேசாம இருக்கியா இல்ல ஊதாங்குழலை காய வச்சு சூடு போடவா என்று  எங்கம்மா அதட்டுவதும், அந்த குழந்தைகள் அமைதியாவதும் வாடிக்கையாய் இருந்திருக்கிறது.

 ஒரு பொங்கல் சமயத்தில்  எனதருமை அம்மா வீடு அலசிக்கொண்டு இருக்க , வெளியில் தொட்டிலில் இருக்கும் என்னை பார்த்து கொள்ளமாறு  சின்னபிள்ளையான எனது அத்தாச்சியிடம் சொல்லி இருக்கிறார்கள். தொட்டிலில் இருந்து நான் சிணுங்கும் போதெல்லாம் எச்சரிக்கை செய்வது போல பேசாம இருக்கியா இல்ல  ஊதாங்குழலை காய வச்சு சூடு போடவா? என்று எனது அம்மா பாணியில் அதட்ட,
நான் தொடர்ந்து அழவும்,வெளியில் உலை கொதித்து கொண்டிருந்த விறகு அடுப்பில் ஊதாங்குழலை காய வைத்து கையில் ஒரு இழுப்பு இழுத்து விட , நான் வீறிட்டு அழவும் எனது அம்மா  ஓடி வந்து பார்க்க, எனது அத்தாச்சியோ ஊதாங்குழலும் கையுமாக ஒரு கேள்வி கேட்டு இருக்கிறார்கள் அது என்னன்னா,   
                             *
                             *
                             *
                             *
                             *
                             * 
ஏன்  அத்தை  நான் சூடு போட்டும் இவன் இன்னும் அழுகையை நிறுத்தலை ???
அப்புறமென்ன அவங்களை ஸர்ஃப், நிர்மா, எல்லாம் போட்டு வெளு வெளுன்னு   வெளுத்துட்டங்களாம் .
எப்போதாவது  அத்தாச்சியிடம்  ரொம்ப கிண்டலடித்து பேசும் போது,      தலையாட்டிக்கொண்டே சொல்வார்கள் உனக்கு சூடு போட்டது    தப்பில்லை,     ஆனா அந்த சூட்டை உன் வாயில போட்டிருக்கணும்!!!. 

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!

Saturday, November 3, 2012

சொல்ல நினைத்து சொல்லாதவை!!!

                                                             சொல்ல நினைக்கும் எல்லாவற்றையும் நினைத்தாற்  போல சொல்லி விடமுடிவதில்லை எப்போதும். அப்படி சொல்லாமல் விட்டு  போன வார்த்தைகள் தொலைந்து போய்விட்டாலும், அதன்  அடிநாதமான நினைவுகள் மனதை  அவ்வப்போது வருடிப்போகின்றன .

மருத்துவமனைக்கு மனவளர்ச்சி குன்றிய பதின்ம வயது மகளை  சக்கர நாற்காலியில் வைத்து  தள்ளிக்கொண்டு வந்த  ஒரு தாயின் கண்களில் கவ்விக்கிடந்த  சோகமும், அம்மகள் தொடர்ச்சியாய் அவரையும், சுற்றத்தாரையும்   தொந்தரவு செய்த போதும்  அவர் காட்டிய பொறுமையும், அக்கறையையும் பார்த்த போது   ''நீங்கள் ஒரு சிறந்த தாய்"   என்று  சொல்ல நினைத்து சொல்லாதது.




பிழைப்புக்காய் சுற்றத்தின் நிர்பந்தத்தால், தன்னால்  அழைத்து  வரப்பட்ட மருமகன்   வந்த இடத்தில்  மருந்தை குடித்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராட, அவருடைய வேலைத்தளத்தில் இருந்து வரும் நிர்பந்தங்கள் ஒருபுறம், போலீசாரின் விசாரணை மறுபுறம், ஊரிலிருந்து  வந்து   கொண்டே இருக்கும் அலைபேசி அழைப்புகள் ஒருபுறம், மொழியும், மனிதர்களும் அறியாத நாட்டில் கஷ்டபட்டுக்கொண்டிருந்த ஒரு பெரியவரை பார்க்கும் போது ஆதரவாய் தோள்  சேர்த்து  " இதுவும் கடந்து போகும்"    என்று சொல்ல நினைத்து சொல்லாதது.

மருத்துவமனையில் உயிருக்கு நண்பன் போராடிகொண்டிருக்கும் அந்த வேளையில், வெறுமனே கடனுக்காய், வேண்டா வெறுப்பாய் பதிலளித்து அங்குமிங்கும் அலைய விட்டுக்கொண்டிருந்த அரபிகளுக்கு மத்தியில்  கனிவாய், இன்முகத்துடன் அவரது வேலையாக அது இல்லாத போதும்  சரியாய் வழிநடத்திய அந்த பெண் அரபி மருத்துவருக்கு  மனம் நெகிழ்ந்து, நன்றியுடன்  பாராட்டுதலாய் சில வார்த்தைகளை  சொல்ல நினைத்து சொல்லாதது.

இப்படியாக  நாம் செல்லும் வழிநெடுகிலும், நம்மைச்  சுற்றிலும்  அலைந்து திரிந்து கொண்டுதான் இருக்கின்றன யாருக்காகவோ, எதற்காகவோ  நாம் சொல்ல நினைத்து  சொல்லாமல் விட்ட வார்த்தைகளும் அதனூடாக மங்கிய  அதன்  நினைவுகளும்!!!!!


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!







Monday, October 29, 2012

சிதறிய ரொட்டியும், தெறித்த ரெட்டியும் !!!

                                          ஓட்டுனர் உரிமம்  வாங்குவது என்பது வளைகுடா நாட்டு  வாழ்க்கையில் ஒரு மைல்கல்.பயிற்சி பள்ளியில் சில பூர்வாங்க  தேர்வுக்கு பின் நாம் சில தனியார்  காரோட்டிகளின் மூலம் பயிற்சி பெற்று பின் தேர்வுக்கு செல்லலாம்.
அப்படி தெரியாத்தனமா வந்து நம்ம நண்பர்கள்கிட்ட மாட்டுன ஒரு அப்பாவி ஆத்மா தான் "ரெட்டி " ஆந்திராகாரர். மதிய உணவு இடைவேளையின் போதோ அல்லது சாயந்திரம் எங்களுக்கு  வேலை முடிந்தபின்பு  பயிற்சி என்ற பெயரில் சித்திரவதை ஆரம்பமாகும் அவருக்கு.

 ஒரு நண்பன் நான் பெரிய அப்பாடக்கர், ஊரில் எல்லாம் வண்டி ஒட்டி இருக்கேன் சொல்லிட்டு அவரிடம் பயிற்சிக்கு போனான். ஒருமுறை  ரவுண்டானாவில் யு டேர்ன்  எடுக்குமாறு சொல்ல, நமது நண்பனும் எதுக்கு  அங்க எல்லாம் போய்  சுத்திகிட்டின்னு நினைச்சு ரவுண்டானா ஆரம்பமாகும் இடத்திலேயே போட்டான்  பாருங்க யு டேர்ன, அவ்வளவுதான் தெறிச்சுட்டார் நம்ம ரெட்டி.  அப்புறம் அவனுக்கு ஆனா ஆவன்னாலேருந்து ஆரம்பிச்சார். 

பொதுவாக ரவுண்டானா ஆரம்பத்தில் சற்று நிதானித்து வேறு வண்டிக்கு இடைஞ்சல் இல்லாமல் போக வேண்டும்.  ஒருநாள் ரவுண்டானா ஆரம்பத்தில் நிதானித்து வண்டியை மெதுவாக்கி , நம்மாள்  போகலாம் என்று நினைத்து வண்டியை கிளப்பும் போதே  ரெட்டி "பெட்ரோல் தேதோ" " பெட்ரோல் தேதோ" ன்னு அவசர கதியில் கத்த, ஹிந்தி தெரியாத நண்பன், போகச் சொல்கிறாரா, நிக்க சொல்றாரான்னு புரியாமல்  குழம்பி மிகச்சரியாக  நடுரோட்டில் நிறுத்தி விட்டான். பிறகுதான் தெரிந்தது  ஆக்சிலேட்டர்  குடு என்பதைத்தான் ரெட்டி அப்படி   சொல்லி இருக்காருன்னு.

 அதுலேருந்து  கொஞ்சம் பயத்துடனே நம்மாளு ரவுண்டானாவுல  வண்டி ஓட்டி  கொண்டு இருக்க, இதை கவனித்த ரெட்டி, ஒருநாள்  சாயந்திரம் ஒரு டீயையும் ரெண்டு ரொட்டியையும் வாங்கி கொண்டு வண்டியில் ஏறி,  ரொட்டியை டீயில்  நனைத்து சாப்பிட்டவாறே, நண்பனை உற்சாகப்படுத்துவதாக நினைத்து கொண்டு,  நான் இருக்கிறேன் அல்லவா பயப்படாதே நல்ல தைரியமா ஒட்டு என்று சொல்லி கொண்டு  இருக்க,  

நம்மாளு ஒரு ரவுண்டானாவில் வேகமா போவோம்னு நினைச்சு ஆக்சிலேட்டரை  ஒரு அழுத்து  அழுத்த , ரொட்டி தின்கிற சுவாரஸ்யத்துல ரெட்டியும்  கவனிக்காமல் விட, அடுத்த செகண்ட் வண்டி முன்னால  இருந்த "கர்பு ஸ்டோனை" எல்லாம் தாண்டி ரவுண்டானா நடுவில போய்  நின்னிருக்கு. கலக்கத்தோட நம்மாளு ரெட்டிய பார்க்க, ரொட்டி சிதறி,  டீயும் மூஞ்சு, ஒடம்பு   பூரா ஊத்தி இருக்க ,  ரெட்டி கண்ணாடிய பார்த்து அவரையே திட்டிக்க ஆரம்பிச்சாராம்.

பார்க் பண்ணியதும், யு டேர்ன் போட்டதும்....

ஆனா மானஸ்தங்க அந்த ரெட்டி!! அதுக்கு அப்புறம் எந்த ஒரு நெலமையிலையும், எங்களோட  போனை எடுக்கவே இல்லையே, எங்களோட பேர எவனாவது சொன்னா பயிற்சி கட்டணம் அதிகமா வசூலிக்கிறதா கேள்வி அவ்வ்வ்வவ் !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!



Saturday, October 20, 2012

நண்பனும் தங்கையும் !!!

                                                             பாசமலர் படத்தை பார்த்து கெட்டு  போன பயபுள்ளைகள்ள  நம்ம நண்பனும் ஒருத்தன் . சின்ன புள்ளையில  தங்கச்சிக்கு ஒண்ணுன்னா மொத ஆளா நிப்பான். ஏதாவது தப்பு செய்ததற்கு   தங்கச்சியை அடிக்க அவங்க அம்மா கம்பை எடுத்தா , தங்கச்சி அழுவுதோ இல்லையோ  நம்மாளு அழ ஆரம்பிச்சுடுவான். 

அம்மா வேண்டாம்மா,  அம்மா வேண்டாம்மா  ன்னு சொல்லி  அவங்க அம்மா கைய புடிச்சு தொங்கி கிட்டு இருப்பான். பொறுத்து பொறுத்து பார்த்த அவங்க அம்மா, அவன் தங்கச்சி ஏதாவது தப்பு பண்ணினா மொதல்ல இவனை புடிச்சு வெளுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அவனோட அறிவுக்கும், பண்ற சேட்டைக்கும்  வாரத்துக்கு ஏழு நாள் மட்டும் தான் அடிவாங்குவான். இப்போ பாசமலர் தங்கச்சியோட அடி கணக்கு வேறயா !! அதுனால கணக்கு வழக்கில்லாமல் அடிவிழும். போதும் போதுங்கிற அளவுக்கு அடி குடுத்து,  கடைசியா ஏதாவது தின்பண்டத்தை குடுத்து  விட்டுருவாங்க!!!.எந்த நேரமும் அழுகையும், தீனியுமாதான்  அலைவான் நம்ம பங்காளி.

ஒருநாள்   உலையில அரிசியை போட்டுட்டு,  தங்கையிடம் கொஞ்ச நேரம் கழித்து பக்கத்துக்கு வீட்டு அத்தையை கூப்பிட்டு சோறு வடிக்க சொல்லிவிட்டு  அவங்க அம்மா  ஒரு  கேதத்துக்கு போய்விட, விளையாட்டு மும்முரத்தில் தங்கையும் மறந்து விட, சோறு பொங்கலாயிருச்சு. அதுவும் அவங்க அம்மா வந்து பார்த்தா பின்னாடிதான்  தெரிஞ்சது .

கடுப்பான அவங்கம்மா கம்பை எடுத்து ப்ரோட்டோ கால் படி நம்ம பங்காளியை அடிக்காமல் நேரடியாக  அவன் தங்கச்சியை  அடி வெளுக்க ஆரம்பிக்க,
நம்மாளு தங்கச்சியை காப்பற்ற வேண்டுமென்ற கடமை உணர்வோடு  கம்பை அவங்க  அம்மாவிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஓட, என்றுமில்லாத கோபத்தில் அவங்க அம்மாவும் விரட்ட, சிக்கினா சின்னாபின்னமாயிருவோம்னு  தெரிஞ்சு  நம்மாளு ஓடி வீட்டு கூரை    மேல ஏறிட்டான் . வேகமா வந்த அவங்க அம்மா கால் தடுக்கி விழுந்து கல் ஒரல்ல மோதி மண்டை ஒடஞ்சு ரத்தம் ஊத்துது. 

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவிக்கு வந்தவர்கள் , இவனை திட்ட  இதை எதிர்பார்க்காத நம்மாளு, டென்ஷனாகி  அழுதுகிட்டே இதுக்கெல்லாம் காரணம் இவதான்னு சொல்லிட்டு ஒரு ஓட்டை எடுத்து அவன் தங்கச்சி தலையில போட  அவ மண்டையும் ஒடஞ்சு ரத்தம் ஓட ஆரம்பிச்சது.

அப்புறம் என்ன அவன் ஓட ஆரம்பிச்சுட்டான்.   ஊரே ஒன்னு  கூடி அவனோட வீர தீர பிரதாபங்களை பேச அவங்க அப்பா அடுத்த வாரத்துல அவனை கொண்டு போய் ஹாஸ்ட்டல்ல சேர்த்து விட்டாங்க.  நம்மளுக்கு ஸ்நாக்ஸ் வரத்து கம்மியாயிருச்சு ஹி ஹி ஹி ..... !!!!!!


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!







Thursday, October 11, 2012

மரம்தான் மறந்தான்!!!

                                                         நம்மில் எத்தனை பேருக்கு  ஏழூர்  அய்யாசாமி அல்லது  ஜாதவ் பயாங் பற்றி தெரியும். நமக்கு ஒருவரை பற்றி தெரியவேண்டுமானால்   அவர்கள்  ஒரு  அரசியல்வாதியாகவோ, சினிமா பிரபலமாகவோ  அல்லது கிரிக்கெட் வீரராகவோ இருக்க வேண்டும். இவர்கள் அப்படி கிடையாது ஆனால் அதை விட மேலானவர்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள்.

அசாமை  சேர்ந்த ஜாதவ் பயாங் ஒரு தனி மனிதனாக 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கியவர் . மரங்கள் வளர்வதற்கு ஏற்றதாக இல்லை என்று     வனத்துறையால்  கைவிடப்பட்ட     இடத்தில்தான்  இவர் இதை உருவாக்கி காட்டியுள்ளார். நினைத்து பாருங்கள் ஒரு எளிய,  தனி  மனிதனின் முயற்சி எப்பேர்பட்ட காரியத்தை சாதித்துள்ளது .
 

 இன்னொருவர் நம்ம ஊர்க்காரர் ஏழூர்  அய்யாசாமி சத்தியமங்கலம் அருகே   இவர் கிட்டத்தட்ட ஒரு 10000 மரங்களை பொது நல நோக்கோடு  வளர்த்துள்ளார் . இவரும் ஒரு  எளியவர் . தண்ணீர் தட்டுப் பாடு உள்ள கோடைகாலத்திலும் வீட்டிலிருந்து  தண்ணீர் ஊற்றி வளர்த்துள்ளார்.  நாம் என்ன செய்தோம் அவர் வளர்த்ததில் 7000 மரங்களை திட்டமிட்டு வெட்டினோம்.

இத்தகைய செய்திகளை பார்க்கும் போது படிக்க நேரமில்லாமல் கடந்து விடுகிறோம் அல்லது படித்துவிட்டு  அதிகபட்சமாக அவரை மனதிற்குள் பாராட்டுகிறோம்  அவ்வளவுதான்.

நிற்க நேரமில்லாமல் நாம் ஓடி உழைத்துக் கொண்டிருப்பது யாருக்காக ? நமது அடுத்த தலைமுறைக்காகத்தானே! நம்மை விட மேம்பட்ட ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு கொடுக்கத்தானே நாம் இவ்வளவு போராடுகிறோம் . ஆனால்  உண்மையில்  நாம் அவர்களுக்கு என்ன கொடுக்க போகிறோம் தெரியுமா?

மலடாக்கப்பட்ட மண்.
ஓட்டையிடப்பட்ட  ஆகாயம்.
ஆழ்துளையிட்டாலும் கிடைக்காத நிலத்தடி நீர்.
கற்பழிக்கப்பட்ட காற்று .

என பஞ்ச பூதங்களையும் நாசமாக்கிவிட்டோம்  நெருப்பைத்தவிர . சொல்லுங்கள்  இதை கொடுக்கவா நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ? 
முன்பு இலவசமாய் ,சாதாரணமாய் கிடைத்தவை எல்லாமே இப்போது காசு கொடுத்து வாங்குகிறோம். சொல்லமுடியாது நமது அடுத்த சந்ததி காற்றை கூட காசு கொடுத்து வாங்கும் நிலை வந்தாலும்  வரலாம்.

 இவை அனைத்தையும் மரம் வளர்ப்பதின் மூலமாக சரி செய்ய இயலும். நகரத்தில் வாழ்கிறேன் என்னால் இங்கு செய்ய இயலாது என்று சப்பைக்கட்டு கட்டினாலும், நாம் நினைத்தால் சாதிக்க இயலாது ஒன்றும் இல்லை நண்பர்களே . நமக்கெல்லாம் ஒரு வேர்பிடிப்பாய் கட்டாயம் நமது கிராமங்கள் இன்னமும்  இருந்து கொண்டுதான் இருக்கின்றன.  அங்கு செய்யுங்கள். எதுவுமே செய்ய இயலாது என்றால்  குறைந்த பட்சம் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.
முடிந்தவர்கள் செய்யட்டும்.முடியாதவர்கள் உதவட்டும்.

ஒன்று ஒன்றாய் தான்  நூறு.
சிறு துளி  பெரு  வெள்ளம்.
சிறு விதை பெரு விருட்சம் !!!

தனிமரமும்  தோப்பாகும்  நண்பர்களே நாம் மனது வைத்தால்  !!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!


Monday, October 8, 2012

மறைந்து விட்ட திண்ணைகள் !!!

                                        திண்ணைக்கும் நமக்குமான தொடர்பு அலாதியானது.   வீட்டின் எத்தனையோ இடங்கள் நமக்கு  பிடித்தமான ஒன்றாக இருந்த போதிலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் எதோ ஒருவிதமான நெருக்கத்தை , அன்யோன்யத்தை  தந்திருக்கும் இந்த திண்ணைகள்.
சிறுவயதில் வெளியில் விளையாடி விட்டு தாமதமாய் வீடு திரும்பும் போதோ, அல்லது அனுமதி இல்லாமல்  பஞ்சாயத்து டி.வியில் படம் பார்த்துவிட்டு, தாமதமாய்  ஒருவித கலக்கமான மனநிலையில் வீடு திரும்பும் போதோ  வீட்டின் நிலவரத்தை நிசப்தத்தின் வாயிலாக  அறிவிப்பது   இந்த  திண்ணைகள் தாம்.
                          
ரேங்க் கார்டை அப்பாவிடம் கொடுத்துவிட்டு   நேர்கொண்டு பேச இயலாமல் தவித்த எத்தனையோ பொழுதுகளில் தாய்க்கோழியாய்  அடைகாத்த  அந்த தூண்களும்,  போட்டி போட்டு கொண்டு சுண்ணாம்பு அடித்த தூண்களில் கிறுக்கிய பெயர்களும், பொங்கலன்று புதிதாய் உடுத்திகொள்ளும்  காவி பார்டர்களும்,    திண்ணையில் உள்ள உத்திரத்தை எட்டி தொட்டு பார்த்து எனது    உயரத்தை அளந்த விதங்களும்,
 உச்சிவெயிலில் ஊர்சுற்றிவிட்டு வர, மிளகாயும், வற்றலையும் காய  வைத்து விட்டு , வாகாய்  தூணில் சாய்ந்து கொண்டு அம்மாவும், அக்காக்களும் பேசிக்    கொண்டிருக்கும் இடமாய் , கோபம் கொண்ட இரவுகளில் சாப்பிடாமல் வீம்பாய் சுருண்டு    படுத்துக்கொள்ளும் இடமாய்,  விடுமுறை நாட்களின் உச்சி வெயில் போதுகளில் தாயமோ, பரமபதமோ  விளையாடும்  இடமாய், யாருமற்ற  தனிமையில் மல்லாந்து  படுத்து ஓடுகளையும், குறுக்கு சட்டங்களையும் எண்ணிக்கொண்டு இருக்கும் இடமாய்  இருந்தது இந்த திண்ணைகள் தாம். 

படம் பார்க்கவோ, ஆற்றில் குளிப்பதற்கோ அனுமதி கிடைத்த   சந்தோஷத்தில்  துள்ளி குதித்து கொண்டு வெளி வரும் போது  எனக்கு சொல்லப்பட்டு கொண்டிருக்கும் நிபந்தனைகளின்  கடைசி  வார்த்தைகளின் சாட்சியாக நின்றவை  இந்த தூண்களும், திண்ணைகளும்  தான் .

வெவ்வேறு கால உருமாற்றங்களின் சாட்சியான திண்ணை   தாழ்வாரமாகி, பிறகு மரச்சட்டமிடப்பட்ட தட்டிக்குள்  அடைந்து, இன்று வழக்கொழிந்து போய்விட்டன.

விருந்தோம்பலின் அடையாளமாய் ஒரு காலத்தில் திகழ்ந்த இந்த திண்ணைகள் இன்று நமது நினைவுகளிலும், புகைப்படங்களிலும் மட்டுமே இருக்கின்றன,                        
கால எந்திரம் சுழற்றிய சுழற்சிகளின் மௌன சாட்சியாய் !!!


வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!! 








Saturday, September 29, 2012

தாண்டவம் தண்டனையா !!!

நம்ம சீயான்  விக்ரம், அனுஷ்கா வோட சோடி போட்டு நடிக்க, படம் பட்டைய கிளப்பும்ன்னு பார்த்தா நம்மளுக்கு கடுப்பதான் கிளப்புது.
தாண்டவம் படத்தோட கதை என்னன்னா நண்பனோட துரோகத்தால  "ரா" ல   இந்தியாவின் டாப்  அஞ்சு  பேருல ஒருத்தரா இருக்குர விக்ரம் அவரு     பொண்டாட்டியையும் , கண்ணையும் ஒரு குண்டு வெடிப்புல பறிகொடுத்த கடுப்புலஅதுக்கு காரணமான எல்லாரையும்  பழிவாங்குறது தான் கதை.  
 
கண்ணு தெரியாமல் நம்ம விக்ரம் அசால்ட்டா போய் , நாயர் கடையில டீ குடிக்கிறமாதிரி  கொலைகளை பண்றாரு கூடவே நம்மளையும். இதெல்லாம் அவரு எப்படி செய்ராருன்னு நாம தண்ணிய குடிச்சு குடிச்சு யோசிக்கும் போது படத்துல சொல்றாங்க அது ஒரு " எக்கோ லொகேஷன்  டெக்னாலஜியாம்"   என்னமோ போடா மாதவா !!!
இடையில் எமி ஜாக்சன் வேறு, போட்டோ ஷூட்டுக்கு அப்புறம் கண்ணு தெரியாத விக்ரமை இம்ப்ரெஸ் பண்ண சர்ச்சில் சர்வீஸ் செய்வதும், கண்ணைக்கட்டி கொண்டு நடந்து மூஞ்சி,  முகரையை உடைத்து கொள்வதும் சகிக்கல. 
அடுத்ததா அத்தாச்சி லட்சுமிராய் , விக்ரமிடம்  கொல்லவேண்டியவனை பற்றி தகவல் தருவது ஏதோ CIA  ஏஜென்ட்  ரகசியம் காப்பது போல சொல்கிறார்கள் முகத்தயே காட்டாமல். பின்பு முகவரியை ஐ போனில் sms வேறு அனுப்புகிறார். கண்ணு தெரியாதவர் எப்படி படிப்பாருன்னு(ப்ரைலி எல்லாம் இதுல வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல) கேட்டா அதுக்கு  ஏதாவது   "தடவிங்  டெக்னாலஜி" என்று புது பெயர் சொன்னாலும் சொல்வார்கள்.

கல்யாண பொண்ணு  அனுஷ்கா மாப்பிள்ளை என்னாவா இருக்காருன்னு கூட தெரியாம அவர கல்யாணம் பண்ண சம்மதிச்சு டெல்லிலேருந்து  வர்ற அப்பாவி  கண் டாக்டர் . விக்ரம் சொல்ல நினைச்சிருக்கும் அதே மொக்கை காரணங்களை சொல்லி ( பார்க்கணும், பிடிக்கணும் ,பழகனும் , பிரண்ட்ஸ் , காதல் ,கல்யாணம் அப்புறம்தான்   லொட்டு லொசுக்காம்" )
இதையெல்லாம் "லொட்டு லொசுக்குக்கான"  ராத்திரியில  அனுஷ்கா சொல்றாங்க, கூடவே விக்ரம் மச்சினிச்சி (நல்ல பிகருங்க ) அக்காவின் அருமை பெருமைகளை சொல்ல  இதைகேட்டு விக்ரம் இம்ப்ரெஸ் ஆகி பியானோவும்,  கையுமா சுத்துறார் பொண்டாட்டிய  லவ் பண்ண !! புதுசா இருக்குல்ல!!!! ( மௌன ராகம் படத்துக்கும் இதுக்கும் சம்மந்தம்  இல்ல!!!!!! ) .

படத்தில் கொஞ்சம் ஆறுதலான விஷயம் சந்தானம் வருமிடங்கள்.முதல் கொலையை சந்தானம் போலீசிடம் சொல்கையில்
 சார் திஸ் இஸ் டெட் பாடி, கம்மிங் ப்ரம் மொட்ட மாடி, கமிங் கமிங் அண்ட் டேமேஜிங் கார் பாடி என்று கிளாஸ் டம்ளரை உடைக்குமிடமாகட்டும், விபத்து நடந்தவுடன் டைமிங்காக வரும் "ஒளிமயமான எதிர்காலம் பாடலும்"  நாசருக்கு நக்கலாக பதில் சொல்வதாகட்டும் எல்லா இடங்களும் சரவெடி பட்டாசு.
 நீரவ் ஷா வோட ஒளிப்பதிவு அட்டகாசமா இருக்குது. அனுஷ்கா புறாக்களுக்கு இரை  போடுமிடமும், கல்யாணப் புடவையில் வருமிடமும்  அருமை. பின்ணணி இசை பொருந்தி இருக்கிறது  .இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்.

கேள்வி கேட்கணும்னா கேட்டு கிட்டே இருக்கலாம் அவ்வளவு லாஜிக் ஓட்டைகள். வேற வழியே இல்லன்னா ஒரு படம் பார்த்தே தீரனும்னா, இல்லாட்டி ஓசி டிக்கெட்டுன்னா  பாருங்க படத்த, விக்ரம் படம், தெய்வதிருமகள் விசய் படம்ன்னு போனீங்கன்னா உங்க பர்சுக்கும், கடுப்பாகி உங்க உடம்புக்கும்   சேதாரம்தான்!!!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, September 27, 2012

கரண்ட மிச்சம் பண்ண சில யோச(ரோத ) னைகள் !!!


பின் விளைவுகளுக்கு  கம்பெனி பொறுப்பல்ல !!!!!

1. எங்கெங்க  ட்ரான்ஸ்பார்மர் இருக்கோ  அங்கெல்லாம் எதோ ரிப்பேர் வேல பார்க்குறமாதிரி  நல்லா சீன்  போடுங்க . 
நாங்களும் சரி சரி  இந்த வேல முடிஞ்சோன்ன சீசன்ல குற்றாலத்துல தண்ணி வந்து பாயுறமாதிரி  கரண்ட் வந்து பாயும்ன்னு நெனைச்சி நாங்களும் மனச தேத்திக்கிவோம் . ஒரு  ஏரியாவுல ஒரு   ட்ரான்ஸ்பார்மர்  வேலை முடிஞ்சதும் அதே ஏரியாவுல  அடுத்த நாள் அடுத்த ட்ரான்ஸ்பார்மர் வேல பார்க்க  ஆரம்பிக்கணும்.  (நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா  பண்ணனும் மங்குனியாரே !!!!)
2 . கரண்ட் எப்போ வரும்ன்னு  போட்டி ஒன்னு வைச்சு எல்லாரையும்  sms  அனுப்ப சொல்லலாம். யாரு சரியா கணிச்சு  சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு  பன்னெண்ண்ண்ண்ண்ண்.............டு     மணி நேரம் கரண்ட் குடுப்பதாக சொல்லலாம். ஒரு நாளைக்கா, ஒரு வாரத்துக்கான்னு சொல்லிராதீங்க !!!

3 . டிவியும் இல்ல பொழுது போக, அதுனால  தெருமுனையில, ஜங்க்ஷன்ல  ஜோடி நம்பர் 1,   மானாட மயிலாட,  போட்டியில ஆடுனவுங்களை ஆட விட்டிங்கன்னா மக்களுக்கு பொழுதும் போகும், கொஞ்சம்  கோபமும் கொறையும்.

4. எல்லா டிவியிலையும்  வீராசாமி,லத்திகா போன்ற உன்னத திரை  காவியங்களை திருப்பி திருப்பி போட சொல்லலாம், தப்பி தவறி உங்களுக்கு தெரியாம கரண்ட் இருந்துச்சின்னாலும், அந்த படத்த பாக்குறவங்களுக்கு  டிவி பார்க்குற ஆசையே போயிரும். உங்களுக்கும் கரண்ட் மிச்சமாகும். (சொல்ல முடியாது நம்ம பவர் ஸ்டார் புளகாங்கிதம் அடைஞ்சு கட்சிக்கு நிதி ஏதாவது குடுப்பாரு.)

5 . காலேஜ் டே, பஸ் டே மாதிரி "பவர் கட் டே" என்று புதுசா ஒன்ன ஆரம்பிச்சு பகல் நேரத்துல கொண்டாடலாம். சாக்லேட்டுக்கு பதிலா மெழுகுவர்த்தி குடுக்கலாம். என்ன  ஒன்னு இதை வாராவாரம்  கொண்டாடனும்.

6. அம்மா இலவசமா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி எல்லாம் இந்த ஆட்சியிலையும், கரண்ட அடுத்த ஆட்சியிலையும் தருவதா ப்ளான் பண்ணி இருக்காங்கலாம் . ஏம்மா நீங்க இதையெல்லாம் தர்றதை நிறுத்திட்டு, மெழுகுவர்த்தி, சிம்னி விளக்கு, பெட்ரோமாக்ஸ் லைட் , இதுகள தாங்களேன் எங்களுக்கு உபயோகமா இருக்கும். அப்புறம் யாராவது   கரண்ட் வேணும்ன்னு கேப்பாங்களா என்ன??

அய்யா அஞ்சு வெரலக்காட்டி ஓட்டு கேட்டப்ப நாங்களும் உதயசூரியனை  சொல்றாருன்னு நினைச்சு ஒட்டு போட்டோம்,  ஆனா  அவரு அஞ்சு மணிநேரம் பவர் கட் பண்ணினாரு.....

அதே மாதிரி அம்மா ரெண்டு விரல காட்டி ஓட்டு  கேட்டப்ப , நாம  கொஞ்சம் சுதாரிச்சு  சர்தான் அம்மா பவர் கட்ட ரெண்டு மணிநேரமா கொறைக்க போறாங்கன்னு அப்பாவியா நெனைச்சுகிட்டு அவங்களுக்கும் ஓட்டை போட்டு தொலைச்சிட்டோம். இப்பதான் புரியுது அந்த ரெண்டு வெரலுக்கு அர்த்தம், ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் பவர்ன்னு ...... என்ன கொடுமை சரவணா இது !!!!!!




ஒட்டு வாங்குறப்ப அஞ்சு விரலையும் , ரெண்டு விரலையும் மாத்தி மாத்தி காமிச்சி  இப்போ எங்களுக்கு நடு விரலை காமிச்சுட்டீங்களே இது நியாயமா ???!!!!!!!!!!!!

வாழ்க வளமுடன்!! தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, September 20, 2012

இலை கொழுக்கட்டையும், விநாயகர் சதுர்த்தியும் !!!

                                                                    விநாயகர் சதுர்த்தி  அதுவுமா பேஸ்புக்குல  நம்ம இரவுவானம் சுரேஷ் ஒரு   கொழுக்கட்டை போஸ்ட்டுல  "நச்" கமெண்டுகளா    போட்டு தாக்க, அந்த கொழுக்கட்டை படத்த பார்த்த   நம்மளுக்கும்  கொழுக்கட்டை சாப்பிடணும்ன்னு ஆசை வர,  "முதல் முறையாக நமது கிச்சன் வரலாற்றில்" அப்படீன்னு சன்  டி.வி எபெக்டோட,   விநாயகர் சதுர்த்தியை  இலைகொழுக்கட்டையோட கொண்டாட  முடிவு பண்ணியாச்சு. செய்முறையை அரை மணி  நேரமா அம்மாகிட்ட   விலாவரியா போன்ல  கேட்டு தெரிஞ்சுகிட்டாச்சு.
நம்ம பரிசோதனை எலிகள்கிட்ட (ஹி...ஹி.. நம்ம ரூம்மேட்ஸ் ) எல்லாம்  சொல்லிட்டு,  சாயந்திரம்  வெல்லம், அரிசிமாவு சகிதம் ரூமுக்கு போனா எந்த இலையில செய்யப் போறேன்னு?  நண்பன் கேட்க , அங்க ஒரு சத்திய சோதனை "இலை வடிவுல".  பூசர  இலைக்காக  துபாய் பூரா  தேடியாச்சு எங்கயும் கிடைக்கல. "மனமிருந்தா மார்க்க பந்துன்னு" சொல்லிட்டு வாழையிலை  வாங்கியாச்சு.

அரிசிமாவை பிசைஞ்சு இலையில தடவ சொல்லிட்டு,    பூர்ணம் செய்வதற்காக வெல்லப்பாகு காய்ச்சி, பருப்பை போட்டு கடைஞ்சா, பாயசம் கணக்கா இருக்குது!! அவ்ளோ தண்ணி, நானும்  மனசு  விடாம  தேங்காய் துருவலை எல்லாம் போட்டு கெட்டியாக்க  பார்க்குறேன் ஒண்ணும் வேலைக்கு ஆகல... அந்த நேரம் பார்த்து வந்த நண்பன் ஒருத்தன் பாயாசம் நல்லாருக்கேன்னு சொல்ல, மனசு ஒடைஞ்ச  நான் அந்த அரிசி மாவை தூக்கி கொட்டி கிளற  கொஞ்சம்  கெட்டியாக ஆரம்பிச்சது,அப்ப உள்ள வந்த இன்னொருத்தன் என்னடா  மச்சான் இலைகொழுக்கட்டை செய்யுறேன்னு சொல்லிட்டு சர்க்கரை பொங்கல் கிண்டிக்கிட்டு இருக்கேன்னு? கேட்க, எனக்கு வந்த கடுப்புல பொங்கலை   ச்சே.. அந்த பூர்ணத்தை  நல்லா  கிண்ட ஆரம்பிச்சேன்.

 இன்னொரு நண்பன் கொஞ்சம் கடலை மாவை போட்டு கிண்டுனா  கெட்டியாகும்னு சொல்ல, கொய்யால போடு அதையும்!!! எல்லாத்தையும்  போட்டு கிண்டி ஒருவழியா ஒரு பதத்துக்கு கொண்டுவந்தாச்சு.  இலைக்கொழுக்கட்டையை அவிச்சு எடுத்தவுடன் ஒருத்தன் சாப்பிட்டுட்டு சூப்பர்ன்னு சொல்லிட்டு  (உண்மையிலே நல்லா  தான் இருந்துச்சு ) சாப்பிட ஆரம்பிக்க, ஆனா செஞ்சு முடிச்ச   எனக்குதான் நாக்கு தள்ளிப்போச்சு .   ஆரம்பம் முதல் நான்  பட்ட கஷ்டத்தை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு  நண்பன் கேட்டான் என்ன, இனிமே இதுமாதிரி எல்லாம் செய்யவேண்டாம்ன்னு தானே நினைக்குறேன்னு கேட்க, சேச்சே அப்படி எல்லாம் இல்லைடா  மச்சான்,  
 

என்ன செய்யுறமோ அதோட பேரு சொல்லாம செஞ்சோம்னா , ரிசல்ட்டுக்கு தக்கமாதிரி பேரு வைச்சிருக்கலாமேன்னு யோசிச்சேன் என்றேன் நான்!!!.

வாழ்க வளமுடன்!!!தமிழ் தந்த புகழுடன் !!!







Thursday, September 13, 2012

கசாபை தூக்கிலிட வேண்டாம்!!!

                                                            கசாபை தூக்கிலிட வேண்டாம்.  அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டான்? மூளைசலவை செய்யப்பட அவனும் அவன் கூட்டாளிகளும்  இயந்திர துப்பாக்கியால் குழந்தைகள் , பெண்கள் என்ற வேறுபாடின்றி கொஞ்சமே கொஞ்சமாக 166 பேரை குருவி சுடுவது போல சுட்டுக்கொன்றான்  அவ்வளவே !!! இது  என்ன மரண தண்டனை தரக்கூடிய அளவுக்கு கொடிய குற்றமா என்ன? அப்படியே இருந்தாலும் "கண்ணுக்கு கண்"  "பல்லுக்கு பல்" என்பது காட்டு மிராண்டிகளின் சட்டம். நாகரீக வளர்ச்சியில் நாம் எவ்வளவு முன்னேறி விட்டோம்.
"கொலைக்கு இன்னொரு கொலை நியாயமாகிவிடாது "

உண்மைதான். இத்தகைய கொடூர கொலைகளுக்கு  சாதாரணமாக வழங்கப்படும் மரணதண்டனை போதாது  மாறாக அணுஅணுவாய்  அவனை சித்திரவதை செய்து வெட்டி கொல்ல வேண்டும் .

கசாபுக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தவுடன், மரண தண்டனைக்கு எதிராக  சிலர் பேசுவது என்னவோ அவர்கள் மட்டும் தான் நாகரீகத்தின் விளைவாக மிகவும் பண்பட்டவர்கள் போலும், இதை ஆதரிப்பவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் போலும் ஒரு மாயை உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது சமூக வலைதளங்களில்.

எவ்வளவு திமிரும், அரக்கத்தனமும் இருந்தால் எதிரி நாட்டின் வர்த்த தலைநகரில்  நுழைந்து  குழந்தைகள், பெண்கள்  என்ற வேறுபாடின்றி  நூற்றுக் கணக்கில் சுட்டுக்கொல்லுவான் ஒருவன் அந்த  அரக்கனுக்கு  நாம் இரக்கம் காட்ட வேண்டுமாம். நடந்த செயல் ஓர் "அறிவிக்கப்படாத போர்". கொடூரத்தின் உச்சகட்டம். என்ன நடக்கிறது என்று ஆறாம் அறிவு சிந்திக்கப்படும் முன்பே  மூளையை  சிதறடித்தது இந்த பாதகனின் தோட்டாக்கள் தான்.
இது காந்திய தேசமாம் மரண தண்டனை கூடாதாம் , பூக்களை விட மென்மையான குழந்தைகளுக்கு  தோட்டாக்களை  பரிசளித்தவனுக்கு, பூவையா  கொண்டு அர்ச்சிக்க வேண்டும்!! என்ன ஒரு அபத்தம் !

நம்மிடம்  உள்ள  மனிதாபிமானம் உணர்ச்சிவேகத்தில் தன்னிலை மறந்து தவறிழைத்தவர்களுக்கு வேண்டுமானால் கருணை  காட்டலாம். ஆனால் கொல்லப்படுவோம் என்று தெரிந்தே, மனது முழுக்க வன்மத்தோடும்  , வெறியோடும் வந்த இவனுக்கு தண்டனை குறைப்பு  என்ற கூப்பாடு எதற்கு ? ஆயுள் தண்டனையாக்கினால் மட்டும் இவன் திருந்தி விடுவானா  என்ன ?  எத்தனை பேரின் கனவுகளை சிதறடித்தான், எத்தனை குடும்பங்கள் தங்கள்  வாழ்வாதாரத்தின் அடிப்படையான அப்பாவையோ, அம்மாவையோ , அண்ணனையோ, அக்காவையோ இழந்து விட்டு  நிர்க்கதியாய் நிற்கின்றன ?  அந்த  குடும்பங்களுக்கு  நாம் தரும் பதில் என்ன?

 பொக்கேவுடன்  விருந்திற்கு வந்தவர்களுக்கு நாம் மரணதண்டனை வழங்கவில்லை . மாறாக நம்மீது படையெடுத்து வந்தவர்களுக்குதான்  ஆம் இதுவும் ஒருவகையான  படையெடுப்புதான்!  இந்த தண்டனை.  போர்க்களத்தில் மட்டும் நம் வீரர்கள் என்ன பூவா பறிக்கப்போகிறார்கள் ? அங்கும் உயிர் தானே பலியிடப்படுகிறது. பின் என்ன ? போரிலாவது யுத்த தர்மத்தை எதிர்பார்க்கலாம். மும்பையில் நடந்தது அதற்கும் குறைவானதுதானே .இத்தண்டனை  தேவை இல்லை என்றால்  காந்தீய தேசத்திற்கு படை எதற்கு? படைக்கலங்கள் எதற்கு ? அக்னி , ப்ரமோஸ் என்று  ஒவ்வொரு  பரிசோதனையின்   வெற்றின் போது நாம் மயிர் கூச்செறிய முஷ்டி  மடக்கி பெருமிதம் அடைவது  ஏன் ?

உயிரின் மதிப்பு தெரிந்தவர்களுக்கு, மனிதர்களுக்கு வேண்டுமானால் கருணை காட்டலாம். ஆனால் சில மாக்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மொழியில் பதில் பேசுவதே பொருத்தமாயிருக்கும். அந்த மொழிதான் "மரணம் "   அது போரிலாவது இல்லை தண்டனையிலாவது  .
  உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த பின்னும்  இன்னும் மறுமுறையீட்டு மனு (review petition)  தீர்வு மனு (curative petition), கடைசியாக கருணை மனு (mercy petition) எல்லாம் போட்டு (கூடவே பிரியாணியும் போட்டு) சிலபல அரசியல் சித்து விளையாட்டு விளையாடி கடைசியிலாவது  கசாபுக்கு  மரண தண்டனையை  தருவதே இதில் இறந்த அப்பாவிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் . இல்லாவிட்டால் அவர்களின்  ஆன்மா  நம்மை மன்னிக்கவே மன்னிக்காது .   நினைவில் கொள்ளுங்கள் 
"தாமதமாக கிடைக்கும் நீதியும் ஒரு வகையான அநீதியே".

இதையெல்லாம் விட்டுவிட்டு   "கொலைக்கு இன்னொரு கொலை நியாயமாகிவிடாது " இது காட்டு மிராண்டித்தனம், இப்படி செய்பவர்கள் காட்டுமிராண்டிகள் என்றால்  நான் எப்பொழுதும் காட்டுமிராண்டியாக,  வெறி பிடித்த காட்டுமிரண்டியாகவே  இருக்க விரும்புகிறேன் இத்தகைய  வெறி   பிடித்த மனித மிருகங்களுக்கு !!!!!!!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!